புறநானுற்று மா வீரர்கள்,பகுதி 02:

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
Compiled by: Kandiah Thillaivinayagalingam]

வீரத் தாய்[வீர அன்னையர்]/warrior mothers:    

சங்ககாலச் சமூகம் ஒரு போர்ச் சமூகம்;அதன் ஒட்டு மொத்த இயக்கமும் போரை மையப்படுத்தியே இருந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிறுவியுள்ளன.உதாரணமாக புறநானுறு 76 "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று;இவ் உலகத்து இயற்கை;"என்று அடித்து சொல்கிறது.அதாவது ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை என்கிறது.இப்படி பல சான்றுகள் புறக்கவிதைகளில் மேலே கூறியவாறு ஏராளமாக உள்ளன என்றாலும் கவி பொன்முடியின் இந்தக் கவிதை முதன்மையான ஆதாரம்எனச் சொல்லும் விதமாக அமைந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது."வாளைக் கையில் ஏந்தி போர்க்களத்தில் இருந்து வெற்றியுடன் மீள்வது ஆண்மகனின் கடமை"என்கிறது! 

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"

என முடியும் (புறம் 312) புகழ் பெற்ற அந்தக் கவிதை.ஆண்மகனைப் பெறுவதில் சங்ககாலச் சமூகத்துக்கிருந்த மகிழ்ச்சியையும் அதைவிட அவனை சான்றோன் ஆக்குதலில் இருந்த இரட்டிப்பு மகிழ்ச்சியையும் நாம் இங்கு காண்கிறோம்.சங்ககாலத்தில் சான்றோன் என்பதற்கு வீரன் என்ற பொருளே பொதுவாக இருந்தது. 

ஒரு நாள்,மறக்குடியில் பிறந்து மறக்குடியில் மணம் புரிந்த பெண்பாற் புலவராகிய காவற் பெண்டு அல்லது காதற்பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் அவரின் சிறிய வீட்டின் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு “உன் மகன் எங்கே உள்ளான்” என்று நீ என்னை கேட்கிறாய்.இதோ என் வயிற்றைப் பார்,என தன்  வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது.என் மகனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு புலிக்கும் குகைக்கும் உள்ள தொடர்பைப் போன்றது.என் மகன்,அந்த புலி இப்ப குகையை விட்டு வெளியே போய் விட்டது.அவன் இப்ப தன் நாட்டுக்காக போர்க்களத்தில் இருப்பான்.அங்கு போய்ப் பார் என்று கூறுகிறார்.இதோ அந்த வீரத் தாயின் பாடல்:


"சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல,
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே"
[புறநானுறு 86] 

பழந்தமிழ் மறத்தி ஒருத்தி நாட்டைக் காக்கத் தந்தையைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள்.அவன் வீரச்சாவடைந்தான்.நேற்றுக் கணவனைக் களத்திற்கு அனுப்பினாள்.அவனும் களம் பட்டான்.ஆனாலும் அவள் கலங்கவில்லை.இன்றும் போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என ஓக்கூர் மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் மறத்தி ஒருத்தியின் மாண்பினைப்[சிறப்பை,பெருமையை] படம்பிடித்துக் காட்டுகிறார்.

"கெடுக சிந்தை கடிது இவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல் நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை
யானை எறிந்து களத்து ஒழிந்தன்னே
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெரு நிரை விலக்கி ஆண்டுப்பட்டனனே
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்க என விடுமே."
[புறநானூறு 279]

களத்தில் உன் மகன் புறமுதுகிட்டான் என்று சிலர் சொல்லக் கேட்ட பழந்தமிழ் மறக்குடி முதியவள் ஒருத்தி, செவியில் விழுந்த சொல்லால் சீற்றம் கொண்டாள்.“புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள்.கையில்
வாளெடுத்தாள்.களம் நோக்கிக் கடுகினாள்.வடுப்பட்டு வீழ்ந்து கிடந்த பிணங்களை வாளாற் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள்:மகனைப் பிணமாகக் கண்டாள்:அழுகை பொங்கியது.ஆயினும் சிலர் சொன்னது போல் அல்லாமல் மகன் மார்பில் விழுப்புண் பட்டு[போரில் முகத்தினும் மார்பினும் பட்ட புண்] மாண்டான் என்பது கண்டு உவகை[மகிழ்ச்சி] கொண்டாள் .அவனை ஈன்ற ஞான்றினும்[நாள்] பெரிது உவந்தனள்.இப்படிப் பழந்தமிழ் முதியவள் ஒருத்தியின் மறப் பண்பைக்[வீரத்தை] காக்கைப் பாடினியார் எடுத்துக் காட்டுகிறார்.

"நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படை அழிந்து மாறினன் என்று பலர் கூற
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என்
முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக்
கொண்ட வாள் அடு படு பிணம் பெயராச்
செங்களம் துழவு வோள் சிதைந்து வேறாகிய
படு மகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே."
[புறநானூறு 278]

ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த,சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்து விளங்கிய  மகாகவி காளிதாசன்,தனது குமார சம்பவத்தில் "உமை அன்னையை வாழ்த்தும் பிரம்மா,நீ வீரர்களின் தாயாக விளங்கவேண்டும் (வீரப் ப்ரசவா பவேதி)"என்று வாழ்த்துவதாகக் கூறுவதையும்,தனது மற்றும் ஒரு நாட்டிய நாடகமான சாகுந்தலம் காவியத்தில் சகுந்தலையை வாழ்த்தும் துறவிகளும் முனிவர்களும் வீரர்களின் தாயாக [வீரப்ரசவினீ பவ] விளங்குவாயாக என்று வாழ்த்துவதையும் கவனிக்க.அப்படிபட்ட வீரர்களின் நடு கல்லை "வீரக் கற்கள்" என்றும் கூறுவர்.பொதுவாக இறந்தவர் எவருக்குமே நடுகற்கள் எடுக்கப்படலாமாயினும்,வீரச்சாவு அடைந்தவர்களுடைய நடுகற்களுக்கே பெருமதிப்புக் கொடுக்கப்பட்டு வந்தது.சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்டகற்களைப் பற்றிய தாகவே உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
பகுதி/Part 03"மா வீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"  அடுத்தவாரம் தொடரும்.

2 comments:

 1. அன்று எழுதப்பட்டு இன்று கிடைக்கப்பெற்று இறுக்கும் சில செய்யுள்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஆண்மக்கள் எல்லோருமே வீர சூரர்கள் என்று முடிவு செய்வது பிழையானது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.
  அன்று பாடிய புலவர்கள் பெரும்பாலும் ஏழ்மையில் வாழ்ந்து, அரசனால் அவ்வப்போது வழங்கப்படும் வெகுமதிகளைப் பெற்றே தங்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய சூழ்நிலை. எழுதும் நூல்களை வேறு இடங்களில் சென்று விற்றுப் பணமாக்கும் நிலை அப்போது இல்லை.
  எப்பொழுதும் போர் புரிந்து நாட்டைக் காப்பாற்றுவதிலும், நாட்டைப் பிடிப்பதிலும் ஆவலாய் இருக்கும் அரசன்மார்களை உச்சி குளிரப் பண்ணுவதற்கு ஒரே வழி, உன் போர்ப்படையில் சேர்ந்து வீரச் சாவு பெறுவதற்கு எம் ஆண்மக்களும், தாய்மார்களும் எப்பொழுதுமே தயாராகவே இருக்கிறார்கள் என்று வீர வசனம் பேசுவது மட்டுமே. அப்போதுதான் கொஞ்சம் என்றாலும் அவர்கள் வயிறு நிரம்பும்; எதிராகப் பேசினால் தலை போகும் அல்லது பாதாளச் சிறையில் களிதான் உண்ணவேண்டி இருந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Tuesday, November 12, 2013

   "அன்று எழுதப்பட்டு இன்று கிடைக்கப்பெற்று இருக்கும் சில செய்யுள்களை வைத்துக் கொண்டு ஒட்டு மொத்தமாக ஆண்மக்கள் எல்லோருமே வீர சூரர்கள் என்று முடிவு செய்வது பிழையானது என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து."-

   இதை நானும் ஒத்துகொள்கிறேன் ஆனால் அந்த சங்க காலத்தில் உண்மையான வீரத்திற்கே நன் மதிப்பு இருந்தது என்பது பல பாடல்களில் இருந்து நாம் எடுத்து காட்டலாம்.அதை ஆமோதிப்பது போல "நடு கல் வணக்கம்" அமைகிறது.இதனால்தான் இதை வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப்பட்டது என்பதையும் கவனிக்க.மேலும் இவ் நூற்றாண்டு கண்ணதாசனும் "...கனக விசயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேரமகன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இடைபட வாழ்ந்தான் பாண்டியனே.அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா..."என்று பாடினான்.

   "அரசனால் அவ்வப்போது வழங்கப்படும் வெகுமதிகளைப் பெற்றே தங்கள் வயிற்றைக் கழுவ வேண்டிய சூழ்நிலை. எழுதும் நூல்களை வேறு இடங்களில் சென்று விற்றுப் பணமாக்கும் நிலை அப்போது இல்லை."

   இப்படியான சூழ்நிலை அங்கு இருந்த்தது என்பது உண்மையே. ஆனால் அதற்காக முற்றும் முழுதாக "பொய் புகழ்" பாடினார்கள் என்றும் ஒதுக்கிவிட முடியாது.வேறு தடயங்கள்,குறிப்புகள் பலவற்றை உறுதி படுத்துகின்றன.

   அதனால்தான் ஒரு சிலரை மட்டுமே எடுத்து இங்கு அலசி உள்ளோம்.

   எது எப்படி இருப்பினும் ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர் பாண்டியனை நோக்கிப் பாடிய புறநானூறு 196, நீங்கள் மேலே கூறிய கருத்தை ஒத்து போகிறது .இதோ அந்த பாடல்:

   "ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
   ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
   ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
   ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
   இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே

   இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
   புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
   அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
   சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
   நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்

   வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
   கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
   நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
   மெல்லியல் குறுமகள் உள்ளிச்
   செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே"

   நீண்டநாட்கள் அரசன் வாயிலில் நின்றும் புலவருக்கு பொருள் கிடைக்கவில்லை. தருகிறேன் என்று சொன்ன அரசன் தரவில்லை. வயிறெரிந்து புலவர் பாடுகிறார். 'தருவதும் தராமல் விடுவதும் உன் விருப்பம். தருவதாகச் சொல்லி தராமல் இருப்பது நல்லதல்ல. உன் புதல்வர் நோயில்லாமல் வாழட்டும். கல்போலக் கரையாத வறுமையுடன், நாணத்தை தவிர வேறு எதையும் அணியாமல், வாழும் என் மனைவியிடம் நான் திரும்பிச் செல்கிறேன். நீ வாழ்க' என்கிறார் புலவர்.

   அரசன் பரிசில் தராமல் ஒவ்வொரு நாளாக கடத்தி ஏமாற்றியதில் கொதிக்கும் புலவரின் நெஞ்சம் இந்த சங்க கவிதையில் மையமாகத் தெரிகிறது என்பதை கவனிக்க .

   உங்கள் கருத்துக்கு நன்றிகள்.இப்படியான ஆக்கபூர்வமான மதிப்புரைகள் எம்மை மேலும் சிந்திக்க/அலச தூண்டுகிறது.

   Delete