தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :42

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
மண் குடிசை
மனித இனம் வாழத் தொடங்கிய ஆதி காலத்தில்,அவர்கள் குகையிலோ அல்லது எஸ்கிமோக்களின்(Eskimo) ஒரு பிரிவினரான இன்னூட்[Inuit] என்ற இன மக்கள் கோடையில் வாழும் சீல்[seal] என்ற பாலூட்டியின் தோலால் ஆன கூடாரம்[Inuit's tupik] போன்ற ஒரு அமைப்பு ஒன்றிலோ அல்லது ஒரு  சிறு குடிசையிலோ[hut]  வாழ்ந்தார்கள். இங்கு பாவிக்கப்பட்ட பொது வான கட்டிடப் பொருட்கள்  அழிந்து போகக்கூடிய இலைகள், கிளைகள், மிருகங்களின் தோல்கள் போன்றவை ஆகும். எப்படியாயினும் நாளடைவில் தம்மை சுற்றி இயற்கையாகவே இலகுவாக கிடைக்கக் கூடிய எளிய பொருள் , பண்டங்களைக் கொண்டு எளிமையான வாழ்விடங்களை அமைத்தார்கள்.இந்த தொடக்க காலத்துக்குரிய கட்டிடப் பொருட்களில் சேற்று மண்ணும் களி மண்ணும்[Mud and clay] முதன்மையானவை ஆகும்.களி மண்ணின் ஒட்டிக் கொள்ளக் கூடிய தன்மை,அதை கொண்டு கட்டிடம் கட்டுவதிலும் தேவையான வடிவம் அமைப்பதிலும் இலகுவாக தொடக்கக் கால மக்களுக்கு இருந்தது. உதாரணமாக மரக்கம்புகளை அல்லது மூங்கில், நாணல் கம்புகளை வரிச்சி கட்டி இதன் இடை நடுவே களிமண்ணினால் ஒரேயடியாக நிரப்பி சுவர் கட்டலாம்.அது மட்டும் அல்ல  மரத் துண்டுகள், குச்சிகள், வைக்கோல்,கிளைகள்,மரம் போன்றவையும் தொடக்கக் கால கட்டிட அமைப்பில் பாவிக்கப்பட்டன.மேலும் குளிர் காலத்தில் எஸ்கிமோக்களின் இன்னூட் பிரிவினர் ,பனியை வெட்டி எடுத்து, சுருள் வடிவத்தில் கவிழ்த்த கிண்ணம் போன்ற இக்ளூ[igloo] என்ற பனி வீடு உருவாக்கியும் வாழ்ந்தனர்.அத்துடன் வெட்டப்படாத பாறைகள், பெரிய கற்கள் போன்றவையும் பாவிக்கப்பட்டு உள்ளன.

வேட்டையாடி சேகரித்து வாழ்வதில் இருந்து மனித இனம் ஓர் இடத்தில் நிரந்தரமாக விவசாயம் செய்ய குடியேறிய பொழுது,அவர்களுக்கு ஒரு நிரந்தர வசிப்பிடம் தேவைப்பட்டது.கூடாரம் மாதிரியான முன்னைய தற்காலிக அமைப்பு ஒரு வட்ட வீடாக பரிணாமித்தது.ஒவ்வொரு அறையின் கூரையும் இன்னும் கூடார பாணியில் கூம்பு வடிவாக மரக்கிளைகளாலும் சேற்றுமண்ணாலும் கட்டப்பட்டு இருந்தன[Wattle And Daub  house/வரிச்சு வீடு/A structure of interwoven branches and twigs plastered with mud, clay or dung].அப்படியான முதல்,ஆனால் ஒரு சிறிய நகரம்,மேற்கு ஆசியாவில் சாக்கடலுக்கு[Dead Sea] அண்மையிலுள்ள ,யோர்தான் நதிக்கு[Jordan River in the West Bank] அண்மையில் அமைந்துள்ள ஜெரிக்கோ[எரிக்கோ/Jericho] நகரத்தில் கி மு 8000 ஆண்டளவில் தோன்றின .அதை தொடர்ந்து கி மு 6500 ஆண்டு அளவில்  தெற்கு அனதோலியாவில் [Anatolia] புதிய கற்காலக் குடியிருப்பான [Neolithic/New Stone Age settlement]கட்டல் ஹூயுக்["CATAL HUYUK"] தோன்றின.இங்கு நாம் நீள் சதுர வீடுகளை காண்கிறோம் .மேலும் அங்கு சிறிய யன்னல்கள்  உயரத்தில் அமைந்து இருந்ததுடன்,கதவுகள் ஒன்றும் அங்கு காணப்படவில்லை.வீடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்பட்டதுடன் கூரையில் அமைக்கப்பட்ட வாயில் மூலமே வீட்டிற்குள் போய் வந்தார்கள்.அத்துடன் ஒரு வீட்டில் இருந்து மற்ற வீட்டிற்கு போக கூறையே வீதியாகவும் இருந்தது.இந்த வீடுகள் மண் செங்கல்லால் கட்டப்பட்டு இருந்தன.

ஆரம்ப கால மக்கள் தாம் தங்குவதற்கு கட்டிய குடியிருப்புகள் அவர்கள் எந்த
அயர்லாந்திலுள்ள போல்னாபுரோன் கல்திட்டை
இடத்தில்,எந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதில் தங்கி இருந்தது.உதாரணமாக மேற்கு ஆசிய[west asia] போன்ற சூடான பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள்-உதாரணமாக பண்டைய மெசொப்பொத்தேமியா மக்கள்-அங்கு மரங்கள் அருமையாக இருந்ததாலும் மண் செங்கல்[mud-brick] மூலம் வீடுகளை அமைத்தார்கள்.அங்கு வீடுகள் அதிகமாக ஒரு சுவராக ஒரு திறந்த வெளி முற்றத்தை சுற்றி இருந்தன.அங்கு சில சின்ன அறைகள் முற்றத்தின் கரையில் பொருட்களை வைப்பதற்கும் மழை பெய்தால் ஒதுங்குவதற்கும் அமைக்கப்பட்டு இருந்தன.இங்கு வீட்டு மிருகங்கள் முற்றத்தில் விடப்பட்டு இருந்தன.அத்துடன் இந்த முற்றத்தின் நடுவில்,கிணறு அல்லது மழை நீரை சேகரித்து வைக்க தொட்டி அமைக்கப் பட்டு இருந்தன.கூரைகள் பொதுவாக சம மட்டமான தரையாகவும்,ஆகவே மக்கள் இரவில் படுக்கவும் வெக்கையை தவிர்த்து குளிர் காயவும் அதை இன்னும் ஒரு வீட்டின் குடியிருப்புத்தட்டாக பாவித்தார்கள்.

இப்படித்தான் பெரும்பாலான மக்கள் வரலாற்று இடைக்கலம் வரை  வாழ்ந்து உள்ளார்கள் என்றாலும் கி மு 3500 ஆண்டு அளவில் டைகிரிஸ் , யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு[Tigris and the Euphrates rivers] இடைப்பட்ட வளமான வண்டல் மண் பகுதியில் வாழ்ந்த சுமேரிய மக்கள் பெரிய, திடமான,மேம்பட்ட  கட்டிடங்கள் கட்ட தொடங்கினார்கள் . இந்த மெசொப்பொத்தேமியா பகுதியில் கிட்டத்தட்ட , பெரும்பாலும் .கட்டுக்கல்[building stone] இல்லாததாலும் ஆனால் நிறைய களிமண்[clay] அங்கு தாராளமாக இருந்ததாலும் சுமேரிய கட்டிடக் கலை சிற்பிகள் மண் செங்கல்களாலோ அல்லது சுட்ட செங்கல்களாலோ[mud-brick or fired brick] கட்டிடங்களை கட்டினார்கள்.அங்கு இலகுவாக பெறக்கூடிய முக்கிய கட்டிடப் பொருளாக சேற்றுமண் அல்லது களிமண் கணிசமான அளவு இருந்த போதிலும் தெற்கு மெசொப்பொத்தேமியா பகுதியில் உள்ள பேரீச்சை மரம்[date palm] மற்றும் அங்கு கிடைக்கக் கூடிய பிற மரங்களும் கூரைக்கு பாவிக்கப்பட்டு உள்ளன.மேலும் ஊர், உருக்[Ur and Uruk] போன்ற நகர பகுதிகளில் அரசமாளிகையும் காணப்படுகின்றன. இவை மத்தியில் முற்றத்தை கொண்ட வீடுகளின் [court yard houses] ஒரு பெரிய வடிவுரு போல் காட்சி அளிக்கிறது.இது ஒவ்வொரு முற்றத்தையும் சுற்றி பல முற்றங்களையும் அறைகளையும் கொண்டு உள்ளது.

கட்டல் ஹூயுக்
அதிகமாக இந்த பண்டைய மெசொப்பொத்தேமியாவில் தான் களிமண்ணை/ஈரமண்ணை தேவையான உருவில் வடிவமைத்து,சூரிய ஒளியில் காய வைத்து அதை ஒரு கட்டிடப் பொருளாக மாற்றலாம் என்பதை முதல் முதல் கண்டு பிடித்தார்கள் என்று கூறலாம்.இந்த வகையில் முதல் முதல் பாவித்த செங்கல்[bricks] மண் செங்கல்[mud bricks] ஆகும். இது ஈர மண்ணையும் சிறு துண்டுகள் ஆக்கப்பட்ட வைக்கோல் அல்லது நாணல் சேர்த்து கலக்கப்பட்டு சூரிய ஒளியில் காய வைத்து,உலர்த்தி  கடினம் ஆக்கப்பட்டது.இதனால் இது நீடித்து நிலைத்து நிற்கக்கூடியதாக இருந்தது. மேலும் வைக்கோல் அல்லது நாணல் செங்கல்லில் வெடிப்பு ஏற்படுவதை தடுத்தது.சில வேளை  வைக்கோல் அல்லது நாணலிற்கு[reeds] பதிலாக குறுமண்[gravel] அல்லது வேறு மூலப் பொருள்கள் பாவிக்கப்பட்டன.பொதுவாக அங்கு அறுவடையை தொடர்ந்து,வைகாசி,ஆனி[May to June] மாதங்களில் செங்கல்கள் செய்யப்படுகின்றன.அந்த காலத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அருகியும் போதுமான அளவு வைக்கோல் கைவசம் இருப்பதுமே இதற்கான காரணம் ஆகும். எனினும் காலத்திற்கு காலம் செங்கல்லின் வடிவமும் அளவும் மாறு பட்டு உள்ளன.இதனால் சில வேளை சில நிகழ்வுகளின்,சம்பவங்களின் காலங்களை தீர்மானிக்க அவை உதவுகின்றன. தொடக்கத்தில் கட்டிட சிற்பிகளுக்கு எப்படி பெரிய கட்டிடங்களை உள்ளிற்குள் மக்கள் வாழ்வதற்கும்,நடமாடுவதற்கும் பெரிய இடைவெளி கொண்டு அமைப்பது என்பது சரியாக புரியவில்லை .ஆகவே பெரிய கட்டிடங்கள் ஒரு மண் கோட்டை[sand-castle] மாதிரி இடைவெளியற்ற ஒரு பெரிய திண்மம் போலவே இருந்தன.அவை உண்மையில் ஒரு செயற்கை குன்று மாதிரியே தோற்றம் அளித்தன. இது எகிப்திய பிரமிட்டை[Egyptian pyramid] ஒத்து இருந்தன.அவர்கள் உண்மையில் கட்டியது பல படிகளை கொண்ட சிகுரத் [ziggurats] என அழைக்கப் படும் தனித்துவமான அமைப்பினைக் கொண்ட  மிகப் புகழ் பெற்ற கோயில் கட்டிடம் ஆகும். ஒவ்வொரு நகரமும் தமக்கு என இப்படியான சிகுரத் கோயிலை கொண்டு இருந்தன.இது கடவுளை மகிழ் விக்கவும் அதே நேரத்தில் தமது நகரத்தின் வலிமையை மற்றவர்களுக்கு எடுத்து காட்டவும் ஆகும்.இந்த அழகிய சிகுரத்தின் உச்சியில் இஷ்தார்[ஈனன்னா],அனு அல்லது ஏதாவது ஒரு மெசொப்பொத்தேமியா கடவுளுக்கு சிறு ஆலயம் இருந்தது.தமது நகரத்தை சுற்றி,பெரும் பாலும் மண் செங்கல்லால் சுவர் எழுப்பப் பட்டு இருந்தன. இதுவும் ஒரு பெரிய திண்மம் போலவே உள்ளிற்குள் இடைவெளி அற்று இருந்தன.இது ஒரு அரணமைப்பு சுவராக[fortification walls] இருந்ததால் அப்படி கட்டுவதே மிக பொருத்தமாகவும் இருந்தது

மண் வீடென்றதும் பொதுவாக எமக்கு ஒருவித  மன நெகிழ்ச்சி ஏற்பட்டு
ஜெரிக்கோ/எரிக்கோ
விடுகிறது. உண்மையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் பாவித்து வரும் கட்டிடப் பொருட்களில் முக்கியமானதும் முதன்மையானதும் இந்த மண்தான் என்பது இப்ப எமக்கு புரிகிறது.ஜெரிக்கோ,கட்டல் ஹூயுக்,மெசொப்பொத்தேமியா,சிந்து வெளி நாகரிகம் ,சங்க கால பண்டைய தமிழகம் எங்கும் இப்படியான மண் வீடுகள் காணப்பட்டு உள்ளன. இந்த மனித குல நாகரிக வளர்ச்சியுடன் போட்டி போட்டுக் கொண்டு தப்பிப் பிழைத்து விட்ட சிறப்பு மிக்க கட்டடப் பொருள்தான் இந்த மண். இன்றும் கூட மனிதர்களால் அதன் இயல்பான நிலையிலும், உருமாறிய நிலையில் செங்கற்களாகவும் (Bricks) பாவிக்கப்பட்டு வரும் பாக்கியத்திற்கு உரியது இந்த மண்தான்.

கேரளாவின் மறையூரிலுள்ள கற்திட்டைகள்
இந்த மண் செங்கல்,அமுக்கப் படும் போது நன்றாக தொழிற் படுகிறது. ஆனால் அவை வளைக்கப் படும் போது இலகுவாக உடைந்து விடுகிறது. இது என் என்றால் வளைக்கப்படும் போது  ஒரு விளிம்பு இழுப்பு விசைக்கு [tension force] உட்படுவதாகும்.அதே வேளையில் எமக்கு தெரியும் வைக்கோல் இழுப்பு விசைக்கு நன்றாக தாக்கு பிடிக்கக் கூடியது என்று.இதை,இந்த இயல்புகளை உணர்ந்த ஆரம்ப கால கட்டிட கலை சிற்பிகள் சிறந்த அமுக்க வலிமை உள்ள மண்ணை சிறந்த இழுவிசை வலிமை உள்ள வைக்கோலால் பதிக்கப்படால் அந்த இரண்டும் சேர்ந்த கலவை காய்ந்து செங்கல் ஆனதும் அது இரண்டு விசைகளையும் தாங்கும் வலிமை கொண்டிருக்கும் என நம்பினர்.அதை தமது அனுபவத்திலும் உணர்ந்தனர்.ஆகவே,சுவர்-மண்ணால் கட்டப்பட்டது.தரை-மண்ணால் கட்டப்பட்டது.ஏன் கூரை கூட- மண்ணால் கட்டப்பட்டது.மேலும் ஈர மண் நல்ல பலமான சாந்தாகவும்,சுவர் கூரைகளுக்கு நல்ல ஒட்டக்கூடிய பசைத்தன்மை உள்ள பூச்சாகவும் இருந்தது இது எம்மை ஒரு வியப்பில் ஆழ்த்த வில்லை.ஏன் என்றால்,ஈர மண் அல்லது களி மண் இல்லாமல் ஒரு மட்பாண்டம் இல்லை,ஒரு வில்லை அல்லது முத்திரை[clay tablets] இல்லை,உலகின் ஒரு முதல் நாகரிகமான மெசொப்பொத்தேமியா நாகரிகமே இல்லை.

சங்க கால இலக்கியமும் மண் சுவர்க் குடிசையில் வாழ்ந்தவன் நாகரிகப்படி நிலையில் செங்கற்களை அடுக்கிச் சுவரமைத்து வீடு கட்டியுள்ளான் என்பதை பெரும்பாணாற்றுப்படையில் கூறுகிறது.

"திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில் [397]
.......................................................
கொடையும் கோளும் வழங்குநர்  தடுத்த   அடையா வாயில் [400]
...........................................................
சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்" [405]
 (பெரும்பாணாற்றுப்படை]

புகழ் பெற்ற வலிமை   பொருந்திய போர் வீரர்கள் வாழும் நீண்ட வீதி,தொடர்ந்து ஓடும் தேர்களால் குண்டும் குழிகளும் ஆக காட்சி அளிக்கிறது[397].............................................கொடுக்கல் வாங்கல்கள் தங்கு தடையின்றி நடை பெற நகரத்தின் வாயில் என்றும் மூடுவது இலை[400] ...................... ............................. ஓங்கிய பெரிய வீடுகளின் வெளி மதில்கள் சுட்டமண்ணால்,அதாவது செங்கல்லால் கட்டப்பட்டு உள்ளன[405] என்கிறது. .மேலும் அகநானூறு. 167 

"முருங்கை மேய்ந்த பெருங்கை யானை
வெரிந்ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி
இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென"

என்கிறது.அதாவது முருங்கையினைத் தின்ற பெரிய தும்பிக்கையை உடைய   யானையின்,முதுகில் இருந்து உயர்ந்த பிடரி . உராய்தலினால் , தளர்ந்து செங்கல்லால் ஆனா  நீண்ட சுவரிலுள்ள விட்டமரம்[crossbeams] வீழந்ததாக, என்ற ஒரு செய்தியை தருகிறது.அது மட்டும் அல்ல,சங்க காலத்தில் தூண் வைத்துக் கட்டும் வீடுகள் இருந்தன என்பதையும் அதன் கூரைகள் எதனால் வேயப்பட்டன என்பதையும் ,உதாரணமாக, புறநானூறு 86,புறநானூறு 29,புறநானூறு 120 போன்ற பாடல்கள் எடுத்து உரைக்கின்றன.

"சிற்றில் நற்றூண் பற்றி நின் மகன்
யாண்டு உளன் ஆயினும் "  -புறநானூறு 86

[சிறிய வீட்டில் உள்ள நல்ல தூணைப் பற்றியவாறுஉன் மகன் எங்கு உள்ளானோ..?“ என நீ என்னை கேட்கிறாய் ]

"பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு"-புறநானூறு 29

[உன்னுடைய பகைவர்கள் உன்னிடம் இரக்கத்தை எதிர்பார்த்து வருவதுபோல், கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களாலாகிய பந்தர் போன்ற வீடுகளில் வாழ்பவர்கள் ]

"நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல்
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து"-புறநானூறு 120

[ நிலத்தில் புதைக்கப்பட்ட முதிர்ந்த கள்ளை,, புல்லைக் கூரையாகக்கொண்ட குடிசையில் உள்ள மக்கள் அனைவருக்கும் கொடுக்கின்றனர். ]

(ஆரம்பத்திலிருந்து வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01)
பகுதி 43 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி:43..

பகுதி:43 அடுத்த வாரம் தொடரும்
பகுதி:43 தொடரும்

0 comments:

Post a Comment