பார்வையாளர் பார்வையில் ஈழத்தவர் திரைப்படத்துறை

விஞ்ஞானத்தில் பலபெரும் புதுமைகளைப் படைத்து முன்னேறிவிட்ட மேற்கத்தைய நாடுகள் வரை புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தவர், ஏற்கனவே தம் சொந்த உறவுகளையும் இழந்து காலம் காலமாகக் ஊரில் கூடி வாழ்ந்த உறவுகளையும்,கூட்டு வாழ்க்கையினையும் தொலைத்துமேற்படி நாடுகளில்,

பலவகையான கலாச்சாரங்களைக் கொண்ட பல்லினங்களுக்கு மத்தியில், , ஒத்துபோக முடியாத காலநிலை,ஒத்துக் கொள்ள முடியாத கலாச்சார சூழ்நிலை,புரிந்து ஒத்துப் போக முடியாத உறவுகளும்அடுத்த தலைமுறையினர் அளிக்கும் புரிந்து கொள்ள முடியாதவகையிலான சிக்கல்கள்    எனப்பல வகையில், நாம் பரம்பரைபரம்பரையாக வாழ்ந்த வாழ்க்கைக்கு மாறான கடும் சிக்கல்களுக்கெல்லாம் முகம் கொடுத்துக் கொண்டு, இவற்றுக்கு மத்தியில் இங்கு குடியேறிய ஆரம்ப காலத்தில் சிலகாலம் சற்று மனம்தளர்ந்து வாழ்ந்தாலும் பின்னர் கண்விழித்துக்கொண்ட தமிழினம் கல்வி, தொழில்,கலை சார்ந்த பல்துறைகளிலும்  பிரகாசிக்க ஆரம்பித்துள்ளமை, நாமும் ஏனைய இனங்களிற்கு இணையாக வளர்ந்துகொண்டி ருக்கிறோம் என்பதனை பெருமையுடன் பறைசாற்றுகிறது.

அவற்றினுள் ஒன்றான ஈழத்தவர் திரைப்படத்துறையும் புதிய தொழில்நுட்பமூடாக மீண்டும்வளர்ந்துகொண்டிருப்பதுதமிழர்களாகிய எங்கள் காதில் இதமான செய்திகளாகவே உணரப்படுகின்றன. ஈழத்தில் நாங்கள் வாழ்ந்த காலம்வரையில் ஈழத்துக் கலைஞர்களின் பெரும் முயற்சியில் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளிவரும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தமிழ்த்திரைப்படங்கள் நஷ்டக் கடலில் மூழ்குவதும்,அக்கலைஞர்களின் உற்சாகம் இழக்கப்படுவதுவும் அதனால் திரைப்பட முயற்சி சிலகாலம் இல்லாது போவதுவும் ,மீண்டும் அம்முயற்சி ஆர்வம் கொண்ட கலைஞர்களினால் படம் எடுக்கப்படுவதும், இல்லாது போவதுவுமாக அதுவும் இன்றைய சின்னத்திரை நாடகங்கள் போன்று ஒரு தொடர்கதையாகவே போய்க்கொண்டு இருந்தது தமிழ்த் திரைப்பட இரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்!

ஈழத்துத் திரைப்பட வளர்ச்சி ஆமை வேகம்...இல்லை,இல்லை நத்தை வேகத்தில்தான் அக்காலத்தில் நகர்ந்துகொண்டிருந்தது என்பது ஈழத்துக் கலைஞர்களுக்கு மட்டுமல்ல அக்கலைகளில் அக்கறைகொண்ட தமிழ் இரசிகர்களுக்கும்  கவலையே கொடுத்தது. ஈழத்து த்திரைப்பட வளர்ச்சிக்கு முட்டுக்கடையாக விளங்கியது என்னவெனில் இந்தியத்தமிழ் திரைப்படத் துறையின் அசுரவளர்ச்சி என்று கூறி நாம் நழுவுதல் நியாயமுமாகாது. ஏனெனில் அவர்களின் வளர்ச்சிக்குக் காரணம் அவர்களின் திரைப்படத்தினை கண்டுகளிக்க உலகம் வாழ் தமிழர் அனைவருக்கும் வாய்ப்புக்கள் கிடைத்தன. எனவே அதிக இரசிகர்களை இந்தியச் சினிமா உலகம் சம்பாதித்துக் கொண்டது.இதனால் திரைப்பட துறையினருக்கு அத்துறையினால் அதிக இலாபம் கிடைத்தது.எனவே அத் திரையுலகம் வளர்ச்சிகண்டது.

ஆனால்,ஈழத்து திரைப்படம் இலங்கை என்ற சிறு வட்டத்துள்ளே  அன்று சுழன்றதாலும்,அதிலும் ஈழம் வாழ் தமிழரிலும் குறிப்பிட்ட ஒருசில  பகுதியினரே பார்க்க முன்வந்தந்ததாலும் அத்துறைக்கும் இந்தியத் திரைப்படத் துறைக்கும் இடையில் பாரிய இடைவெளி வளர்ந்துகொண்டே இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

இருந்தாலும் இன்று உலகம் முழுவதும், ஈழத்தமிழர்  பரந்துவாழும் நிலையில், நவீன தொழிநுட்ப வசதிகள் கையில் கிடைக்கக் கூடிய வாய்ப்பினால் ஈழத்தவர்  திரையுலகம்  தரமான திரைப்படங்களை ஈழத்து உணர்வுகளுடன் வெளியிட்டுக்கொண்டிருப்பது  ஈழத்து திரைப்பட வரலாற்றில் நல் எதிர்காலம் நோக்கிய பெரும்  சாதனையாகும்.

இவற்றில் கனடாவிலிருந்து கலைஞர் திவ்வியராஜன், டென்மார்க்கிலிருந்து கலைஞர் சண்.சுப்பிரமணியம் அவர்களது தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் குறிப்பிடக்கூடியவை.

ஈழத்தமிழர் அனுபவித்த,அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்னல்கள் கணக்கில் அடங்காதவை. அவைகள் திரைவடிவில் உலகத்தின்முன் வெளிக்கொணரப்படல் வேண்டும்.

 தவித்து வாழும் தமிழரை ஏமாற்றி தவிச்ச முயலடிக்கும் கூட்டங்களும் நம் மத்தியில் வளராமல் இல்லை. மக்களுக்கு அவர்களின் போலி முகத்திரைகளை கிழித்துக்காட்டி   உண்மை நிலைகளை எடுத்துச்சொல்லும் ஊடகமாக ஈழத்து திரைத்துறை வளரவேண்டும்.

இந்நிலையில்   மேலும்  பல திரைப்படக் கலைஞர்கள் நம் மத்தியில் உதயமாக வேண்டும். மேலும் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகட்டும் . வாழ்த்துகள்

பார்வை:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment