பழகத் தெரிய வேணும் – 48

 


நேர்மறைச் சிந்தனை

`என்னமோ, என் வாழ்க்கையிலே மகிழ்ச்சியே இல்லே,’ என்று அலுத்துக்கொள்கிறவர்கள் அவர்களுடைய சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஏனெனில், மகிழ்ச்சி பிறரால் வருவதல்ல. ஒருவரது எண்ணத்தைப் பொறுத்தது.

கோயில் ஒன்றில் இலவச நாட்டிய வகுப்பு நடத்தப்படுவதாகக் கேள்விப்பட்டு, அதை நடத்தும் ஆசிரியையிடம் சென்றார் ஒருவர். அவருடைய மகளை அந்த வகுப்பில் சேர்ப்பதற்காக இல்லை.

முகத்தில் வருத்தத்தைத் தேக்கிக்கொண்டு, “இருக்கிறவங்க குடுக்கலாம். எங்களைமாதிரி இல்லாதவங்க என்ன செய்யமுடியும்?” என்று பூசை நடக்கும் இடத்திலேயே புலம்ப ஆரம்பித்தவர் ஓயவில்லை — “பேசுவதாக இருந்தால், அப்பால் செல்லுங்கள்,” என்று யாரோ ஒருவர் எரிச்சலுடன் மிரட்டும்வரை.

`பிறரைப்போன்று நாம் இல்லையே!’ என்று வருந்த ஆரம்பித்தால், இந்த உலகில் எவருக்குமே நிம்மதி கிடைக்காது.

பண வசதி இல்லாவிட்டால், அடுத்த தலைமுறையாவது தங்களைப்போல் கடினமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாம் என்று கல்வியில் ஈடுபடுத்துவதுதான் வசதி குறைந்தவர்கள் செய்யக்கூடிய செயல்.

தம்முடைய தீய பழக்கங்களைப் பழகிக்கொள்ள வேண்டாம் என்று தம் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுபவர்களும் உண்டு.

மாறாக, ஓயாத சிந்தனை எதிர்மறையாகவே எழுந்தால் (`எல்லாம் என் தலைவிதி!’) சக்திதான் விரயம்.

தம் வருத்தத்தைக் கோபமாக மாற்றிக்கொள்வதால், குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரும் தொடர்ந்துவிடும் என்பது இவர்களுக்குப் புரிவதில்லை.

நம்மால் செய்ய முடிந்தது ஏதாவது இருக்காதா! அதை எண்ணி திருப்தி அடையாது, முடியாததைப்பற்றிய கவலை ஏன்?

அந்தக் கோயிலின் அருகே இருந்த ஏழை மாது ஒருத்தி தினமும் அதைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள். இன்னொருவர் கோயில் சுவற்றில் வெள்ளையடிப்பதுபோன்ற வேலையை தானாகச் செய்வார்.

இருவரும் எந்த லாபத்தையும் எதிர்பாராது, உடலுழைப்பை வழங்குகிறார்கள். `வசதி இல்லையே!’ என்று ஏங்குவதில்லை. அதனால் அவர்களுக்கு `நம்மால் முடிந்ததைச் செய்கிறோம்!’ என்ற திருப்தி கிடைக்கிறது.

(பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள் திருப்தி அடைந்துவிடுகிறார்களா, என்ன!)

நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற நப்பாசையுடன் ஆர்வமில்லாத துறையில் பட்டம் வாங்கி, உத்தியோகத்திலும் அமர்ந்தபின்னர் மகிழ்ச்சியை இழந்து வாழ்கிறவர்கள் பலர்.

வாய்த்த உத்தியோகத்தை நல்விதமாக வகித்தால்மட்டும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. அதைக் கெடுக்கவும் ஒருசிலர் இருப்பார்கள்,

 

கதை::

நான் ஆங்கிலத்தில் எழுதுவது என் மேலதிகாரியின் பொறாமையைக் கிளப்பிவிட்டது. அவளுக்குப் பிடிக்காத ஒருவரைப்பற்றி அவதூறாக எழுதச் சொன்னாள்.

`நீயே எழுதேன்,’ என்று நான் மறுக்க, முடிந்தவரை எனக்குத் தொந்தரவு கொடுத்தாள்.

அவள் அப்படி நடந்துகொண்டதில் என்மேல் தவறு இல்லை என்றவரை எனக்குப் புரிந்தது. இருந்தாலும், தினசரி வாழ்க்கையைக் கடப்பதே கடினமாக இருந்தது. பள்ளிக்கூடத்தில் முதன்முதலாகக் காலெடுத்துவைக்கும் குழந்தை முரண்டுபிடிக்குமே, அந்த மனநிலையில்தான் இருந்தேன்.

நான் பட்ட அவதிகள் மட்டுமின்றி, பிறரது அனுபவங்களும் என் உணர்வுகளைப் பாதித்தால் அவற்றைச் சமாளிக்க நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். அவற்றை எழுத்துமூலம் வெளியிட்டபின், மனச்சுமை குறைந்தாற்போல் இருக்கும். அது ஒரு வடிகால். பிரசுரத்திற்காக அல்ல.

`பிறரிடம் கூறி ஆறுதல் அடையலாமே?’ என்றால், யாரை நம்புவது? நம் மீதே தப்பு கண்டுபிடிப்பார்கள்.

அப்படியே ஏமாற்றப்பட்டால் அனுபவம் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

 

இனிமையான நினைவு ஒன்று

அதே பள்ளியில் என் சக ஆசிரியை மிஸஸ் சென் ஓய்வுபெறும் நாள் வந்தது. நான் அவளுடன் அதிகம் பேசியதுகூடக் கிடையாது.

ஆனால், என்னைத் தனியாக அழைத்து, “உன்னிடம் அபூர்வமான திறமை (rare talent) இருக்கிறது. அதனால் பிறர் பொறாமைப்படுகிறார்கள். Take it easy!” என்றாள், கனிவுடன். சம்பந்தப்பட்டவள் பெயரையோ, அவள் என்னைப் படுத்திய பாட்டையோ குறிப்பிடவில்லை.

நான் குழம்பிப் போயிருந்ததை அவள் கவனித்திருக்கிறாள்!

எனக்குப் புதிய பலம் வந்தது போலிருந்தது.

அதுவரை, `எல்லாரும்தான் பேசுகிறார்கள்; எழுதுவதும் அதுபோல்தானே! என்ன பிரமாதம்!’ என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தேன்.

மிஸஸ் சென் பல்வித விளையாட்டுகளில் தேர்ந்தவள். அதனாலோ என்னவோ, நம்மை மறைமுகமாக எதிர்ப்பவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரிந்துவைத்திருந்தாள்.

மிஸஸ் சென்போலன்றி, புலம்புகிறவர்கள்தாம் உலகில் அதிகம். அவர்களுக்கு எத்தனையோ நல்லவை நடந்திருக்கும். ஆனால், நடக்காத, இயலாத, ஒன்றைப்பற்றியே பேசி மருகுவார்கள்.

 

ஏன் புலம்பல்?

`எளிது’ என்றெண்ணி ஒரு காரியத்தைத் தேர்ந்தெடுப்பதில் சில சங்கடங்கள் நேரும். தான் தேர்ந்தெடுத்த காரியம் தான் நினைத்தபடி இல்லையென்று தெரிந்ததும் மிரட்சியாக இருக்கும். `முடியும்,’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டு கடக்க வேண்டியதுதான்.

என்னுடன் படித்த பிருந்தா “எங்கள் வீட்டில் நான் படித்தது போதும் என்றார்கள். நான்தான் பட்டம் வாங்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, கல்லூரியில் சேர்ந்தேன். இப்போது ஏனடா சேர்ந்தோம் என்றிருக்கிறது,” என்று ஓயாது அலுத்துக்கொள்வாள்.

பிருந்தாவைப் போன்றவர்களுக்கு மாறும் எண்ணம் கிடையாது. மாறாக, தம்மைப்போல் இல்லாதவர்களுடன் இணைத்துக்கொள்வார்கள். அப்போதுதானே அவர்கள் மனதையும் கலைக்கமுடியும்?

அம்மாதிரியானவர்களுடன் அதிகம் பழகினால், நமக்கும் அந்தக் குணம் படிந்துவிடும் அபாயம் உண்டு.

`நல்லவேளை, நாம் இவர்களைப்போல் இல்லையே!’ என்று நமக்கு நாமே தைரியம் அளித்துக்கொள்ளவேண்டியதுதான்.

பால்யப் பருவத்தில் துயர் அனுபவித்தவர்கள் சந்தர்ப்பம் மாறியபோதும், எப்போதோ பட்ட வேதனையிலிருந்து மீளாது இருந்தால் அவர்களுக்கு என்றுதான் நிம்மதி?

 

கதை::

சிறுவயதிலேயே தாயை இழந்த ரவி, தந்தைக்கும் வேண்டாதவனாகப் போனான். பாட்டி வீட்டுக்கு அனுப்பப்பட்டபோது, கேட்பாரில்லை என்று அவளும் அவனைக் கொடுமைப்படுத்தினாள்.

மூன்று வயதுப் பிள்ளை விஷமம் செய்கிறான் என்று அவனைக் கட்டில் காலில் கட்டிப்போட்டு விட்டதைப் பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக்கொள்வாள்.

எட்டு வயதில் ஒருவரின் தத்துப்பிள்ளையாகப் போனான். அங்கும் அசாத்தியக் கண்டிப்பு.

புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த ரவி பெரியவனாகி, அமெரிக்காவில் நல்ல வேலையில் அமர்ந்தான்.

அவனுடைய குழந்தைபோன்ற நிராதரவான மனப்பான்மையால் எந்தப் பெண்ணின் தாய்மை உணர்வையும் எழுப்ப முடிந்தது. ஆனால், அறியாத வயதில், `தன்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று அடைந்த குழப்பம் அவனுக்குள் நிலைத்திருந்தது.

தன்னைக் காதலித்த ஒவ்வொரு பெண்ணையும் உடும்பாகப் பற்றிக்கொண்டான், `இவளுக்கும் நம்மைப் பிடிக்காது, விட்டுப் போய்விடுவாளோ?’ என்ற அச்சத்தால்.

அவனுடைய கட்டுப்பாடும், எப்போதும் சார்ந்திருக்கும் மனப்பான்மையும் பொறுக்காது பெண்கள் ஒவ்வொருவராக அவனை விட்டுப்போனார்கள்.

சிறுவயதில் அனுபவித்ததையே நினைத்துக்கொண்டிருந்ததால் அப்போது அவனிடம் அன்பு செலுத்தாதவர்கள்மேல் கொண்ட ஆத்திரமும் மாறவில்லை.

இதற்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள், “LIVE IN THE PRESENT” (கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துபோகாது, நிகழ்காலத்திலேயே இரு) என்று.

`இப்போது நான் சுதந்திரமானவன். அவர்களால் என்னைக் கஷ்டப்படுத்த முடியாது!’ என்று, நேர்மறைச் சிந்தனையுடன் தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொண்டிருந்தால் காலமெல்லாம் துயர்ப்பட வேண்டாமே!

 

`முடிகிற காரியமா?’ என்கிறீர்களா?

 

அப்படியானால், இத்தகைய சிந்தனையை உறுதிப்படுத்தவென உளவியல் மருத்துவர்களை நாடலாமே!

::நிர்மலா ராகவன் எழுத்தாளர்-/-சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக 

0 comments:

Post a Comment