ரத்த தானத்துக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என்னென்ன?

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

 


ஆரோக்கியமாக இருக்கும் பெரும்பாலானோர் ரத்த தானம் செய்யலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சில முன் நிபந்தனைகளும் இதில் இருக்கின்றன. அது சிக்கலானதாகவும், மூட நம்பிக்கை மற்றும் தவறான புரிதலை ஏற்படுத்துபவையாகவும் இருக்கலாம்.

 

பொதுவாக காணப்படும் அதுபோன்ற மூட நம்பிக்கைகளில் வற்றை இங்கே தொகுத்துள்ளோம்.

 

சைவ உணவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.

இரும்புச் சத்து பற்றி - ரத்தத்தின் முக்கிய பொருள் பற்றி - கவலை தெரிவிக்கப்படுகிறது. சைவ உணவுகளில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள். ஆனால், சமநிலையான சத்துகள் உள்ள உணவு சாப்பிடும் வரையில் உங்கள் உடலுக்குப் போதிய இரும்புச் சத்து கிடைக்கும்.

 

உங்களுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருந்தால், உங்கள் பாதுகாப்பு கருதி, ரத்த தானம் செய்ய உங்களை அனுமதிக்க மாட்டார்கள். ரத்த தானம் செய்யப்படும் இடங்களில் பெரும்பாலான நாடுகள் ஹீமோகுளோபின் பரிசோதனை வசதி வைத்திருக்கிறார்கள். உங்களுக்கு ரத்த சோகை இல்லை என்பதை முதலில் அங்கு உறுதி செய்து கொள்வார்கள்.

 

பச்சை குத்தியிருப்பது, துளைகள் போட்டுக் கொள்வது நீங்கள் ரத்த தானம் செய்ய அனுமதிக்காது.

அப்படி தடை ஏதும் கிடையாது. ஆனால் பச்சை குத்துதல், துளையிட்டுக் கொள்தல் அல்லது பல் சிகிச்சை செய்ததற்குப் பிறகு ரத்த தானம் செய்வதற்கு சிறிது கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

பச்சை குத்தி 6 மாதங்கள் கழித்தும், உடலில் தொழில்நிபுணத்துவம் வாய்ந்தவரால் துளையிடப்பட்டால் 12 மணி நேரம் கழித்தும், பல் சிகிச்சையில் சிறிய நடைமுறை ஏதும் செய்தால் 24 மணி நேரம் கழித்தும், பெரிய நடைமுறை ஏதும் இருந்தால் ஒரு மாதம் கழித்தும் ரத்த தானம் செய்யலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

 

நோயுற்றிருந்தால், கர்ப்பமாக இருந்தால், இளைய வயதினராக அல்லது முதியவராக இருந்தால் ரத்தம் தர முடியாது.

இந்த விஷயம் உண்மை. எச்..வி. (எயிட்ஸ் வைரஸ்) சோதனையில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, கிரந்தி நோய், காசநோய் போன்ற நோய்கள் இருக்கும் நபர்களால் ரத்த தானம் செய்ய முடியாது. ரத்தம் மூலம் பரவக் கூடிய நோய்களின் பட்டியலில் உள்ள பாதிப்புகள் ஏதும் இருந்தாலும் ரத்த தானம் செய்ய முடியாது.

 

சளி, தொண்டை வறட்சி, வாய்ப்புண், வயிற்றுப் பிரச்சினை அல்லது வேறு தொற்று இருந்தாலும் ரத்த தான மையங்களில் இருந்து திருப்பி அனுப்பி விடுவார்கள்.

 

தொற்று நோய்கள் ஏதும் இருந்தால், ரத்த தானம் செய்வதற்கு குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னதாக குணமாகி இருக்க வேண்டும். ஆண்டிபயாட்டிக் மருந்து ஏதும் சாப்பிட்டிருந்தால் ரத்த தானம் செய்வதற்கு ஏழு நாள்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.


மற்ற மருந்துகள் குறித்த விதிமுறைகள், ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும்.

நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தாலோ அல்லது சமீபத்தில் குழந்தை பெற்றவராக இருந்தாலோ அல்லது கருக்கலைப்பு நடந்திருந்தாலோ, ரத்த தானம் செய்வதற்கு முன்பு இரும்புச் சத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நீங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.

 

இருந்தபோதிலும், மாத விலக்கு காலத்தை, காரணமாகக் கொண்டு ரத்த தானத்தை தடுக்க மாட்டார்கள்.


ரத்த தானம் செய்வதற்கு குறைந்தபட்ச வயது 16. பெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வ ஒப்புதல் பெறுவதற்கான வயதாக அது இருக்கிறது. சுயநினைவு இழந்துவிடும் அபாயம் அதிகம் இருப்பதால் குறைந்தபட்ச வயது 16 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. ரத்த தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. இருந்தபோதிலும் பல நாடுகளில் 60 - 70 வயது வரை அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயித்திருக்கிறார்கள்.

 

இருந்தபோதிலும், முதன்முறையாக ரத்த தானம் செய்பவர்களைப் பொருத்த வரை அதிக கவனம் தேவைப்படுகிறது. குறிப்பாக குறைந்த வாழ்நாள் கொண்ட மக்கள் வாழும் நாடுகளில் இந்தக் கவனம் தேவைப்படுகிறது.

 

``ஆபத்து ஏற்படுத்தும்'' செயல்பாடுகள்

வாழ்க்கை என்பது அடிப்படையில் ஆபத்துகள் நிறைந்ததுதான். சில ஆபத்துகள் உங்களை ரத்த தானம் செய்ய விடாமல் தடுக்கக் கூடும்.

 

பலருடன் பாலியல் தொடர்பு போன்ற ``அதிக ஆபத்து வாய்ப்புள்ள நடத்தை'' உள்ளவர்கள், பணம் கொடுத்தோ, பணம் வாங்கிக் கொண்டோ பாலியல் உறவில் ஈடுபடுவர்கள், அல்லது ஆண்களுடன் பாலியல் தொடர்பு கொள்ளும் ஆண்களோ ரத்த தானம் செய்வதற்கு முன் பெரிய காத்திருப்புப் பட்டியலில் காத்திருக்க வேண்டியிருக்கும்.

 

மனமகிழ்ச்சிக்காக ஊசி மருந்துகள் மூலம் போதை மருந்து பயன்படுத்துபவர்களும், ரத்த தானம் செய்ய முடியாத சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மலேரியா, டெங்கு, ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களின் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் மேற்கொண்டவர்களுக்கும் இதே நிலைதான். பல நாடுகளில் ``ஆபத்து ஏற்படுத்தும்'' செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை தடை பட்டியலில் சேர்த்துள்ளனர்.


உங்களுக்கு ரத்தம் தீர்ந்துவிடாது.

சராசரி மனிதனுக்கு உடலில் சுமார் 5 லிட்டர் ரத்தம் இருக்கும். அவருடைய உடல் எடையைப் பொருத்து இது அமையும். சராசரி ரத்த தானத்தின் போது, சுமார் 500 மில்லி எடுக்கப்படும். நல்ல ஆரோக்கியமான பெரியவர்கள் உடலில் 24 - 48 மணி நேரத்தில் இந்தத் திரவம் சுரந்துவிடும்.

 

நீங்கள் ஆரோக்கியமாக, உடல் தகுதியாக இருந்தால்

👩குறைந்தபட்சம் 50 கிலோ மற்றும் 160 கிலோவுக்கு மிகாத எடையுடன் இருந்தால்

👧18 மற்றும் 66 வயதுக்கு உள்பட்டவராக இருந்தால் (நாடுகளுக்கேற்ற மாறுபாடு உண்டு)

👶கர்ப்பமாகவோ அல்லது தாய்ப்பால் ஊட்டுபவராகவோ இல்லாதிருந்தால்

👵கடந்த 12 மாதங்களில், ``ஆபத்து ஏற்படுத்தும்'' செயல்பாடுகளில் ஈடுபடாதவராக இருந்தால்

நீங்கள் ரத்த தானம் செய்ய தகுதி உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

 

நன்றி:-பி பி சி தமிழ் (BBC TAMIL)

0 comments:

Post a Comment