"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]"/பகுதி:03

 [ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்[Dr.Pope]"சைவம் தென் இந்தியாவில், சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது என்று கூறியுள்ளார்.தமிழர்களின் படிப்படியான சிந்தனையின் வளர்ச்சியால் மட்டுமே சைவ சித்தாந்தம் உருவானதாக எமக்கு தோன்றுகிறது.ஆகம கொள்கைகளை அடிப் படையாகக் கொண்ட இந்த சமய நெறி,அதன் கட்டமைப்பாலும் அதன் சிந்தனையாலும்,நான்கு வேதங்களின் சிந்தனைகளாலும் அதன்  நடைமுறைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமய நெறியில் இருந்து இயல்பாகவே முற்றிலும் வேறுபட்டது.ஆகவே இந்த இரண்டும் கட்டாயம்  ஒரே தேசிய இனத்திற்கு உரியது என கருத முடியாது.பிந்தியது ஆரியருக்கு உரித்தேனின்,முந்தியது திராவிட குழுவினருக்கு உரியது ஆகும்.திராவிட குழுக்களிலும் தமிழரே,வேத காலத்திற்கு முன்னமே நாகரிகம் அடைந்தவர்கள் ஆவார்கள்.ஆகவே தமிழரே சைவ ஆகமத்தை
ஏற்படுத்தியவர்கள் என்பது சரியான காரணத்துடன் எடுத்த அநுமானம் ஆகும்.எனவே,சைவ சித்தாந்தம் தமிழருடையதே என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் இது காட்டுகிறது.எடுத்ததற்கெல்லாம் "சைவமும் தமிழும். சைவமும் தமிழும்" என்று நம்மவர்கள் கூறுவதும் இதனால் போலும்.ஆகவே பண்டைய தமிழ் இலக்கியம், பெருந்திரளானவை சைவ சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டவையாக இருக்கலாம் என யாரும் எதிர்பார்க்கலாம். ஆனால் இது ஏமாற்றத்தையே கொடுக்கிறது.தமிழரின் இந்த வரலாற்று காலத்தில் அல்லது சங்க இலக்கிய காலத்தில், பண்டைய தமிழர்கள் மத்தியில் வாழ்ந்த கற்றறிவாளர்கள், தத்துவ மற்றும் மத ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத தமிழை தேர்ந்தெடுக்கவில்லை. கி பி பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே, தமிழ் நாட்டில் அன்று நிலவிய சமூக எழுச்சி மற்றும் மத கொந்தளிப்பு காரணமாக,மெய்கண்ட தேவர் என்பவர்,முன்னைய அனைத்து மரபுகளையும் தாண்டி, சிவஞான போதம் என்ற சைவ சித்தாந்த சாத்திரத்தை தமிழில் தந்தார்.அதற்கு
முன்,திருவுந்தியார்,திருக்களிற்றுப் படியார் ஆகிய இரு சிறு படைப்புகளை தவிர மற்ற எல்லா தத்துவ மற்றும் சமய நூல்கள் சமஸ்கிரத மொழியிலேயே எழுதப்பட்டன. அன்று இப்படி சமஸ்கிரதத்தில் எழுதுவது ஒரு நாகரிகமாக தமிழர் மத்தியில் இருந்தது. இவைகளுடன், இன்னும் ஒரு இலக்கியம் பக்தி பாடல்களை கொண்டவையாக, ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து வரத்தொடங்கின.இவையும் சைவ சித்தாந்தம் போல்,மிகவும் முக்கியமானவை ஆகும்.இந்த நூல்களின் தொகுப்பை பன்னிரண்டு திருமுறைகள் என அழைக்கப்படுகின்றன. இதில் பத்தாவது திருமுறையான திருமூலரின் திருமந்திரம் சிறப்பு கவனத்திற்கு உரியது ஆகும்.இது மிக உயர்ந்த கருத்துக்களும்,மறைபொருட்களும் கொண்ட,ஒரு சைவ ஆகமம் நூல் என்றும் போற்றப்படுகிறது. அது மட்டும் அல்ல,இது தீர்க்கதரிசி மற்றும் துறவிகளின் ஆன்மீக அனுபவங்களை கொண்டுள்ளதே. மற்றவைகளை விட மிகவும் முக்கியமானது ஆகும்.இது,அறிவாளர்களை அன்றும் இன்றும் வியப்பில் ஆழ்த்துக்கிறது. இது பல புதிர்களைக் கொண்டுள்ளது.இதன்  நூல் ஆசிரியர்,இந்த புதிர்களை,இன்னும் ஒரு புதிர் மூலம் தீர்க்க முயற்சிக்கிறார்.உதாரணமாக,திருமூலரின் எட்டாம் தந்திரத்தில்,ஒரு பாடலை பாருங்கள்.எப்படி இது புதிர் மூலம் புதிரை தீர்க்கிறது என்பது உங்களுக்கு புரியும். 

"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே"

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன்.அதைப் சோதனையிடுவதற்க்காக இன்னொரு தச்சன் போனான்.அவன் தன்னோடு தன் குழந்தையையும் கூட்டிக்கொண்டு போனார்.மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.மர யானையைப் சோதிப்பதற்காக அவன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை,"அப்பா யானைக்கு கிட்டப் போகவேண்டாம் அது முட்டி மோதும்" என்று கத்தியது.தச்சன் குழந்தையிடம்,"இது மரப் பொம்மைதான்;முட்டாது,மோதாது" என்று சொல்லிச் சமாதானம் செய்து குழந்தையையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.குழந்தைக்கு அந்த வாகனம் உண்மையான யானையாகவே இருந்தது.அது,மரம் என்கிற உண்மையை குழந்தையிடமிருந்து மறைத்தது.அதே சமயத்தில்,அது யானை மாதிரி இருந்தும்,தச்சன் பயப்படாததற்குக் காரணம்,அது மரம்தான் என்கிற அறிவு அவனிடம் இருந்ததேயாகும்.யானை வேறு,மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு,உலகம் வேறு இல்லை என்று இப்படி எடுத்துக் காட்டி விளக்குகிறார் திருமூலர்.

என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப் படுகின்றது.நான் யார்? கடவுள் இருக்கிறாரா?கடவுள், உயிர்,அண்டம், இவைகளின் இயல்பு என்ன ?உலகத்துடனும்,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம்,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன?எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன.சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க,வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது.மக்களின் சுதந்திரம், விடுதலை,உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும்,இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை.மூட நம்பிக்கையிற்கும்,கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இட மில்லை.கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை.சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள்."அன்பே
சிவம்","தென்னாடுடைய  சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது.அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு இல்லை.இரண்டும் ஒன்றே!இந்த முதுமொழி,தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது.அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன.கணியன் பூங்குன்றனார் எனும் கவிஞன் புறநானூறு-192 இல் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்று அறைகூவல் ஒன்றை விடுகிறான். நிறைகுடமாய்த் திகழும் தன் நெஞ்சத்தைத் திறந்துகாட்டி விரிகடல்சூழ் உலக முழுதும் நம் ஊரே என்றும்,விழியும் ஒளியும் போல் மக்கள் எலாம் நம் உறவே என்றும்- புதிய வெளிச்சத்தால் பொல்லாத இருள் கிழித்து வேற்றுமையின் வேரறுத்துப் புரட்சி செய்தான் அந்த கவிஞன்!

"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; "மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆறாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம்" என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

அது மட்டுமா,விதிப்பயனே எல்லாம் என்றுரைத்துச் சோர்ந்து கதியற்றுக் கன்னத்தில் கைவைப்போர்தனைப் பார்த்து;"நன்மைக்கும் தீமைக்கும் காரணங்கள் நமது செயல்களேயன்றி பிறரல்ல" என்று நயம்படி உரைக்கின்றான் அந்த நற்றமிழ்ப் புலவன்!மேலும் சைவ சித்தாந்தம் "ஒன்றே குலம்  ஒருவனே தேவன்"என்று எம்மை அது வழி காட்டுகின்றது. எமது திருக்குறள்,மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும்,புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.அறம்,பொருள்,இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) எம்மை அறிவுறுத்துகிறது. என்றாலும் அவர்,வாழ்வில் நிறைவு அடைதல் பற்றி ஒன்றும் கூறவில்லை.முப்பாலையும் கடந்தவன் தானாகவே தனது வாழ்வில் நிறைவு காண்பான் என்பதால் அதை சொல்லாமலே விட்டுஇருக்கலாம்? இப்படி நாலு வாழ்க்கை நிலையைத்தான் சைவம் எமக்கு போதிக்கிறது.இங்கு கருத்து அற்ற சடங்குகளுக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கைகளுக்கும் இடம் இல்லை. "வையத்து வாழ்வாங்கு"வாழவேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது."என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலர். இவரே சைவ சித்தாந்தத்தின் சாரம் என்றும் கருதப்படும் திருமந்திரம் என்னும் நூல் தந்தவர் ஆவார். இந்த நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் செய்யுள் வரி-1421 யில் "கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்,முற்பத ஞான முறைமுறை நண்ணியே,சொற்பத மேவித் துரிசற்று மேலான,தற்பரங் கண்டுளோர் சைவசித்தாந்தரே." என்று காணப்படுகிறது.சித்தாந்தம் என்பது சிந்தித்துக் கண்டறிந்த முடிவான உண்மை எனப்பொருள்படும்.(அந்தம் - முடிவு). எனவே ஆன்மீகம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் ஆராய்ந்து சிந்தித்து முடிந்த முடிவாகக் காணப்பட்டது இந்த சைவசித்தாந்தம் ஆகும்,மேலும் இதன் சிறப்பு என்ன வென்றால்,இது பொதுவாக,தர்க்க ரீதியானது(Logic), அறிவியற் பூர்வமானது (Scientific),வரலாற்றுத் தொன்மையுடையது (Historic),நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt),உலகளாவியது (Universal) மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை உடையது (Optimistic) ஆகும். 

பகுதி 04 தொடரும்....

2 comments:

  1. சைவசித்தாந்தம் பொதுவாக,தர்க்க ரீதியானது(Logic), அறிவியற் பூர்வமானது (Scientific),வரலாற்றுத் தொன்மையுடையது (Historic),நடைமுறைக்கு இயைந்தது (Easy to Adapt),உலகளாவியது (Universal) மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை உடையது --ஆஹா,அருமையான தகவல்கள் .தொடரட்டும்.நன்றி

    ReplyDelete
  2. சைவசித்தாந்தம் உண்மை... ஏன் அது சிக்கலானது ?? சிக்கலாக மாற்றியது யார் ?அதுகும் கடவுளா... அல்லது மனிதனா...?? மனிதனுக்கு விசுவாசம் கிடையாது.... இருந்திருந்தால் பாவங்களை நீக்க யேசுவின்மேல்வந்த பரிசுத்த ஆவியானவரை ...சிலுவையில் அறைந்தது மல்லாமல்..மறதலித்தார்கள்..அதை கையில்..எடுத்த ஆங்கிலேயர் ஆவரை கடவுளாய் ஏற்று...அவர்பெயரில் ஒரு மதத்தையும் உருவாக்கி... இப்போ உலகை ஆழ்கிறார்கள்.. அதுமட்டுமல்ல..புத்தகங்களில் biecful,powerful, healthful..உடையது...bible அதைைையும் ... மதம் என்ற போர்வைக்குள்..புகுத்தி தள்ளிவைத்தார்கள்.. நான் ஒன்று கேட்கிறேன் ...bible ளை எழுதியது கிந்துவா or கிறிஸ்தவனா?? யாரால் கட்டப்பட்டது?? எத்தனை பேர் எழுதினார்கள்?? யார் கையில் கொடுத்து...இருக்கிறது ..எல்லாமே ஆச்சரியத்திற்குரியதாக இருக்கிறது கடவுளின் வருகை பற்றி உலகத்தில் ஒரு மனிதனும் தவறாமல் சொல்லும்படியகதான் bible ல சொல்லிருக்கு ...ஆனால் மனிதர்கள் அதைவைத்து வியாபாரம் செய்கிறாகள்...பூசையில் வைக்கவேண்டிய புத்தகம் இன்று குப்பைத்தொட்டியில்...வேதனைக்குரியது...இப்போ சொல்லுங்க உலகத்தில் நடக்கும் அழிவிற்கெல்லாம் யார் காரணம் என்று...🌹🌐❤

    ReplyDelete