தமிழ் சினிமாவில் தொடரும் கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள்

  

தமிழ் சினிமாவில் கதைக்குப் பஞ்சம் எனப் பல இயக்குநர்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். சிலரோ, அயல் மொழிகளில் வெளியான வெற்றிப் படங்களின் கதைகளைத் தழுவி திரைக்கதை அமைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் வருகின்றனர். இன்னும் சிலர் இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, கொரியன், இரானியன் என எல்லா மொழிகளிலிருந்தும் முறைப்படி உரிமை வாங்கி ரீமேக் செய்தும் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலுக்கிடையில்தான் 'இது என் கதை', 'இது நான் ஒரு இதழில் எழுதிய தொடர்கதை' என்ற கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகளும் பரவலாக அதிகரித்து வருகின்றன.


'மான்ஸ்டர்'


எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மான்ஸ்டர்' திரைப்படத்தின் கதை தன்னுடையது எனப் பத்திரிகையாளர் லதானந்த் குற்றம் சாட்டினார். . ஆனால், இயக்குநர் நெல்சனோ, ''ஒரு எலி வீட்டில் செய்யும் அட்டாசத்தைப் பார்த்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். தவிர, நான் லதானந்த் சொல்லும் வார இதழையோ, அதில் இடம்பெற்ற அந்தக் கதையையோ படித்தது இல்லை" என, லதானந்த்தின் குற்றச்சாட்டை மறுத்தியிருக்கிறார்.


பயணம்


இப்படத்தின் கதை தன்னுடைய க்ரைம் கதையொன்றின் அதே சாராம்சத்தில் 'பயணம்' படத்தின் கதையும் உள்ளது என அந்தப் படம் வெளியானபோதே எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் குற்றசாட்டினார். என்றாலும், அப்போது பெரிதாக்கப்படாத அந்தச் செய்தி, அந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான மாநில விருது கிடைத்தபோது விஸ்வரூபம் எடுத்தது.


விருது அறிவிக்கப்பட்டவுடன், தமிழக அரசுக்குப் பிரபாகர் ஒரு கடிதம் எழுதினார். அதில், "சிறந்த படத்துக்கான விருது வாங்கவுள்ள 'பயணம்' திரைப்படத்தின் கதை 'இது இந்தியப் படை' என்ற என் புதினத்தின் கதையைப் போலவே உள்ளது. அந்தப் படம் வந்த சமயத்தில் ராதா மோகனுக்கு அந்த நாவலை அனுப்பி வைத்தேன். அவரும் அதைப் படித்துவிட்டு இரண்டும் ஒரே கதை என ஒப்புக்கொண்டார். என்றாலும், அதற்கு எந்த வருத்தமும் அவர் தெரிவிக்கவில்லை. அதனால், நீங்கள் விருது வழங்கும் உங்கள் முடிவை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.


மெட்ராஸ்

 


இயக்குநர் பா.இரஞ்சித், அடிமைப்படுத்தப்படும் மக்களின் அரசியலைச் பேசும்விதமாக 'மெட்ராஸ்' படத்தை உருவாக்கினார். வடசென்னையின் குடிசைமாற்றுவாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் மக்கள், அவர்களின் நட்பு, காதல், துரோகம், கோபம், வலி, போராட்டம், அரசியல் என எல்லாவற்றையும் தெளிவாகப் பிற மக்களுக்கு எடுத்துச் சொன்ன படம் இது.

இந்தப் படத்தின் கதை, தான் எழுதிய 'கறுப்பர் நகரம்' கதைதான் எனக் குற்றம்சாட்டினார், இயக்குநர் கோபி நயினார். ஆனால், இந்த சர்ச்சை பல நாள்களுக்கு நீடிக்கவில்லை. இதனால் பல விமர்சனங்களுக்கும் உள்ளானார். தன் தரப்பு நியாயத்தைப் பேச யாரும் முன் வராததால், கோபி நயினாரின் வாதம் கேட்பாரற்றுப்போனது.


கத்தி


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் திரைப்படங்கள் கதைத் திருட்டு குற்றச்சாட்டுக்குள்ளாவது இப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. 'கஜினி', 'கத்தி', 'துப்பாக்கி', 'ஸ்பைடர்', 'சர்கார்' என அவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களின் கதை அவருடையதில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.


சர்கார்

இதுநாள்வரை கதைத் திருட்டுக் குற்றச்சாட்டை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று, அதில் ஓரளவுக்கு வெற்றியும்பெற்ற ஒரே நபர், 'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடுத்த வருண் ராஜேந்திரன் மட்டுமே. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் கதையை ஏற்கெனவே 'செங்கோல்' என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவுசெய்திருந்ததாகத் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார் வருண். பிறகு சங்கம், நீதிமன்றம் எனப் பல தலையீடுகளுக்குப் பிறகு, இரண்டும் ஒரே கதைதான் என்று நிரூபணமானது. 'சர்கார்' படத்தின் டைட்டில் கார்டில் முருகதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையோடு சேர்ந்து 'சர்கார்' படம் வெளியானது.


96

பொதுவாக, காதல் திரைப்படங்களில் ஒரேவிதமான காட்சிகள் இருப்பது இயல்புதான். ஆனால், '96 திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சியமைப்பு தன்னுடைய 'நீ நான்மழை'' இளையராஜா' படத்தின் கதையைப்போல இருக்கிறது என அந்தப் படம் வெளியான பிறகு இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் குற்றம் சாட்டினார்.

ஆனால், பாரதிராஜாவைத் தவிர வேறுயாரும் சுரேஷின் பக்கம் நின்று அவர் தரப்பு வாதத்தைப் பேச முன்வராததால், அந்தப் பிரச்னையும் அப்படியே முடிவுபெறாமல் ஓய்ந்தது.

 

பிகில்’

நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ கூட்டணியில் வெளிவந்த  ‘பிகில்’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா உரிமையில் நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்குக்கு காரணமே இல்லை என்று வழக்கு  தள்ளுபடி செய்யப்பட் டது.

 

இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில் ஒரு வருடத்தில் சுமார் 200  படங்கள் வெளிவருகின்றன. அவற்றுள் பிரபல்யம் அற்ற புது முகங்கள் எடுக்கும் திரைப்படங்கள்  சுமார் 150   வருகின்றன. இங்கே கவனிக்க வேண்டிய கருத்து என்னவெனில் கதைத்திருட்டு என குற்றம் சாட்டப்படுவது அனைத்தும் புகழ் பெற்ற நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் மட்டுமே. இதிலிருந்து குற்றம் சாடுபவர்கள் பெரும்பான்மையினர்   பெருந்தலையுடன் மோதினால்தான் , தங்கள் பெயர் ஊடகங்களில் வரும், அதன்  மூலம் ஒரு வகையான கீர்த்தி  அடையலாம் என எதிர்பார்க்கிறார்கள் என்பது புரிகிறது.

 

இன்னொரு வகையினர் சரியான புரிதல் இல்லாதவர்கள்.

 

அதாவது   , திரையில் ஒரே மாதிரியான திரைக்கதையும்,காட்சிகளும் ,நகர்வுகளும் இருந்தால் மட்டும் என் படத்தினை திருடிவிட்டார் என்று வழக்கு தொடுப்பதில் நியாயம் இருக்கிறது.  உலகில் ஒரே நேரத்தில் பலரிடம் ஒரு கதையின் கரு [idea] உருவாக வாய்ப்பு இருக்கிறது. அதற்காக நான் நினைத்து வைத்திருந்த கதையினை திருடிவிட்டார், எனது மூலக்கருவினை என் நண்பனிடமிருந்து கறந்துவிட்டார்  என்று குற்றம் சாட்டுவது, சமூக வலைத்தளங்களில் புலம்புவது,வாதிடுவது    அர்த்தமற்றது.

 

அத்துடன் வேறுநாடுகளில் திரைப் படங்களின் கதைகளை திருடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் இல்லாமலில்லை. வேற்றுநாட்டுப் படங்கள்  நகலுக்குரிய உரிமம் பெறப்பட்டுத்தான் தமிழில் எடுக்கப்படுகின்றன. வேற்று மொழித் திரைக்கதைகள் எம் மொழிக்கு வந்து சேர்வதால் ,தமிழ் திரைக்கு மேலும் புதுமையான கதைகளுக்கு அவை அத்திவாரமாகலாம். எனவே அவை குறித்தும் நாம் குற்றம்கடிதல் புத்திசாலித்தனமல்ல.

 

எனவே மாறுகின்ற உலகில் ,திரைப்படத் துறையில் அதிபோட்டிகள் காரணமாக  புதிய கதைகள்,புதுமையான காட்சிகள்  இணைத்துக் கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகவே உள்ளது.


அனைத்தையும் ரசிக்க பார்வையாளர்கள் தயாராக இருக்கும்வரை திரைப்படத்துறைக்கு என்றும் வீழ்ச்சியில்லை.


🎥🎥🎥🎥🎥தொகுப்பு:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment