“சாமியும் அவள்பக்கமே!”

 


"நலமாய் என்றாய் அழகு காட்டினாய்

நகத்தை கடித்து வெட்கம் சொன்னாய்

நகர்ந்த மகிழ்வை முடித்து வைத்தாய்

நச்சு உறவாய் மாற்றி போனாய்!"

 

"மூலையில் இருந்து பொய்களை நினைக்கிறேன்

மூங்கில் போன்ற கைகளை காண்கிறேன்

மூடி மறைக்காத உடலை ரசிக்கிறேன்

மூடனாக இன்று என்னை காண்கிறேன்!"

 

"உவகை தந்து  முடித்தும் வைத்தாய்  

உனது நோக்கம் அறிய துடிக்கிறேன் 

உள்ளம் உடைந்து அழுவதை தவிர்த்து 

உயிரை பிடித்து வாழ முயல்கிறேன்!"

 

 

"விடை கூறி மகிழ்வாக போகிறாய் 

விளக்க மிலாமல் நழுவி செல்கிறாய்

விரல்கள் பேசிய காதலும் பொய்யோ

வியாபாரம் செய்ய அன்பு சரக்கோ!”

 

"ஏமாற்றும் தந்திரம் பின்பே தெரிந்தது

ஏராளம் நம்பிக்கை அதை மறைத்தது 

ஏகாந்தம் சூழ்ந்து சிந்தனை தருகுது

ஏக்கம் கொண்டு இன்று தவிக்கிறேன்!"

 

"சிலருக்கு காதல் ஒரு விளையாட்டு

சிலந்திவலை போல் பின்னல் வேலை

சிவந்த இதழால் காமமும் தருவாள்

சிம்மாசனம் தேட தந்திரம் என்பாள்!”

 

"அன்பு துளிர்த்த அழகு மனதில்

அக்கினி மூட்டி வேறு தேடுவாள்

அடி மனதில் வெறுப்பை உண்டாக்கி

அந்தரத்தில் தள்ளி விட்டுப் போவாள்!”

 

"பகிர்ந்த தருணங்கள் உடலை வருத்துது

பதிலை தேடுகிறேன் உள்ளம் கொதிக்குது

பத்தினி நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர

பரிகாரம் தேடுகிறேன் சாமியும் அவள்பக்கமே!”

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment