தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:23

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[இன்றைய தமிழரின் உணவு பழக்கங்கள்]
இன்றைய தமிழர்கள் இன்னும் அரிசியை தினசரி அல்லது பிரதான உணவாக பொதுவாக மூன்று நேரமும் உட் கொள்கிறார்கள்.உதாரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி[இட்டலி],தோசை,பிட்டு,இடியப்பம் அல்லது அப்பம் தினசரி காலை அல்லது மாலை உணவாக உட்கொள்கிறார்கள்.அரிசி மாவு,உளுந்து மாவு கலவையால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை இட்டலி.அதே போல தோசை என்பதும் உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப் பதார்த்தம் ஆகும்.அப்படியே அரிசி மாவு,தேங்காய்த் துருவல் கொண்டு பிட்டையும்[புட்டையும்],அரிசி மாவினால் இடியப்பம்,அப்பம்(ஆப்பம்) தயாரிக்கிறார்கள்.இடியப்பமும் அப்பமும் இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும்.இடைக்காலத்தில்,சமணம் போன்ற சமயங்களின் செல்வாக்கால் அசைவ உணவு அவ்வளவு பிரபலமாக
இல்லாவிட்டாலும்,இன்று அப்படி ஒரு விலக்கப்பட்ட உணவாக தமிழர்கள் மத்தியில் பொதுவாக இல்லை.என்றாலும் விழாக் காலங்களிலும் விரதம் அல்லது நோன்பு காலங்களிலும் இது பொதுவாக தவிர்க்கப்படுகிறது.முன்னைய காலங்களில்,இரவில் மிஞ்சிய சோற்றை நீரில்,இரவின் குளிர்ச்சியில் ஊறவைத்து அதை காலையில் தயிருடன் கலந்து அல்லது தினைக்கஞ்சியை உண்பார்கள்.இந்த ஆரோக்கியமான காலை உணவு எல்லோராலும் வர்க்க வேறுபாடு இன்றி அன்று உண்ணப்பட்டது.இந்த நடைமுறை இன்று கிராமப்புறங்களில் கூட
மறைந்து வருகிறது.இனிப்பு பானங்களில் பாயசம் (பாயாசம்) இன்னும் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறப்படுகிறது.இது பால்,சவ்வரிசி,சேமியா,முந்திரி,திராட்சை,ஏலக்காய் முதலியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட ஒரு பானம் ஆகும்.மேலும் முன்னைய காலங்களில் முதல் நாள் சோற்றில் நீரூற்றி,மறுநாள் காலை,அந்த பழஞ்சோற்றுத் தண்ணீரை குடித்தார்கள்.ஆனால் இன்று இது காபி மற்றும் தேநீர்களால் மாற்றிடு செய்யப்பட்டுள்ளது.இப்படியான மாற்றங்கள் மந்த கதியில் தமிழர்களைப் பொறுத்த மட்டில்
நடைபெற்றாலும்,அதன் சில அறிகுறிகள் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக நகரப்புறங்களில் கோதுமை மா கூடுதலாக பாவிக்கப் படுவதுடன்,அரிசிக்குப் பதிலாக இரவு உணவுகளில் சப்பாத்தி பாவிக்கப்படுகிறது.அதே போல பூரி, உருளைக்கிளங்கு போன்றவை காலை உணவாக பயன்படுத்தப்படுகிறது.எது எப்படியாயினும் சப்பாத்தி,பூரி போன்றவை தமிழரின் பாரம்பரிய உணவாக கருதப் படுவதில்லை.பாரம்பரிய உணவு என்பது,எமது மூதாதையர்களால்,பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உணவு தொழில்மயமாக்கலுக்கு முன் உண்ணப்பட்டவையாகும்.இது ஒரு இனத்தின் அடையாளமாகக் கூட கருதப்படுகிறது.இந்த தொழில்மயமாக்கல் அதிகமாக 19ம் நுற்றாண்டு தொடக்கத்திலேயே பெரும்பாலும் ஆரம்பிக்கப்பட்டது.நகர புறங்களில் இன்று பெருமளவு துருப்பிடிக்காத உருக்கு இரும்பினால் செய்யப்பட்ட முள்கரண்டி,வெட்டும் கருவிகள் போன்ற சாப்பிடுவதற்கும்
பரிமாறுவதற்குமான கருவிகள் மற்றும் பீங்கான் பாண்டங்கள் அல்லது மண் பாத்திரங்கள் பாவிக்கப்பட்டாலும், விழாக்காலங்களிலும் கொண்டாட்ட காலங்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறுவது இன்னும் வழமையாகவே உள்ளது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திலும் உணவு இப்படி வாழை இலையில் பரிமாறப்பட்டதாக புறநானுறு 168  குறிப்பிடுகிறது.

"மரையான் கறந்த நுரை கொள் தீம் பால்
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றிச்
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளங் கவினிய குளவி முன்றில்
செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்"

மரையான் என்னும் காட்டுப் பசுவிடம் கறந்த நுரையுடன் கூடிய இனிய பாலில் மான் தசையை வேகவைத்தப் புலால் மணமுள்ள அழகிய நிறமுள்ள பானையின் வெளிப்புறத்தைக் கழுவாமல் உலைவைத்து,சந்தன விறகில் தீ மூட்டிச் சோற்றை சமைப்பர்.அவர்களின் வீட்டு முற்றத்தில் கூதளம்பூ[காட்டு மல்லிகை] பூத்துக் கிடக்கும்.அப்படி மல்லிகை மணக்கும் முற்றத்தில் வளமான குலையையுடைய வாழையின் அகன்ற இலையில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்னும்,குதிரை மலைத் தலைவனே! என்கிறது இந்த பாடல்.

உணவைப்பற்றி ஒருவர் கூறும் போது எமது மனதில் தோன்றுவது சுவை எப்படி இருக்கும் என்பதே.சுவையில்லா உணவு,உணவாக கருதப்படுவதே இல்லை.அதனால் தான் "உப்பில்லாத பண்டம் குப்பையிலே" என ஒரு  பழமொழி சொல்லிவைத்தான் போலும்! சுவை ஒரு வகை நேரடி வேதியல் உணர்வாகும்.மேற்கத்தியர் அடிப்படை சுவை நான்கு என்பர்:இனிப்பு,கார்ப்பு,கசப்பு,புளிப்பு என்பனவாகும்.தமிழர் முறைப்படி ஆறு வகை சுவை என்பர்.அவை இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்பனவாகும்.இந்த அறுசுவையும் சேர்ந்த
உணவு ஒன்றையே முழுமையான உணவு என தமிழர் கருதுகின்றனர்.ஆகவே,எல்லா ஆறு சுவைகளையும் கொண்ட ஒரு உணவை கொடுப்பதற்காக பண்டைய தமிழன் அகன்ற வாழை இலையை தேர்ந்து எடுத்தான்.அந்த இலையை நுனி இடது பக்கம் நோக்கி இருக்கக் கூடியதாக விருந்தினர் முன் பரப்பினான்.இதற்கு காரணம் பெரும்பாலானோர் வலது கை பாவித்து உணவு உண்பதால் ஆகும்.அதிகமாக பரிமாறல் உப்பு,ஊறுகாய் போன்றவற்றுடன் ஆரம்பிக்கின்றன.இவை பொதுவாக கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் இடது பக்கம் வைக்கப்படுகிறது.ஆகவே உணவுடன் இவை எளிதில் கலக்காது.முதலாவது உணவு இனிப்பு ஆகும்.எல்லா ஆரம்பமும் இனிமையாக மலரட்டும் என்பதால்,மனிதர்களால் அதிகம் விரும்பப்படும்
சுவையான இனிப்புடன் தொடங்கப்படுகிறது.குழந்தையின் முதலாவது உணவு தொடங்கி, மணமக்களின் முதல் பானம் வரை இப்படித்தான் தமிழர் வாழ்வில் இருக்கிறது.மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால்,உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில் வலது பக்கம் வைக்கப்படுகிறது.நடுவில் முக்கிய உணவான சோறு-நடுவிலும் கீழ் பாதி இலையிலும், அதை சுற்றி மேல் பாதி இலையில் பலதரப்பட்ட மரக்கறி உணவுகள்[கூட்டு  அவியல் வறுவல்],பச்சடி,அப்பளம் போன்றவை வைக்கப்படுகின்றன.விருந்தினரை கவனித்து தேவையான உணவு வகைகளை மீண்டும் நிரப்புகிறார்கள்.வேண்டாம் என்றாலும் விடுவதில்லை.மாமிசம் உண்பவர்கள் கூட,பொதுவாக, விழாக் காலங்களில் மரக்கறி உணவே உண்ணுகிறார்கள்.
பகுதி :24 தொடரும்.........                                                                        


0 comments:

Post a Comment