அமெரிக்காவா?... சீனாவா?


இன்றய உலகில் உக்கிரமான பொருளாதார வளர்ச்சியின் ஊடாக சீன நாடு, வெகு விரைவில் அமெரிக்காவையே பின்தள்ளிவிடும் அளவுக்கு முன்னேறிக்கொண்டு இருக்கிறது.

 

ஆனால், சீனாவின் வளர்ச்சியைக் கண்டு மனம் பொறுக்க முடியாத அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், இவர்களுடன் ஆமாம் போட்டுக்கொண்டிருக்கும் இதர பல நாடுகளும் சீனாவின் ஒவ்வொரு செயலையும், மாற்று வர்ணம் பூசி, செய்திகளைத் திரிவுபடுத்தி, எப்பொழுதும் சீன நாடு முழு உலகத்துக்குமான ஒரு வில்லன் என்பதுபோல சித்தரித்து, தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலம் செய்திகளை பரப்பிக்கொண்டே இருப்பார்கள். ஒரு பொய்ச் செய்தியை திரும்பத் திரும்ப 100 தரம் சொன்னால் அது உண்மைதான் என்று மக்கள் நம்பிவிடுவார்கள்.

 

உதாரணமாக, அமெரிக்காவும் சீனாவும் இதுவரை தங்கள் நாட்டுக்கும், உலகத்துக்கும் என்ன,என்ன செய்துள்ளனர் என்பதை ஒரு சிறிய கண்ணோட்ட்டத்தின் ஊடாகப் பார்ப்போம்.

 

அமெரிக்கா :

அமெரிக்கா, அன்று முதல் இன்று வரை உலக நாடுகள் பலவற்றின் உள்நாட்டு அரசியல் பிரச்சனைகளுக்குள் தன் மூக்கை நுழைக்கும். ஒன்றில் அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுத்து நாட்டை அழிக்கும்; அல்லது அரசுக்கு உதவி செய்து உயிர்களைப் பலி கொள்ளும். மொத்தத்தில், அமேரிக்கா ஒரு நாட்டிற்குள் புகுந்தால், அணு குண்டு, ஏறி கணை, வெடி குண்டுகள் மூலம், உருப்படியாக இருந்த உயர் மாடிக் கட்டிடங்கள், பெரும் சாலைகள், தொழிற் சாலைகள், எல்லாவற்றையும் தரை மட்டம் ஆக்கிச் சின்னா பின்னம் ஆக்கிவிட்டு, எண்ணற்ற உயிர்களைக் கொன்று குவித்து, பலர் தங்கள் உறுப்புகள் இழந்த நிலையில் குழந்தைகளை அனாதைகளாக்கிச்  சென்றுவிடும்.  (உ+ம் சில: ஜப்பான், வியட்நாம், ஈராக், சிரியா, யூகோஸ்லோவியா, ஆப்கான்....)

 

சீனா:

சீன இந்தியாவுடனான எல்லைச்  சண்டை ஒன்றில்தான் ஈடுபட்டது. எந்த ஒரு வெளி நாட்டு உள் அலுவல்கள் ஒன்றுக்கும் நுழைய மாட்டாது.  மற்றும்படி அது உள் செல்லும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் எல்லாவற்றிலும் அந்நாடுகளின் உள் கட்டமைப்புகளுக்கு உதவி செய்யவே செல்லும். இதனால், பல நாடுகள் புதிய பட்டு நெடும் சாலைகள், விமான நிலையங்கள், வைத்திய சாலைகள், குடியிருப்புகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று வந்து செழிப்புறும்.

 

அமெரிக்கா:

உலகெங்கும்  200 நாடுகளில் 750 அமெரிக்க படைத்தளங்களை வைத்திருக்கிறது. இவை எல்லாம் இன்னொரு எதிரி நாட்டுக்குச் சவாலான கேந்திரங்களாகும்.

 

சீனா:

பாகிஸ்தான் தென் தென் துறைமுகம் ஒன்றிலும், பெயரே அறியாத குட்டி ஆபிரிக்க நாடுகள் இரண்டுலும் மட்டுமே. இவை பெரும்பாலும் உதவிக்காக அமைக்கப்படடவையே ஆகும். (பாகிஸ்தானுமா?)

 

அமெரிக்கா :

அமேரிக்கா என்பதே செவ்விந்திய பழங்குடியினரைச் சாரை, சாரையாய்க் கொன்று குவித்து உருவாக்கப் பட்ட ஒன்று. பின்னர், பிடிக்கப்பட்டு அல்லது நிர்ப்பந்த சூழ்நிலைகளால் எடுக்கப்பட்ட, வாங்கப்பட்ட இடங்கள், அலாஸ்கா, கலிபோர்னியா, டெக்ஸாஸ், லூசியானா முதலியன.

 

சீனா:

தனது பண்டைய சக்கரவர்த்திகள் 800 - 1000 வருடங்களாக ஆண்ட பகுதியினை மட்டும் தனது ஆதிக்க எல்லையாகக் கொண்டிருக்கிறது. உண்மையில் அவற்றில் சில பகுதிகளை இழந்து நிற்கிறது.

 

அமெரிக்கா :

மனிதக் கொலைகள், உரிமை மீறல்கள், அடிமை வியாபாரம் என்று பலவும் நடந்த ஓர் இடம்.

 

சீனா:

அரச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக சில அடக்கு முறைகள் அவ்வப்போது நடைபெறும்.

 

அமெரிக்கா :

கல்வி இலவசம், ஆனால் வைத்தியம் ஒன்றுமே இலவசம் இல்லை. ஒருவர் சுகயீனம் உற்றால் அவ்வளவுதான், கொள்ளை அடிக்க வேண்டி வரும். கட்டுப்படி ஆகாது.

 

சீனா:

கல்வியுடன், மருத்துவமும் இலவசம். வாழ்க்கைச் செலவு மிகவும் குறைவு.

 

அமெரிக்கா :

எவரும் துப்பாக்கி வைத்திருக்கலாம், வீதியில் எவருக்கும் பாதுகாப்புக்கு கிடையாது. கொலைகள் மிகவும் அதிகம். போதைப்பொருள் எங்கும், எவ்வளவும் கிடைக்கும்.

 

சீனா:

துப்பாக்கியும் இல்லை; போதை வஸ்துகளும் மிகவும் குறைவு. கொலை, கொள்ளை காணுவது மிக்க கடினம்.

 

அமெரிக்கா:

ஜன நாயக அரசியல். ஒரு அரசு 4+ வருட ஆயுள். என்ன திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்க் கட்சி எல்லாவற்றையும் பெரும்பாலும் எதிர்க்கும். சில வேளை இன்னுமொரு முறை அதே கட்சி ஆட்சிக்கு வரலாம். பின்னர் அடுத்த 4 வருடம் மற்றைய கட்சி ஆட்சி அமைக்கும். இப்பொழுது இவர்கள் எதிப்பார்கள். அத்தோடு, கீழ் சபை, மேல் சபை என்று ஒவ்வொரு தடைக்கற்கள் இருக்கும். பின்னர் மாறுபட்ட கொள்கைகள் கொண்ட மாகாண, நகர, கிராம சபைகள் என்று 1008 படிகள். உருப்படியாக ஒரு திட்டத்தையும் நிறைவேற்றிட முடியாத சிக்கலான அமைப்பு. நீண்ட காலத் திட்டம் என்று ஒன்றைச் செய்லபடுத்துவதற்கு எல்லாப் பக்கத்திலும் இருந்து எதிர்ப்பவர்கள் இருப்பார்கள்.

 

சீனா:

ஒரு (நல்ல, நேர்மையான, மக்கள் நலம் கருதும்) தலைவன், ஒரே அரசு, ஒரே கட்சி, ஒரே கொள்கை, ஒரே தீர்மானம். ஒரே ஒரு முறையிலான பரிபாலனம். எதிர்ப்பதற்கு என்று எவரும் இல்லை. 10, 20, 50, 100 வருடத்து திட்டங்களையும் நடைமுறைப் படுத்துவதுதான் மக்களின் வேலை. அவர்களும் அதை விருப்பத்துடன் முழு மூச்சுடன் செய்து முடிப்பார்கள். ஒரு நாளுக்கு 12-15 மணித்தியாலங்கள் என்று ஓய்வின்றி வேலை செய்வார்கள். கடின உழைப்பாளிகள்.

 

அமெரிக்கா :

இதுவரை, மூக்கை நுழைத்து வெளி நாடுகளில் (நேரடியாக) பறிக்கப்பட்ட உயிர்களின் எண்ணிக்கை:

புஷ் - 70,000 (5 வருடங்களில்)

ஒபாமா  - 100,000 ( 7 வருடங்களில்)

டிரம்ப்  - 73,000 (5 வருடங்களில்)

உயிர் காக்கும் கோவிட் தடுப்பூசியை மூன்றாம் உலக நாடுகளுக்கு கிடைக்காது தடுத்தது.

 

சீனா:

இதுவரை, வறுமைப் பட்ட நாடுகளுக்கு 200 கோடி கோவிட் தடுப்பூசியை குறைந்த விலையிலும், இலவசமாகவும்  வழங்கி பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

 

அமெரிக்கா:

எதற்கும் மதத்தை முன் வைப்பதால் உழைக்கும் திறன் குறைகின்றது. மதப் பித்தர்களின் வன்முறைகள், கெடுபிடிகளால் கட்டிடங்கள் நொறுங்குகின்றன. உயிர்க் கொலைகள் நிகழ்கின்றன. பொருளாதார முன்னேற்றம் தடைப் படுகின்றது. எல்லாம் கடவுள் தருவார் என்ற மன நிலையினால் சோம்பேறித்தனம் கொண்டவர்கள்.

 

சீனா:

மதம், கடவுள் ஒன்றுமே வீதிக்கு வர அனுமதி இல்லை. கடவுள்மாரை முன்னிறுத்தும் சமயங்களைப் புறம் தள்ளி மனிதரின் உழைப்பில் நம்பிக்கை வைக்கப் போதிக்கப்படுகிறார்கள். மத மிதவாதிகள் தோன்றினால், நாடு அழிவுப் பாதையில் போய் விடும் என்று முளையிலேயே அவர்களைக் கிள்ளி எறிந்து விடுவார்கள். இதனால் நாட்டுப பொருளாதாரம் முன்னேறுவதைக் கண்டுள்ளார்கள்.

 

அமெரிக்கா :

கொரோனா போன்ற பெரும் நோய்கள், இடர்கள் வருமிடத்து அரசு தேவையான வழிமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தால், அதை எதிர்த்து, ஊர்வலம் சென்று, ஆர்ப்பாட்டம் செய்து இன்னும் மோசமாக்குவதற்கு மக்களுக்கு ஜனநாயக சுதந்திரம் இருக்கிறது. 'தடுப்பூசி வேண்டாம்' , 'முகக்கவசம் போட மாட்டொம்' என்று கூட்டம், கூட்டமாக வீதிக்கு வந்து கோஷமிட , ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு கொடுப்பார்கள்.

 

சீனா:

இப்படியான சந்தர்ப்பத்தில் எல்லோருமே பின்பற்றவேண்டும் என்று படையினர் கட்டாயப் படுத்திச் செய்ய வைப்பார்கள். 'மாட்டொம்' என்று சொல்ல எவருக்கும் உரிமை இல்லை. நோய்கள் விரைவில் கட்டுப்பாட்டினுள் வந்துவிடும்.

 

அதனால் தான் சீனா,

 

* 800 மில்லியன் சீனர்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது.

* 40 ஆண்டுகளில் 30 மடங்கு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது.

* 70 ஆண்டுகளுக்குள் சராசரி ஆயுட்காலம் 35 ஆண்டுகள் அதிகாக்கப் பண்ணியது.

* மலிந்த விலையில், உயர்ந்த தரத்தில் உலகுக்கு சகல பொருட்களையும் வழங்குகிறது.

* பாலைவனத்தை விவசாய நிலமாக மாற்றுகிறது.

* அடி மட்டத்தில் இருந்து உலகின் 2 வது பெரிய பொருளாதாரத்திற்கு வந்துள்ளது

* உலகத்தை விட அதிவேக (300 - 400 கி.மி./ம ) இரயிலை நாடு முழுக்க ஓட விட்டது.

* நியூயார்க்கை விட 20 க்கும் மேற்பட்ட நகரங்களை உருவாக்கியது.

* உலகின் அதிவேக கணினியை கண்டுபிடித்தது.

* வெற்றிகரமான ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை சோதித்தது

* உலகின் மற்ற பகுதிகளை விட சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலை உருவாக்கியது.

* பெரும்பாலான பேருந்துகளை முழுவதுமாக மின்சாரமாக மாற்றுகிறது.

* செயற்கை சூரியன், சந்திரன்களை வானத்தில் நிறுவுகின்றது.

* தானும் பயன் பெற்று, மற்றைய நாடுகளும் பயன் பெறும் பொருட்டுப் பல ஏழை நாடுகளுக்கு பலதுறைகளிலும் ஆக்க பூர்வமான பணிகளில் (இலவசமாக அல்ல) ஈடுபட்டுள்ளது.

 

சீனாவின் எந்த நடவடிக்கைகளுக்கும் அமேரிக்கா வேறுவிதமான எதிர்மறை விளக்கத்தை எப்பொழுதும் கொடுத்துக்கொண்டு இருக்கும்.

 

*சீனா நலிவுற்றிருந்தபோது, மஞ்சள் பேரழிவு என்று அமெரிக்கா கூறியது.

*வல்லரசு அளவுக்கு உயர்ந்தபோது, உலகுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று ஓலமிட்டது.

*நாட்டினை வெளி ஆட்களுக்கு மூடினால் கள்ள வியாபாரி என்றது.

*சுதந்திர வர்த்தகத்தை ஏற்றுக்கொண்டால், வேலைகளை பறித்ததாகக்  குறை கூறியது.

*நாடு ஒன்றை விட்டுப் போனால், அமேரிக்கா தன் படைகளை அங்கு அனுப்பியது..

*உடைந்த தன நிலப் பகுதிகளை ஓன்றாக இணைக்க முயற்சித்தபோது, அதை ஒரு படை எடுப்பு என்றது.

*கம்யூனிசத்தை முயற்சித்தபோது, எதேச்சாதிகாரி என்று  வெறுத்தது.

*முதலாளித்துவத்தைத் தழுவும்போது, ​​சர்வாதிகாரி என்று தூற்றியது.

*சனத்தொகை பில்லியன் மக்கள் வந்தபோது,சீனா  ​​பூமியை அழிக்கிறது  என்று பயம் காட்டியது.

*மக்கள் எண்ணிக்கையை குறைக்க முயற்சித்தபோது, மனித உரிமை துஷ்பிரயோகம் என்றது.

*ஏழையாக இருந்தபோது, நாய்கள் என்று ஒதுக்கியது

*பணத்தைக் கடன் கொடுக்கும்போது, ​​நாட்டை விலைக்கு வாங்குகிறான் என்று பயமூட்டியது.

*தொழில்களை உருவாக்கும்போது, ​​மாசுபடுத்துபவர்கள் என்றது.

*பொருட்களை நிறைய, மலிவுக்கு விற்கும்போது, குப்பைகள் என்று குறை கூறியது.

* தொழிற்சாலைகள் பெருகும்போது, புவி வெப்பமாகின்றது என்று குற்றம் சுமத்தியது.

*எண்ணெய் வாங்கும் போது அதை சுரண்டல், இனப்படுகொலை என்பது.

*ஆனால், தான் எண்ணெய்க்காக ஆக்கிரமித்தால் அதை விடுதலை என்று பிரச்சாரம் செய்தது.

*நோய் ஒன்று சீனாவில் தொடங்கினால், இரசாயன ஆயுதம் செய்யும்போது விபத்து என்றது.

 

இப்படியாக, உண்மைக்குப் புறம்பான சீன எதிர்ப்புப் பிரசாரங்களை வெற்றிகரமாக உலகெங்கும் பரப்பி அமெரிக்கா வெற்றிகொண்டுள்ளது.

 

முடிவில், சீனர் கடும் உழைப்பாளிகள். அரசு கொண்டு வரும் திட்டங்கள் எல்லாமே மிகவும் வெற்றிகரமாக நடை பெற்று, நாடு மிகவும் முன்னேற்றம் அடைத்துக்கொண்டு இருப்பதை நேரில் பார்ப்பதால், தங்களுக்கு சீன அரசாங்கம் நல்ல திட்ட்ங்களையே எப்பொழுதும் கொண்டு வரும் என்று நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

 

சீனாவால் உற்பத்தி செய்யப்படாத பொருட்களே இல்லை. குண்டூசியிலிருந்து ஏவூர்தி வரை எதுவும் கிடைக்கும். விலையோ கொள்ளை மலிவு. அவர்கள் பொருட்கள் இல்லாமல் உலகில் வாழ்வது என்பது ஒரு இயலாத விடயமாகி விட்டது.

 

உலகின் சரித்திரத்தில் ஒவ்வொரு காலமும் ஒவ்வொரு நாடு உலகின் முதன்மையான நாடாக இருந்து வந்திருக்கிறது என்பது வரலாறு.

 

நீண்ட காலத்திற்கு, முழுப்பூசணிக்காயைச் சோன்றினுள் மறைத்துவைக்க முடியாமல் இருக்கும்.

நிச்சயமாக, வெகு விரைவில் சீனாதான் உலகின் அடுத்த முதல்.......!

-சந்திரகாசன் ,செல்வத்துரை

0 comments:

Post a Comment