அவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )

 பல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு  அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன.

 

அதே அலுவலகத்தில் கடமை புரியும் சதீஷ் அவள் கண்களில் மெல்ல மெல்ல தங்க ஆரம்பித்தது ஏன் என்று அவளுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

 

நாட்கள் நகர்ந்தன. அவளின் கண்களில் நிறைந்த அவன், அவளின் நெஞ்சிலும் நகர ஆரம்பித்தது எப்படி என்று அவளால் சொல்லிவிட முடியவில்லை.இதுதான் காதலா என்ற கேள்வியுடன் உதயமான அவள் உணர்வுகள் துள்ளிக் குதித்திட........... எப்படி அவன்கூட பேசுவது? நினைக்கவே அவளுக்கு வெயர்த்துக் கொட்டியது. எத்தனை நாளுக்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? ஒருநாள்  மதிய போசன இடைவேளையின் போது அவன் இருந்து உணவு அருந்திய  இடம் அருகே சென்றவள் தயங்கியபடியே

 

''சதீஷ், ..உங்களோட ...பேச வேணும்'' என மெதுவாகவே தன் சொற்களை உதிர்த்தாள் சலீஷா

 

''பேசுங்க, இதில என்ன தயக்கம்.ஒரு இடத்தில தானே வேலை செய்கிறோம். பேசுறது தப்பில்லையே'' என புன்னகையோடு   சதீஷ் பதில் கூறியது அவளுக்கு சற்று தென்பினை ஊட்டியது.

 

''இல்லை, வெளியில தான் பேசவேணும்''

 

ஆச்சரியத்தோடு அவளை நோக்கிய சதீஷ் '' அப்படி என்னங்க வெளியில...'' என்றவன் சற்று சிந்தித்தவாறே ''சரி எங்க, எப்ப  என்று சொல்லுங்க, பேசலாம்'' என்று அவள் வழிக்கே வந்தான் சதீஷ்.

 

சந்திப்புகள் தொடர்ந்தன

 

சலீஷா ,சதீஷ் இருவரினதும் சில மாதக் காதலின்  புதினம் வீடுவரை எட்டிவிட்டது. காதல் என்றாலே எம்மவர்  வீடுகளில்  வழமையாக  கிளம்பும் பூகம்பம்  சலீஷா வீட்டையும் விட்டுவைக்கவில்லை.

 

சலீஷாவினால் வீட்டில் எழுந்த எதிர்ப்பினை தாங்கமுடியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவளாக அன்று சலீசா அலுவலகத்தில் இருந்தபடியே சதீஷின்  கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

 

''சதீஷ் உங்கள் கூட ஒன்று பேசவேணும்''

 

''என்ன சலீஷா ,பேசிக்கொண்டு தானே இருக்கிறம்''

 

''பகிடி விட இது நேரமில்லை சதீஷ்,வேலை முடிஞ்சதும் வழமையான இடத்திற்கு வாறியளா?''

 

''சரி சலீஷா''

 

அழுதுகொண்டு  வந்த சலீஷாவை கண்டு அதிர்ச்சியடைந்தான் சதீஷ்.

 

''என்ன சலீஷா? என்ன பிரச்சனை? ஏன் அழுகிறியள்? எனக் கேள்விகளை  அடுக்கிக்கொண்டே போனான் சதீஷ்.

 

தன்  கண்களைத் துடைத்துக்கொண்ட சலீஷா '' சதீஷ் எங்கட காதல் வீட்டில தெரிஞ்சிட்டுது''

 

''அதுக்கேன்  அழுகிறியள் சலீஷா?''

 

''அழாம என்ன செய்யச்சொல்லுறியள் சதீஷ். அம்மா,அப்பா,அண்ணா எல்லோருமே எங்க காதலை எதிர்க்கினம். அவையள் என்னுடைய மச்சானுக்கு செய்து வைக்க இருக்கினமாம்.''

 

''அப்போ காதலைக் கைவிடப்போறியளா?''

 

''என்ன சதீஷ், ஏன் அப்பிடி என்னை நினைக்கிறியள்? ரிஜிஸ்டர் மறிஜ் செய்துபோட்டு இரண்டு பெரும் பிறம்பாய் ஒரு வீடெடுத்து வாழுவம் சதீஷ்''

 

''அதாவது பெற்றோரை கைவிட்டு ,ஓடிப்போய் வாழுவோம் என்று  சொல்லுறியள்''

 

விக்கியபடியே ''ஓமோம் '' என அனுங்கினாள்  சலீஷா

 

தன்னை அறியாமலேயே, சத்தமாகவே சிரித்துவிட்டான் சதீஷ்

 

''என்ன சதீஷ்! நான் துடிச்சுக்கொண்டிருக்கிறன்,உங்களுக்கு அது விளையாட்டாயோ  இருக்கு?''

 

''வேறென்ன சலீஷா! என்மேல அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?

 

''நம்பிக்கைதான் சதீஷ் வாழ்க்கை.உங்களைப்பற்றி (office)ஒஃபீசில யார் தான் குறை சொல்லியிருப்பான்கள்!இல்லையே!

 

''ஆனால் உங்கள்மேல் இருந்த நம்பிக்கை எனக்கு இல்லாமல் போயிடுச்சே!''

 

அதிர்ந்த சலீஷா''என்ன சதீஷ் சொல்லுறியள்?''

 

''சலீஷா நல்லா யோசிச்சுப் பார்.சில மாதங்கள் உன்னோட நான் கதைச்சது மட்டும் தான். எதையுமே உனக்கு நான் செய்ததில்லை.  ஆனால் உன்னுடைய பெற்றோர்கள், உன்னைப்  பெற்று,வளர்த்து, ஆளாக்கி இன்டைக்கு 25 வருஷம். அவை உனக்காக பட்ட கஷ்டங்கள், வேதனைகள் அதெல்லாம் நான் கணக்கு சொல்லேலை. ஒன்றே ஒன்று மட்டும் கூறுகிறேன். 25 வருஷம் பழகின உன்ர பெற்றோர்,சகோதரன் அவையளை,அவையளின்ர அன்பினை  தூக்கி ஏறிய முடிஞ்ச உன்னால 25 கிழமை பழகின என்னை நீ  தூக்கி ஏறிய எத்தனை செக்கன் எடுக்கும் சொல்லு!

 

''சதீஷ் என்ன சொல்லுறியள்'' கதறினாள்  சலீஷா

 

''என்ன சலீஷா? விளங்கேல்லையா

 

''25 வருஷம் பழகின உன் உறவுகளின் உணர்வுகளை மதிக்க முடியாத நீ , 25 கிழமை பழகின என்னுடைய உணர்வுகளை மதிப்பாய் என்பதில்  என்ன நம்பிக்கை?''

 

''ஐயோ ,சதீஷ் ''குலுங்கிக் குலுங்கி அழுதாள் சலீஷா.

சதீஷ் தொடர்ந்தான்,''சலீஷா! நீ இப்ப அழுகிறது  உன் இதயத்திலிருந்து வருவதாக நீ கூறலாம்,ஆனால் அது உண்மையில்லை சலீஷா.  இப்ப தங்கள் இதயங்கள் நோக உண்மையாய் அழுதுகொண்டு இருப்பவர்கள் யார் தெரியுமா? உன்னை பற்றி அவர்கள் கொண்டிருந்த  கனவுகள் இடிந்துவிட்டதே என்று இதயம் நொறுங்கி போய் இருக்கிறார்களே உன்ரை பெற்றோர்கள், அவையள்தான். முதலில அவையளுக்கு உன்மேல ஒரு நல்ல நம்பிக்கை  உள்ள மகளாக வாழப்பார்! அப்பதான் அடுத்தவர்களுக்கும் உன்மேல நம்பிக்கை வரும். நன்றி, நான் போய் வருகிறேன்''

 

மன உறுதியுடன் தன் உபதேசத்தினை முடித்துக்கொண்ட சதீஷ், மனதில் பெரும் பாரத்தினை இறக்கிவிட்ட நிறைவுடன் தன் பாதையில் அவளைக் கடந்துசென்றான்.


கதை:செ.மனுவேந்தன்


0 comments:

Post a Comment