வைட்டமின்களை எடுத்துகொள்வதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்?

 மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வைட்டமின்களை எடுத்துகொள்வதால் என்னென்ன பாதிப்பு ஏற்படும்?

 


உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை சமாளிக்க ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது புதிய விஷயம் அல்ல.

 

வைட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், இரும்புசத்து மற்றும் புரதம் போன்ற உங்கள் உடலின் ஊட்டச்சத்து பற்றாக்குறையை தீர்ப்பதாக கூறிக்கொள்ளும் இந்த சப்ளிமெண்ட்ஸ் பல்வேறு வடிவங்களில் சந்தையில் கிடைக்கின்றன சிரப்கள், மாத்திரைகள், எனர்ஜி பார்கள், பானங்கள் அல்லது பொடிகள் இவற்றில் அடங்கும்.

 

இருப்பினும், சமச்சீர் உணவின் பற்றாக்குறையை இந்த சப்ளிமெண்ட்ஸ் ஈடுசெய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்ற சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

 

"சைவ உணவு உண்பவர்களுக்கு மல்டிவைட்டமின்கள் அவசியம்தான். ஆனால் 'ஒரே டோஸ், அனைவருக்கும் பொருந்தாது'. எனவே நோயாளிகள் தாங்களாக இல்லாமல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்."என்று டாக்டர் சுனிலா கர்க் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

தாங்களாகவே மல்டிவைட்டமின்களை எடுத்துக்கொள்ளும் 30 முதல் 40 வயதுடைய பெண்கள் என்னிடம் வருகிறார்கள். ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஏனெனில் இது பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது,” என்று டாக்டர் ராஜ் ஆரோன் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

"பொதுவாக நகரங்களில் மக்கள் சுயமாக மருந்துகளை சாப்பிடுகின்றனர் அல்லது நோய் பற்றித்தெரிந்துகொண்டு மருந்துக் கடைகளுக்குச் சென்று மருந்துகளை வாங்கிக்கொள்கிறார்கள். வலி போன்ற உடல் உபாதைகள் அல்லது வைட்டமின்கள் விஷயத்திலும் இது நடக்கிறது. இது சில நேரங்களில் குணமடையாது." என்று தேசிய நீரிழிவு, உடல் பருமன் மற்றும் கொலஸ்ட்ரால் அறக்கட்டளையின் (NDOC) டாக்டர் சீமா குலாட்டி கூறுகிறார்.

 

"கூகுள் மூலம் தகவல் பெற்று அல்லது சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை எடுத்துக்கொண்டு மருந்துகளை உட்கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கூட, மருந்துகள் அல்லது வைட்டமின்கள் இந்தியாவில் கிடைக்கின்றன, அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன," என்று அவர் குறிப்பிட்டார்.

 

உடலில் சப்ளிமெண்ட்ஸின் விளைவுகள்

 

மருத்துவர் பரிந்துரைக்கும் சப்ளிமெண்ட் மற்றும் டோஸை மட்டுமே உட்கொள்ளவேண்டும். அளவுக்கு அதிகமாக உட்கொள்வதால் எந்தப் பலனும் இல்லை என இந்த மருத்துவர்கள் அனைவருமே சொல்கிறார்கள்.

 

அதே நேரத்தில் இந்த சப்ளிமெண்ட்ஸின் அதிகப்படியான பயன்பாடு உடலின் மீது தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

வைட்டமின்கள்- வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா த்ரீ போன்ற கொழுப்பில் கரையக்கூடிய பல வைட்டமின்கள் உள்ளன என்று டாக்டர் சீமா குலாட்டி விளக்குகிறார். மருத்துவரின் ஆலோசனையின்றி இந்த வைட்டமின்களை உட்கொள்வதால், அவை உடலில் படிந்துவிடும் அல்லது சேர்ந்துவிடும். அவை உடலில் இருந்து வெளியேறாமல் இருக்கும். இது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

 

வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ - வைட்டமின் ஏ அதிகமாக உட்கொள்வதால் வாந்தி, மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். அதே நேரத்தில் வைட்டமின் ஈ காரணமாக ரத்த அழுத்தம் குறைகிறது. இது நுரையீரலையும் பாதிக்க்கூடும். மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றை உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர் சீமா குலாட்டி குறிப்பிட்டார்.

 

டாக்டர் சீமா குப்தா சி-நெட்டின் தலைவர். இந்த மையம் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

 

பல வைட்டமின்கள் உடலில் கலந்துதுவிடுகின்றன. அவை அதிக அளவில் உடலில் நுழைந்தால் மலம் வழியாக வெளியேறிவிடுகின்றன,” என்கிறார் அவர்.

 

வைட்டமின் பி - இந்த வைட்டமின் உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இது மூளை மற்றும் நரம்பு செல்களை வலுப்படுத்தும் வேலையையும் செய்கிறது.

 

அதன் குறைபாட்டால், தோல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்குகிறது.

 

பலவீனம் உணரப்படுகிறது.

 

வாயு, மலச்சிக்கல் மற்றும் பசியின்மையும் ஏற்படுகிறது.

 

இதயத் துடிப்பு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனை ஏற்படும்.

 

இவை இரண்டு வடிவங்களில் கிடைக்கின்றன, அவற்றின் டோஸ் குறைவாக இருக்கும். அதே நேரத்தில் அத்தகைய வைட்டமின்கள் நீரிழிவு நோயாளிகளுக்கும் அளிக்கப்படுகின்றன. ஆனால் நீண்ட காலத்திற்கு தேவையில்லாமல் அத்தகைய கூடுதல் மருந்துகளை உட்கொள்வது தீங்கு விளைவிக்கக்கூடும்.

 

வைட்டமின் டி- குழந்தைகள் முதல் இளம் வயதினர் வரை அதன் குறைபாடு காணப்படுவதாக டாக்டர் ராஜ் ஆரோன் விளக்குகிறார். இதற்கு முக்கிய காரணம் அதிகமாக வெளியே செல்லாமல் இருப்பதாகும்.

 

வைட்டமின் D இன் இயற்கையான ஆதாரமாக சூரியன் கருதப்படுகிறது. ஆனால் இப்போது மக்கள் அதிகமாக வெளியே செல்வதில்லை. உடல் உழைப்பின் போது சூரியனின் கதிர்கள் உடலை சென்றடைந்தால் அந்த வைட்டமின் டி, உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

 

மூன்று மாதங்கள் வரை மட்டுமே வைட்டமின் டி உட்கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் மக்கள் இந்த காலத்தை நீட்டிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், சுவாசிப்பதில் சிரமம், செரிமானம் குறைவது, சோர்வு, தலைச்சுற்றல், குழப்பம், அதிக சிறுநீர் கழித்தல், உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படலாம்.

 

இரும்பு சத்து - இந்தியாவில் 50 சதவிகித்திற்கும் அதிகமான பெண்கள் இரும்புச்சத்து பற்றாக்குறை பிரச்சனையுடன் போராடுகிறார்கள் என்று தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS) தரவுகள் கூறுகின்றன. எனவே இரும்புச்சத்து உட்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்று டாக்டர் சுனிலா கர்க் கூறினார். .

 

டாக்டர். சுனிலா கர்க் NIHFW இன் திட்ட ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார். மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியராகவும் அவர் இருந்துள்ளார்.

 

கால்சியம் - கால்சியம் என்பது பற்கள் மற்றும் எலும்புகளுடன் கூடவே இதயம் மற்றும் தசைகளையும் வலுப்படுத்த உடலுக்கு தேவையான ஒரு கனிமமாகும். பொதுவாக 40 வயதிற்குப் பிறகு பெண்களுக்கு கால்சியத்தை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 

கால்சியத்தின் வளர்சிதை மாற்றத்தில் சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியத்தை நீண்ட காலத்திற்கு உட்கொண்டால், அது கல் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கிறது. இது இதயத்தின் தமனிகளை கடினப்படுத்துகிறது. அவற்றில் கொழுப்பு அதாவது கொலஸ்ட்ரால் சேரத்தொடங்குகிறது. இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

 

கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் பலவீனமடைகின்றன. அவற்றின் அடர்த்தி குறைகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோஃபீனியா போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

 

2022 ஆம் ஆண்டில், உணவு சப்ளிமெண்ட் சந்தை, 43,650 கோடி ரூபாயை எட்டியுள்ளது என்று தி இன்டர்நேஷனல் மார்க்கெட் அனாலிசிஸ் ரிசர்ச் அண்ட் கன்சல்டிங் (ஐஎம்ஆர்சி) குழுமம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. 2028 ஆம் ஆண்டில் இந்த சந்தை .95,810 கோடி ரூபாயை எட்டும் என்று IMARC நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

 

மக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துகிறார்கள். சுறுசுறுப்பாக ஆகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கிறார்கள். இதன் காரணமாக உணவின் சமச்சீர்தன்மை குறைகிறது. வைட்டமின்களும் உணவில் இருந்து மறைந்துவிடுகின்றன என்று டாக்டர் சீமா குலாட்டி கூறுகிறார்.

 

சத்தான உணவு எல்லா குறைபாடுகளையும் சமாளிக்க உதவுகிறது என்பதால் சமச்சீர் உணவை சப்ளிமெண்ட்ஸுடன் ஒப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

ஒரு பெண்ணின் வயது 30 க்கு மேல் செல்லத் தொடங்கும் போது இந்த சப்ளிமெண்ட்ஸ் நிச்சயமாக உதவும். ஆனால் அவை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உட்கொள்ளப்பட வேண்டும். இது தவிர யோகா மற்றும் உடற்பயிற்சிகளையும் செய்யவேண்டும் என்று டாக்டர் சீமா குலாட்டி அறிவுறுத்துகிறார்.

 

:-சுசீலா சிங்-/-பதவி,பிபிசி செய்தியாளர்

0 comments:

Post a Comment