கனடாவிலிருந்து .....தங்கைச்சிக்கு ஒரு கடிதம்

                                                                                                                   


 05.02.2022

அன்புள்ள தங்கைக்கு,                                      

நான் நலம்.அதுபோல் உனது, உன் கணவர், பிள்ளைகள் சுபமும் ஆகுக!

தங்கைச்சி, உனது நீண்ட கடிதம் கிடைத்தது. உனது கடிதம் எனக்கு பெரும் வியப்பினையும், கவலையையும் கொடுத்தது.

 

 தங்கைச்சி, பெரும் அங்காடி சென்று நீ சந்தித்த பிரச்சனையினை எழுதியிருந்தாய். அங்கு ஒவ்வொருவரும் தெரிவு செய்த பொருட்களுடன்  வழமையாக வரிசையில் நின்று பணம் செலுத்துவது நீ அறிந்த விடயம்.அப்படியிருக்கையில் நீ அந்த வேளையில், வரிசையில் நிற்பவர்களை உணராமல்அவர்களைக் கடந்து செல்ல முயற்சித்தபோது நின்றவர்கள், உன்னோடு வாக்குவாதப்பட்டு நீ பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாக எழுதியிருந்தாய்.

 தங்கைச்சி, எந்த ஒரு செயலும் பெரும் பிரச்சனையாக மாறுவதும், சிறு விடயமாக கணிக்கப்படுவதும் ஒவ்வொருவர் செயற்பாட்டிலும் தங்கி இருக்கிறது என்பதனை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். உனக்காக இங்கு நடந்த பல சம்பவங்களில் ஒன்றினை நான் உனக்கு அறியத்தருகிறேன்.

 

ஒருமுறை நானும் ஒரு பெரும் அங்காடியில் ஒரு பொருளினை  எடுத்துக்கொண்டு, பணம் செலுத்தும் பகுதிக்கு வந்தவேளையில் ,வரிசையில் பணம் செலுத்த கடைசியில் நின்றவர்களின் வரிசையிலிருந்து சற்று விலகி நின்ற ஒருவரை கடந்து சென்றபோது, நான் தவறு செய்கின்றேனோ என எண்ணி அவரிடம்

 

''மன்னிக்கவும் ,நீங்கள் வரிசையில்  உள்ளவரா?

எனக் கேட்டேன். அவரும் 'ஓம்' என்று கூறியபடி சரியாய் முறையில் வரிசையில் இணைந்து கொண்டு ,

 

நான் ஒரு  பொருளை வைத்திருப்பது கண்டு என்னை தனக்கு முன்னால் நிற்கும்படி வேண்டிக்கொண்டார். இச் செயலைக்கண்ட வரிசையில்முன்  நின்றவர்கள் அப்பொருளினை உணர்ந்து என்னை தங்களெல்லோருக்கும் முன் அனுப்பிவிட்டார்கள்.நானும் பணத்தினை செலுத்தி,அவர்களுக்கும்  நன்றி கூறி, மகிழ்ச்சியுடன் வந்துவிட்டேன்.

 

 தங்கைச்சிநாம் செய்யும் தவறுகளை ஒத்துக்கொவதாலேயோஅதற்கு மன்னிப்பு கேட்பதாலேயோ,   எம்மில் எந்த விதத்திலும் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. பதிலாக எமக்கு நல்லவையே நடக்கும். நட்பு வளரும்.உறவுகள் பெருகும். மன அழுத்தங்களுக்குப் பதிலாக மனதில் சந்தோசம் மலரும். இதிலும் ஒரு தவறு செய்தால், தாம் செய்தது தவறு என்று என்றுமே ஒத்துக்கொள்ளாத மனிதர்களும் எம்மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.அவர்கள் என்றும் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை.   அவர்கள் தங்கள் தவறினை ஒத்துக்கொள்ளாமையினை, தங்களது  கெட்டித்தனம் என்ற கற்பனைக் கடலில் வாழ்க்கையினை மூழ்கடித்துக் கொண்டு இருப்பவர்களாவார்.

ஏனெனில் அடுத்தோரை காயப்படுத்திவிடு,தவறினையும் அவர்கள்மேல் சுமத்துபவர்களுடன் யார் உறவினை வைத்துக்கொள்வர்? இறுதியில் தனிமையில் இருந்து வாடுவர்.


அதேவேளை , 'மன்னித்துக்கொள்ளுங்கள்' என்று வேண்டிக்கொண்டாலும்  அதனை ஏற்றுக்கொள்ளாமல் திட்டிக்கொண்டிருக்கும் மனிதர்களும் எங்கள் சமுதாயத்தில் இல்லாமலில்லை. அப்படியான மனிதர்கள் நாகரீகம் அற்றவர்கள் அல்லது பண்பாடு புரியாதவர்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஏனைய மொழி பேசும் இனங்களில் ''மன்னிப்பும், நன்றியும்''  கூறினால் ஆழமாக அவை செயலாற்றும். ஏனெனில் அவர்கள் அதை பெரும் மனித நாகரிகமாக மதிக்கிறார்கள்.


தங்கைச்சி, எனது அனுபவத்தில் நான் கண்டவற்றினை உனக்காக எழுதுகிறேன். நடந்தவற்றை மறந்துவிடு.  மேற்குறிய விடயங்களில் இனிமேல் கவனமாக நடந்துகொள். உன் வாழ்வு மேலும் சிறக்கும்.

 

மேலும் உனது கணவர்,பிள்ளைகளையும் சுகம் கேட்டதாக கூறவும். உனது தேவைகளை எனக்கு எழுதவும்.

வேறு விசேடமில்லை.

 

இப்படிக்கு

அன்புள்ள அண்ணன்

செ.மனுவேந்தன்.

📧📧📧📧📧📧📧📧📧thankaikor kaditham 

0 comments:

Post a Comment