நம்மை நோக்கி வரும் புதுமைகள்


அறிவியல்=விஞ்ஞானம்

புதிய சில்லு, புதிய பாய்ச்சல்


கூகுள் அண்மையில்
'பிக்செல் 7 மற்றும் பிக்செல் 7 புரோ' ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. அவற்றினுள் இருப்பவை 'டென்சார் ஜி2' என்ற புதிய சிலிக்கன் சில்லு. ஒன்றை கவனித்தீர்களா? ஆப்பிள் முதல் சாம்சங் வரை அனைத்தும், இயந்திர கற்றல் என்ற மென்பொருளில் இயங்கக்கூடிய சில்லுகளை அறிமுகம் செய்யத் தொடங்கிவிட்டனர். ஏனெனில், குரல் தேடல் முதல் டிஜிட்டல் உதவியாளர் வரை பல புதிய தொழில்நுட்பங்களுக்கு சக்திவாய்ந்த சில்லுகள் தேவை. அதற்குத்தான், கூகுள் தன் சொந்த தயாரிப்பான டென்சார் ஜி2 சில்லினை அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய சில்லினைவிட ஜி2 சில்லு 70 சதவீதம் வேகமாக இயங்குகிறது. மேலும், 50 சதவீதம் குறைவாக மின்சாரத்தை உறிஞ்சுகிறது. ஒருவர் பேசுவதை இன்னொரு மொழியில் மொழிபெயர்ப்பது, கேமராவில் செறிவான படங்களைத் தருவது என்று புதிய சில்லின் புதிய திறன்கள் நிறையஉண்டு.

 

வானில் ஒரு மின் விமானம்.


உலகின் முதல் மின்சார பயணியர் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்து வெள்ளோட்டம் பார்த்தது. அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் நடந்த, இவியேஷன் நிறுவனத்தின், 'ஆலிஸ்' என்ற மின்சார விமானம், வானில் 3,500 அடி உயரத்தில் எட்டு நிமிடம் வெள்ளோட்ட சோதனை நடத்தி, மீண்டும்தரையிறங்கியது.

இவியேஷனின் ஆலிஸ், ஒரு முறை மின்சாரமேற்றினால், 250 மைல்கள் தொலைவுக்கு பறக்கும். அதுமட்டுமல்ல, ஆலிஸ் விமானத்தில், இரண்டு விமானிகளும், ஒன்பது பயணியரும் பயணிக்கலாம்.

பேட்டரி தொழில்நுட்பம் வேகமாக முன்னேறி வருவதால், விரைவில் மின்சார விமானங்கள் மட்டுமே வானில் பறக்க வேண்டும் என்ற நிலை வரும். அப்போது, முதல் விமானமாக இவியேஷனின் ஆலிஸ் இருக்கும். ஏற்கனவே, நடுத்தர தொலைவு விமான சேவைகளுக்காக, 70 ஆலிஸ் விமானங்களுக்கு ஆர்டர்கள் வந்துள்ளன. இதனால், 2026 வாக்கில் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவையில் ஆலிஸ் முன்னணி வகிக்கும் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். ...

 

நவீன பாய்மரக் கப்பல்


இயந்திரங்களின் பலத்திற்கு ஈடில்லை என்ற கருத்தியலில்தான், நவீன கப்பல் போக்குவரத்து உருவானது. ஒரு நுாற்றாண்டு கடந்த பின், மீண்டும் ஆதிகால பாய்மரங்களை, நவீன கப்பலில் பொறுத்தியுள்ளது, சீன நிறுவனம் ஒன்று.

வழக்கமான டீசல் இயந்திரம் பொருத்தியகப்பலில், கூடுதலாக 40 மீட்டர் உயர நான்கு பாய்மரங்களை அந்நிறுவனம் சேர்த்துள்ளது. பாய்மரங்களை, கணினிகள் கட்டுப்படுத்தும். தேவையில்லாதபோது, பொத்தானை அழுத்தினால் இந்த கார்பன் இழை பாய்மரங்கள் சுருங்கிவிடும்.

அண்மையில் மத்தியக் கிழக்கிலிருந்து, துாரக்கிழக்கு கரை வரையிலான பயணத்தில் இந்த பாய்மரங்கள், 10 சதவீத டீசலை மிச்சப்படுத்தின. ஒரு பயணத்திற்கு, 2,900 டன்கள் கார்பன்-டை-ஆக்சைடு காற்றில் கலப்பது தவிர்க்கப்படும்.

 

தென்றல் தரும் மின்சாரம்.


சிங்கப்பூரிலுள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சிறிய அளவில் உள்ள கருவி மூலம், குறைந்த வேகத்தில் வீசும் காற்றிலிருந்து மின்சாரத்தை எடுக்க முடியும் என்று காட்டியுள்ளனர்.

இக்கருவி 15 செ.மீ.,க்கு 20 செ.மீ., அளவு உள்ளது. இதை கட்டடத்திற்கு வெளியே காற்றோட்டமான இடத்தில் வைத்துவிட்டால் போதும். காற்று லேசாக வீசினாலும் இந்தக் கருவி அசைந்து அதிரும். மூன்று வேறு விதமான பொருட்களால் ஆன கருவி அசைவதால், 'டிரைபோ எலெக்ட்ரிக்' விளைவு மூலம் மின்சாரம் உற்பத்தியாகும். ஒரு சோதனையில், நொடிக்கு நான்கு மீட்டர் வேகத்தில் வீசிய காற்றில், நான்யாங் விஞ்ஞானிகளின் கருவி தயாரித்த மின்சாரத்தின் மூலம் 40 சிறிய எல்.இ.டி., விளக்குகள் எரிந்தன.

கட்டடங்களுக்கு வெளியே பொருத்தினால், 24 மணி நேரமும் கணிசமான மின்சாரத்தை இக் கருவிகள் உற்பத்தி செய்துதரும்.


உடல் நலம் காட்டும் உடை.

ஒருவர் எங்கிருந்தாலும் அவரது உடல்நிலையை கண்காணிப்பதற்கான தொழில்நுட்பங்கள் வரத் தொடங்கிவிட்டன.

அதில் ஒன்று தான் அணியும் உடைகளையே உடல் நலம் அறிய உதவும் கருவிகளாக மாற்றம் நுட்பம் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் 'பெக்கோடெக்ஸ்' என்ற ஒரு வகைத்  துணியை உருவாக்கி உள்ளனர்.  இந்த துணி முழுவதும் பருத்தி இழைகளால் ஆனது என்றாலும் இதன் ஊடுபாவாக பத்துவகை மின்னணு உணரிகள் வைத்து ஏற்பட்டது. இதனால் ஒருவரது உடல் நிலை குறித்த அறிகுறிகளை தொடர்ந்து கண்காணித்து அறிய முடியும். இந்த உணரிகள் தரும் தகவல்களை மொபைல் செயலி மூலம் சேகரித்து அறியலாம்.

பிரதியாக்கம் -செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment