தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:08

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

[பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
மெசொப்பொத்தேமியரின் ரொட்டி பொதுவாக கரடு முரடாக,தட்டையாக.புளிப்பில்லாததாக இருந்தன.ஆனால்,அவர்களின் செல்வந்தர்களுக்கான தரமும் விலையும் உயர்ந்த ரொட்டி அதிகமாக மென்மையான மாவால்,இனிப்பும் வாசனையும் உள்ள மெதுவான ரொட்டியாக சுடப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.அப்படியான ரொட்டி துண்டு,ஊர் நகர அரசி  ஷுபாத்தினது[Queen Shubad's/ Puabi's] கல்லறையில் காணப்பட்டது,இதை மேலும்உறுதிப்படுத்துகிறது.இது அவளின் மறுமை வாழ்விற்காக அங்கு வைக்கப் பட்டதாக கருதப்படுகிறது.மேலும் ரொட்டி விலங்குகாய்கறிகொழுப்புகளினாலும்பால்,வெண்ணெய்,சீஸ்,பழம்,பழச்சாறு,எள்விதைகளாலும் செறிவூட்டப்பட்டன. அனைத்து சமையல் குறிப்புகளிலும்-பூண்டு,வெங்காயம்,வெந்தயம் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன.இவர்கள்,வாசனைக்காக,கடுகு,சீரகம்,மல்லி,புதினா(Mentha spicata /ஒரு மருத்துவ மூலிகை],சைப்ரஸ் [cypress]
காய்கள்,சேர்த்திருக்கின்றனர்.கொஞ்சம் கெட்டியாக இருப்பதற்கு மாவுப் பொருள்கள்,அரைத்த பார்லி,மெதுவான தன்மைக்கு நீர் சேர்ப்பது என்ற அனைத்து வகை கலைகளிலும் கை தேர்ந்தவர்களாக சுமேரியர் இருந்தனர்.சில சமயம், உணவு மெதுவாக,மென்மையாக இருக்க,பால்,பியர் மற்றும் இரத்தம் போன்ற வற்றையும் அவர்கள் சேர்த்தனர்.பேரீச்சை மரம் தெற்கு மெசொப்பொத்தேமியாவின் முக்கிய உணவு பயிராக இருந்தது.இதுவும் பார்லி மாதிரி உப்பு மண்ணில் விளையக் கூடியது.இது,சர்க்கரை மற்றும் இரும்பு சத்து கொண்டதுடன் இலகுவாக பேணக்கூடியதும்,விவசாயிகள் முதலில் வீட்டு வளர்ப்பாக்கிய காட்டுத் தாவரங்களில் இதுவும் ஒன்று ஆகும்.ஆனால்,இன்று மத்திய தரைக் கடல் பகுதியில் முக்கிய உணவாக காணப்படும் ஆலிவ்[olive],மற்றும் திராட்சை போன்றவை மெசொப்பொத்தேமியா உணவில் அன்று அருமையாகவே காணப்பட்டன.பொதுவாக இறைச்சி வறுத்தும் கொதித்தும்,வாட்டியும் அல்லது சுட்டும் சமைக்கப்பட்டதுடன்,அவை காயவைத்து,புகையிட்டு அல்லது உப்பு தடவி பேணப்பட்டன.
சுமேரியர்களின் பெரும்பான்மையான உணவுகள் நீரில் அல்லது திரவத்தில் சமைக்கப்பட்டன.நீரில் கொதிக்க வைத்து சமைப்பது என்பது,சமையல்
அறிவியலில் புதுமை கலந்த ஓர் முக்கியமான மைல் கல்லாகும்.அதுவரை மக்கள்,நேரடியாய் நெருப்பில் போட்டு சமைத்தனர்;பின் சுட்டனர்;பிறகு பாத்திரத்தில் போட்டு வதக்கினர்;பாத்திரத்தில் போட்டு வறுத்தனர்.நெருப்பு தணலில்,தீயில் வாட்டினர்;லேசாக புரட்டி புரட்டி வாட்டினர்.இதெல்லாம் போக நீரில் போட்டு சமைப்பது,சுவையான,வசதியான சமையலாகும். நீரில் போடுவதன் மூலம்,உணவின் சுவை கூடுகிறது.மேலும் அதன் மணத்தை அதிகரிப்பதும்,சமையலை வளமாக்குவதும்,பல வகை உணவுகள் செய்வதும் இதன் மூலம் அதிகரிக்கின்றது.இந்த சுவையை வறுத்தல் சுடுதல்,புரட்டுதல் மூலம் செய்ய முடியாது.தண்ணீரில் உணவுக்கான பொருட்களை போட்டு,வேக வைத்து உண்பது என்பது நவீன புதிய முறை.இந்த திரவத்தில் சமைக்கும் நவீன புதிய முறை,மெசொப்பொத்தேமியாவில் உள்ள மாறுபட்ட எல்லா இன குழுக்களிடமும் முழுமையாக பரவியதுடன் இந்த இனக்குழுக்கள் பல,உணவு பழக்கங்களை தமக்குள்ள பொதுவாக பகிர்ந்தனர்.அத்துடன் சமையல் பாத்திரமும் பரிணாமம் பெற்று பல புது நவீன சமையலுக்கு வழிவகுத்தன.
இப்படி மெசொப்பொத்தேமியாவில் முதல் முதல் தொடங்கப்பட்டு,பின் அங்கு வழமையில் இருந்த பல சமையலின் குறிப்புகளை,சுமேரியர்களை வென்ற பாபிலோனியர்கள் வெகு புத்திசாலித் தனத்துடன் சுட்ட களிமண் பலகையில் பதிவும் செய்துள்ளனர்.

சுமேரியர்கள் கியூனிபார்ம் எழுத்தை கி மு 3100 ஆண்டளவில் கண்டுபிடித்தார்கள்.இந்த எழுத்து மெசொப்பொத்தேமியாவின் பிற பகுதிகளுக்கும் பரவி,மற்ற குழுக்கள் தமது மொழியை எழுத அதை பாவித்தனர்.கி மு 1900 ஆண்டளவில் பொதுவான கியூனிபார்ம் எழுத்தை பாவித்து சுமேரியன்,அக்காடியன் மொழியில் 800 இக்கு மேற்பட்ட  உணவு, குடிவகை சொற்களை பாபிலோனியரால் தொகுக்கப்பட்டன.சுமேரியர்கள் தமது வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே,ரொட்டிகள் சுடுவதற்கு ஏற்ற கல் அடுப்புகள் உருவாக்கினார்கள்.அதை தொடர்ந்து கி மு 2500 ஆண்டு அளவில் தீச்செங்கல் அடுப்பு பாவனைக்கு வந்தன.அத்துடன் சில அடுப்புகள்
தட்டையான மேற்பரப்புடன் வடிவமைக்கப்பட்டன.அவை "களி" மண்ணாலோ அல்லது வெண்கலத்தாலோ செய்த மெதுவாக வேகவைகிற சட்டியை அல்லது வறுக்குஞ்சட்டியை [வாணலி] தாங்கக் கூடியதாக இருந்தன.மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே இன்று தப்பி பிழைத்துள்ளன.முக்கியமாக 7"X9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களிமண் பலகையில்-கியூனிபார்ம் எழுத்துக்களில்-அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட-சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.இவை,அமெரிக்காவில் உள்ள யேல் பலகலைக்கழகத்தில்[Yale university] வைக்கப்பட்டுள்ளன.அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால்,அவை யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன.இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும்.என்றாலும் இந்த சிக்கலான,எளிதற்ற கியூனிபார்ம் எழுத்துக்கள் பாமர சுமேரியர்களால் அன்று வாசித்து இருக்க முடியாது.இவை,கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால்[scribes] மட்டுமே விளங்கிக்கொள்ளக் கூடியவையாக காணப்படுகின்றன.ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது நூல்,சாதாரண சமையற்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்க முடியாது.இது அன்று,4000 ஆண்டுகளுக்கு முன்பு,நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக அல்லது தொகுப்பாக இருக்கலாம்.இந்த சமையல் குறிப்புகள் மிகவும் விரிவாகவும் ஆனால்,அபூர்வமான,அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது.ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக அல்லது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதத்திற்க்கான,சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.மேலும் இதிலுள்ள சமையல் குறிப்புகளை இன்று முற்றாக புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் காணப்படுகிறது.காரணம் இந்த களிமண் பலகை உடைந்த,சிதைந்த நிலையில் உள்ளதும்,இதிலுள்ள வார்த்தைகள்,மொழி நமக்கு புரியாததாக,பரிட்சயம் அற்றதாக உள்ளதும்,மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த கூட்டு பொருட்கள் பற்றி நாம் முழுமையாக அறியாது இருப்பதும் ஆகும்.அது மட்டும் அல்ல,இந்த சமையல் குறிப்பில்,சமைக்கும் நேரம்,சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆகவே இது ஒரு கை தேர்ந்த சமையல்காரருக்காக தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.என்றாலும்-உயிரியல்,விஞ்ஞானம்,தொல்பொருள்,இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில்-அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள்,இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும் பிரெஞ்சு நாட்டின் ஜீன் போட்டீரோ (Jean Bottero),என்ற ஆராய்ச்சியாளர்,மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன என்றும்.சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம்,துல்லியமாய் சமைத்தல்,நெளிவு சுளிவுகள்,ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும்,அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பகுதி/:09 தொடரும்..

0 comments:

Post a Comment