பெண்ணிடம் இரகசியத்தை சொல்லக் கூடாது?

பெண்ணிடம் இரகசியத்தை சொல்லக் கூடாது என்பது காலம் காலமாகக் கூறப்பட்டு வருகிறது. இது உண்மையா?  அல்லது பெண்களின் மீது சுமத்தப்பட்டுள்ள வீண் பழியா என ஒரு சிறு அலசல் இது.

வியாசரால் எழுதப்பட பாரதக்கதையில் (இக்கதை  அவரது கற்பனையா,இல்லை ஆண்டவர்களை வைத்து,அவர்களினத்தை  மகிழ்விக்க   கற்பனைகள் புகுத்திச் சுவைப்படுத்தப்பட்டதா  என்பது வேறுகதை] பாரதப்போரில் அம்புபட்டு வீழ்ந்த கர்ணனை   குந்திதேவி மடி மீது போட்டு 'மகனே' என்று கதறுகிறாள். பிறகுதான் அர்சுனன் முதல் ஐவருக்கும்  இறந்து போனது தங்களுடைய அண்ணனே என்ற இரகசியம் தெரிந்து வருந்துகிறார்களாம்.  , இந்த இரகசியத்தினை இத்தனை வருடகாலம் காத்த குந்தியின் தைரியத்தினை கண்ட தர்மர் இப்படியே பெண்கள் தொடர்ந்தால் விபரீதம் என்று , அது முதல் ''பெண்களிடம் இரகசியம் நிற்காமல் போகட்டும்'' என்று சபித்தாராம். இதனால் கிட்டத்தட்ட  கிமு 5ஆம் நூற்றாண்டுலிருந்து இன்றும் பெண்கள் இரகசியத்தினை பேணமுடியாமல்  இருக்கிறார்களாம்.

எப்படியிருக்கிறது கதை. இக்கருத்தினை இறுக்கப் பிடித்து, பெண்களிடம் இரகசியம் தங்காது என  நியாயப்படுத்திகொள்வோர் பலர். [இவ்வளவு சக்தி படைத்த தருமரால் குந்திக்கு கர்ணன் என்றொரு மகன் இருப்பதனை அறிய முடியாமல் போனதும் ஆச்சரியமே.]

 

அன்றய காலத்திலிருந்து, கிட்ட தட்ட 50 வருடங்களின்முன் வரையில் பெண்களுக்கென மறுக்கப்படடவைகளில் கல்வியும் ஒன்று. அதனால் ஆண்கள் படித்து வேலைக்குச் செல்ல  ,பெண்கள் வீட்டிலிலேயே இருந்தனர். அவர்கள் வீடுகளும் இன்றுபோல் பெரிய பங்களா போன்று இருக்கவில்லை. குடும்பத்தில் பிள்ளைகளும் 8,10 என இருந்தனர். பிள்ளைகளும் வீட்டு வேலைகளில் கை கொடுத்தனர்.அத்துடன் கூட்டுக் குடும்பமாகவே வசித்தனர். அதனால் வீட்டில் வேலைகள் மிகவும் குறைவாகவே இருந்தது. இக்காலம் போல் பொழுதுபோக்கு சாதனங்கள் அன்று இருக்கவில்லை. எனவே அயலில் குடியிருப்போருடனும், வீட்டுக்கு வருவோரிடமும் பேசுவதுதானே ஒரே ஒரு பொழுதுபோக்கு. பேசுவதற்கும் புதினம் வேண்டுமே.எனவே எல்லாவற்றையும் வெளியில் கொட்டுவதைத்  தவிர அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. கொட்டினார்கள்.

 

இச்சந்தர்பத்தினை ஆண்களும் பயன்படுத்தி பெண்களிடம் இரகசியம் தங்காது என்ற  பழைய இந்த வரிகளை மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்தி வளர்த்துக் கொண்டார்கள். ஆனால் ஆண்கள் குடித்துவிட்டு எல்லாவற்றினையும் வெளியில் புலம்புவது மட்டும் ஏட்டுக்கு வருவதற்கு, அதை எடுத்துவரும் தைரியம் பெண்களுக்கு அன்று வரவும் இல்லை.

 

ஆனால் இன்று பெண்கள் கல்விமூலம்  சகலத்துறைகளிலும் காலடி வைத்து,வளர்ந்து  வேலைக்கு செல்வதுடன் ,பிள்ளைகள்,வீட்டு வேலைகள் என பெரும் சுமைகளுடன் பெற்ற பிள்ளைகளுடனோ,அல்லது கணவனுடனோ பேச நேரமில்லாது அவர்கள் இன்று வாழ்கிறார்கள். அப்படி வெளியில் பேச  நேரம் கிடைத்தாலும் அவர்கள் பெரும்பாலும் தன் வீட்டு இரகசியத்தை அடுத்தவரிடம் சொல்ல வேண்டிய அவசியமோ தேவையோ இன்றய பெண்களிடம் இருக்கவில்லை.

பெண்களில் இன்னொரு பகுதியினர் தொலைக்காட்சித்  தொடர்களோடும், சமூகவலைத்தளங்களூடும்  தமது பொழுதுபோக்கினை மேற்கொள்வதாலும் , அவை தொடர்பாகவே பேசும்  நிலை  நிறைய இருப்பதினாலும்  ,  தம் வீட்டு புதினங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிலை அவர்களை நெருங்கவே சந்தர்ப்பம் இல்லாது போய்விட்டது.

 எனவே அன்று கல்வி மறுக்கப்பட்டதனால்  அமைந்த   சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகளை வைத்து பேசப்பட்ட 'பெண்கள் இரகசியம் பேண மாட்டார்கள்' என்பது  இன்று முற்றிலும் பொய்யாகிவிட்டது என்பதே உண்மை.

👉ஆக்கம்:செ.மனுவேந்தன் 

1 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, October 31, 2020

  பிரித்தானியாவில் நடை பெற்ற ஒரு ஆய்வின் படி, இரண்டு நாளிற்குள், யாரோ ஒருவருக்கு , அந்த ரகசியத்தை, ரகசியமாக கொட்டி விடுவார்கள். இது 17 September 2009
  Women 'cannot keep a secret for longer than 47 hours'www.telegraph.co.uk › யிலும்
  Women really can't keep a secret: Gossip will be shared in just ...www.dailymail.co.uk
  யிலும் வெளியிடப் பட்டுள்ளது. முழு விபரமும் அதில் பார்க்கலாம்.

  [https://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/6199822/Women-cannot-keep-a-secret-for-longer-than-47-hours.html
  &
  https://www.dailymail.co.uk/femail/article-1213855/Women-really-secret-Gossip-shared-just-47-hours.html]


  ReplyDelete