தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி/PART :39


[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

நாம் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது, நமது பூமி, சூரியன் மற்றும் இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது, தோன்றியதிலிருந்து எப்போதும் இதே நிலையில் இருந்து கொண்டிருக்கிறதா அல்லது  எப்படி இயங்குகிறது போன்ற பல கேள்விகளுடனும் வியப்புடனும் நாம் வானை நோக்குகிறோம்.அது மட்டும் அல்ல அதில் மனிதன் எவ்வாறு தோன்றினான்? என்ற கேள்வியும் அங்கு இயல்பாகவே எழுகின்றன இந்தக் கேள்விக்கு வெவ்வேறு வண்ணம் பதில்களும் காலந்தோறும் வந்து கொண்டேதான் இருக்கின்றன.ஆயினும் இது தான் விடை என்று அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் எவராலும் இன்னும் உறுதிப்பட கூறப்படவில்லை எப்படியாயினும் இக்கேள்விகளுக்கு தமது பதிலாக  உலகின் முதலாவது படைத்தல் கதைகளை சுமேரியன் எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்துள்ளார்கள்.அதில் யார் உலகை படைத்தார் என விபரமாக குறித்தும் வைத்துள்ளார்கள். மனிதன் உட்பட எல்லா உயிரிகளும் தெய்வீக சக்திகளால் படைக்கப்பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை.அவர்கள் நம்பிக்கையில் இயற்கையும் தெய்வமும் ஒன்றே.சுமேரியர்கள் ஆதியிலிருந்து அல்லது கல் தோன்றா மண் தோன்றா காலத்தில் இருந்தே கடலே  முதலில் உலகில் இருந்ததாக நம்பினார்கள்.அதை கடல் தேவதை நம்மா/நம்மு (Goddess of the Primordial Sea:Namma/Nammu ] என அழைத் தார்கள்.
அவளுடன் எந்த ஒரு ஆண் தெய்வத்தையோ அல்லது கணவனையோ தொடர்பு படுத்தாமையால், அண்டத்தின் முதலாவது  படைப்பு பால் வழியல்லாத இனபெருக்கம் மூலம் நடைபெற்றதாக நம்பலாம்.இந்த கடல் தேவதை வானமாகிய "அன்" (An,/Anu God of the Heavens) என்ற தேவனையும் "கி" (Ki, Goddess of the Earth ) என்ற பூமியாகிய பெண் தேவதையையும் உலகில் முதலில் தோற்றுவித்தாள்.என்றாலும் பிற்காலத்தில்,சுமேரியாவை வென்ற அக்கடியர்களால் (Akkadians) எழுதப் பட்ட ’ ’எனும எலிஷ்’ (Enuma Elish/ஈனும் -மா - எல் - இசு']என்னும் நூலில், டியாமத்[Tiamat] ,நம்முவின் பங்கை அல்லது இடத்தை எடுத்து கொண்டார்.இந்த பிற்கால நம்பிக்கையில் உலகின் முதல் மூதாதையாக வருபவர்கள் தேவ ஜோடிகளானஅஸ்பு’ (Aspu/அப்சு) என்ற ஆணும் டியாமத் (Tiamat) என்ற பெண்ணும் ஆகும்.அதன் பிற்பாடு,"அன்", "கி" இவர்களின் பாலியல் உறவு மூலம் "என்-லில்"(Enlil, God of Air and Storms, son of An and Ki) என்ற காற்றுக் கடவுள் பிறந்தார்.பண்டைய சுமேரிய நூலின் படி,இன்று பெயரளவில் சுமேரியன் குடும்ப பரம்பரைக்கு தலைமை தாங்கும் "அனு"க்கு இரண்டு மகன்கள் இருந்து உள்ளார்கள்.அவர்கள் காற்றுக் கடவுள்-என்லில்,நீர் கடவுள்-,என்கி[எயா/ஈஅ ][Enki (Ea)]ஆவார்.மேலே சுட்டிக்காட்டியவாறு,என்லில்லின் தாய், அனுவின் மனைவி "கி"[Ki] ஆகும்.ஆனால் என்கியின் தாய், அனுவின் வைப்பாட்டி[concubine] அல்லது இன்னொரு துணைவி[consort] ,அன்டு/அன்டும்/நம்மு {Antu/Antum/Nammu}ஆகும்.
சுமேரிய பழங்கதையின் படி,வானும் பூமியும் இணைபிரியாமல் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதவாறு,என்லில் பிறக்கும் மட்டும் இருந்தார்கள்.ஆனால் என்லில் வானையும் பூமியையும்  இரண்டு வெவ்வேறு பகுதிகளாக பிளந்தான்.அதாவது காற்று[என்லில்/Enlil] மலைகளுக்கு இடையில் இருட்டில் கலக்க ஆரம்பித்த போது,அது வானையும் பூமியையும் பிரித்து எடுத்தது என கொள்ளலாம். அன்/அனு  வானை கொண்டு சென்றது."கி" என்லில் உடன் சேர்ந்து பூமியை எடுத்தது.சாமுவேல்  நோவா  கிரமர்  "கி" யை ,சுமேரியர்களின் தாய் தெய்வம் நின்-ஹர்சக்[Ninhursag] உடன் அடையாளம் கண்டு இரண்டும் ஒன்றே எனக் கருதுகிறார்.தனது சகோதரி- காதலி "கி" இடம் இருந்து, அன்/அனு பிரிந்ததால்,அவன் துக்கம் தாளாது சிந்திய கண்ணீர்கள் ஆதி கடல் தேவதை நம்முவின் உப்பு நீருடன் கலக்கையில் என்கி[Enki/Ea] தனது சகோதரி எரேஸ் கி கல்[Ereshkigal] உடன் பிறந்தார்.ஆகவே என்கி அனுவினதும் நம்முவினதும் மகன் என சாமுவேல்  நோவா  கிரமர்[Samuel Noah Kramer] தனது புத்தாகத்தில் கூறுகிறார்.மேலும் உலகை நன்றாக்க என்லில் சந்திர கடவுள்-நன்னா[Nanna] வை ஈன்றெடுத்தார்.நன்னா சூரிய கடவுள்-உடு/ஷமாஷ்[Utu/Shamash] வை ஈன்றெடுத்தார்.இவை உலகிற்கு நல்ல வெளிச்சம் கொடுக்க என எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது காற்றின் விரிவடைதலால் வான் மிக உயரத்திற்கு போய் விட்டது.பூமி அதன் கீழ்  திட தரையாக,அங்கு சூரியனும் சந்திரனும் வெளிச்சத்தை கொடுத்தன. இவ்வாறாக சுமேரியர் வாழ்வில், கடல், காற்று, பூமி, ஆகாயம் இவையனைத்தும் கடவுளின் அம்சங்களே.

உலகின் ஆரம்ப காலத்தில் ஆண் தெய்வங்கள் தமது வாழ்விற்காக தினமும் உழைக்க வேண்டி இருந்தது. அவர்கள் இதை ஒரு பெரும் சுமையாக தொடக்கத்தில் பொருட் படுத்தவில்லை.ஆனால் பெண் தெய்வங்கள் படைக்கப்பட்டதும்,அவர்களை மகிழ்ச்சியாக வைக்கும் பொருட்டு மேலும் அவர்கள் மிக கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது.அது மட்டும் அல்ல,அப்பொழுது சாப்பிடுவதற்கு போதுமான ரொட்டியை செய்வதற்கும் அணிவதற்கு போதுமான உடுப்புகள் செய்வதற்கும் அவர்கள் மிகவும்  சிரமப்படவேண்டி இருந்தது.இதனால் அவர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள்.கடவுள்,அவர்களின் தேவையை பூர்த்தி செய்ய,அவர்களை கவனிக்க ஏவலரை அல்லது வேலையாளரை வைத்திருக்க வேண்டும் என் நினைத்தார்கள்.எனவே  ஆற்றின் கரையில் இருந்து கொஞ்ச களி மண்[clay] எடுத்தார்கள்.அதை தமது கையில் உருட்ட தொடங்கினார்கள்.ஒரு தலை,ஒரு உடம்பு,கைகள், கால்கள் தோன்றி ஒரு வடிவம் வரும் வரை உருட்டினார்கள்.பின்பு அதற்கு உயிர் கொடுத்தார்கள். அவ்வாறே மக்கள் ஆற்றம் கரை களி மண்ணில் இருந்து கடவுளால் தோற்றுவிக்கப்பட்டார்கள் என சுமேரிய நூல் கூறுகிறது. இப்ப,கடவுளுக்கு தேவையான உணவு,உடை,இருப்பிடம் போன்ற வற்றை கொடுப்பது மக்களின் வேலையானது.இதனால்,கடவுள் நிரந்தரமாக உழைப்பதில் இருந்து விடுபட்டார்.

இதற்கு மாறாக,மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில்,உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக  எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக "நிலமும், நீரும், தீயும், காற்றும், விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை அன்றே அதாவது இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு (2,700) ஆண்டுகளுக்கு முன்னால்  கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்-(தொல். மரபியல் 1589)

உலகத்தின் தோற்றம் பற்றி மற்றும் ஒரு சங்க இலக்கியமான பரிபாடலும் கூறுகிறது.

"கரு வளர் வானத்து இசையின் தோன்றி
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்
உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்
செந் தீச்சுடரிய ஊழியும் பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு
மீண்டும் பீடு உயர்பு ஈண்டிஅவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்"(பரி.2:5- 12)

1]கரு வளர் வானத்து – the sky with primal seed,/நுண்ணணுக்கள் வளர்தற்கு இடமாகி 2] இசையின் தோன்றி– appeared with sound,/சத்தத்துடன் தோன்றி  3]உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்– what appeared at the time before any form was seen,/யாதோர் உருவமும் காணப்படாத வானத்தினது முதல் பூதத்து ஊழிக்காலமும், 4]உந்து வளி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்– wind that appeared at that time as the second element,/அந்த வானத்தினின்றும் பொருள்களை இயக்கும் காற்று தோன்றிக் கிளர்ந்த  இரண்டாம் பூதத்து ஊழியும்,5]செந் தீச்சுடரிய ஊழியும்– red flame that appeared after that at that time,/அந்தக் காற்றினின்று சிவந்த தீத்தோன்றிச் சுடர்வீசித் திகழ்ந்த மூன்றாம் பூதத்து ஊழியும்,6] பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும்– ice/snow and cold rain appeared after that time,/அத்தீயினின்றும் நீர்தோன்றிப் பனியும் குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும்,  7]அவையிற்று– along with them – 4 of them – sound, wind, fire and water,/அந் நான்கு பூதங்களினூடே-அதாவது சத்தம்,காற்று,தீ,நீர்  8]உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு – for eons submerged in floods,/   வெள்ளத்தில் கரைந்து ஒழிந்த நில அணுக்கள் பல ஆண்டுகள் கிடந்தது9]மீண்டும் பீடு உயர்பு ஈண்டி– again with greatness rose,/மீளவும் தமது சிறப்பாகிய ஆற்றல் மிக்குச் செறிந்து திரண்டு  10]அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்– the wide land which is the 5th element,/முற்கூறப்பட்ட நான்கு பூதங்களின் உள்ளீடாகிக் கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்தூழியும்[ஊழி என்பது ஒரு கால அளவை]

என்று கூறப்பட்டுள்ளது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைக் கூறியுள்ளார். இவை மட்டும் இன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது காலப்போக்கில் சிறிது சிறிதாக குளிர்ந்து பனிப்படலமாக மாறி, பின் நெடுநாட்களுக்குப் பிறகு நிலம் தோன்றியது என்றும் உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
[ ஆரம்பத்திலிருந்து வாசிக்க  தலைப்பினில் அழுத்தவும்→Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:]
பகுதி 40 வாசிக்க → Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி:40

பகுதி:40  ↟ தலைப்பினில் அழுத்தவும் 

0 comments:

Post a Comment