திருக்குறள்/07/மக்கட்பேறு

முகவுரை -07- நூலின் கட்டமைப்பு

திருக்குறள் ஒரு தனி ஆசிரியரின் படைப்பாகும். இக்கூற்றை நிரூபிக்கும் வகையில் இந்நூலானது “ஒரு நிலையான மொழியமைப்பையும் முறையான கட்டமைப்பையும் சீரான பொருளமைப்பையும் கொண்டுள்ளது” என்று சுவெலபில் கூறுகிறார். குறள் பலரால் இயற்றப்பட்ட ஒரு தொகுப்பு நூல் அன்று என்றும் அதன் உள்ளடக்கத்தில் எந்த ஒரு பிற்சேர்க்கைகளும் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.  இந்நூலினை மூன்று பால்களாகப் பகுத்தது இதன் ஆசிரியரே ஆகும். ஆனால் குறளின் உரைகளில் காணப்படும் துணைப்பிரிவுகளான "இயல்" பாகுபாடுகள் பின்னர் வந்த உரையாசிரியர்களால் செய்யப்பட்டவை. குறளுரைகளில் இயல் பாகுபாடுகள் உரைக்கு உரை வேறுபட்டிருப்பதும் அதிகாரங்கள் இயல் விட்டு இயல் மாறி அமைந்துள்ளதுமே இதற்குச் சான்றுகளாகும். எடுத்துக்காட்டாக, பரிமேலழகரின் உரையில் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள இயல் பிரிவுகள் மணக்குடவரின் உரையிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றன:

அதிகாரங்கள் 1–4: பாயிரம்

அதிகாரங்கள் 5–24: இல்லறவியல்

அதிகாரங்கள் 25–38: துறவறவியல்

அதிகாரங்கள் 39–63: அரசியல்

அதிகாரங்கள் 64–95: அங்கவியல்

அதிகாரங்கள் 96–108: ஒழிபியல்

அதிகாரங்கள் 109–115: களவியல்

அதிகாரங்கள் 116–133: கற்பியல்

இவ்வாறு இயல் பாகுபாடுகள் பிற்காலச் சேர்க்கைகளாகவே அறியப்பட்டாலும், குறட்பாக்கள் அனைத்தும் பலதரப்பட்ட உரைகளுக்கிடையிலும் பிற்சேர்க்கைகள் ஏதுமின்றி அவற்றின் உண்மை வடிவம் மாறாது பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அறத்துப்பாலிலுள்ள அதிகாரங்கள் இல்லறம், துறவறம் என இரு இயல்களாக இடைக்கால உரையாசிரியர்களால் பகுக்கப்பட்டாலும், இவை நூலாசிரியரது பகுப்பன்று என்பதால் அவற்றில் இருக்கும் அனைத்துமே நூலாசிரியரால் இல்லறத்தானுக்கு அல்லது சாமானியனுக்குச் சொல்லப்பட்டவை தான் என்பது புலப்படுகிறது. "ஒரு மனிதன் பல நிலைகளில் மகனாக, தந்தையாக, கணவனாக, நண்பனாக, குடிமகனாக ஆற்ற வேண்டிய கடமைகளை திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்" என்று தாய்வானிய அறிஞர் யூசி கூறுவது இங்குக் குறிப்பிடத்தக்கது. குறளில் உள்ள "துறவறம்" என்பது இல்லற வாழ்க்கையைக் கைவிட்டுத் துறவறம் மேற்கொள்வதைக் குறிப்பதோ துறவிகளுக்காகக் கூறப்பட்டவையோ அல்ல. மாறாக, தனிநபர் ஒவ்வொருவரும் தனது அளவற்ற ஆசைகளைக் கைவிடுவதையும் அறநெறி பிறழாது சுயக்கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதையுமே "துறவற" அதிகாரங்கள் கூறுகின்றன என்று ஏ. கோபாலகிருட்டிணன் நிறுவுகிறார். சிரக்கியூஸ் பல்கலைக்கழக சமயவியல் பேராசிரியரான ஜோஅன் பன்ஸோ வாக்ஹார்ன் குறளை "ஒரு இல்லறத்தானுக்குக் கூறப்பட்ட அறவழி வாழ்வுக்கான பிரசங்கம்" என்று கூறுகிறார்.

முப்பால் எனும் பகுப்பைப் போல் குறள்களை அதிகாரங்களாகத் தொகுத்ததும் நூலாசிரியர் தான். இயல் எனும் பகுப்பு மற்றும் அதிகார வைப்புமுறையினை மட்டுமே உரையாசிரியர்கள் மாற்றியுள்ளனர். ஒவ்வொரு அறத்தையும் பத்துக் குறட்பாக்களாகப் பாடி அவற்றின் தொகுப்பினை அதிகாரம் என்று பெயரிட்டாளும் மரபு வள்ளுவரிடம் காணப்படுவதாகவும் ஒவ்வோரதிகாரத்திற்கும் தலைப்பினை அவரே வழங்கியுள்ளார் என்றும் சோ. ந. கந்தசாமி கூறுகிறார். மேலும் அந்தந்த அதிகாரத்தில் பொதிந்துள்ள குறட்பாக்களில் பயின்றுவரும் தொடரினையே பெரிதும் பேணி அதிகாரத் தலைப்பாக வள்ளுவர் அமைத்துள்ளதாகவும் அவர் உரைக்கிறார். இதற்கு விதிவிலக்காக ஒவ்வொரு பால்களிலும் ஓர் அதிகாரம் உண்டு: அறத்துப்பாலில் வரும் "கடவுள் வாழ்த்து" அதிகாரமும் (முதல் அதிகாரம்), பொருட்பாலில் வரும் "படைச் செருக்கு" அதிகாரமும் (78-ம் அதிகாரம்), காமத்துப்பாலில் வரும் "படர்மெலிந்திரங்கல்" அதிகாரமும் (117-வது அதிகாரம்) அவற்றில் வரும் குறள்களில் பயின்றுவராத சொல்லை அதிகாரத் தலைப்பாகக் கொண்டுள்ளன. இவ்வாறு முரணாக இருப்பினும் இவையனைத்துமே வள்ளுவரால் சூட்டப்பட்ட பெயர்களேயாம். குறளின் முதலதிகாரத்தின் தலைப்பு தொல்காப்பிய மரபின் வழியே சூட்டப்பட்டதென்றே கந்தசாமி துணிகிறார்.

சுவெலபிலின் கூற்றுப்படி குறளானது ஐயத்திற்கிடமின்றிச் சீரான அமைப்போடும் கவனத்தோடும் இயற்றப்பட்ட ஒரு நூலாகும். கருத்துகளில் இடைவெளியோ வெற்றிடமோ இன்றிக் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் தத்தம் அதிகாரத்தினின்று பிரித்தெடுக்க இயலா வண்ணம் கோர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஒவ்வொரு குறட்பாவும் அமைவுப் பொருள், மூதுரைப் பொருள் என இரு வகையான பொருட்களைத் தரவல்லது. குறட்பாக்களை அவை பயின்றுவரும் அதிகாரத்திலிருந்து தனியே நீக்கிப் பார்த்தால் அவை தங்களது அமைவுப் பொருளை இழந்து, தங்களுக்கே உரிய மூதுரைப் பொருளை மட்டும் தந்து ஒரு தனிப் பழமொழி போல் ஒலிக்கவல்லவை. தனித்து நிற்கையில் குறட்பாக்கள் ஒவ்வொன்றும் குறுகிய வெண்பாக்களுக்கே உரிய அனைத்து இலக்கணங்களையும் வெவ்வேறு வகைகளில் கொண்ட நன்னெறிப் பாக்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. அதிகாரங்களுக்குள் பயின்று வருகையில் குறட்பாக்கள் தங்களது இயல்பான மூதுரைப் பொருளோடு தாங்களிருக்கும் அதிகார அமைப்பின் வழி வரும் அமைவுப் பொருளையும் சேர்த்து உரைத்து நூலாசிரியரின் உள்ளப்பாங்கினை வெளிப்படுத்துவதாய் அமைகின்றன. இவ்வகையில் குறள்கள் வெறும் நீதிக்கருத்துகளைக் கூறும் தனிப்பாக்களாக மட்டும் இருந்துவிடாமல் நூல்முழுதும் இழைந்தோடும் அடிப்படை அறத்தின் ஆழ்பொருளை முழுமையாக அகழ்ந்தெடுத்துத் தரும் பாக்களாக உருமாறுகின்றன. இவ்வகையில் நூலின் நடையானது ஒரு முழுமையற்ற மனிதனை அறங்கள் கொண்டு செதுக்கி அவனை உணர்வு, சிந்தனை, சொல், செயல் என அனைத்து அளவிலும் அகவாழ்விலும் தினசரி வாழ்விலும் அறம் பிறழாத நல்ல இல்லறத்தானாகவும் புற வாழ்வில் சிறந்த குடிமகனாகவும் மாற்றுகிறது என்கிறார் சுவெலபில்.

இலக்கிய அளவில், திருக்குறள் நடைமுறை அறநெறிக் கருத்துகளைச் செய்யுள் வடிவில் சுருக்கமாகவும், நேர்த்தியாகவும், தெளிவாகவும், வலுவுடனும் அனைவரும் ஏற்குமாறும் தரும் ஒரு நூலாகும். இந்நூல் முழுவதும் வள்ளுவர் செய்யுளின் அழகு, ஓசைநயம், கூறல் முறை போன்றவற்றில் கவனம் செலுத்தாது கூறவந்த அறத்திற்கே முழுமையாக முக்கியத்துவம் தந்திருப்பது நோக்கத்தக்கது.

[திருக்குறள் - முகவுரை-08 அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது….

7. மக்கட்பேறு

 

👉 குறள் 61:

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.

 

மு.வ உரை:

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை.

கலைஞர் உரை:

அறிவில் சிறந்த நல்ல பிள்ளைகளைவிட இல்வாழ்க்கையில் சிறந்த பேறு வேறு எதுவுமில்லை.

 

👉 குறள் 62:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

 

மு.வ உரை:

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

சாலமன் பாப்பையா உரை:

பழிக்கப்படாத நல்ல குணங்களை உடைய பிள்ளைகளைப் பெற்றால், பெற்றவளை அவனுடைய பிறவிகள்தோறும் துன்பங்கள் தொடமாட்டா.

கலைஞர் உரை:

பெற்றெடுக்கும் மக்கள் பழிபடராத பண்புடையவர்களாக இருப்பின், ஏழேழு தலைமுறை எனும் அளவுக்குக் காலமெல்லாம் எந்தத் தீமையும் தீண்டாது.

 

👉 குறள் 63:

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தந்தம் வினையான் வரும்.

 

மு.வ உரை:

தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.

சாலமன் பாப்பையா உரை:

பிள்ளைகளைத் தம் செல்வம் என்று அறிந்தோர் கூறுவர். அப்பிள்ளைகள் உள்ளபடியே செல்வமாவது அவரவர் செய்யும் நற்செயல்களால் அமையும்.

கலைஞர் உரை:

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம் அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

 

👉 குறள் 64:

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்

மு.வ உரை:

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.

கலைஞர் உரை:

சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது.

 

👉 குறள் 65:

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

 

மு.வ உரை:

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்

கலைஞர் உரை:

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

 

👉 குறள் 66:

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர்.

 

மு.வ உரை:

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.

கலைஞர் உரை:

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.

 

👉 குறள் 67:

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

 

மு.வ உரை:

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தகப்பன் தன் பிள்ளைக்குச் செய்யும் நன்மை, கற்றவர் அவையில் முதன்மைப் பெறச் செய்வதே.

கலைஞர் உரை:

தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும்.

 

👉 குறள் 68:

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

 

மு.வ உரை:

தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.

கலைஞர் உரை:

பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்.

 

👉 குறள் 69:

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

 

மு.வ உரை:

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை:

தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.

கலைஞர் உரை:

நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.

 

👉 குறள் 70:

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்லெனும் சொல்.

 

மு.வ உரை:

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைக் கல்வி அறிவு உடையவனாய் ஆளாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, பிள்ளையின் ஒழுக்கத்தையும் அறிவையும் கண்டவர், இப்பிள்ளையைப் பெறுவதற்கு இவன் தகப்பன் என்ன தவம் செய்தானோ என்று சொல்லும் சொல்லைப் பெற்றுத் தருவதே.

கலைஞர் உரை:

``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும்பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவதுதான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

0 comments:

Post a Comment