"தாத்தாவும் பேரனும்"



குழந்தைகள், சிறுவர்கள் எப்படியாவது தமது பாட்டனை கூப்பிட்டாலும், உதாரணமாக தாத்தா, அப்பப்பா, அம்மப்பா ஏதுவாகியினும், அவர்கள்  என்றும் தம் பாட்டனை விரும்புகிறார்கள் என்பது நாம் கண்ட  உண்மை. அது மட்டும் அல்ல, பாட்டன், பாட்டி அவர்களுக்கு ஒரு மகிழ்வான சிறப்பு உறவும் ஆகும். அவர்களுடன் எந்தநேரமும் விளையாட, அவர்களை அணைத்து கதைகள் சொல்ல, துயில வைக்க ... இப்படி அனைத்துக்கும் ஒருவராக இருப்பதுடன் பாட்டன் பாட்டி தான் குடும்பத்தின் கலாச்சார பாரம்பரியத்தில் மற்றும் தாய் மொழியில் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்துபவர்களாகவும் உள்ளனர். ஏன் என்றால் இந்த அவசர கால உலகில் தாய் தந்தை மற்றும் இளைய உறவினர்கள் எல்லோரும் வீடு, வேலை, கடை , உடற்பயிற்சி கூடம் ... இப்படி ஒரே ஓய்வில்லாது இருக்கிறார்கள். ஆக பாட்டன் பாட்டி தான் பொதுவாக அவர்களுடன் பொழுது போக்கக் கூடியவர்களாக இருப்பதே ஆகும். இப்படியான சூழ்நிலையில் தான், நான் ஓய்வு பெற்றதும், என் மகள் என்னை தங்களுடன் வந்து இருக்கும்படி அழைப்புவிட்டார்.

 

என் மகளின் வீடு லண்டனுக்கு வெளியே உள்ள, ஹெர்ட்ஃபோர்ட்ஷைர் [Hertfordshire] என்ற ஊரில் உள்ள வெலின் கார்டன் சிட்டி [welwyn garden city] என்ற ஒரு சிறு கிராமம் ஒன்றில் இருந்தது. அங்கு தொண்ணுற்று ஐந்து வீதத்துக்கும் மேற்பட்டோர்கள் பிரித்தானியா வெள்ளை இனத்தவர்கள் ஆவார்கள். ஆகவே எனக்கு தொடக்கத்தில் நண்பர்கள் என ஒருவரும் சேரவில்லை. எனக்கு நண்பர்கள் என்றால் என் இரு பேரன்கள் மட்டுமே!

 

ஒரு சனிக்கிழமை, சின்ன பேரன், அவருக்கு வயது சில மாதங்களே, தாயுடன் இருக்க, பெரிய பேரனுடன், பக்கத்தில் இருக்கும் பூங்காவிற்கு நடந்து போய்,  அதன் அருகில் உள்ள ஒரு குளத்திற்கு வந்தோம். அந்த குளத்தில் பல சிறுவர்கள் தொலைமுறைக் கட்டுப்பாட்டு மூலம் படகுககளை [remote-controlled boats] இயக்கி மகிழ்ந்து கொண்டு இருந்தார்கள். என் பேரனும் நாமும் அவர்கள் விளையாடுவதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு, அங்கு இருந்த வாங்கு ஒன்றில் நாம் இருவரும் அமர்ந்தோம்.

 

 

கொஞ்சநேரம் போக, பேரன் என்னிடம் தாத்தா வீட்டுக்கு போய் எமது விளையாட்டு படகை எடுத்து வருவமோ என்று கேட்டார். இனி நாம் வீடு போய் திரும்பி வர நேரம் போகும் என்பதாலும், நான் என்னுடன், பேரனுடன் பொழுது போக்க காகிதம், கத்தரிக்கோல் & வண்ண எழுதுகோல்கள் எடுத்துக்கொண்டு வந்ததால், ஒரு காகித படகு செய்து அதற்கு வண்ணம் பூசி, குளத்தில் விட்டு அவருக்கு ஒரு புது உற்சாகம் ஊட்ட எண்ணினேன்.   

 

முதலில் அதை மறுத்து, இது உங்க ஊருக்குத்தான் சரி என்று பேரன் அடம்பிடித்தாலும், நான் கொஞ்சம் கொஞ்சமாக செய்ய, அதில் அவருக்கு ஒரு ஆர்வமே வந்துவிட்டது.

 

நான் அந்த காகித ஓடத்தை மேலும் நன்கு அழகுபடுத்த அங்கு மரங்களில் இருந்து விழுந்த ஓர் இரு சுள்ளிகளையும் சில புல்லுகளையும் ஓர் இரு பூக்களையும் பொறுக்கி வரும்படி பேரனிடம் கூறினேன். அவனும் மிக மகிழ்வாக துள்ளி ஓடி எடுக்க தொடங்கினார். நானும் மு.கருணா நிதியின் 'மறக்க முடியுமா ?' பாடலை எனக்குள் முணுமுணுக்க தொடங்கினேன்

 

 

'காகித ஓடம் கடல் அலை மீது

போவது போலே மூவரும் போவோம்

ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்

அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்'

 

 

அப்படி எம் படகு ஒருக்காவும்  கவுழாது, அவன் என் பேரன், கட்டாயம் வெற்றி வீரனாக இருப்பான் என்று எண்ணிக் கொண்டு இருக்கும் தருவாயில், திடீரென ஒரே ஆரவாரத்தைக் கேட்டு திரும்பி பார்த்தேன், என் பேரனுடன், அங்கு விளையாடிக் கொண்டு இருந்த மற்ற வெள்ளை சிறுவர்களும் நான் செய்வதை பார்க்க கூட்டமாக தங்கள் மூத்தோர்களுடன் சுற்றி நின்றார்கள். எல்லோருக்கும் இது அதிசயமாகவும் உற்சாகமாகவும் இருந்தததை உணர்ந்தேன்

 

நான் அவர்களுக்கு எப்படி செய்வது, அழகு படுத்துவது என்று விளங்கப் படுத்திக் கொண்டு, பேரன் கொண்டு வந்தவற்றை  இணைத்து ஒரு செயல் விளக்கமே [demonstration] செய்து காட்டினேன். எல்லோரும் கை தட்ட, பேரன் அந்த தொலை முறைக் கட்டுப் பாட்டு மூலம் இயங்கும் படகுகளுடன் ஓரளவு போட்டி போல் தண்ணீரில் விட்டார்.

 

முதலில் எம் காகித படகு கொஞ்சம் தத்தளித்தாலும், அங்கு வீசிய இளம் காற்று துணை சேர அது ஆடி ஆடி அழகாக குளத்தில் பயணிக்க தொடங்கியது.

 

மேலும் கொஞ்ச நேரம் போக, மற்றவர்களின் மின்கலம் [battery], தம் தம் வலுவை இழக்க அவர்களின் விளையாட்டு படகுகள் ஓய்வுக்கு வந்துவிட்டன. ஆமாம்

 

'கொண்டாட்டம் போட்டு கொடிகளும் ஏற்றி

படகை ஓட்டி மகிழ வைத்தது

காலமும் போக நேரமும் வர

வலு இழந்து சோகம் செய்தான்'

         

என்றாகி விட்டது! சங்ககாலத்தில் பலவகையான படகு விளையாட்டுகளை விளையாடியிருக்கின்றனர். பின்படகு (rowing),  முன்படகு (canoeing]   பாய்மர படகு (wind-surfing) என்பன முதன்மையான படகு விளையாட்டுகளாக இருந்ததாக அறிகிறோம். படகை அன்று புணை என்றும் அழைத்தனர். எம் காகித படைக்கும் காற்றால் இயங்கும் ஒரு பாய்மர படகு என்று சொல்லலாம். அது இயற்கை சக்தியில் இயங்குவதே.  ஆகவே பேரனின் காகித படகு மட்டும் நிமிர்ந்து நின்று இன்னும் ஓடிக் கொண்டு இருந்தது!. இப்ப எல்லா சிறுவர்களின் கவனமும் பேரனின் படகில் மட்டுமே. பேரன் இப்ப பெரிய வீரன் போல [hero] புன்முறுவலுடன் அவர்களின் மத்தியில் நின்று துள்ளிக் கொண்டு நின்றான்!!

 

'கதைப்பதைக்  கேட்க ஆட்களும் இல்லை

நட்பு  வழங்க யாருமே இல்லை'

 

என்று இருந்த எனக்கு, அன்று முதல் பல நண்பர்களும் வளர தொடங்கின!! 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,/அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment