தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:19

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம]
[பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது]
மீன் சந்தை-இலங்கை
ஒருவர் கடல் உணவைப்பற்றி எண்ணும் போது,தமிழர் அல்லது திராவிடர் மனதில் முதலில் தோன்றுவது யாழ்ப்பாணமும் கேரளமும் தான்.மேலும் தமிழகமும், இலங்கையும் நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளதால்,தமிழர்கள் உணவில் கடல் உணவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக முக்கிய பங்கு வகிக்கிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் இவை பற்றிய அரிய தகவல்களை இன்று எமக்கு தருகிறது.உதாரணமாக,வரால் மீன்,சுறா மீன் கறிகளை புறநானுறு 399 கூறுவதுடன்,சிறுபாணாற்றுப்படை[193-195] நண்டு கறியை கூறுகிறது.இரண்டு பாடல்களும் கிழே விளக்கத்துடன் தரப்பட்டுள்ளன.

"அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பருஉக்குற்றரிசி
காடி வெள் உலைக் கொளீஇ நீழல்
ஓங்கு சினை மாவின் தீங்கனி நறும் புளி
மோட்டி வரு வராஅல் கோட்டு மீன் கொழுங்குறை
செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகல்
பாதிரி யூழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து இனனொடு விரைஇ
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்
அழி களிற் படுநர் களியட வைகின்
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவன் உள்ளி அவன் படர்தும்
செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன்"-புறநானூறு 399[1-14]

ஒரு நாயகன்,தனது நாயகிக்கு மது கொடுத்தல், [பண்டைய கர்நாடகத்தில் மது கிண்ணத்துடன்  -அலம்பூர்,ஆந்திரப் பிரதேசம்
கிள்ளிவளவனின் சோழ நாட்டில்,சமைக்கும் பெண் அளக்காமல் அள்ளிக்கொண்டு வந்த வெண்ணெல்லை,பூணுடன் கூடிய பருத்த உலக்கையால் குத்தி எடுக்கப்பட்ட அரிசியால் ஆக்கிய சோற்றை,புளித்த நீருள்ள உலையில் பெய்து,மிகுந்த நிழல் தரும் கிளைகளையுடைய மாமரத்தின் இனிய மாம்பழங்களைப் பிசைந்து செய்த மணமுள்ள புளிக்குழம்பும்,பெரிய கரிய வரால் மீன் இறைச்சியும்,கொம்புகளையுடைய சுறாமீனின் துண்டுகளும்,வயலில் விளைந்த வள்ளைக் கீரையும்,சிறிய கொடியில் முளைத்த பாகற் காயும்,பாதிரி[அம்பு,அம்புவாகினி,பாடலம்,புன்காலி எனவும் அழைப்பர்] அரும்பின் இதழ் விரித்தாற் போன்ற தோலை நீக்கி,கலக்க வேண்டிய பொருள்களைக் கலந்து மூடிவைத்து அவித்த சோறும் உண்பர்.வைக்கோல் உள்ள இடங்களில் உழைக்கும் உழவர்கள் தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின்,விடியற் காலையில் பழஞ்சோற்றை உண்பர் என்கிறது. 

"இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்."-சிறுபாணாற்றுப்படை  (193-195)

 [பண்டைய கர்நாடகத்தில் மது கிண்ணத்துடன் பெண்களின் வீண் பேச்சு]
இரும்பாலான உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாக குற்றிய
அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்றினைப் பிளந்த காலினையுடைய நண்டின் கறியோடு கலந்து சோற்றுக்கட்டியாகத் தர,நீவீர் உண்பீர் என்கிறது.மேலும் நாம் மலைபடுகடாம் மூலம் மலை வாழ் குரவரின் விருந்தோம்பலை அறிவதும் மட்டும் அல்ல,விருந்தினர் அங்கு காலை தொடக்கம் மாலை வரை,வீடுதோறும் பெற்று உண்டு மகிழ்ந்த பானங்களும்,உணவுகளும் கூட அறியமுடிகிறது.

"ஏறித் தரூஉம் இலங்குமலைத் தாரமொடு 
வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல்
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை
பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர
அருவி தந்த பழம் சிதை வெண் காழ்
வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடிக்கிய தடியொடு விரைஇ
வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனின்
இன் புளிக் கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழத்து 
வழை அமல் சாரல் கமழத் துழைஇ
நறுமலர் அணிந்த நாறு இரு முச்சிக்
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி
அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ
மகமுறை தடுப்ப மனைதொறும் பெறுகுவிர்!-மலைபடுகடாம்(170 – 185)

மரத்திலும் பாறையிலும் ஏறிப் பெறப்படும் தேனை மூங்கில் குழாய்களில் அடைத்து வைத்துக் கள்ளாக்கிய தேறலை நிரம்பவுண்டு,பின்னர்,நெல்லாற் காய்ச்சி வடித்த, மகிழ்ச்சி தரும் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற பின்னர்,அருவி அடித்துக்கொண்டு வந்த பழங்களின் விதைகளையும்,மற்றும் அம்பு ஏவி கொல்லப்பட்ட கடமானின் கொழுத்த தசையினையும்,கொழுப்பை அரிந்து எறிந்துவிட்டுப் பங்கிட்டு வைத்த முள்ளம் பன்றிக் கறி,பெண்நாய் முடுக்கிப் பிடித்துக் கொண்டு வந்த உடும்பு கறி,இனிப்பும் புளிப்பும் கலந்த மாங்காய் போட்ட மோர்க்குழம்பு,இவற்றுடன் நறிய மலரைச் சூடுகின்ற மணமிக்க கரிய முடியினையுடைய குறமகள் துழாவி ஆக்கிய வெள்ளை வெளேரென்று மலர்ந்திருந்த நெல்லரிசிச் சோறும் பெறுவீர்கள்.அவள் உங்களுக்கு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கேட்டு கேட்டு இந்த உணவுகளை படைப்பாள் என்கிறது. இறுதியாக கலித்தொகை 65 மூலம்,வெத்திலை பாக்கு போடும் பழக்கத்தை அறிகிறோம்.

"திருந்து இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும்
பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே
மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல்
அம் துகில் போர்வை அணிபெற தைஇ நம்
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆகத்
தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும்
காரக் குறைந்து கறைப்பட்டு வந்து நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத்
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே
பாராக் குறழாப் பணியாப் பொழுது அன்றி
யார் இவண் நின்றீர் எனக் கூறிப் பையென
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்துக் கொண்டீ எனத் தரலும் யாது ஒன்றும்
வாய்வாளேன் நிற்பக் கடிது அகன்று கைமாறிக்
கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான்
ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின்
இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன்"-கலித்தொகை 65

                       [பெரிய விருந்து ஒன்றிற்கு உணவு மற்றும் பானம் தட்டுக்களில் காவிச் 
               செல்லும் பண்டைய கெமர் சிற்பங்கள்]
மொட்டைத்தலையும் முக்காடும் கொண்டு இந்த ஊரில் சுற்றித்திரியும்
கிழட்டுக் கூனல் விழுந்த பார்ப்பான் ஒருவன் அன்றைக்கு என்னை வழி மறித்தான். நான் தலைவனைக்காண போர்வை ஒன்றைப் போர்த்தியபடி இரவு நேரத்தில் நின்றிருக்க அவன் என்னைக் குனிந்துப் பார்த்து நேரங் கெட்ட நேரத்தில் இங்கு நிற்கும் நீங்கள் யார்? என வினவினான். அதன் பின் வெற்றிலை தின்கிறாயா என்று என்னைக் கேட்டான்; நான் பதில் பேசாது நிற்கவே என்னிடம் அவன் மேலும் பேச்சினை வளர்த்தான். நீ பெண் பிசாசு.யான் ஆண் பிசாசு.என் காதலுக்கு நீ இரங்கு என்று ஏதோ ஏதோ அவன் பேசினான். அந்நேரத்தில் அவன்மீது மணலை அள்ளி வீசிவிட்டு நான் அவனிடமிருந்துத் தப்பி வந்தேன்.அவன் இந்நிகழ்ச்சியை ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டு அலைகிறான். நான் தலைவனைக் காணமுடியாமல் ஆயிற்று. என்னைப் பற்றி ஊரார் பேசும்படியும் ஆயிற்று என்று பார்ப்பானை முன்வைத்து இக்கலித்தொகைப் பாடல் பின்னப்பெற்றுள்ளது.
பகுதி :20 தொடரும்                                                                                                         

0 comments:

Post a Comment