தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01


 [தொகுத்தது:கந்தையா  தில்லைவிநாயகலிங்கம்]


                                                                : [ஆதிச்சநல்லூர் அகழாய்வில்  இரும்பு கலன்கள்]
அண்மைக் காலத்தில் வெளிவந்த ஆதாரம்,தடயம் வரை ,தமிழர்களின் வரலாறு,வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துக்கு முன்1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது.அனால்,இப்போது தமிழர்/திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களிலும்[பெருங்கல்லாலான இடங்களும் சின்னங்களும்] ,இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி[அல்லது கதிரவெளி] இவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று  ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள்,பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான  இலங்கை,சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை[கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது.இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள் ,இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.
 
 ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும்,சுட்ட களி மண்ணினால் ஆன தாழிகளும்,தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பல தாழிகளும்,இரும்புக் கருவிகள்,ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும்,பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads),இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொன்பரிப்பு அகழ்வாய்வில் வரலாற்றுக்கு முற்பட்ட அடக்கக் களம் (burial site) ஒன்றையும், பல ஈமத்தாழி[Burial urn for the dead in ancient times]களையும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று தாழிகள் அமைத்தல். இறந்தோரைப் புதைப்பதற்காகத் தாழிகளை நம் முன்னோர் பயன்படுத்தி உள்ளனர்.அத்தாழிகளில் இறந்தோரைப் புதைக்கும் பொழுது,அவர்கள் பயன்படுத்திய பொருள்களையும்,விரும்பிய பொருள்களையும், இறந்தோர் உடலுடன் புதைத்த பழைய மரபை அகழ்வாராய்ச்சியின் மூலம் அறிய முடிகிறது.கதிரவெளியில், அகழ் வாராட்சியின் போது கி மு. 2ம் நூற்றாண்டு தொடக்கம் கி பி. 2ம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய பல தடையங்கள்  கண்டுபிடிக்கப்பட்டன.புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ள அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்த்திய அகழ் வாராய்ச்சியும் தமிழர் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகின்றது.இங்கு மண் பாண்டங்கள் பல கிடைத் துள்ளன. விற்பனைச் சாலைகள், பண்டகச் சாலைகள் முதலியவை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடியேற்றப் பகுதிகளில் கதிரமலை [கந்தரோடை] முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.முன்னைய காலத்தில் உக்கிரசிங்கன் என்ற தமிழ் மன்னன் கந்தரோடையை தலை நகரமாக கொண்டு ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகின்றது.இவனுடைய காலப்பகுதியாக கி.பி. 785ம் ஆண்டுப்பகுதி குறிப்பிடப்படுகின்றது.இவன் கலிங்க தேசத்திலிருந்து குடியேறியவன் என்றும்,விஜயனுடைய பரம்பரையைச் சேர்ந்தவமென்றும் 18 ஆம் நூற் றாண்டில் யாழ்ப்பாண வைபவ மாலையை இயற்றிய மயில்வாகனப் புலவர் வைபவமாலையில் கூறுகிறார்.மேலும் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்தி அரச பரம்பரையை உரு வாக்கியவனும் இவனே என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.இவன் சோழ இளவரசியாகிய மாருதப்புரவல்லி மீது காதல் கொண்டு, மணம்புரிந்தான். இவன் தீவிர சைவனாக விளங்கியுள்ளான் என்பதை இவன் செய்த சைவத்திருப்பணிகள் நிரூபிக்கின்றன.இவ்வூரில் செய்யப் பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இப்பகுதியில் அகழ் வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கி மு. 2000 ஆண்டை சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்து 169 மனித தலையோடு ,எலும்புக்கூடு,உயிர் நீங்கிய உடலின் எச்சமிச்சங்கள் கொண்ட  சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் தோண்டியெடுக்கப்பட்டு  உள்ளது.அத்துடன் அரிசி உமியும் தானியமும் கருகிய[தீய்ந்த] அரிசியும்,வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வழங்கிய கோடரி போன்ற கருவியும் புதிய கற்காலத்தைச் சார்ந்தவை என உறுதி கூறுகிறது. கல்வெட்டெழுத்துக்களையும்  கலைத்தொழில் வேலைப்பாடமைந்த பொருள்களையும் ஆய்வு செய்த தொல்பொருள் ஆய்வாளர்கள்,தமிழர் நாகரிகம் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரிவித்துள்ளார்கள். 

[மேலே உள்ள படத்தில்,ஆதிச்சநல்லூரில் வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு காலத்திற்கு உரிய  அடக்கக் களத்தில், தாழி ஒன்று வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துடனும்,மனித எலும்புக்கூடும்  மற்றும் சிற்றுருவ பாத்திரங்களும் காணப்படுகின்றன.இவை கி மு.20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள் ஆகும். மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள  எழுத்துக்கள் வளர்ச்சியடையாத தமிழ் பிராமி எழுத்துகளாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அனிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார்.]
 
மேல் கூறியவற்றால் நாம் அறிவது தமிழ் திராவிடர்கள் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும்  ஏறத்தாழ 4000 ஆண்டுகளாக வாழ்கிறார்கள் என்பது.ஆனால் இது தவறு.தமிழர்கள் இதிலும் கூடிய காலம் வாழ்ந்து உள்ளார்கள் என்பதே உண்மை.ஆகவே இதற்கு முன்பு எங்கு வாழ்ந்தார்கள் என்பதை நாம் காண வேண்டும்.

பகுதி 02 வாசிக்க ↠ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:02

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

3 comments:

  1. சந்திரகாசன்Saturday, January 25, 2014

    மற்றும் ஒரு பெருந்தொடர்! வளரட்டும்!

    ReplyDelete
  2. பலருக்கும் பிடித்தமான விடயம்.நன்றி.

    ReplyDelete
  3. Hi there, just wanted to say, I loved this article.
    It was funny. Keep on posting!

    ReplyDelete