தமிழரின் உணவு பழக்கங்கள்--பகுதி|:24

                                                                     [தொகுத்தது:கந்தையாதில்லைவிநாயகலிங்கம்]

 (இன்றைய தமிழரின்  உணவு பழக்கங்கள் தொடர்கிறது)
தமிழர்களின்,ஒவ்வொரு விழாவும் கொண்டாட்டமும் அதற்கே உரிய பாரம்பரிய உணவுப்பட்டியலை கொண்டுள்ளன. குழந்தைக்கு பொதுவாக ஏழாவது மாதத்தில் கொடுக்கப்படும் அரிசி உணவு அதிகமாக சர்க்கரை பொங்கலாக இருக்கும்.அதே போல குழந்தைக்கு முதல் பல் முளைத்தலை பல் கொழுக்கட்டையுடன் கொண்டாடுகிறார்கள். அப்படியே சாமத்திய சடங்கில்-பால் வாழைபழம் கற்கண்டு அல்லது பாற்சோறும்,சீமந்த விழாவில் பலதரப்பட்ட அரிசி சாதமும் வைக்கிறார்கள்/படைக்கிறார்கள்.இன்று,நகர்ப்புறமயமாதல்,தொடர்புச் சாதனங்களின் விளம்பரத் தன்மை,பொருளியல் வளர்ச்சி,பயண அனுபவங்கள் ஆகியவை காரணமாகக் தமிழர்களின் உணவு முறை மிகப் பெரிய அளவில் மாறுதல் அடைந்திருக்கிறது.இந்த நவீன உலகம் சமையல் அறையில் மாற்றங்களை மெல்ல மெல்ல தமிழர் வீட்டிலும் ஏற்படுத்துகின்றன.இவைக்கு தக்கதாக விட்டுக்கொடுப்பும் மாற்றங்களும் நடைபெறுகின்றன. நீண்ட நேரமும் நிதானமும் தேவைப்படும் பாரம்பரிய உணவுகள் இதனால் மறையத் தொடங்குகின்றன.ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உடனடி இட்டலி மா கலவை,ஏற்கனவே தயார் செய்து அடைக்கப்பட்ட உடனடி கறித் தூள் போன்ற பதப்படுத்தப் பட்ட உணவுகள் நகரப்புற சமையல் அறைகளை முற்றிகையிடுகின்றன.அது மட்டும் அல்ல,மோட்டார் இணைக்கப்பட்ட அரவைப்பொறி[கிரைண்டர்] போன்ற எந்திரமயம் ஆக்கப்பட்ட கருவிகள்/பொறிகள் பாரம்பரிய சமையலுக்கு பாவிக்கப்படுகின்றன.மேலும் கூட்டு குடும்பம் அற்ற நிலையும்,பெண்கள் தொழிலுக்கு போகும் நிலையும்,
தமிழர்களின் பாரம்பரிய உணவு பழக்கங்களில் சில மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.இவை அவர்களை எளிமையான சமையலை அல்லது துரித உணவை அல்லது உடனடி உணவை நோக்கி போகத்தூண்டுகிறது.என்றாலும் தமிழரின் உணவு முறையும் அவர்களின் பண்பாட்டு தாக்கங்களும்,இன்னும் தனது அடிப்படை தன்மைகளை அப்படியே கொண்டுள்ளது.

எது எப்படியாயினும்,முதலாம் நுற்றாண்டில் அல்லது சங்க காலத்தில் பாவிக்கப்பட்ட சில உணவு செய்முறை இன்னும் அப்படியே இருக்கின்றன.இன்று தமிழ் நாட்டில் அன்றாட உணவு பழக்கங்களில் அதிகமாக சோறு,சாம்பார்,மீன் அல்லது மாமிச கறி[அசைவ உணவு உண்பவர்களுக்கு] மற்றும் மரக்கறி,இரசம்,தயிர் போன்றவை பொதுவாக கண்டிப்பாக இருக்கிறது.என்றாலும் சிறப்பு சந்தர்ப்பங்களில்,பாயசம் வழங்கப்படுகிறது.வசதி படைத்த குடும்பங்களில் கூட அப்படி ஒரு பெரும் மாற்றம் இல்லை.எனினும் விருந்தினர் வரும் போதும் அல்லது திருமண விழா போன்றவை நடை பெரும் பொழுதும் அங்கு முற்றும் முழுமையான பெரும் மாற்றத்தை காணலாம்.அங்கு உண்மையிலேயே  இன்சுவை கொண்ட,அறுசுவை உணவு தயாரிக்கப்படுகிறது.இது அவர் அவர்களின் நிலைமையை பொறுத்து அமைகிறது.மூலிகைகளின் கலப்பு,
ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்கள்,மிளகு,கிராம்பு,ஏலம் போன்ற வாசனைத் திரவியங்கள் போன்றவை நல்ல சமையலின் தரத்தை எடுத்து கூறும்.இவையின் கலப்பும் அளவும் குடும்பத்திற்கு குடும்பம் மாறுபட்டு மெல்லிய சுவை வேறுபாட்டை கொடுக்கின்றன.மேலும் எதிர் எதிரான சுவைகளின் முரண்பாடு தமிழரின் சமையலின் அடிப்படை கருவாக உள்ளது.உதாரணமாக மிகவும் பிரபலமான உணவுகளான சாம்பார்,மோர் குழம்பு,புளிக் குழம்பு,கடும் உறைப்பான மீன்,மாமிச கறி,போன்றவை எல்லாம் புளிப்பு மற்றும் உறைப்பு[கார்ப்பு/காரம்] சுவைகளின் வேறுபட்ட கலவைகளாகும். 


யாழ்ப்பாணம்  இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள,தமிழர்களை அதிகமாக கொண்ட,ஒரு நகரம் ஆகும்.பனை மரங்களால்,தென்னை மரங்களால் தன்னை அழகு படுத்தும் யாழ்ப்பாணம்,அழகிய கடற்கரைகளையும் கொண்டுள்ளது.இது தமிழர்களின் பாரம்பரிய உணவின் மற்றும் ஒரு தாயகமாகவும் உள்ளது.இங்கு தமிழ் நாடு போல அரிசிச் சோறு முதன்மை உணவாக இருப்பதுடன்,சோற்றுடன் காரமான கறி வகைகள் சேர்த்து உட்கொள்ளப்படுகின்றன. யாழ்ப்பாணத்தவர்,நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள்.இதைத் தவிர,நெல்லை அவிக்காமல் குற்றும்போது கிடைக்கும்,சிவப்புப் பச்சை
அரிசி,வெள்ளைப் பச்சை அரிசி என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு.தமிழ் நாட்டில் செய்வதுபோல,அரிசியிலிருந்து,புளியோதரை, சாம்பார்சாதம்,தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் செய்யப்படுவதில்லை. யாழ்ப்பாணத்துக் கறிவகைகள் பொதுவாக பருப்புக் கடையல்,குழம்பு,வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி),பால் கறி (வெள்ளைக் கறி),கீரைக் கடையல்,வறை,துவையல்,சம்பல்,பொரியல்,சொதி ஆகும்.ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு.எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை.விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு.கறிகள் ஆக்குவதில்,யாழ்ப்பாணத்தவர் தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். மிளகாய்த்தூளின் பயன்பாடும்,தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம்.தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் சாம்பார் யாழ்ப்பாணத்துச் சமையலில் இடம்பெறுவதில்லை.கோவில்களில் அன்னதானம் செய்பவர்கள் சில சமயங்களில்,பல கறிகள் செய்வதைத் தவிர்ப்பதற்காக எல்லாக் காய்களையும் சேர்த்துச் சாம்பார் செய்வது உண்டு.சோறும் கறியும் மதிய உணவாகவும் இரவு உணவாகவும் அதிகமாக உட்கொள்ளப்படுவதுடன், சந்தர்ப்பங்களிலும்
பரிமாறப்படுகின்றன. காலை உணவும் சிலவேளைகளில் இரவு உணவும் அதிகமாக அரிசி மாவினால் அல்லது கோதுமை மாவினால் தயாரிக்கப்பட்ட உணவாக இருக்கின்றன.காலை,மாலை சாப்பாட்டில் தமிழ் நாட்டுக்கும்,யாழ்ப்பாணத்துக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலே,இட்லி,தோசை முதலியன முக்கியமான காலை உணவாக இருக்கும் அதே வேளையில்,யாழ்ப்பாணத்தில் இடியப்பம், முதலியவையே பெரும்பாலும் உண்ணப்படுகின்றன.அப்பம்,தோசை முதலிய வற்றையும் யாழ்ப்பாணத்தவர் இடையிடையே உண்பது உண்டு. இட்லி, சப்பாத்தி, உப்புமா மிக அரிதாகவே உட்கொள்ளப்படுகின்றது. பிட்டு பொதுவாக தேங்காய் சம்பல்,சீனி சம்பல்,பல் வேறுபட்ட  குழம்பு வகைகளுடனும் மற்றும் காய்கறி,ஆட்டிறைச்சி,கோழி,மீன் கறிகளுடனும் உட்கொள்கிறார்கள்.இடியப்பமும் மேலே கூறப்பட்ட பக்க உணவுகளுடன் உடகொள்ளுவதுடன், ஒரு முக்கிய பக்க உணவாக சொதி அங்கு காணப்படுகிறது.
பகுதி :25 தொடரும்..                                                              .


0 comments:

Post a Comment