தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:41


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] 
மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியம்[Epic of Gilgamesh]  மரணம் பற்றிய அவர்களின் பார்வையையும் மறுமை[after life] பற்றிய விபரங்களையும் காட்டுகிறது.அது மட்டும் அல்ல அவர்களிடம் மரணத்திற்கான கடவுள் ஒருவரும் இருந்தார்.அங்கே எரேஸ் கி கல்[Ereshkigal] மரண தேவதையாகவும் பாதாள உலகின் ராணியாகவும் இருக்கிறார். எகிப்தியர்,இந்தியர்  உட்பட மற்ற நாகரிகங்கள் போல் சுமேரியனும் மரணத்தின் பின்னர் மனித உயிருக்கு வாழ்க்கை/மறுமை உண்டு என நம்பினார்கள்.
என்றாலும் மற்றவர்களை போல் இல்லாமல் சுமேரியர் தாம் மரணமானதும் கொடிய,இரக்கமற்ற பாதாள உலகத்திற்கு[underworld] /இருண்ட உலகொன்றுக்குச் செல்வதாகவும்,அதன் பின் அங்கிருந்து தமக்கு என்றும் விடுதலை இல்லை என்றும் நம்புகிறார்கள்.அது மட்டும் அல்ல தமது நாளாந்த வாழ்வில் என்றும் வியாபித்து இருந்த கடும் உழைப்பில் இருந்தும் போரில் இருந்தும் ஒரு முழுதான ஓய்வு பெரும் இடமாக மறுமையை பார்த்தார்கள்.இந்த அச்சந்தருகிற,மிக மோசமான இடத்தில் மனிதர்களின் ஆவி[கூளி , குறளி] புழுதியை[தூசியை] சாப்பிட்டுவதாகவும் வயிற்றினால் தவழ்ந்து செல்வதாகவும் நம்பினர்.இந்த மிகக்கொடிய பயங்கரமான இடத்தை புழுதி வீடு["house of dust"] என அழைத்தனர்.இந்த பேய்த்தோற்றத்தில் ஒரு சில ஆண்டுகள் கழிந்த பின் அல்லது
உயிர்கள்  அங்கு துன்பமனுபவித்து சில காலத்தின் பின்னர்  இறந்தவரின் ஆவி படிப்படியாகத் தேய்வுற்று மறக்கப்பட்ட நிலைக்கு மாறுகிறது.மேலும் உலக உற்பத்தியைப் பற்றியும் வெள்ளங்களைப் பற்றியும் உலகை மூழ்கடித்த ஏழுநாள் பெரு வெள்ளம் பற்றியும் பல நம்பிக்கைகள் அவர்களிடம்
நிலவின.எல்லாச் செயல்களிலும் சமயம் முதலிடத்தைப் பெற்றது. எல்லாம் கடவுளின் நியதிப்படியே நடைபெறுகின்றன என நம்பினர்.கடவுளின் சாபத்தினால் ஏற்படும் அழிவுகளும், அனர்த்தங்களும் எல்லையற்றவை என சுமேரியர் நம்பினார்கள்.பண்டைய சுமேரியர்களின் ஆயுட்காலம் 40 ஆண்டுகளிலும்
குறைவாக பொதுவாக நீண்ட காலம் வாழாதவர்களாக இருந்தார்கள்.அவர்கள்
                                                                        [Sumerian Goddess of death and                                                                           
Queen of the Underworld:Ereshkigal]
பொதுவாக இறந்தவர்களை எரியூட்டுவதற்கு பதிலாக  அடக்கம் செய்தார்கள். இறந்தவர்களுக்கு சொந்தமான  சில பொருட்களும் அவர்களுடன் சேர்ந்து அடக்கம் செய்யப்பட்டன. சடலங்களைப் புதைக்கும்போது சடலங்களுக்கு அருகில் சவக்குழியுள் உணவும் நீரும் வைக்கப்பட்டன. இதனால் ஆவி பசி கொள்ளாது என கருதினர்.காலஞ்சென்றவர் மேல் ஆண்டவன் அன்பாக ஆதரவாக நடவடிக்கை மேற்கொள்ள அவரை தூண்டும் முகமாக சிலவேளை அடக்கத்தின் பின் மாதம் ஒரு முறை நினைவுக் கொண்டாட்டம் கடைபிடித்தனர்.இது அரச குடும்பத்தனரின் வழக்கமா அல்லது எல்லோருக்கும் பொதுவானதா என்பது புரியவில்லை.அது மட்டும் அல்ல உணவும் பானமும் படைப்பது இம்மைக்குரிய பாக்கியம் எனவும் கருதினர்.

             [sumerian underworld]

மேலும்  சுமேரிய சமயத்தின் ஒரு மர்மமும் சர்ச்சையும்  ஆக மனித பலியீடும் இன்றளவும் இருக்கிறது. அண்மைய தொல் பொருள் ஆய்வு,அரச குடும்பங்களின்  ஈமச்சடங்கின் போது  வயது வந்தோர் குறிப்பாக அவர்களின் சேவகன் மரணமானவர்கள் செல்லும் உலகில்[netherworld] அவர்களுக்கு சேவை செய்யும்  பொருட்டு அங்கு மரணம் அடைந்த அரச குடும்ப உறுப்பினருடன் புதைக்கப் பட்டிருக்கலாம் என அடையாளம் காட்டுகிறது. என்றாலும் மனித பலியீடு அரியதாகவே நடந்துள்ளது என சுமேரிய அறிஞர்கள் நம்புகிறார்கள்.இது அவர்கள் மறுமையை நம்புகிறார்கள் என்பதை திட்ட வட்டமாக எடுத்து சொல்கிறது. மேலும் போது மக்கள் கூட மறுமையில் பாவிப்பதற்காக அவர்களின் சொந்தமான பொருட்களில் சில அவர்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டன.உதாரணமாக,கொல்லன் அவனது சில உபகரணங்களுடனும் ஒரு போர் வீரன் அவனது ஆயுதம்,கவசம் உடனும் அடக்கம் செய்யப்பட்டனர்.

பயிர்கள் வளர்வது ஆண் தெய்வம் தனது மனைவியாகிய பெண் தெய்வத்துடன்

[2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட முதுமக்கள் தாழி/Tamil Nadu ]

கூடலால் ஆகும் என சுமேரியர்கள் நம்பினார்கள்சூடான உலர்ந்த கோடையில் புல்வெளிகளும்  வயல்வெளிகளும் பழுப்பு நிறத்திற்கு மாறுவதை இந்த தெய்வங்கள் இறக்கும் காலமாக பார்த்தார்கள்.இலையுதிர் காலத்தில் அவை மீண்டும் செழித்து வளர்கிற போது இந்த ஆண் பெண் தெய்வங்கள் புத்துயிர் பெறுவதாக நம்பினர்.இதை வருடப் பிறப்பாக/ஆண்டின் தொடக்கமாக குறிப்பிட்டு, அதை ஆலயத்தில் இசையுடனும் பாடலுடனும் கொண்டாடினார்கள்.

தமக்கு தேவையான அத்தனையையும் ஆண்டவன் கொடுத்து உள்ளார் என சுமேரியர் நம்பினர்.அதனால் ஆண்டவனின் நோக்கம் நல்லதே என கருதினர்.மேலும் ஆண்டவன் மிக பலம் உள்ளவராகவும் உலகை கட்டுப்படுத்துபவராகவும் உள்ளார் எனவும் நம்பினர்.அப்படி ஆயின் தமக்கு ஏற்படும்   துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் அவர்களுக்கு ஒரு விளக்கம் தேவைப்பட்டது. ஆண்டவனை கோபமூட்டும்,சினங்கொள்ளுவிக்கும் மனிதனின் செயலே இதற்கு காரணம் என முடிவு எடுத்தனர்.அதை மனிதனின் பாவச் செயல் என வர்ணித்தனர்.எவராவது ஆண்டவனை வெறுப்பூட்டினால்,ஆண்டவன் துர்த்தேவதையை அனுப்பி அந்த பாவச் செயல் செய்தவருக்கு தண்டனையாக உடல்நலமின்மை, நோய்,இயற்கை அழிவு முதலிய வற்றை கொடுப்பதாக நம்பினர்.ஆகவே ஒருவர் பாதிக்கப்பட்டால்,ஆண்டவனை திட்டுவதால் ஒரு பயனும் இல்லை.ஆண்டவனை பெருமைபடுத்தி,அவருக்கு முறையீடு செய்து பொறுமையாக ஆண்டவன் அந்த பாதிப்பில் இருந்து மீட்கும் வரை காத்து இருக்கவேண்டும் என சுமேரியர் எழுதினார்கள்.

முதுமக்கள் தாழி

இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில்,ஆனால் குறிப்பாக தமிழகத்தில் மண் பானையில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில்,இறந்தவரை அடக்கம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அப்படியான பண்டைய பெரிய இடுகாடு ஒன்று தமிழகத்தில்,திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் பகுதியில் காணலாம்.ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது அங்கு வழக்கமாக இருந்து உள்ளது.அது மட்டும் அல்ல, ஈமத் தாழியில் /முதுமக்கள் தாழியில் சிறு மண்பாத்திரத்தில் தானியம் உணவு முதலியன வைத்து அடக்கம் செய்வது பொதுவாக இருந்து உள்ளதும் தெரிய வருகிறது.இந்த பண்டைய  பழக்கம்,ஆதி தமிழரிடம் மறுமை பற்றிய ஒரு வலுவான நம்பிக்கை இருந்ததை காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்கப்பாடல்கள்-புறநானுறு 228,256 - இதை மேலும் உறுதிபடுத்துகிறது.குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது..

"கலம் செய்கோவே கலம் செய்கோவே
....................................................................
........................................................ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை அயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியாப் பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே?"(புறநானுறு  228)

கிள்ளிவளவன் பூத உடலை அடக்கம் செய்வதற்கு உன்னால் தாழி செய்ய முடியும். ஆனால், அவன் புகழுடம்பு மிகப்பெரியது. அதை அடக்கம் செய்வதற்கு ஏற்ற பெரிய தாழியை உன்னால் செய்ய முடியுமா?” என்று குயவன் ஒருவனைப் பார்த்து ஐயூர் முடவனார் கேட்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

 புறநானூறு 4 ,இறப்பின் தெய்வம்,கூற்றுவனை/காலனை கூறுகிறது.அதாவது,யானைகள், மதிற்கதவுகளை வெகுண்டு மோதியதால் அவற்றின் வெண்ணிறமான தந்தங்கள் மழுங்கின. அந்த யானைகள் உயிரைக் கொல்லும் கூற்றுவனைப் போல் காட்சி அளிக்கின்றன என்கிறது.

"களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன;"

அது மட்டும் அல்ல புறநானூறு 214 இல், நல்வினைகள் செய்வதால் விண்ணுலகம் செல்லலாம்; விண்ணுலகத்தில் இன்பம் நுகர்வது மட்டுமல்லாமல்,வீடு பேறும் பெறலாம்;அத்தகைய வீடு பேறு பெற்றால் மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையை அடையலாம்.ஒருவேளை மாறி மாறி பிறவாமை என்னும் நிலை ஒன்று இல்லாவிட்டாலும், [மறு பிறப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்தாலும்]நல்வினைகளைச் செய்பவர்கள் குறையற்ற உடலோடு வாழ்ந்து இமயமலையின் ஓங்கிய சிகரம் போல்,தம் புகழை நிறுவி இறக்கும் பெருமையை அடைவார்கள்என்ற கருத்துகளை இப்பாடலில் கோப்பெருஞ்சோழன் கூறுகிறான்.

"செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே;
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனில்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனில்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே "
[பகுதி-42 அடுத்தவாரம் தொடரும்]

0 comments:

Post a Comment