பழகத் தெரிய வேணும் – 71

 

தனித்திருந்தால் தவறேதுமில்லை

ஏம்மா, யார் எது சொன்னாலும், எல்லாரும், `ஆமா, ஆமான்னு சொல்வா, நீ மட்டும் அப்படிச் சொல்றதில்லையே!” கேட்டது என் மகள். அப்போது அவளுக்குப் பன்னிரண்டு வயது.

 

இறைவனின் படைப்பில் எல்லா உயிர்களும் – அது மனிதனோ, பிராணியோ – ஒன்றுபோல் இருப்பதில்லை.


இது புரியாமலோ, அல்லது ஒத்துக்கொள்ள விரும்பாததாலோ, தன்னுள் அடங்கியிருக்கும் எல்லாரும் ஒரேமாதிரிதான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது ஒவ்வொரு சமூகமும்.


இவ்வகையான, எழுதப்படாத கட்டுப்பாடு குடும்பத்தில் ஆரம்பித்து, பள்ளிக்கூடத்திலும், அதற்குப் பின்பும் – ஆயுள் முழுவதும் — தொடர்கிறது.

 

அநாவசியமான கட்டுப்பாட்டை எதிர்க்கத் துணிபவர்கள் பற்பல ஏச்சுப்பேச்சுக்கும் தண்டனைக்கும் தயாராக இருக்கவேண்டும்.

 

இவர்கள் நம்மை மதிக்கவில்லை!’ என்ற ஆத்திரத்துடன், பிறர் அவர்களைத் தனிமைப்படுத்தக்கூடும்.


இதற்கெல்லாம் பயந்துதான், பெரும்பான்மையோர் பிறரைப் பின்பற்றி நடந்துவிடுகிறார்கள்.

 

அதனால் இயற்கையிலேயே தமக்கு அமைந்த கற்பனாசக்தி குன்றிவிடுகிறது என்பதை ஒரு சிலர் உணர்ந்தாலும், எதிர்த்து நடக்கும் துணிவு எல்லாருக்கும் இருப்பதில்லை.

 

`பிறரைப்போல் இருக்கவேண்டும்!’ என்று, தம் குழந்தைகளிடம் சிறு வயதிலேயே போதித்துவிடுகிறார்கள் தாய்மார்கள்.

 

தாம் அருமையாக வளர்த்த செல்வங்கள் வித்தியாசமாக நடந்து, பிறரது ஏச்சுப்பேச்சுக்கு ஆளாகிவிடுவார்களோ என்ற பயம்தான் காரணமோ?

 

::கதை::

எங்கள் பள்ளி விழா ஒன்றிற்கு, ஆசிரியை, மிஸஸ்.ஸா (Saw), தன் ஐந்து வயது மகளைத் தன்னுடன் அழைத்து வந்திருந்தாள்.

 

சிறுமியை, `புத்திசாலி!’ என்று நான் கணித்தேன்.

 

சில மாதங்களுக்குப்பின், ஓய்வு வேளையில் பேசிக்கொண்டிருந்தாள் அந்த ஆசிரியை, `கேட்பவர்கள் கேட்கட்டும்’ என்ற தன் வழக்கப்படி.

 

என் பெண்ணுக்குப் பிறருடன் பழக ரொம்பப் பிடித்திருக்கிறது,” என்று ஆற்றாமையுடன் ஆரம்பித்தாள், மகள் செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதுபோல்.

 

எப்போதும் அண்டை அயலில் உள்ள தோழிகளுடன் விளையாடப்போகிறாள். என் நாத்தனார்கள்போல் இவளும் extrovert (கலகலப்பு)! இது என்ன கெட்ட வழக்கம்! பிரம்பால் விளாசினேன்!”

 

அடுத்த முறை, அப்பெண் பயந்தவளாகக் காணப்பட்டாள். அம்மாவின் நிழல்போல் எங்கும் நடந்தாள். பேசும்போது, வாய் திக்கியது! பரிதாபமாக இருந்தது எனக்கு.

 

இயல்பான குணத்தைத் தடைசெய்து, பிறர்போல், பெரியவர்கள் விரும்புவதுபோல், நடக்கும்படி செய்தால் குழப்பம்தான் விளையும்.

 

`ஒரு பெண் அழகாக இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்கும். புத்திசாலியாக இருக்கக்கூடாது – பயந்து விடுவார்கள்,’ என்று மிஸஸ்.ஸாவின் பாட்டி `புத்திமதி’ கூறியிருந்தாளாம்! என்னிடம் விவாதித்தாள், பெண்களுடைய அறிவுத்தாகம் பெருத்த தவறு என்பதுபோல்.

 

அதன்படி, மகளுக்கு விதவிதமான ஆடை அணிகள் வாங்கிக்கொடுத்து, `அவள் மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள்!’ என்று முடிவு கட்டினாள்.

 

ங் (NG) என்ற ஒரு சீன இளைஞன் என்னிடம் கூறியது நினைவில் எழுந்தது. “உங்களைப்போல் என்னால் எழுத முடியாது. பிறர்போலவே இருக்கவேண்டும் என்ற கண்டிப்பும் கட்டுப்பாடும் எங்களுக்கு அதிகம். அதனால், எங்கள் கற்பனைத் திறன் காணாமல் போய்விடுகிறது!”

 

எல்லாரும் அறிவாளிகளாகவோ, பிறர் மெச்சும்படியாகவோ இருக்க முடியாது.

 

::கதை::

 

ஆடிசம் (autism) என்ற நரம்பியல் கோளாறு உள்ளவன் ஜான். அவனால் பிறருடன் கலந்து பழக முடியாது. பேச்சும் குழறும்.

 

முதல் முறை, நீச்சல் குளத்தில், வாய் நிறைய இருந்த நீரை என்மேல் உமிழ்ந்தான் அந்த எட்டு வயதுப் பையன்.

 

பதறிய அன்னை க்ளோரியா, என்னிடம் வெகுவாக மன்னிப்புக் கேட்டாள். “இவனுக்கு மூளை சரியில்லை,” என்றாள் கெஞ்சலாக.

 

தெரியும் பரவாயில்லை,” என்றேன் சுருக்கமாக.

 

அவள் சமாதானமாகாது, “ஆன்ட்டிக்கிட்ட ஸாரி சொல்லு!” என்று மகனைக் கண்டித்தாள்.

 

அவன் எங்கோ பார்த்துக்கொண்டு, “ஸாரி ஆன்ட்டி,” என்றான்.

 

சரியாச் சொல்லு,” என்று அவன் முகவாயைப் பிடித்து, என் புறம் திருப்பினாள்.

 

`நெருப்பு சுடும்!’ என்று தாய் எத்தனை முறை எச்சரித்தாலும், புரியாதாம். வருத்தத்துடன் தெரிவித்தாள்.

 

கூடவே, “எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும், அவர்களைப்போலவே நடித்துக் காட்டுகிறான்!” என்று பெருமையுடன் தெரிவித்தாள் க்ளோரியா.

 

அது மட்டுமா! அவடைய நீச்சல் திறமையைப் பார்த்தால், மீன் துள்ளி விளையாடுவதுபோல் இருக்கும்.

 

எல்லோராலும் அப்படிச் செய்ய முடியுமா?

 

இருந்தாலும், `மகன் மற்றவர்களைப்போல் இல்லையே!’ என்ற வருத்தம் தாய்க்கு.

 

அதன்பின், அங்கு அவனைப் பார்க்கும்போதெல்லாம், “குட்மார்னிங், ஜான்!” என்று முகமன் கூறுவேன்.

 

பார்வை எங்கோ பதிந்திருக்க, அவனும், “குட்மார்னிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று குரலில் ஏற்ற இறக்கம் இல்லாது பதில் கூறுவான்.

 

பல வருடங்களுக்குப் பின்னர் அவனை ஒரு கடையில் பார்த்தபோது, நான், “குட் ஈவினிங், ஜான்,” என, என்னைத் திரும்பிக்கூட பாராது, “குட் ஈவினிங் ஆன்ட்டி நிர்மலா!” என்று தன்போக்கில் சொல்லியபடி நடந்தான். அப்போது அவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும். என்னை மறக்கவில்லை. அத்துடன், என் குரலை வைத்தே என்னை அடையாளம் கண்டிருக்கிறான்!

 

`இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்று இவனைப் போன்றவர்களைக் கண்டித்துக்கொண்டே இருந்தால், இன்னும் குழம்பிவிட மாட்டார்களோ?

 

குறைபாடுகள் இருந்தாலும், அவற்றையே பெரிதுபண்ணாது, அவர்களால் இயன்றதைப் பாராட்டக்கூடாதா!

 

கட்டுப்படுத்தப்பட்ட பெண்கள்

 

`சரியாக உட்கார்!’

 

மிகச் சிறிய வயதிலேயே, பல முறை பெண்குழந்தைகள் கேட்கும் திட்டு இது.

 

`உட்காரத் தெரியாமல் உட்காரும்’ அந்த வயதில், கிட்டத்தட்ட முழங்கால்வரை நீண்ட உள்ளாடையை எனக்கு அணிவித்திருந்தாள் என் தாய். அதனால், என்னை எவரும் கண்டிக்கவில்லை.

 

பதின்ம வயதில், `என்ன இருந்தாலும், உன் அண்ணன் (அல்லது தம்பி) ஆண்பிள்ளை!’ என்று, பெண்ணாகப் பிறந்த `குற்ற’த்திற்காக பெண்களுக்குப் பல சலுகைகள் மறுக்கப்படலாம்.

 

ஒரு சில பெண்கள் வாய்திறவாமல் இதை ஏற்றாலும், வேறு சிலருக்கு இத்தகைய பாரபட்சம் ஆத்திரம் மூட்டும்.

 

::கதை::

என் முன்னாள் மாணவி ஸ்யூ லின் (SIEW LIN) எங்கள் பள்ளிக்கூடத்திலேயே தாற்காலிக ஆசிரியையாகச் சேர்ந்தாள்.

 

நீ நன்றாகப் படிப்பாயே! ஏன் பட்டப்படிப்பு படிக்கவில்லை?” என்று கேட்டேன்.

 

அவள் முகம் வாடியது. “என் பெற்றோர் என் அண்ணனைப் படிக்க வைக்கத்தான் பணம் இருக்கிறது என்றுவிட்டார்கள்! `அவன் என்ன உயர்த்தி?’ என்று நான் சண்டைபிடித்தேன். அவன் நன்றாகக்கூடப் படிக்கமாட்டான். அதற்கு என் அம்மா என்ன சொன்னார்கள், தெரியுமா?”

 

என் பதிலுக்குக் காத்திராமல், அவளே தொடர்ந்தாள்: “அவன்தான் கடைசி காலத்தில் எங்களை வைத்துக் காப்பாற்றுவான். நீ, எப்படியும், கல்யாணமாகி, இன்னொரு வீட்டுக்குப் போகப்போகிறவள்தானே!”

 [இப்படி எண்ணி ஏமாறும் பெற்றோர்கள் பலர்.]

எத்தனை பெண்கள் இப்படி ஒடுக்கப்பட்டிருப்பார்கள் என்று என் யோசனை போயிற்று.

 

ஸ்யூ லினது மனக்குமுறல் மேலும் வெளிவந்தது. “`அண்ணா உங்களைக் காப்பாற்றுவான் என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்?’ என்றுகூட வாதாடினேன். என் பெற்றோர் மசியவில்லை,” என்றவள், தன் எதிர்காலக் கனவைப் பற்றிப் பேசினாள்.

 

மிஸஸ் ராகவன், எனக்குப் பெண்குழந்தைகள் பிறந்தால், அவர்களை நிறையப் படிக்கவைப்பேன். விரும்பும் எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளுங்கள் என்று சுதந்திரமாக நடக்கவிடுவேன்!’ அழுதுவிடுவாள் போலிருந்தது.

 

என் தாயும் இதையே பிறரிடம் கூறக் கேட்டிருக்கிறேன் –வேறொரு தலைமுறையில்.

 

இக்காலத்திலும், `பெண் என்றால், அதிகப் பொறுப்பு. பிற பெண்களைப்போல் இருந்தால், பலரும் பாராட்டாவிட்டாலும், குறை கூறமாட்டார்கள்!’ என்று தாய்மார்கள் எண்ணுவதால், தம் பெண்குழந்தைகள் அவர்கள் விருப்பப்படி – அது நல்லவிதமாக இருந்தாலும் – விடுவதில்லை.

 

அது எப்படி, ஒரு சில பெண்கள் மட்டும் சாதனைகள் புரிவதில் தனித்து நிற்கிறார்கள்?

 

பதில்: அவர்களுக்குப் பின்னால் எப்போதும் ஓர் ஆண்துணை இருக்கும்: பால்யப் பருவத்தில் தந்தை, அதன்பின் கணவர், மகன். இன்னும், மருமகன், பேரன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மொத்தத்தில், ஆண் துணை.

 

ஒரு பெண்ணின் திறமைகளைப் பாராட்டி, தகுந்த நேரத்தில் தைரியம் அளித்து, தன்னை நம்பியிருப்பவள் முன்னுக்கு வருவாள், வரவேண்டும், என்பதில் உறுதியாக நிற்பவர்கள் இத்தகைய ஆண்கள்.

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1

3 comments:

  1. வணக்கம். கதைகளில் ஒரு செய்தியை விட்டு செல்வதும், சம்பவங்கள் மனதை வருடுவதும் அருமை. பிரபாகரன். ன்.பிரான்ஸ்.

    ReplyDelete
  2. வணக்கம். கதைகளில் ஒரு செய்தியை விட்டு செல்வதும், சம்பவங்கள் மனதை வருடுவதும் அருமை. பிரபாகரன். பிரான்ஸ் .

    ReplyDelete
  3. நல்ல ஆக்கம் பெண்களுக்கு வழங்கப்படும் கரிசனை கசப்புகளோடோடு கலந்தே இருக்கிறது

    ReplyDelete