தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:21

[இடைக்கால தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]                                                   
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த,திருவாசகம் தந்த,மாணிக்கவாசகர் காலத்தில் நடந்த கதை ஒன்று பரஞ்சோதிமுனிவர் அருளிச்செய்த திருவிளையாடற் புராணத்தில் வருகிறது."பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்" என்பது இந்த அறுபத்தி ஒன்றாவது திரு விளையாடல் ஆகும்.இதன் மூலம் பிட்டு அங்கு தமிழர்களின் உணவாக இருந்ததை அறிய முடிகிறது.அந்த மண் சுமந்த படலத்தில் இருந்து ஒரு பாடல் உதாரணமாக கீழே தரப்படுகிறது. 

"பிட்டிடுவே னுனக்கென்றா ளதற்கிசைந்து பெரும்பசியாற்
சுட்டிடநான் மிகமெலிந்தேன் சுவைப்பிட்டி லுதிர்ந்தவெலாம்
இட்டிடுவா யதுமுந்தத் தின்றுநா னிளைப்பாறிக்
கட்டிடுவே னின்னுடைய கரையென்றார் கரையில்லார்."

ஒரு முறை,வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.இதையடுத்து ஆற்றின் கரையை அடைப்பதற்காக வீட்டுக்கொருவர் மண் சுமந்து வரவேண்டுமென மன்னர் உத்தரவிட்டார்.ஆனால்,பிட்டு விற்று பிழைப்பு நடத்திய சிவ பக்தையான வந்தி எனும் மூதாட்டிக்கு மண் சுமந்துவர யாருமில்லை.ஆகவே,அங்கு வந்த கூலி இடம், "தனக்குப் பதில் நீ மண் சுமக்க வந்தால்,பசி தீரச் சுடச்சுட,உனக்குக் கூலியாகப் பிட்டுத் தருவேனென்று கூறினள்;எல்லையில்லாத இறைவர் அதற்கு உடன் பட்டு,பெரிய பசித்தீ என்னைச்சுட அதனால் யான் மிக இளைத்தேன்;யான் வேலை செய்தற்கு முன்னரே,சுவை மிக்க பிட்டில் உதிர்ந்த பிட்டு முழுதும்,தருவாயாக;அதனைத் தின்று நான் சிறிது இளைப்பாறிக் கொண்டு,நினது பங்குக் கரையைக் கட்டுவேனென்று கூறினர்."என்கிறது இந்த பாடல். 

ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டு ஔவையார்,வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்பவன் விரும்பி அளித்த விருந்தை வியந்து பாடிய பாடல் "வரகசிச் சோறும்,வழுதுணங்காய் வாட்டும்" ஆகும்.சாதாரண வரகரிசிச் சோறு[வரகு அல்லது வரகரிசி/KodoMillet ]; கத்தரிக்காய்ப் பொரியல்;மிகவும் புளித்த மோர்.இவ்வளவுதான் அந்த விருந்து! என்றாலும் இந்த விருந்துக்கு ஈடாக உலகம் முழுவதையும் தந்தாலும் தகும் என்கிறார் ஔவையார்.

"வரகசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்,
முரமுரெனவே புளித்த மோரும், - திரமுடனே 
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து இட்ட சோறு
எல்லா உலகும்பெறும்" 

இதன் மூலம் நாம் அங்கு வரிகரிசிச் சோறு,கத்தரிக்காய்ப் பொரியல்,புளித்த மோர் போன்றவை உணவாக இருந்ததை அறிகிறோம்.மற்றும் ஒரு பாடலில்,அவர் கீரைக்கறி உணவை கூறுகிறார்.I

"வெய்யதாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதுவாய்
நெய்தான் அளாவி நிறம்பசந்த – பொய்யா
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள்
கடகம் செறிந்தகை யாள்"

இங்கு,"என்ன இந்தப் பெண்கள் கீரைக்கறி என்று சொல்லி,அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் குளிரில் வெப்பமுடையதாய், நல்ல மணமுடையதாய் நெய் நிறைய பெய்து,வேண்டுமட்டும் உண்டாலும் கெடுதியை உண்டாக்காததாய் அமுதத்தை அளித்துள்ளார்களே!" என்று வியக்கிறார்.[அடகு = கீரை]

பன்னிரெண்டாம் நூற்றாண்டு குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டு கொழுப்பில் இட்டுப் பொறிக்கப்பட்ட இனிப்பு பணியாரம் பற்றி குறிப்பிடுகிறது.இனிப்பின் ஆதாரப் பொருட்களாக கரும்பு, பனை வெல்லங்கள் இருந்திருக்கின்றன.திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு,(கி.பி.1070 முதல் கி.பி.1110) ‘திருப்பணியாரத்துக்குத் தேங்காய்,கருப்புக்கட்டி’எனக் குறிப்பிடுகிறது.கருப்புக்கட்டி[கருப்பட்டி] என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும்.இந்த பணியாரத்திற்கு,பாண்டிய அரசன் வாழைப்பழம்,சீரகம்,உலர் இஞ்சி,மிளகு,கரும்பு போன்றவற்றை சேர்த்து ஆண்டவனுக்கு படைத்தார்.அதிரசம் என்ற இன்னும் ஒரு படையலும் அறியப்படுகிறது.கிருஷ்ண தேவராயன் கல்வெட்டுச் செய்தி,அதிரசத்துக்கு என்று அதிரசப்படி எனும் அரிசி வகை இருந்ததாகவும் அத்துடன் வெண்ணெயும்,சர்க்கரையும், மிளகும் வழங்கியதாகவும் கூறுகிறது.தமிழனின் உணவு எளிமையானதாகவே இருந்துள்ளது.வேகவைக்கப்பட்டது மிகுதியாகவும், எண்ணெயில் பொரிக்கப் பட்டது அபூர்வமாகவும் இருந்துள்ளன.அந்த பண்டைய காலத்தில் மாட்டு வண்டிலில் பிரயாணம் செய்தார்கள்.அது பல கிழமைகளும் எடுக்கும்.ஆகவே அவர்களுக்கு பல நாட்கள் பழுதாகாமல் இருக்கக் கூடிய உணவு தேவைபட்டது.அப்படியான உணவுகளில் இந்த அதிரசமும் ஒன்றாகும்.இதற்கு பொதுவாக மூன்று முக்கிய பொருட்கள் மட்டுமே தேவைப்படுகிறது.அவை அரிசி,வெல்லம்,ஏலக்காய் ஆகும்.என்றாலும் தயாரிப்பதற்கு இது கூட நேரத்தையும் அதே நேரம் செய்முறை சிக்கலானதாகவும் உள்ளது.
பகுதி :22 தொடரும்............                                                                                        0 comments:

Post a Comment