தமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07

 [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள்]:
"தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] என்ற இதற்கு முந்திய 8பாகங்கள் கொண்ட,தீபத்தில்[Theebam.com] வெளியிடப்பட்ட  தொடரில்,நாம் ஆழமாக விவாதித்து சுட்டிக்காட்டியவாறு,பண்டைய சுமேரியர்களே அல்லது சுமேரிய தமிழர்களே வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும் விட்டு,விவசாயம் செய்ய முற்பட்ட முதல் நாகரிகம் ஆகும்.மற்ற பல கண்டுபிடிப்புகளை உலகிற்கு முதல் முதல் கொடுத்தவாறு,விவசாயத்திலும் உணவிலும் கூட இவர்கள் தமது பங்களிப்பை உலகிற்கு முதல் முதல் வழங்கினார்கள்.

பண்டைய சுமேரியர்களின் உணவு அதிகமாக பார்லியை முதன்மையாக கொண்டதுடன்,மற்றும் கோதுமை,தினை போன்றவையும் ஆகும்.அங்கு விவசாயம் அவர்களுக்கு, காய்கறியும் பழங்களும் வழங்கின.அத்துடன் பட்டாணிக் கடலை [கொண்டைகடலை],வெங்காயம்,கீரை,லீக்ஸ்,பீன்ஸ்[பயிற்றினம்],உள்ளி,கடுகு,வெள்ளரிக்காய்,பருப்பு போன்ற சிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டன.இவைகள் எல்லாம் பண்டைய சுமேரியர்களின் உணவாக அன்று இருந்தன.இவர்களே நாடோடி வாழ்க்கையை விட்டு முதல் முதல் ஓர் இடத்தில் குடியேறிய நாகரிக மக்களும் ஆகும்.அப்படி ஓரிடத்தில் குடியேரியதுடன்,வீட்டு பாவனைக்கு விலங்குகளையும் பழக்கினார்கள்.அவை உணவுக்கும் வேலைக்கும் அவர்களால் பாவிக்கப்பட்டன.வெள்ளாடு பாலும் இறைச்சியும் கொடுத்தன.அத்துடன் மாமிசத்தில்-மாட்டுக்கறி,வெள்ளாடு, செம்மறி யாட்டுக்கறி,பன்றிக்கறி,மான்கறி மற்றும் புறா,காட்டு கோழி போன்றவையும்,மேலும் கோழி முட்டையும் அவர்களின் முக்கிய உணவாக
இருந்தன.பாபிலோனியர்களால் சுமேரியர் தோற்கடிக்கப்பட்ட தருவாயில்,சிறந்த சுவையான உணவு ஒன்று அங்கு கண்டுபிடிக்கப்பட்டு,அது அரண்மனைக்கு கூடை நிரம்ப அனுப்பப்பட்டுள்ளன என்றும் அது அதிகமாக உணவுப் பண்டங்களுக்கு மணமூட்டும் ஒரு வகை பாலைவனத்து காளான்[truffles] என்றும் அறிய வருகிறது.

அவர்களின் நாளாந்த உணவு அதிகமாக பார்லி "கேக்கை"யும் பார்லி "களி"யையும் கொண்டிருந்ததுடன் இவை அதிகமாக வெங்காயம் அல்லது கொஞ்சம் அவரை சேர்த்து உட்கொள்ளப்பட்டதுடன்,வாற்கோதுமை மா ஊறலிலிருந்து வடித் தெடுக்கப்படும் மதுவுடன் [பியர்/barley ale] உணவை பூர்த்தி செய்தார்கள்.மெசொப்பொத்தேமியா ஆற்றில் கும்பலாக நீந்தும் மீனும் அவர்களின் முதன்மை உணவாக இருந்தது.அத்துடன் கடல் ஆமை,சிப்பிகள் போன்றவையும் மீனுடன் சேர்த்து சமைத்து உண்ணப்பட்டது.கி மு 2300 முற்பட்ட சுமேரிய நூல் ஒன்று,ஐம்பதுக்கு மேற்பட்ட மீன் வகைகளை குறிப்பிட்டுள்ளது.பாபிலோனியர் காலத்தில் மீன் வகைகளின் எண்ணிக்கை குறைந்து இருந்த பொழுதிலும்,ஊரின்[Ur] குறுகிய,சுற்று தெருக்களில்,பொரித்த மீன் விற்கும் வணிகர்கள் இன்னும் அங்கு வளமான வர்த்தகம் செய்தார்கள் என அறியமுடிகிறது.அது மட்டும் அல்ல,அங்கு உணவு கூடங்களில் வெங்காயம்,வெள்ளரிக்காய்,சுடச் சுட வாட்டிய ஆட்டிறைச்சி,பன்றி இறைச்சி போன்றவை வாங்கக் கூடியதாகவும் இருந்தன.இந்த பண்டைய சுமேரியர் காலத்தில்,இன்று காணப்படுவது போல,அண்மை கிழக்கு நாடுகளில்[Near East Countries] பன்றி இறைச்சி விலக்கப்பட்ட ஒன்று அல்ல என்பது குறிப்பிடத்தக்கது!என்றாலும்,கி மு 1000 ஆண்டு அளவில் இருந்து பன்றி இறைச்சியின் நிலை மாறத்தொடங்கியது.பண்டைய எகிப்த்தில் பன்றி ஒரு "அசுத்த பிராணி" என பொதுமதிப்பு பெற்றது.அத்தருவாயில்,எகிப்திய கீழ் சமுதாய வகுப்பினர் பன்றியை சாப்பிட தடை செய்யப்படாவிட்டாலும், மேல்
வகுப்பினருக்கு,குறிப்பாக மதகுருமாருக்கு இது முற்றாக தடைசெய்யப்பட்டது.இந்த நிலை இன்னும் ஒரு சில சமய குழுக்களிடம் இன்றும் தொடர்கிறது.அதன் பிறகு,கிட்டத்தட்ட கி மு 500 ஆண்டளவில்,இஸ்லாம் ஆரம்பத்துடன்,மத்திய கிழக்கில்,பன்றி இறைச்சி பொது வழக்கத்தித்தில் இருந்து முற்றாக விலக்கப்பட்டது.அதே போல சில யூத தரப்பும் சில கிரிஸ்துவ தரப்பும் பன்றி இறைச்சியை தவிர்த்தன.சுமேரியாவில் நிலவிய வெக்கையில் இறைச்சி விரைவாக கெட்டுப் போவதால்,அதிக மக்கட்தொகை இல்லாத கிராமப்புறங்களை விட,சுமேரிய நகரங்களில் இறைச்சி பொது உணவாக அங்கு வாழும் மக்களிடம் இருந்தன.

தொல்பொருள் ஆராய்ச்சி,ஆப்பெழுத்து/கியூனிபார்மில் எழுதப்பட்ட பதிவுகள்,மற்றும் சுமேரிய-அக்காத் இருமொழி ஆவணங்கள் மூலம் நாம் பண்டைய சுமேரியர்களின் உணவு பற்றி விரிவாக இன்று அறிய முடிகிறது.பார்லி ரொட்டியின் முக்கியத்தையும் பலவித பார்லி ரொட்டிகளையும் இந்த ஆவணங்கள் சுடிக்காட்டுகின்றன.இவற்றுடன் பார்லி,கோதுமை கேக்கும் சுமேரியர்களின் பிரதான உணவாக இருந்ததுடன்,அவையுடன் தானியம்.பயறு[பருப்பு] சேர்ந்தவடிசாறுடன் [சூப்பு/கஞ்சி],வெங்காயம், லீக்ஸ், உள்ளி,டர்னிப்[ turnip]போன்றவை உண்ணப்பட்டன.மேலும் காய்கறிகளை தவிர,சுமேரியர்களின் உணவில் பழங்களும் இருந்தன.அவை ஆப்பிள்,வெள்ளரிப்பழம், திராட்சை, அத்திப்பழம்,பேரீச்சை,மாதுளை போன்றவையாகும்.பிந்திய சுமேரியன் பதிவுகளில் பல சமையல் மூலிகைகள்,தேன்,சீஸ் [பாலாடைக்கட்டி/ cheese], வெண்ணெய்[butter], தாவர எண்ணெய் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.தேன்,பேரிச்சை,திராட்சை சாறு போன்றவை இனிப்பு பொருள்களாகவும் பயன்பட்டன.அத்துடன் சுமேரியர்கள் அடிக்கடி பியர்[beer] குடித்தார்கள்.ஆனால் சிலவேளை கொடிமுந்திரிப் பழச்சாறும்[wine] குடித்தார்கள்.பல வித பதப்படுத்தப்பட்ட உணவுகளும் அங்கு காணப்பட்டன. உதாரணமாக காய்ந்த ஆப்பிளும் அத்தியும் சரமாக கோர்த்து சுவரில் தொங்கவிடப்பட்டிருந்தன.அத்துடன் தேனில் பழங்கள் பாதுகாக்கப்பட்டன.அதே போல பருப்பு வகைகளான பீன்ஸ்,பட்டாணி,பயறு போன்றவையும் அத்துடன் திராட்சையும் உலர வைக்கப்பட்டன.மேலும் பாதம் கொட்டை [almonds],பசுங்கொட்டை [pistachio],உள்ளி போன்றவை நெடுங்காலம் காய்ந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டன.அங்கு நிலவிய சூடான காலநிலையில் பால் விரைவில் கெட்டுவிடும்.ஆகவே சுமேரியர்கள் பாலை நெய்,சீஸ் ஆக மாற்றினர்.மீனை உப்பு போட்டு அல்லது புகைபிடித்து வெயிலில் உலர்த்தினர் [கருவாடு].இறைச்சியை ஊறுகாயாக மாற்றினர்.சுமேரியர்கள் பொது பானையில் இருந்து பியரை,நாணல் குழாய் ஊடாக,அதை சுற்றி ஒன்றாக கூடியிருந்து,உறுஞ்சி குடித்தார்கள்.என்றாலும் செல்வந்தர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட  உறிஞ்சு குழாய்[straw] பாவித்தார்கள்.மேலும் மதுபானங்களை அத்தியில் இருந்தும் பேரீச்சம்பழத்தில் இருந்தும் தயாரித்தார்கள்.அத்துடன் திராட்சை பழத்தில் இருந்து வைனும்[Wine] உற்பத்தி செய்தார்கள்.வெங்காயம்,லீக்ஸ்,உள்ளி போன்றவையே அங்கு பிரபல்யமானவை.இவை பாபிலோன் மன்னர் மேரோடச் பாலடன் II [Merodach Baladan II ] தோட்டத்திலும்  கி மு 2100 ஆண்டு ஊர் நகர மன்னன் ஊர்-நம்மு[Ur-Nammu] தோட்டத்திலும் வளர்ந்தன என்பதற்கு ஆதாரங்கள் உண்டு.
பகுதி :08 தொடரும்.....


0 comments:

Post a Comment