இனியவை நாற்பது /03/இனிது,இனிது இவை இனிது

 [இனியவை நாற்பது-இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவரது காலம் கி.பி. 725-750 எனப்பட்டது. இனியவை நாற்பது 40 வெண்பாக்களைக் கொண்டது. நான்கு பாடல்களில் இன்பம் தருவன நான்கினைக் கூறியுள்ளார். மற்ற பாடல்களில் மூன்று, மூன்று இன்பங்களை கூறியுள்ளார்.]

 


இனியவை நாற்பது- தொடர்கிறது....

 

வெண்பா 11.

அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே

குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே

உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப்

பெருமைபோற் பீடுடையது இல்.   

 

விளக்கம்:தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

 

வெண்பா 12.

குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே

சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே

மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்

திருவுந்தீர் வின்றேல் இனிது.

 

விளக்கம்:குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.

 

வெண்பா 13.

மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே

தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே

ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை

மானிடவர்க் கெல்லாம் இனிது.     

 

விளக்கம்:ஒருவர்க்குத் தன் நிலையினின்றும் தாழ்ந்து பெருமை அழிய நேரிட்டால், மேலும் உயிர் வாழாதிருப்பது மிக இனியது. தானம் செய்து வாழ்வதற்குத் தகுந்தபடி தனது செல்வம் அழிந்து விடாமல் தான் அடக்கமாக வாழ்வதும் இனிமையானது. இடர்ப்பாடு ஏதும் சிறிதும் இல்லாமல் குற்றமற்ற பொருளை மிகுதியாகப் பெற்றிருப்பது மக்கள் அனைவர்க்கும் இனிமையானது. மானம் அழிதல் - நிலையினின்றும் தாழ்தல்.

 

வெண்பா 14.

குழவி தளர்நடை காண்டல் இனிதே

அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து

மனனஞ்சான் ஆகல் இனிது. 

 

விளக்கம்: சின்னஞ்சிறு குழந்தைகளின் தள்ளாடும் நடையைக் காண்பது பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் இனியது. அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது தேவாமிர்தத்தினை விட இனியது. தீய செயல்களைச் செய்தவன் அதன் பயனாகத் துன்பம் வந்து அவன் மனம் நொந்து வருந்தும் போதும் மனம் அஞ்சாது இருப்பது இனியது.

 

வெண்பா 15.

பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற

வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே

மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை

மதமுழக்கங் கேட்டல் இனிது.        

 

விளக்கம்: பிறனுடைய மனைவியைத் திரும்பிப் பார்க்காத பெருமை இனிதாகும். போதுமான நீர் இல்லாததால் காய்ந்து வருந்தும் பசுமையான பயிர்களுக்கு வான்மேகத்திலிருந்து மழை பொழிவது மிக இனிதாகும். வீரமுடைய அரசரின் கடைவாயிலாகிய பின் முற்றத்தில் பெரிய மலை போன்ற யானைகளின் மதங்கொண்ட பிளிறலைக் கேட்பதும் இனிதாகும்.

 

இனியவை நாற்பது

பகுதி: 4 வாசிக்க அழுத்துங்கள்👉Theebam.com: இனியவை நாற்பது /04/இனிது,இனிது இவை இனிது:

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்👉 Theebam.com: இனியவை நாற்பது /01/இனிது,இனிது இவை இனிது:

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

இனியவை நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இனிது, இனிதே, இனியது, இலக்கியங்கள், பெருமை, இனியவை, நாற்பது, பதினெண், கீழ்க்கணக்கு, கல்வி, இனிதாகும், இனிமையானது, வருந்தும், நிலையினின்றும், மனம், கேட்டல், வாழாதிருப்பது, வாழாமை, சங்க, தவறான, வழியிற், குழவி, செல்வம்

0 comments:

Post a Comment