தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:17

[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
(தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்)
பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த,பழைமைவாய்ந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும்,கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்ற தொழில்நுட்பத்திறனும் கூட புலனாகின்றன.நீ மேலும் நெல்மணி விளையும் கழனிகளை அடுத்து கரும்புத் தோட்டங்கள் வழியே செல்வாயானால்,அங்கு யானை பிளிறுவது போல் கரும்பை நெரிக்கும் எந்திரத்தின் ஓசை கேட்கும்.அங்கே கரும்புப் பாலை கட்டியாகக் காய்ச்சுவார்கள்.ஆகவே நீ அவ்விடம் சென்று கரும்புப்சாறு பருகலாம் என்று அறிவுறுத்துகிறார்.[எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை,விசயம் அடூஉம் புகை சூழ் ஆலைதொறும்,கரும்பின் தீம்சாறு விரும்பினிர் மிசைமின்,260-262] மூங்கிலைப் பரப்பி அதன் மேல் வெண்மையான கிளைகளை வைத்து,தாழை நாரினைக் கொண்டு
கட்டி,அதன்மேல் தருப்பைப் புல்லை வைத்து வேய்ந்த குடிசைகளில் வாழும் நெய்தல் நில மீனவர்,தாமே குற்றாத அரிசியில்,பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் தயாரித்த மதுவையும்,சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக படைப்பர்,நீயதை உண்ணலாம் என்று கூறுகிறார்.அது மட்டும் அல்ல அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக்கருவிகள் எப்போதும் கிடக்குமாம் என்று அடையாளமும் காட்டுகிறார்.[வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த,வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி,தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர்,279-281].தொல்காப்பியர் வாகைத் திணையில்அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்எனக் குறிப்பிட்ட பார்ப்பார்கள் இருக்கைக்கு சூரியன் மறையும் தருவாயில் நீ போகும் போது,நறிய நெற்றியினையும்,வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி,இராஜான்னம் என்ற பறவைப் பெயர் பெற்ற உயர்ந்த நெற்சோற்றையும்,மாதுளம் பிஞ்சைப் பிளந்து,மிளகுப் பொடியும்,
கறிவேப்பிலையையும் கலந்து பசும் வெண்ணெயிலே வேகவைத்து எடுத்த பொரியலையும் வடுமாங்காயினையும், தம்மை நாடிவந்த உனக்கு கொடுத்து உபசரிப்பர் என்கிறார்.[வயின்அறிந்து அட்ட,சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்,சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து,உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து,கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர்,நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த,தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்,304-310].பல அடுக்கு மாளிகைகளைக் கொண்ட செலவ மிக்க கடற்கரை பட்டணத்தே நீ இளைப்பாறும் போது,குறுகிய காலையுடைய ஆண் பன்றியின் இறைச்சியோடு களிப்புமிக்க கள்ளையும் பெறுவீர் என்கிறார்.[குறுந்தாள் ஏற்றைக்,கொழு நிணத் தடியொடு கூர்நறாப் பெறுகுவீர்,344-345].கலங்கரை விளக்குப் பகுதியைத் தாண்டிச் சென்றால் உழவர்களின் தனி மனைகளை நீ அடையலாம். அந்தத் தனிமனை தென்னங் கீற்றுகளால் வேயப்பட்டிருக்கும்.அங்கு அவர்கள் விருந்தாக உனக்கு பலாச்சுளை,இளநீர்,மரத்திலேயே பழுத்த வாழைப்பழம்,பனை நுங்கு,முதிர்ந்த
சேப்பங் கிழங்கு[Taro root] அவியல் மற்றும் ருசிகரமான இனிய இனிப்பு பண்டங்கள் முதலானவை பெறுவாய் என்கிறது.[தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின்,தாழ்கோட் பலவின் சூழ் சுளைப் பெரும்பழம்,வீழ் இல் தாழைக் குழவித் தீம்நீர்,கவை முலை இரும்பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்,குலை முதிர் வாழைக் கூனி வெண்பழம், திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்,355-360].இறுதியாக நீ அரண்மனையை அடையும் போது,அரசன் தொண்டைமான் இளந்திரையன்,உனது கிழிந்துள்ள ஆடைகளை நீக்கிவிட்டு, புத்தாடைகளை உடுத்திக் கொள்ளச் செய்வான்.சமையல் தொழிலில் வல்லவர்களால் செந்நெல் அரிசியொடு பலவகையான புலால் துண்டுகளைச் சேர்த்துச் சமைத்த உணவை தருவான்.மேலும் நல்ல மணமும், இனிய சுவையும் கொண்ட அமுதத்தை ஒத்த சிற்றுண்டிகளோடு பிறவும் விண்மீன்போன்ற வெள்ளிக் கலங்களில் பரப்பி தானே எதிர்நின்று உபசரித்து உம்மை உண்ணச் செய்வான் என்கிறார்.[நின் அரைப்,பாசி அன்ன சிதர்வை
நீக்கி,ஆவி அன்ன அவிர்நூற் கலிங்கம்,இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ,கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை,வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை,அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின்,தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல்,அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும்,468-475]. 


500 அடிகளைக் கொண்டு அமைந்த சிறப்புமிக்க இந்த பெரும்பாணாற்றுப்படையில் மேலும்,மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன்[275-281],பட்டிணப்பாலையில் [106 -110],கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி  மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.
"அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி"-பெரும்பாணாற்றுப்படை(275-281)
அதாவது,குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத்
துழாவிக் சமைத்த கூழை,வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்]உலர வைப்பார்.நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர்.அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி,விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள "கள்" என்கிறது.
"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110
அதாவது,தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர்,தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர்.இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக்[மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர்.மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர்.மகளிர் அணியும் கோதையினை(மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.

1 comments:

  1. கரும்பினைப் பிழிவதற்கு எந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.மீன் பிடிக்கருவிகள் பயன்படுத்தியுள்ளனர் தமிழரின் பழமை வாய்ந்த பெருமைகளை தொடர்ந்து ஆக்கி அளிக்கும் உங்களுக்கு நன்றி

    ReplyDelete