ஆன்மீகம்-கர்மம்/ தர்மம் /வினை/அறம்


வேறு ஒரு கோணத்தில் :கர்மமும் தர்மமும்
[ முன் வினையும்  அற முறையும் ]
[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
By:Kandiah Thillaivinayagalingam]

"எனைப் பகை உற்றாரும் உய்வர்; வினைப் பகை
வீயாது, பின் சென்று, அடும்."-   திருக்குறள்

[ஒருவர் செய்த தீ வினைப் பகைமைப் பலனிலிருந்து ஒருபோதும் தப்பிக்கவே முடியாது. அது அழியாது நின்று அவரைப் பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும்.]

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" -ஔவையார். கொன்றை வேந்தன்:

["இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்குவைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை.முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது
கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது.அது அவரை  இந்த பிறப்பிலேயே பிற்பாடு காய்ச்சித் துன்புறுத்தும் என்பதே அவர் கருத்து.அது மட்டும் அல்ல ஔவையார் கருதும் அதுவே.இது தான் எனது அபிப்பிராயமும் நம்பிக்கையும்.குறைகளைச் சுட்டினால் நிறை செய்ய இயலும்]
என் செய லாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செய லேயென்று உணரப்பெற்றேன் இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனமே வந்து மூண்டதுவே "- பட்டினத்தார்

[இந்த பாடல் அடிகளை கழுவேற்றும் பொது தன வினையை நொந்தது பாடிய பாடல்.அவர் முன் வினைப்  பயன் தான் தன்னை இப்படி வருத்திக் கொண்டு இருக்கிறது என நம்பினார் ] 


ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன்[விளைவு ] கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கர்மா என்ற சொல், 'செய்' என்று பொருள்படும் 'க்ரு' என்ற வடமொழிச் சொல்லின் அடிப்படையில் உருவானது. அது போலவே தர்மம் என்பதை சமுதாயத்தில் ஒருவருடைய பங்கை வைத்து விளக்கமுடியும் அதாவது மனிதர்களைப் பொறுத்தவரை தர்மம் என்றால் சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும்.தர்மம் என்று இந்து சமயத்தில் பொதுவாக சொல்லப்படுதலுக்கு, தமிழில் அறம் என்று வழங்கப்படுகிறது.

உதாரணமாக ,ஒரு பிச்சை காரனாக இருந்தாலும் வாழும் காலத்தில் நல்ல  கர்மாக்களை சேர்க்க வேண்டின்,நீ நல்லவனாக இருக்கவேண்டும் .நாம் செய்யும் கர்மாக்களே நம் தலை எழுத்தாக மாறுகின்றது.நம் செயல்களின் மூலம், நம்முடைய அதிர்ஷ்டம் / துரதிருஷ்டம் உருவாகிறது.நம் செயல்களுக்கு எப்பொழுதும் நாமே காரணம்.

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
என்கிறது யஜுர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5

கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது.

கர்மா என்பது ஒரு சிறு காலத்தில் பலனளிக்காது ,அது அடுத்த பிறவிக்கும் தொடரும்.

நல்ல  வாழ்வு / வாய்ப்பு  வருமாயின் நீ நல்ல கர்மா வைத்திருக்கிறாய் எனவும் அது போல் ஒரு கூடாத   வாழ்வு / வாய்ப்பு  வருமாயின் நீ கூடாத  கர்மா வைத்திருக்கிறாய் எனவும்   பொருள்படும் .

ஒரு இந்திய பழ மொழி உண்டு .அது சொல்வது :-

" நீ வளர்ந்ததும் திருமணம் செய் .குடும்பத்தவனாக மாறியதும் பணம் சேர் .முதுமை அடைந்ததும் ஞானத்தை வளர்த்து அடுத்த பிறவிக்கான கர்மாவை சேர்த்துக்கொள்." 

இது ஒரு "நீண்ட கால வைப்பு" போல தோன்றவில்லையா ? 

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்" எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே."
(புறநானூறு : பாடல் : 134)

[ஆய் அண்டிரனின் கைவண்மை மறுமை நோக்கிச் செய்யப்பட்ட அறமன்று என்றும் அப்படி மறுமைநோக்கிச் செய்யப்படும் ஈகை அறம் அறத்தை விலைகூறி விற்கும் வணிகத்தை ஒத்தது என்றும்முடமோசியார் பாடுகிறார். ]

நமக்கு வேண்டியதெல்லாம், மனதில் உறுதி, வாக்கினிலே இனிமை, நினவு நல்லது. அவ்வளவே.இது தான் எனது கருத்து.உங்கள் கருத்து என்னவோ ?

எமது மக்கள் பொதுவாக கர்மாவில் மிக திவீர நம்பிக்கை உள்ளவர்கள் .அது மட்டும் அல்ல அதை வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் விபரிக்க பயன்படுத்துவார்கள் .உதாரணமாக :

நீ ஏழையாக இருந்தால்- அது உன் கர்மாவால்!
நீ நோயாளியாக இருந்தால்- அது உன் கர்மாவால்!!
நீ நஷ்டம் அடைந்தால் - அது உன் கர்மாவால்!!!

உன்னிடம் உள்ள சுக துக்கங்கள் உன்னைப் பந்தித்துள்ள வினை அல்லது கன்ம மலத்தின் அடையாளம் என்பதே அவர்களின் கருத்து.

ஒருவன் இன்று தீய விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்பதைச் சிலர் 'எல்லாம் அவன் கர்மா' என்று சொல்வதுண்டு. நேற்றைய செயலின் விளைவை இன்று அனுபவிக்கிறான் என்பது பொருள்.  மேலும் தமக்கு ஒவ்வாத கர்மாவை செய்யும் பொழுது பிறர் அதை சுட்டிக்காட்டி எச்சரிக்க பயன்படுத்தும் வார்த்தை தான் “கர்மம் கர்மம்”. இவ்வார்த்தையை கேட்டதும் மனம் தெளிந்து அதிலிருந்து விடுபட்டு நற்கதியை அடைவார்கள் என நம்பியதால்

கர்மா என்பது  காரணமும்[வினையும்]   நிகழ்வும்  (விளைவும் )  சேர்ந்த ஒன்று .நீ "அ" செய்தால் "அ" வரும்.அதாவது நீ  தக்காளி  நட்டு  தண்ணீர்  ஊற்றி பராமரித்தால்   தக்காளி வளரும் .

"நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுவடை செய்வாய்" 

"வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான் "  

பொதுவாக கர்மாவை மூன்று வாயில் ஊடாக உண்டாக்கிறாய் .உடல்,   வாய், மனம் .இதைத்தான் நாம் செய்தல், சொல்லுதல், நினைத்தால் என்கிறோம்.கர்மா என்றால் என்ன என்று  தெரியுமா ? 

நியுட்டன்  விதி சொல்வது போல எந்த ஒரு தாக்குதலுக்கும் ஒரு எதிர் தாக்குதல் உண்டு.அதாவது  ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. ஆகவே விதியினால் வினை விளைகிறது.

7 comments:

  1. மனதில் உறுதி, வாக்கினிலே இனிமை, நினவு நல்லது. அவ்வளவே.இது தான் எனது கருத்து.
    --இப்படி வாழ்ந்து பாருங்கள்.நன்மையே நடக்கும்.

    ReplyDelete
  2. ஒரு சில மனிதர்கள் செய்யும் தவறுகள் எம் முன்னாலேயே அவர்கள் தண்டனை அடைவதை பார்த்திருக்கிறோம்.ஆனால் தவறுவிடும் பலர் சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்துகொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம்.ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, February 15, 2013

      மனுஸ்மிருதி என்பது இந்தியாவின் பண்டைய சமூக அமைப்பின் எழுதப்பட்ட அரசியல் சட்டம்.ஆனால் அது ஸ்மிருதிதான். அது ஸ்ருதி அல்ல.ஸ்ருதி என்பது இயற்றப்படாதது, அல்லது எல்லாக் காலத்துக்கும் பொருந்துவது. ஸ்மிருதி என்பது ஒரு காலத்துக்காக மனிதரால் எழுதப்பட்டது. அந்த காலத்தின் தேவையை பொறுத்து எழுதப்பட்டது .அவ்வளவுதான் .அத்துடன் பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்காகவும் வந்தது தான் இந்த ‘மனு தர்மம்’என்ற சூழ்ச்சி

      ஏற்கனவே செய்த பிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு ‘மனு தர்மம்’ கூறும் தத்துவம் இப்படி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ?

      இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்று கூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான் அந்த தத்துவம்.

      "தவறுவிடும் பலர் சமுதாயத்தின் மத்தியில் வளர்ந்துகொண்டே செல்கின்றதை நாம் அவதானித்துள்ளோம்.ஆனால் ஆன்மீக வாதிகள் கூறுவது போன்று அவர்களுக்கு அடுத்த பிறவியில் தண்டனை கிடைக்கும் என்று கூறுவது தான் நம்பத்தகுந்ததாக தெரியவில்லை" என்று மனு வேந்தனின் கேள்வி நியாயமானதே .

      ஆமாம் .ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத் தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும். அது தான் தண்டனை. பரிசு கொடுப்பதாக இருந்தாலும் எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்தது என்பதை அவர் உணர வேண்டும்.

      அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோ, தண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாது.இந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப் பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமா? நிச்சயம் தெரியாது! என்ன பாவம் செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமா? அதுவும் தெரியாது.

      ஒருவன் கொலை செய்து விடுகிறான். அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க மாட்டார்கள். அவனே உணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாது; அதில் பயனும் இருக்காது என்று உலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

      அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதா? நான் என்ன செய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும், நீதிக்கும் சரியாக இருக்குமா? ஆகவே இதில் ஒரு சூழ்ச்சி உண்டு. மனுஸ்மிருதி/மனு தர்மம் என்ற பெயரில்?

      நான் என்ன நினைக்கிறேன் என்றால் ....

      துன்பப்படுபவர்களைப் பார்த்து ஊழ்வினையால் துன்பம் அடைகிறார்கள் நாமேன் உதவவேண்டும் என்று நினைப்பவர் எவரும் அவரை துன்பப்படும் மனிதரின் இடத்தில் வைத்து பார்த்து ஒருவேளை அடுத்த பிறவியில்[ஒரு கதைக்காக ] நான் இப்படி இருந்தால் எனக்கும் ஒருவரும் உதவ முன்வரமாட்டார்கள் என்றே நினைத்தால் எவருடைய துன்பத்தையும் முன்வினைப் பயன் என்று ஒதுக்காமல் உதவுவார்கள் என்பதுதான் .

      இப்பிறவியில் நான் செய்ய வேண்டியது என்ன என்பதில் தெளிவு வந்துவிட்டால் மறுபிறவியைப் பற்றி கவலை தேவையே இல்லை.

      நாம் செய்யும் எல்லா காரியங்களுக்கும் / எண்ணும் எண்ணங்களுக்கும் ஒரு விளைவு உண்டு. இதுவே கர்மவினை என்பது. உன்னை எப்படி மற்றவர்கள் நடத்துகிறார்களோ அது அவர்களின் கர்மா .நீ எப்படி அவர்களை நடத்துகிறாயோ அது உனது கர்மா. இப்ப பலன் தரும் இதைத்தான் நானும் சரி என நம்புகிறேன் .

      நாம் விதைத்ததை நாம் அறுவடை செய்கிறோம்
      எது எம்மை சுற்றிப் போகிறதோ அதுவே எம்மை சுற்றி வருகிறது
      நல்லது நல்லதையே ஏற்படுத்தும்

      இப்ப பலன் தரும் இதைத்தான் நானும் சரி என நம்புகிறேன்

      என்னைப் பொறுத்த வரையில் கர்மாவைப் பற்றிய அழுத்தமான கருத்து என்ன வென்றால் இது உனது முன் காலத்தை[முன் பிறப்பை ] வைத்து தீர்மானிக்கவில்லை .அது போல வரும் காலத்தை[மறு பிறப்பை ] குறி கூறவில்லை.அது இப்ப என்னத்தை நீ செய்கிறாய் என்பதன் பலனே.

      நீ ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்றால் -இப்பவே மகிழ்ச்சியாய் இரு.
      நல்லதை மற்றவர்களுக்கு -இப்பவே செய் .
      அன்பாயிரு,சிரித்திரு ,சூழ் நிலைக்கு ஏற்ற நல்ல செயலை இப்பவே செய் .
      நீ விரும்பும் வாழ்வு வழி உன் வசமே இப்பவே உள்ளது .

      Delete
  3. இந்த நாகரிக உலகில் ஒருவன்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கும்பொழுது அவன் சிலவேளை அந்தக் குற்றத்தைப் புரிந்திருக்கமாட்டனோ என்று சந்தேகப் பட்டாலே அவனை விடுதலை செய்து விடுவர்.
    ஆனால், கர்ம விதிப்படி, எமக்குத் தெரியவே தெரியாத, யாரோ, எதுவோ, என்னவோ, ஒரு நுண்ணியதோ, பெரியதோ, பகுத்தறிவு உள்ளதோ, இல்லாததோ ஆகிய ஒன்று, நமக்குக் கண் காணாத அண்டத்தில் எதோ ஒரு கிரகத்தில், ஒரு மூலையில் வாழ்ந்தபோது பாவம் ஒன்றைச் செய்த காரணத்தினால், அது பல வருடங்களுக்குப் பின்னர் நானாக இந்தப் பூவுலகிலே பிறந்த பொழுது எனக்கு அதற்கான தணடனையை வழங்குவது எந்த விதத்தில் ஐயா ஞாயம்? நான் செய்யும் பிழைகளுக்கு இந்தப் பிறவியில் எனக்குத் தண்டனை இல்லை என்றால், அது வேறு எதுக்கோதான் போய்ச் சேரும் என்றால், என்பாட்டில் எனக்குச் சந்தோசம் தரக்கூடிய நாலைந்து டசன் கொள்ளைகள், கொலைகள், கற்பழிப்புகளைச் செய்துபோட்டுப் போய்க்கொண்டே இருப்பேனே! எனது அடுத்த பிறப்பு அமேசன் நதி இருண்ட காட்டில், ஆலமரத்தின் ஒரு வேரின் கீழே இருக்கும் ஒரு நட்டுவாக்காலியாக இருக்கவும் கூடும்; அந்தத் திருவாளர் நட்டுவாக்காலியார் நலமே இருக்கவேண்டும் என்று நான் ஏன் சார் கவலைப் பட வேண்டும்?
    ஒருவன் செய்த பாவச் செயலுக்கு இப்பிறப்பில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது ஞாயம். கிடைக்குமோ, கிடைக்காதோ; அவனது ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் அழுக்கு அவனுள்ளம் எதிர்மறை எண்ணங்களால் செறிவு அடைந்து அவனை இன்னல்களுக்குள் இழுத்துச் செய்யலாம் என்பது உண்மை!

    ReplyDelete
  4. இந்த நாகரிக உலகில் ஒருவன்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கும்பொழுது அவன் சிலவேளை அந்தக் குற்றத்தைப் புரிந்திருக்கமாட்டனோ என்று சந்தேகப் பட்டாலே அவனை விடுதலை செய்து விடுவர்.
    ஆனால், கர்ம விதிப்படி, எமக்குத் தெரியவே தெரியாத, யாரோ, எதுவோ, என்னவோ, ஒரு நுண்ணியதோ, பெரியதோ, பகுத்தறிவு உள்ளதோ, இல்லாததோ ஆகிய ஒன்று, நமக்குக் கண் காணாத அண்டத்தில் எதோ ஒரு கிரகத்தில், ஒரு மூலையில் வாழ்ந்தபோது பாவம் ஒன்றைச் செய்த காரணத்தினால், அது பல வருடங்களுக்குப் பின்னர் நானாக இந்தப் பூவுலகிலே பிறந்த பொழுது எனக்கு அதற்கான தணடனையை வழங்குவது எந்த விதத்தில் ஐயா ஞாயம்? நான் செய்யும் பிழைகளுக்கு இந்தப் பிறவியில் எனக்குத் தண்டனை இல்லை என்றால், அது வேறு எதுக்கோதான் போய்ச் சேரும் என்றால், என்பாட்டில் எனக்குச் சந்தோசம் தரக்கூடிய நாலைந்து டசன் கொள்ளைகள், கொலைகள், கற்பழிப்புகளைச் செய்துபோட்டுப் போய்க்கொண்டே இருப்பேனே! எனது அடுத்த பிறப்பு அமேசன் நதி இருண்ட காட்டில், ஆலமரத்தின் ஒரு வேரின் கீழே இருக்கும் ஒரு நட்டுவாக்காலியாக இருக்கவும் கூடும்; அந்தத் திருவாளர் நட்டுவாக்காலியார் நலமே இருக்கவேண்டும் என்று நான் ஏன் சார் கவலைப் பட வேண்டும்?
    ஒருவன் செய்த பாவச் செயலுக்கு இப்பிறப்பில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது ஞாயம். கிடைக்குமோ, கிடைக்காதோ; அவனது ஆழ்மனத்தில் உறைந்திருக்கும் அழுக்கு அவனுள்ளம் எதிர்மறை எண்ணங்களால் செறிவு அடைந்து அவனை இன்னல்களுக்குள் இழுத்துச் செய்யலாம் என்பது உண்மை!

    ReplyDelete
  5. Excellent, insightful. Thanks.

    ReplyDelete