உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 10 [ முடிவு ]

 

[The belief and science of the sleep]


நாங்கள் விலங்குகளின் உறக்கத்தைப்பற்றி நன்றாக அறிந்தால், உறக்கத்தின் முக்கிய அம்சங்களை நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்று ஆய்வுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான பண்பு, கனவுகளுடன் தொடர்புடைய விரைவான கண் இயக்க [REM] உறக்கம் ஆகும். விரைவான கண் இயக்க கட்டத்தில்,  மூளைச் செயல்பாட்டிலும் மற்றும் அதிகரித்த இதயத் துடிப்பு மாறுபாடுகளிலும் மனிதர்களும் விலங்குகளும் ஒரே அளவைக் காண்பிக்கின்றன [Both humans and all other mammals display the same level of brain activity and increased heart rate variability during REM sleep]. உதாரணமாக, நாய், தனது 'வி க இ' [REM] உறக்கத்தில், பெரும்பாலும் குரைக்கின்றன அல்லது தனது கால்களை இழுக்கின்றன, மிகச் சிறிய முட்டையிட்டு பாலூட்டி வகையைச் சேர்ந்த 'பிளாட்டிபஸ்' [platypuses] என்னும் இந்த உயிரினங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தான் எப்படி ஓடுடைய கணுக்காலிகள் (Crustaceans  /  நண்டு, இறால், கல் இறால் போன்ற உயிரினங்கள்)  இரையை பிடித்து கொல்கின்றன என்பதை போன்று [imitating the process where they kill crustacean prey] உறக்கத்தில் போலியாக செய்கின்றன. அப்படியே மனிதர்கள் பெரும்பாலும் உறக்கத்தில் பேசுகிறார்கள்.

 

பொதுவாக பாலூட்டிகள் அனைத்தும் ஒரே மாதிரியான, அடிப்படை உறக்க சுழற்சியை [fundamental sleep cycle] கொண்டுள்ளன. உதாரணமாக, ஒரே வகையான கண் இயக்கம், முடக்கம் மற்றும் இழுத்தல் நடவடிக்கைகளை [same kind of eye movement, paralysis and twitching] 'வி க இ' [REM] உறக்க கட்டத்தில் காணலாம். 'வி க இ' [REM] உறக்க கட்டத்தில் விலங்குகள், மனிதர்கள் போல், கனவு காண்கின்றனவா என்று திட்டவட்டமாக விஞ்ஞானிகளுக்கு இன்னும் தெரியாது, ஒருவேளை ஒருபோதும் தெரியாமலும் போகலாம். ஏனென்றால், ஒரு நபர் கனவு காண்கிறார் என்று மற்றோரு நபர் எப்படி நிரூபிக்க முடியும் ?, என்றாலும் 'விகஇ' [REM] உறக்க கட்டத்தில், மூளை அலையின் அமைப்பு, மனிதர்களைப் போன்றது என்பது இன்று விஞ்ஞானிகளுக்கு தெரியும். ஆகவே அவைகளின் உறக்க அசைவுகளில் இருந்தும், மூளை அலையின் ஒற்றுமையில் இருந்தும் விலங்குகள் கனவுகள் காண்கின்றன என்பதை ஊகிக்கமுடிகிறது.

2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சங்க இலக்கியமும் விலங்குகளின் கனவுகள் பற்றி கூறுகின்றன. உதாரணமாக அழகிய மரத்தின் நிழலில் உறங்கும் கவரி மான், பரந்து விளங்கும் அருவியையும் தேனையும் கனவில் காணுகிறது என பதிற்றுப்பத்து ,11 இல், குமட்டூர்க் கண்ணனார் :"கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்" என்று பாடுகிறார். அதே போல  அகநானுறு .170 இல், மதுரை வெண்ணா கனார், கடலில் மேயும் சிறுகாக்கை களைப்போடு இளைப்பாறுகையில் தாழம்பூ மடலில் தன் பெண்ணோடு அமர்ந்துகொண்டு, வெள்ளை இறால் மீன்களை உண்பது போல் கனாக் காணும் என "கடல் சிறு காக்கை காமர் பெடை யொடு.கோட்டு மீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்,வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து" என்று பாடுகிறார். மேலும்

கலித்தொகை 49 இல், கபிலர் 'வளைந்த வரிக்கோடுகளை உடைய வரிப்புலியைத் தாக்கி வென்ற வருத்தத்துடன் உயர்ந்த மலைமேல் உறங்கும் யானையானது, நல்ல நினைவோடு தான் செய்த செயல் தன் மனத்தில் இருப்பதால் கனவில் அதனைக் கண்டு, புதிதாக மலர்ந்திருக்கும் வேங்கை மரத்தைப் பார்த்துப், புலி என்று எண்ணி, அதனை வளைத்து முறுக்கி ஒடித்துப் போட்டுவிட்டு, சினம் தணிந்த பின்னர், நாணி, அந்த மரத்தைப் பார்க்கக்  வெட்கப் பட்டது என

 

"கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு

நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை,

நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்,

கனவில் கண்டு, கதுமென வெரீஇ,

புதுவதாக மலர்ந்த வேங்கையை   

அது’ என உணர்ந்து, அதன் அணி நலம் முருக்கி,

பேணா முன்பின் தன் சினம் தணிந்து, அம் மரம்

காணும் பொழுதின் நோக்கல் செல்லாது,

நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட"

 

என்று பாடுகிறார். வழுவழுப்பான இலைகளையுடைய வாழைமரத்தின் வளைந்த பெரிய வாழைத்தாரில் உள்ள கனிந்த மிக இனிமையான வாழைப்பழங்களும்,மலைச்சாரலில் உள்ள பலாப்பழத்தின் சுவை, அதனை உண்பவர்களை மேலும் உண்ண முடியாதபடி திகட்டச்செய்யும். அத்தகைய பலாச்சுளைளும், பழம்பெரும் பாறையின் இடையில் உள்ள நீர்த்தேக்கத்தில் விழுந்து, ஊறி, அந்த நீரினை மதுவாக மாற்றி இருக்கும், அந்த நீரினை மதுவென அறியாது உண்ட ஒரு ஆண் குரங்கானது, அருகில் உள்ள மிளகுக்கொடிகள் படர்ந்த சந்தன மரத்தில் ஏறாமல், உதிர்ந்த நறுமணமிக்க மலர்களால் ஆன மலர்ப்படுக்கையில் படுத்து மகிழ்ந்து கண்ணுறங்கிற்று என அகநானூறு பாடல் 2 , அழகாக

 

கோழிலை வாழைக் கோள் முதிர் பெருங் குலை

ஊழுறு தீம் கனி, உண்ணுநர்த் தடுத்த

சாரற் பலவின் சுளையொடு, ஊழ் படு

பாறை நெடுஞ் சுனை, விளைந்த தேறல்

அறியாது உண்ட கடுவன் அயலது 

கறி வளர் சாந்தம் ஏறல்செல்லாது,

நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும்

 

என்று, குரங்கும் உறங்கும் சூழலை தேர்ந்து எடுத்ததை காரணத்துடன் விளக்குகிறது. ஆகவே மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளும் கனவு காண்கின்றன, படுக்கும் சூழலை தேர்ந்து எடுக்கின்றன இப்படி பலவற்றை சங்க இலக்கியமும் எமக்கு எடுத்து காட்டுகின்றன. இறுதியாக சோடிகளுக்கான [COUPLES] சிறந்த படுக்கும் நிலையை கவனத்தில் கொண்டால், அங்கு அதிகமாக நாலு வகை நிலைகளை காணுகிறோம். அவை, முதுகுடன் முதுகு [Back to back], அகப்பை [கரண்டி] போல், அதாவது இருவரும் ஒரே பக்கம் பார்த்து கட்டிப்பிடித்து படுப்பது [Spooning], ஒருவரின் நெஞ்சில் மற்றவர் உறங்குதல் [SWEETHEART’S CRADLE] மற்றும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு படுத்தல் [Side by side] ஆகும்.


முதுகுடன் முதுகு படுத்தல் மிகவும் பொதுவான ஒன்றாக காணப்படுகிறது, இங்கு உங்கள் பிட்டம் அல்லது கால்கள் அல்லது இரண்டுமே

மற்றவரை தொடுகின்றன [just your bottoms or feet touching]. இது ஒரு இரவு அமைதியான உறக்கத்தை, ஒருவரை ஒருவர் குழப்பாமல், ஆனால் அதே நேரத்தில், ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டும் உறக்கத்தை அனுபவிக்க ஒரு நல்ல வழி ஆகும். இருவரும் ஒன்றாக சுருண்டு, ஒரு  இழுப்பறைக்குள் அகப்பை மாதிரி [spoons in a drawer], கட்டிலில் படுக்கும், இந்த நிலை, இருவருக்கும் ஒரு இனிய ஆறுதலாக இருப்பதுடன் ஒருவரின் பின்பக்கம் முழுவது மற்றவர் தன் முன்பக்கத்தால் தொட்டுக் கொண்டும் தன் கையால் கட்டிப் பிடித்துக்கொண்டும் படுப்பது குளிர்காலத்ல் ஒருவருக்கு ஒருவர் சூடுபடுத்தவும் பெயர் பெற்றது

 

ஒருவரின் நெஞ்சில் மற்றவர் தலை வைத்து படுப்பதில், ஒருவர் முதுகிலும், தலை வைத்து படுக்கும் மற்றவர், பக்கவாட்டிலும் படுகின்றனர். இவை திரைப் படங்களில் பெருவாரியாக காட்டினாலும், இங்கு ஒருவர் மல்லாந்து படுப்பதிலும், மற்றவர் திருப்பி படுப்பதிலும் விருப்பமானவர்கள் என்றால் மட்டுமே இது சாத்தியமாகும். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு படுக்கும் நான்காம் முறை, இருவரும் உறக்கம் கொள்ளவும், அதில் தொடர்ந்து நீடிக்கவும் ஒரு  மிகவும் சிறந்த வசதியான முறையாகும். இந்த நிலை, குறிப்பாக  வெப்பமான கோடைகாலத்தில் வசதியாக இருக்கும். இங்கு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, ஆனால் சிறு இடைவெளியுடன் படுப்பதால், மற்றவருக்கு இடைஞ்சல் ஏதும் இல்லாமல் நீங்கள் அசையவும் முடியும். இவ்வாறாக உறக்கம் என்பது எல்லா உயிர்களுக்கும் தேவையான ஒன்று. அதிலும் பகல் முழுவதும் வேலை செய்து களைத்து இரவில் உறங்கும் மனிதன் தனது உறக்கத்தை சரியான முறையில் கவனத்தில் கொண்டு செயல் பட்டால் மகிழ்ச்சியாகவும் நோய் நொடி இன்றி, சிறந்த ஆரோக்கியத் துடனும் வாழ முடியும் என்பதில் சந்தேகமில்லை.

 

"மெய் உறக்கம் உறங்கி வருடங்களாகி விட்டன !

பொய் உறக்கம் உறங்கி பொழுது கழிகின்றது !

தொலைக்காட்சி வந்து தூக்கம் தொலைந்தது

தொல்லைக்காட்சியானது தொலைக்காட்சி !

தொடர்களுக்கு அடிமையாகி விட்டனர் நாளும்

தொடர்கின்றது இரவில் நெடுநேர விழிப்பு !

தொடர்களில் எதிர்மறை சிந்தனை போதிப்பு

தொலைந்து விடுகிறது நிம்மதியான உறக்கம் !

கெட்ட சிந்தனை நாளும் விதைக்கின்றனர்

கேட்ட காரணத்தால் போனது உறக்கம் !

இரவு உறக்கத்தை இல்லாமல் ஆக்கியது

இளசுகளோ கைபேசியில் மூழ்கியது !

அளவிற்கு மிஞ்சினால் அமுதம் மட்டுமல்ல

அலைபேசியும் நஞ்சு உணர்ந்திட வேண்டும் !

கணினியும் கண்களுக்கு இன்று கேடானது

கண்ட நேரம் நேரத்தை விழுங்கி விடுகிறது !

நாளும் அறிவியல் கண்டுபிடிப்பால்

நன்மையை விட தீமை அதிகமானது !

அன்று இல்லை தூக்கம் இன்மை

இன்று உள்ளது தூக்கம் இன்மை !

அன்று அதிகாலை எழுந்தனர் பலரும்

அதிகாலை எழுவது இல்லை என்றானது !

கோழித் தூக்கம் மனிதத் தூக்கம் ஆனது

கண்கள் காணவில்லை மெய் உறக்கம்!"

 

[மெய் உறக்கம்! கவிஞர் இரா .இரவி !

- ஜூலை 30, 2020]

 

நன்றி,

அன்புடன்

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

 ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக, Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01:

முற்றிற்று

2 comments:

 1. MANUVENTHAN SELLATHURAIFriday, October 16, 2020

  அப்பாடா ! உறக்கம் மனிதனின் வெறும் மயக்கம் என்று தூக்கி ப் போட்டுவிடு அடுத்த வேலைக்கு அலையும் இன்றய மனிதர்கள் மத்தியில் ,உறக்கத்திலும் இத்தனை நன்மைகள், கனவுகள், உறக்கத்தின் முறைகள்,மேலும் விலங்குகள் உறக்கம், அத்துடன் உறக்கம் தொடர்பான சங்க கால தமிழ் இலக்கிய ப்பாடல்கள் என ஒரு பெரும் ஆய்வுக்கடடுரையினை வழங்கிய எழுத்தாளர் அவர்கட்க்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 2. உருத்திரசிங்கம் நாகேஸ்வரிTuesday, October 27, 2020

  உருத்திரசிங்கம் நாகேஸ்வரி
  இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் பல வகையான காரணங்களினால் தங்கள் உறக்கத்தை தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.தொலைத்த இடம் ஒன்றாகவும் தேடும் இடம் ஒன்றாகவும் இருக்கிறது.தொலைத்து விட்ட உறக்கத்தை சரி செய்யும் முகமாக தொடர்ந்து வந்த இந்த தொடர் பதிவை தவறாமல் வாசித்து பயன்பெற்றவர்களில் நானும் ஒருவர்.இந்தப் பகுதியில் விலங்குகளின் உறக்கம் கனவு பற்றி சங்க கால இலக்கியங்களை உதாரணம் காட்டி சிறப்பாக அமைத்து உள்ளார் கட்டுரை ஆசிரியர்.தொடந்தும் இது போன்ற தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் வாழ்த்துக்கள் 🌺 நன்றிகள் 🌺

  ReplyDelete