திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../06/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]


திரிகடுகம் தொடர்கிறது.....

 


 வெண்பா: 26

கோல் நோக்கி வாழும், குடி எல்லாம்; தாய் முலையின்

பால் நோக்கி வாழும், குழவிகள்; வானத்

துளி நோக்கி வாழும், உலகம்; உலகின்

விளி நோக்கி இன்புறூஉம், கூற்று.  

 

விளக்கம்:

குடிகள், அரசனது ஆட்சியால் உயிர் வாழும். குழந்தைகள் தாய்ப்பாலால் உயிர் வாழும். உயிர்கள் மழைத்துளியில் உயிர் வாழும். எமன் உயிர்களின் சாக்காட்டை எதிர்பார்த்து மகிழ்வான்.

 

வெண்பா:27

கற்ப, கழி மடம் அஃகும்; மடம் அஃக,

புற்கம் தீர்ந்து, இவ் உலகில் கோள் உணரும்; கோள் உணர்ந்தால்,

தத்துவம் ஆன நெறி படரும்; அந் நெறியே

இப்பால் உலகத்து இசை நிறீஇ, உப்பால்

உயர்ந்த உலகம் புகும்.  

 

விளக்கம்:

ஒருவன் அறிவு சார்ந்த நூல்களைக் கற்பதனால் அறியாமை குறையப் பெறுவான். அறியாமை குறைவதால் புல்லறிவு நீங்கி உலக இயற்கையை அறிவான். உலக இயற்கையை உணர மெய்நெறியாகிய வீட்டு நெறி செல்வான். வீட்டு நெறி செல்ல இவ்வுலகில் புகழை நிலை நிறுத்தி மறுமையில் பேரின்பம் அடைவான்.

 

வெண்பா:28

குழித்துழி நிற்பது நீர்; தன்னைப் பல்லோர்

பழித்துழி நிற்பது பாவம்; - அழித்துச்

செறுவழி நிற்பது காமம்; தனக்கு ஒன்று

உறுவுழி நிற்பது அறிவு.           

 

விளக்கம்:

பள்ளமான இடத்தில் நீர் நிற்கும். பலரும் பழிக்கும் தீயவனிடம் பாவம் நிற்கும். தவ ஒழுக்கமில்லாதவனிடம் காமம் நிற்கும். துன்பம் வந்த போது கற்றறிவு துணை நிற்கும்.

 

 

வெண்பா:29

திருவின் திறல் உடையது இல்லை, ஒருவற்கு;

கற்றலின் வாய்த்த பிற இல்லை; எற்றுள்ளும்

இன்மையின் இன்னாதது இல்லை; 'இலம்!' என்னும்

வன்மையின் வன்பாட்டது இல்.       

 

விளக்கம்:

செல்வத்தைப் போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை. கல்வியைப் போல் துணையாவது பிறிதில்லை. வறுமையைப் போல் துன்பமானது வேறு இல்லை. இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானது வேறு இல்லை.

 

 

வெண்பா:30

புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த

நகை வித்தாத் தோன்றும் உவகை; பகை, ஒருவன்

முன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்

இன்னா வித்து ஆகிவிடும்.      

 

விளக்கம்:

புகையின் காரணமாக நெருப்பு உணரப்படும். முகமலர்ச்சியின் காரணமாக மன மகிழ்ச்சி உணரப்படும். செய்யும் செயல்களால் பகைமை வெளிப்படும். பகைமையை உணர்ந்தபின் அதன் காரணமாகத் துன்பங்கள் உண்டாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லை, வாழும், போல், நிற்கும், நோக்கி, நிற்பது, இலக்கியங்கள், பதினெண், நெறி, உயிர், கீழ்க்கணக்கு, நான்மணிக்கடிகை, காமம், வித்து, உணரப்படும், காரணமாக, பாவம், தோன்றும், வேறு, அறியாமை, மடம், உலகம், சங்க, கோள், ஒருவன், வீட்டு, இயற்கையை, அறிவு, நீர்

0 comments:

Post a Comment