பழகத் தெரிய வேணும் – 72

சுயசிந்தனையும் நிந்தனையும்

`என்னை எல்லாருக்கும் பிடிக்கும். எனக்கும் பிடிக்கும்!’ என்று கூறும் சிறுவர்கள் வெகு சிலரே.

 

::கதை::

பல பள்ளிகளிலிருந்து வந்திருந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்ட தற்காப்புக்கலை நிகழ்ச்சி அது.

 

எனக்கு அறிமுகமில்லாத ஒரு சீனப் பெண்மணி, “என் மகளுக்கு பர்சனாலிடியே (ஆளுமை) கிடையாது,” என்று, பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடம் முறையிட்டாள்.

 

அந்த ஏழு வயதுச் சிறுமி பக்கத்திலேயே நின்றிருந்தாள்.

 

சோகமாக இருந்தாள்.

 

பாராட்ட வேண்டிய தாயே தன்னைப் பற்றிப் பிறரிடம் குறையாகக் கூறினால், பின் எப்படி இருப்பாள்?

 

அந்த தாயைத்தான் குறை கூற வேண்டும். ஏனென்றால், பிற குழந்தைகளுடன் அவளை ஒப்பிட்டு, இல்லாதவற்றுக்காகப் பழிக்கலாமா? அச்சிறுமியிடம் நற்குணங்களே இருக்காதா, என்ன!

 

`கூடாது என்பதைச் செய்தால் தவறா?’ என்று குழந்தைகள் ஆர்வத்துடன் செய்துபார்ப்பார்கள். சரி, தவறு புரியாத வயது அது.

 

தவறு என்று தெரிந்தே, `அம்மா என்னதான் செய்துவிடுவாள்!’ என்று, தாயைப் பரிசோதனை செய்வதற்காகச் செய்தால், கண்டிக்கலாம். ஆனால், புதிய முயற்சியில் ஈடுபடும் தைரியத்தையே இழக்கும் அளவுக்குக் குறைகளைப் பெரிது பண்ண வேண்டாமே!

 

::கதை::

என் மூன்று வயது மகன் சசி `வாஷிங் மெஷின்’ ஓடிக்கொண்டிருந்தபோதே, மிகுந்த பிரயாசையுடன் திறந்தான். `அம்மா செய்வதுபோல் தானும் செய்யலாமே!’ என்ற ஆர்வம்தான் காரணம்.

 

அப்புறம் என்ன!

 

அதனுள்ளிருந்து தண்ணீர் வெள்ளமாகப் பெருக, அலறியபடி ஓடினான்.

 

போனாப்போறது! இனிமே, நான் சொல்றபோது திற, என்ன!” என்றுவிட்டு, சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினேன். அவனே பயந்தபோது, நான் வேறு எதற்காகத் தண்டிப்பது!

 

அடுத்த முறை, அதன் அருகிலேயே உட்கார்ந்திருந்தான்.

 

இந்த விளக்கு அணைந்ததும்தான் திறக்கணும்,” என்று காட்டினேன்.

 

அதன்படி நடந்தபோது, அவனுக்குப் பெருமையாகிவிட்டது.

 

இன்னொரு முறை, எதையோ அரைக்கப் போட்டிருந்தேன். `பிளெண்டரை’ மூடவில்லை.

 

சசி அதை இயக்கிவிட்டான். அதனுள்ளிருந்த தேங்காய், மிளகாய் வற்றல் எல்லாம்…!

 

அவன் பயந்து ஓடினான். நான் திட்டுவேன் என்று பயந்தல்ல. சூறாவளிபோல் பறந்தவைகளைக் கண்டு.

 

அதிலிருந்து, நான் பக்கத்தில் இருக்க, சமையலறையில் எந்தவித மின்சார இயந்திரமானாலும், அதை இயக்குவது அவன் வேலையாகப் போயிற்று.

 

வெற்றிகரமாக வேலையை முடித்ததும், அவன் முகத்தில் எழும் பூரிப்புக்காக நான் பொறுமையாகக் காத்திருப்பேன்.

 

வீட்டில் ஒவ்வொருவரிடமும் போய், பெருமையாகச் சொல்லிக்கொள்வான், “நான்தான் cabbage (முட்டை கோஸ்) நறுக்கினேன்!” என்று.

 

நீ ரொம்ப புத்திசாலி!” என்று அவர்களும் பாராட்டுவார்கள்.

 

குழந்தைகளுக்குத் தம்மையே பிடித்துப்போக பாராட்டுகள் அவசியம். ஏனெனில், பிறர் சொல்வதை அப்படியே நம்பும் வயது அவர்களுக்கு.

 

சில தவறுகள் புரிந்தாலும் என்ன மோசம்! அதன்பின் செய்வது எல்லாமே தவறென்று ஆகிவிடுமா?

 

::கதை::

பாலர் பள்ளி மாணவனாக இருந்தபோது, என் பேரன், `இன்னிக்கு நிறைய வீட்டுப்பாடம் இருக்கு!’ என்று பெருமூச்செறிந்தான்.

 

தினமும் அப்படிச் சொல்லிக்கொண்டுதான் வீடு திரும்புவான்!

 

அவன் செய்ய வேண்டிய வேலை: ஒரே எழுத்தை பத்து முறை எழுதவேண்டும்.

 

`வரிக்குமேல்’ என்று, ஆசிரியை ஒவ்வொருவரின் நோட்டுப்புத்தகத்திலும் உதாரணமாக ஒருமுறை எழுதியிருந்தாள்.

 

அந்த வயதில், `பள்ளிக்கூடத்தில்தான் படிப்பு என்றால், வீட்டிலுமா! எப்படித்தான் எழுதி முடிக்கப்போகிறேனோ!’ என்ற அயர்ச்சி எழுவது சகஜம்.

 

எழுதி முடித்ததும், பூங்காவில் விளையாடப் போகலாம்,” என்பதுபோல், அவனுக்குப் பிடித்த எதையாவது சொல்லி, ஆசைகாட்டுவோம்.

 

நினைத்ததைவிட வேலை எளிதாக, விரைவாக, முடிந்துவிடும். அப்போது தன்னம்பிக்கை கூடும். அது மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.

 

என் நெருங்கிய தோழி, முதல் வகுப்பிற்கான பரீட்சைத்தாளைப் பார்த்து, “எவ்வளவு எளிதாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள்.

 

அந்த வயதில், உனக்கும் இது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும்,’’ என்று நான் சிரித்தேன்.

 

அவளும் சிரித்தாள். “அட, ஆமாம்!” என்று ஒத்துக்கொண்டாள்.

 

எந்த வயதிலும், ஒவ்வொரு படியாக ஏறினால்தானே மேலே போகமுடியும்! மலைத்துப்போய் கீழேயே நின்றுகொண்டிருக்கலாமா?

 

சுயசிந்தனையும் நிந்தனையும்

தாயின் அறிவுரைப்படி நடக்காது, சுயசிந்தனையோடு செயல்படுவார்கள் சிலர். அந்த நிலையில், தோல்வியையோ, பழியையோ ஏற்க நேரலாம்.

 

`நான் படித்துப் படித்துச் சொன்னேனே! கேட்டாயா? உனக்கு உலகத்தின் போக்கு புரியவில்லை,’ என்று தாய் குற்றம் சாட்டினால், மகளுக்குக் குற்ற உணர்ச்சிதான் ஏற்படும். அடங்கிப்போவதே சிறந்தது என்று தீர்மானித்துவிடுவாள் – அதனால் மனக்குறை ஏற்பட்டாலும்.

 

பெற்றோரால் புகழப்படாது, சிறு வயதிலிருந்தே அவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்கும்படி வளர்க்கப்பட்டவர்கள், வளர்ந்தபின்னரும் தம்மைத்தாமே தாழ்த்திக்கொள்வார்கள்.

 

`என்னைப் பற்றி உயர்வாகச் சொல்லிக்கொண்டால் தற்பெருமை என்பார்களே! அதற்கு மாறாக, `நான் மட்டம்!’ என்பதுபோல் சொல்லிக்கொண்டால், அது அடக்கம் இல்லையா?’ என்று இவர்கள் யோசனை போகிறது.

 

எனக்குத் தைரியமே கிடையாது. நான் சரியான பயந்தாங்கொள்ளி!” எத்தனைபேர் இப்படிச் சொல்கிறார்கள்!

 

`ஏன் பயம்? எங்கிருந்து ஆரம்பித்தது?’ என்று யோசிக்கலாமே!

 

எதையும் உரிய காலத்தில் செய்யும் நல்ல வழக்கம் எனக்குக் கிடையாது. தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பேன்!” இப்படிக் கூறிய ஆங்கில தினசரி ஆசிரியை ஒருத்தியிடம் நான் மறுத்துக் கூறியது: “உன் குறைகளைப் பிறர் கண்டுபிடிக்கட்டும் என்று விடு. நீயே ஏன் கூறிக்கொள்கிறாய்?”

 

நீங்கள் சொல்வதும் சரிதான்,” என்று ஏற்றுக்கொண்டாள்.

 

`கிடையாது,’ என்று நாம் உரக்கக் கூறும் ஒவ்வொரு நற்குணமும் நம்மிடமிருந்து சிறுகச் சிறுக விலகிவிடுகிறது. ஏனெனில், நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மூளையில் பதிந்துவிடுகிறது.

 

எனக்கு என்னைப் பிடிக்கும்!

 

தம் திறமைகளில் கொண்ட நம்பிக்கையுடன் புதிய காரியங்களில் ஈடுபடுகிறவர்கள், `எனக்கு என்னைப் பிடிக்கும்,’ என்ற திருப்தி உடையவர்கள். அதனாலேயே அமைதிகொண்டவர்கள்.

 

ஒருவர் தனக்கேநம்பிக்கை அளித்துக்கொள்ளும் வழி இது.

 

(நம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம் என்பதைப் பிறரிடம் எதற்காகப் பகிர்வது? `தற்பெருமை!’ என்று, பொறாமையுடன் பழிப்பார்கள்).

 

`என்னால் முடியும். செய்துகாட்டுவேன்!” என்று விடாமுயற்சியுடன் செய்கிறவர்கள் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவார்கள். தவறோ, தோல்வியோ கிடைத்தாலும் தளர்ச்சி ஏற்படாது.

 

வெற்றி அடைபவர்கள் தனித்துச் செயல்பட்டாலும், உதவி வேண்டும் என்று தோன்றும்போது, துணிந்து கேட்பார்கள்.

 

தம் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்த இயலுவதால், இவர்களுக்குப் பிறரைக் கண்டு பொறாமை எழுவதில்லை.

 

பொதுவாக, ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், அவரைப்போல் நிறையபேர் இருக்கமாட்டார்கள் என்று கூறலாம். ஆனால், வித்தியாசமாக இருக்கும் பிறரையும் அவரால் ஏற்கவும், மதிக்கவும் முடியும்.

 

எதுவும் அளவோடுதான்

ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போவது விரும்பத்தக்கது என்றாலும் அதுவும் ஓரளவோடுதான் இருக்கவேண்டும்.

 

தன்னைத்தவிர மற்ற அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குறைந்தவர்கள் என்று எண்ண ஆரம்பித்தால், யார் அவரை மதிப்பார்கள்!

 

அப்படி எண்ணுவதே தன்னம்பிக்கை இல்லாததைத்தான் காட்டுகிறது.

 

தன்னம்பிக்கை குறைந்து வாழ்வது காரை ஓட்டிப் போகும்போது, `ஹாண்ட் ப்ரேக்’கை (HAND BRAKE) கீழே இறக்காது போவதுபோல்,” என்கிறார் ஓர் அனுபவசாலி. பாதை கரடுமுரடாகத்தான் இருக்கும்.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

0 comments:

Post a Comment