முடக்கு வாத நோய்/ காரணங்கள்/ பின்பற்ற வேண்டியவை

[ருமரொய்ட் ஆர்த்ரைடிஸ்] (Rheumatoid Arthritis)

மனிதர்களை பாதிக்கக்கூடிய மூட்டு சம்பந்தப்பட்ட நோய்கள் நூற்றுக்கும் மேற்பட்டவை இருக்கின்றன. என்றாலும், பெண்களுக்கு பிரதானமாக சில மூட்டு நோய்கள் வர வாய்ப்புண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அத்தகைய பெண்களை பாதிக்கும் மூட்டு நோய்களில் முதன்மையாக கருதப்படுவது முடக்கு வாதம் அல்லது ஆமவாதம் என்ற மூட்டு வாத நோயேயாகும். முடக்கு வாதம் பாதித்தவர்கள் நாளடைவில் முடங்கி போவதால் ‘முடக்கு வாதம்’ என்று பெயர் வந்தது.

 

உடலின் அனைத்து மூட்டுகளிலும், குறிப்பாக சிறுமூட்டுகளில் வலி, வீக்கம் மற்றும் பிடிப்புத்தன்மை ஏற்படுத்தி நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியே நமது உடலின் திசுக்களை சிதைக்கும் ஒரு வினோத நோயாக இந்நோய் அமைகிறது. முடக்கு வாதம் என்பதை Rheumatoid Arthritis என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது ஒரு Auto Immune Disorder வகையைச் சார்ந்த நோயாகும். இந்நோயில் மூட்டுகள் மட்டுமின்றி எலும்பு தசைகள் மற்றும் ஏனைய பிற உறுப்புகளிலும் பாதிப்புகள் உண்டாகும்.

 

இந்நோய் பொதுவாக எல்லா வயதினரையும் பாதித்தாலும் பெரும்பாலும் நடுத்தர வயதுள்ள பெண்களையே அதிகம் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு இந்நோய் மூன்று மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக ஜுவனைல் ருமட்டாய்டு ஆர்த்ரைடிஸ் (Juvenile Rheumatoid) எனப்படும் சிறு வயதில் ஏற்படும் முடக்குவாதமானது வளரும் இளம் பெண்களை (16 வயது வரை உள்ள) பெருமளவு பாதிக்கிறதாக அண்மை கால ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நமது முறையற்ற பழக்க வழக்கங்களினால் உடலில் செரிமானமின்மை தோன்றி ஆமம் என்ற நச்சு நீரை உருவாக்கி அவை மூட்டுகளில் சேர ஆரம்பித்து மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி மற்றும் பிடிப்புத்தன்மை உருவாவதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

 

உடலில் ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு அரணாக இருக்கின்றன. இந்த வெள்ளை அணுக்களானது சில நேரங்களில் (மேலே கூறிய காரணங்களினால்) நம் உடலின் செல்களையே,  நமது உடலுக்கு தீங்கிழைக்கும் மற்ற வேறு கிருமிகளாக எண்ணி அவற்றை தாக்க ஆரம்பிக்கின்றன. இதனால் மூட்டுகளிலுள்ள சவ்வு வீக்கம் மற்றும் பிடிப்புத்தன்மை அடைந்து வலியையும் உண்டாக்குகிறது. மோசமான நோய் பாதிப்பினால் சில நேரங்களில் மூட்டுகள் செயலிழந்தும் விடுகின்றன.

 

காரணங்கள்:

முறையற்ற உணவுப் பழக்கம், எளிதில் செரிமானமாகாத உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், பகலில் தூங்குதல், உடற்பயிற்சியின்மை, உடலுழைப்பற்றிருத்தல், அதிக அளவு மாமிசம், துரித உணவுகள், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள்,  தேவையற்ற, எண்ணெய் மற்றும் அதிக கலோரி உணவுகளை உட்கொண்டு உடனடியாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது, மிகவும் குளிர்ந்த நீர் அல்லது உணவுகள், குளிரூட்டப்பட்ட அறைகளை பயன்படுத்துதல் ஆகியவை முக்கிய காரணங்களாகும். இந்த நோய் புகை பழக்கம் உள்ளவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்கள், பரம்பரை காரணம், சுற்றுப்புற சூழல், எப்பொழுதும் பதட்டம், மன அழுத்தம் உடையவர்களை அதிகமாக பாதிக்கிறது.

 

அறிகுறிகள்:

இந்நோய் வந்தால் உடலில் உள்ள மூட்டுகளில் வீக்கம், வலி, அழற்சி போன்றவை ஏற்படும். மூட்டுகளில் பிடிப்புத்தன்மை (Morning Stiffness) ஏற்படலாம், மூட்டுகளின் வடிவம் மாறலாம். பொதுவாக கை விரல்களில் இம்மாற்றத்தை அதிகமாக காணமுடியும். சிறிய மூட்டுகளான விரல் மூட்டுகளில் ஆரம்பித்து பெரிய மூட்டுகளான கை கால் மூட்டுகள், தோள்பட்டை, கழுத்து, இடுப்பு பகுதிகளில் வலி, வீக்கம், அழற்சி மற்றும் பிடிப்புத்தன்மை பரவும். 

 

அதிகாலை நேரத்தில் மூட்டுகளில் வலி மற்றும் பிடிப்புத்தன்மை அதிகமாக உணரப்பட்டு 30 முதல் 60 நிமிடங்களுக்குப் பின்னர் சிறிது சிறிதாக பிடிப்புத்தன்மை குறைந்து சரியாகும். மூட்டு வலியுடன் காய்ச்சலும் வரலாம். பொது உடல் வலி, பசியின்மை, சுவையின்மை, தாகம், சோம்பல், பலவீனம், உடல் கனம், காய்ச்சல், செரிமானமின்மை, உடல் உறுப்புகளின் வீக்கம் ஆகிய அறிகுறிகள் வரும்.குறிப்பிட்ட அறிகுறிகளினை உணர்பவர் தங்கள் குடும்பநல வைத்தியரை அணுகுவது சாலச் சிறந்தது.

 

இந்நோயானது மூட்டுகளை மட்டுமல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதயத்தை சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலை சுற்றியிருக்கும் Pleura, கண்ணின் வெள்ளைப் பகுதியான Sclera போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். நரம்பு மண்டலம், ரத்த நாளங்களிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.

 

இந்த நோய் நாட்பட்டு இருந்தால் அதனால் ஏற்படக்கூடிய பிற நோய்கள்:

* எலும்பு கணிமச்சத்து குறைபாடு

* முடக்கு வாத முடிச்சிகள் (Rheumatoid nodules)

* கண்களில் வறட்சி (Dry Eyes)

* தொற்று நோய்கள்

* உடல் எடை பாதிப்பு

* இதய நோய்

* நுரையீரல் நோய்

* மணிக்கட்டில் அழற்சி (Carpal Tunnel Syndrome).

 

இந்நோயினை அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் ரத்த பரிசோதனை செய்தும் அறிந்து கொள்ளலாம். இந்நோயில் ரத்தத்தில் Rheumatoid factor, ASO, CRP, ESR, ANA போன்றவை அதிகரித்து இருக்கும். இதையே நமது  ஆயுர்வேத மருத்துவத்தில் நச்சு நீர் மற்றும் வாத நீர் என்று கூறுகிறோம். X-ray, MRI மூலம் எலும்புகளின் நிலையை கண்டறியலாம். உடலில் உள்ள மூட்டுகளில் வலி, வீக்கம் தொடர்ந்து காணப்பட்டால் காலம் தாழ்த்தாமல் தக்க மருத்துவரிடம் சென்று மருத்துவம் செய்து கொள்வது நல்லதாகும்.

 

பின்பற்ற வேண்டியவை:

* வேகமாக நடத்தல், ஒத்தடம் கொடுத்தல், பசியை தூண்டுதல், லேசாக பேதி உண்டாக்குதல் ஆகியவற்றின் மூலமாக வாதத்தை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

* முறையான உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். பசி உணர்வை தூண்டுதல் மற்றும் கசப்புடன் கூடிய கார சுவை உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் செரிமான சக்தியை அதிகரிக்கலாம்.

* தினமும் குளிப்பதற்கும், குடிக்கவும் வெந்நீரை பயன்படுத்த வேண்டும்.

* காலையில் எழுந்தவுடன் சிறிது நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். சூரிய ஒளியானது உடலில் படுமாறு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

* பாதித்த மூட்டுகளில் வறுத்த மணல் அல்லது தவிடு ஒற்றடம் கொடுக்கலாம்.

* கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் விட்டமின் டி உள்ள உணவுகளான காய்கறிகள், கீரைகள், கேழ்வரகு ஆகியவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

தவிர்க்க வேண்டியவை:

* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு முதலிய கிழங்கு வகைகளையும் பட்டாணி, சுண்டல் மற்றும் மொச்சை முதலிய பயறு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

* எண்ணை, உப்பு, புளி, வறுத்தது, பொரித்தது ஆகியவை தவிர்க்க வேண்டும்.

* பதப்படுத்தப்பட்ட உணவுகள், மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.

* பகலில் தூங்குதலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

* மிகவும் குளிர்ந்த நீர் மற்றும் உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

* குளிரூட்டப்பட்ட அறைகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.


நன்றி :குங்குமம் தோழி

0 comments:

Post a Comment