"தமிழர்களின் பண்டையநான்கு கற்கள்"/பகுதி03


அரைவைக் கல் / ஆட்டுக்கல்

இது அமைப்பில் கல் உரல் மாதிரி இருந்தாலும், தொழிற் பாட்டில் அரைத்தல் முதன்மை பெறுகிறது. எனவே இதை அரைவைக் கல்லின் கீழ் வகை படுத்தி உள்ளேன்.

 

ஆட்டுக்கல் என்பது கற்களினால் செய்யப் பட்ட மாவு அரைப்பதற்கு உதவக் கூடிய கருவியாகும். இது உருண்டை வடிவமான கற்களின்  நடுவில் குழியைக் கொண்டிருக்கும். இது பெரும்பாலும் வடை, இட்டலி, தோசை போன்ற உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு வேண்டிய அரிசி, மற்றும் தானியங்களை குழைபதமாக அரைப்பதற்கு தமிழர் பயன்படுத்திய கருங்கல்லினாலான ஒரு அரைவைக் கல் ஆகும். இதில் வட்ட வடிவமும் அல்லது சதுர வடிவமும் உண்டு. இதனுள் தானியங்களை நீர் சேர்த்து அரைப்பார்கள். கீழ் உள்ள கல்லை ஆட்டுக்கல் என்றும் கையால் பிடித்து சுற்றும் கல்லை  குழவி எனவும் அழைப்பார்கள். ஆட்டுக் கல்லானது நடுவில் தானியங்களை போடுவதற்கு ஏற்ற வகையில் வட்ட வடிவக் குழி அமைக்கப் பட்டிருக்கும். இந்தக் குழியை விட சற்று சிறிய அளவில் குழவி அதற்குள் புகக் கூடியதாக கீழே அகன்றும் மேலே ஒடுங்கியும் அமைக்கப் பட்டு இருக்கும்.

 

ஆதி கால மனிதன் அம்மி போன்ற ஒன்றை முதலில் கண்டு பிடித்த பின், இயற்கையாக சில பாறை கற்களில் ஏற்பட்டிருக்கும் குழிகளில் தானியங்களை போட்டு இடிப்பதால் சேதங்களை தவிர்க்கலாம் மற்றும் கூடுதலான தானியங்களை ஒரே தடவையில் இடித்து பொடியாக்கலாம் அல்லது மாவாக்கலாம் என்று உணர்ந்த பின், ஒரு நாள், அவன் அல்லது அவள் அப்படி செய்யும் பொழுது சிறு தூறல் பெய்து இருக்கலாம்? அது அவர்களுக்கு  இடையூறாக இருந்து இருக்காது. அவ்வேளை அந்த தூறல் நீர், இடித்துக் கொண்டு இருந்த பொடியுடன் அல்லது மாவுடன் கலந்து பசை போல் வந்திருக்கும். எனவே தொடர்ந்து இடித்தால் அவை வெளியே சீறி ஒழுகி இருக்கும். இதை கவனித்த அவர்கள், இடிப்பதை நிறுத்தி, அந்த மேல் கல்லை அமத்தி சுற்ற தொடங்கி இருக்கலாம். எனவே இந்த அவர்களின் புதிய தொழில் நுட்பமே ஆட்டுக்கல்லாக பரிணாமித்தது என்று நம்புகிறேன்.

 

ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்புவரையில்  , தமிழர் வாழ்வுடன் ஒன்றிப் பிணைந்திருந்த ஆட்டுக்கல்  பாவனை தற்போது வழக்கொழிந்து போய் விட்டது என்றே சொல்ல வேண்டும். ஆட்டுக்கல் மூலம் தானியங்களை அரைத்து களியாக எடுப்பது ஒரு கலை என்றே சொல்லலாம். ஆட்டுக்கல் பொதுவாக வடை, தோசை, இட்டலி போன்றவை சமைக்க, அவை அவைக்கான தானியங்களை ஈரக் களியாக அரைத்து புளிக்க வைத்து பதப் படுத்துவதால், பொதுவாக அடுத்த நாள் சமைப்பதற்காக மாலை நேரங்களில் தான் அரைக்கப்பட்டது. அதிகமாக ஒருவர் குழவியை ஆட்டவும், மற்றவர் மாவு அரைபட, தள்ளி விட்டுக் கொண்டு அவருக்கு உதவி செய்வார்.

 

ஆட்டுக் கல்லை வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல, பல வேளைகளில் மழையின் அளவை அறியவும், அதாவது ஒரு  மழைமானி போலவும் பாவித்தார்கள். பண்டைய தமிழர்களின் முக்கிய தொழில் வேளாண்மை. நீர் ஆதாரங்கள் பல இருந்தாலும் அனைத்துக்கும் ஆதாரம் மழையே ஆகும். மழை பொழிவதை கணக்கிட்டு உழவிற்கு நம் முன்னோர்கள் தயாராவார்கள். பொதுவாக அந்த காலத்தில் ஆட்டுக்கல் முற்றத்தில் இருக்கும். எனவே மழை பெய்து, ஆட்டுக்கல் குழியில் நீர் நிரம்பினால் தான் போதுமான மழை பெய்ததாக அவர்கள் கருதுவார்கள். மேலும் அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை முடிவு செய்வார்கள். அதற்கு ஏற்ப உழவை செய்வார்கள். உதாரணமாக  “எள்ளுக்கு ஈருழவு, கொள்ளுக்கு ஓருழவு” எனும் இப் பழமொழி மூலம் ஒவ்வொரு பயிருக்கும் எத்தகைய உழவு உழவேண்டும் என்ற கணக்கு முறை பண்டைய மக்களிடம் இருந்ததை அறிய முடிகிறது. எனவே தான், இந்த மழை  எத்தனை உழவு செய்ய வழி வகுக்கும் என்பதை இப்படி அன்று அறிந்தார்கள். உரல் குழி, மழை நீரால் நிரம்பி இருந்தால், அது உழவு மழை என்பர்.  அதாவது உழவு செய்து விதைக்கப் போதுமானது என கருதப்படும். இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும். இன்னும் சொல்லப் போனால் மழை பெய்து முடிந்த பிறகு, நிலத்தை உழும் போது, ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.

 

பண்டைய காலத்தில்,  உலர் தானியங்களை மாவாக அரைக்க உதவும் உரல் உலக்கை மற்றும் தானியங்களை உடைக்க உதவும் திருகைகள், ஈரமாவை அரைக்க உதவும் ஆட்டுக்கல், துவையல் வகைகளை அரைக்க உதவும் அம்மிக்கல் போன்ற கற்களினால் ஆன புழங்கு பொருள்கள் [புழங்கு பொருள் என்பது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில்  பயன்படுத்திய, பயன்படுத்தி வருகின்ற பொருள்களை கூறுகிறது] பயன்படுத்தி உள்ளனர். என்றாலும் கல்லாலான உரல் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து இருக்க வேண்டும். ஏனென்றால் அவை பற்றியே சங்க இலக்கியத்தில் கூடுதலாக அறிய முடிகிறது. உதாரணமாக,  "ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து, இருவாம்" [கலித்தொகை 41:3] என்ற வரியையும் "ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து, இருவாம்" [கலித்தொகை 43:4] ன்ற வரியையும் சொல்லலாம்.

:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]-பகுதி 04 வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 04:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள்- Theebam.com: "தமிழர்களின் பண்டைய நான்கு கற்கள்" / பகுதி 01:

0 comments:

Post a Comment