குழந்தைகள் நலம்: தாய்ப்பால் உண்மை

அறிவியல் ஆய்வுகள் சொல்வதென்ன?


என்னுடைய இரண்டு குழந்தைகளும் பிறந்த முதல் ஓராண்டு வரை, நான் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். குழந்தைகளுக்கான சத்துக்கள், மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு துணைபுரியும் தாய்ப்பாலை அவர்களுக்குக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், மாசுபாடு குறித்த புத்தகம் ஒன்றை படித்ததன் அடிப்படையில், என் உடலில் நிலையான நச்சு ரசாயனங்கள் குறித்து பரிசோதனை செய்தேன். அப்போது, 40 ஆண்டுகளுக்கு முன்னர் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் என் உடலில் இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், ஃபார்முலா பாலில் (தாய்ப்பாலை ஈடுசெய்ய தயாரித்து விற்கப்படும் செயற்கையான பால்) நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனங்கள், ஆபத்தை விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன.

 

நம் குழந்தைகள் முதன்முறையாக சாப்பிடும் தாய்ப்பாலில் என்ன இருக்கிறது? அதிலுள்ள ஆபத்துகள், உணவு தொடர்பாக குழந்தைகளுக்கு வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன?

 

நிலைமாறும் தாய்ப்பால்

 

குழந்தையின் முதல் உணவாக அனைவராலும் கருதப்படுவது தாய்ப்பால். அதில் தண்ணீர், கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், செரிமான நொதியான என்சைம்கள், ஹார்மோன்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. குழந்தையின் நோயெதிர்ப்பு சக்திக்காக தாயிடமிருந்து குழந்தைக்குக் கடத்தப்படும் ஆன்டிபாடிகள், தொற்று எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

 

தாய்ப்பால் வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியதாகும். உதாரணத்திற்கு, காலை நேரத்தைவிட தாய்ப்பால் மதியம் மற்றும் மாலையில் கொழுப்பு மிக்கதாக இருக்கும். குழந்தைக்கு புகட்டும்போது தாய்ப்பால் வேறானதாக இருக்கும். குழந்தை முதலில் உறிஞ்சும் தாய்ப்பால் லாக்டோஸ் நிறைந்ததாக இருக்கும், தாகம் தீர்ப்பதாகவும், எளிதாக அருந்தும் வகையிலும் இருக்கும். குழந்தை அருந்தி முடிக்கும்போது வெளிவரும் தாய்ப்பால் இன்னும் க்ரீமியாகவும் கொழுப்பு நிறைந்ததாகவும் இருக்கும். இது குழந்தைக்கு நிறைவான உணர்வை அளிக்கும். இத்தகைய தாய்ப்பாலின் மாறும் தன்மையை, கடையில் வாங்கும் ஃபார்முலா பாலில் உருவாக்குவது கடினமானது.

 

தாய்ப்பால் சுரப்பு குறித்து பிற ஆய்வாளர்களால் திறனாய்வு செய்யப்பட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள லண்டன் காலேஜ் பல்கலைக்கழகதின் குழந்தைகள் ஊட்டச்சத்து பேராசிரியர் மேரி ஃப்யூட்ரெல், "தாய்ப்பாலின் இத்தகைய தன்மையால் ஃபார்முலா பாலில் எதனை, எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்வது கடினமானதாக இருக்கிறது. மேலும், அந்த அளவு குழந்தையின் வயதுக்கு ஏற்ப ஃபார்முலா பாலில் மாறாது" என்றார்.

 

தாய்ப்பாலில் உள்ள மற்ற அம்சங்களான ஹார்மோன்கள், செல்கள் (ஸ்டெம் செல்கள் உட்பட), மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் குறித்து பேசிய அவர், "இவை குறித்து முழுவதும் அறியப்படவில்லை. ஆனால், அவை, தாயின் தனிப்பட்ட அனுபவங்கள், சூழல் குறித்து குழந்தைகளுக்குக் கடத்துவதற்கானவையாக இருக்கலாம். அதனால் தான் தாய்ப்பாலை, 'தனித்துவ ஊட்டச்சத்து' என்கிறோம்" என்றார்.

(கடையில் வாங்கும் ஃபார்முலா பால் அடுத்த வியாழன் தொடரும் ...சுவைப்போம்)

அனா டர்ன்ஸ்-/-பிபிசி ஃப்யூச்சர் பகுதி

0 comments:

Post a Comment