பூமி என்னும் சொர்க்கம் 03:

 


🌏இடம் பெயரும் கண்டங்கள்🌎

சூரியனும் பூமியும் சுமார் 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. சூரியனிலிருந்துதான் பூமியும் மற்ற கிரகங்களும் விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் உண்டாயின

 

பூமியில் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினம் தோன்றியது. பூமி தோன்றி பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு உகந்த சூழ்நிலைகளில் கடலில்தான் முதல் உயிரினமான நுண்ணுயிர்கள் தோன்றின.

 

பூமி தோன்றியபோது அது அனல் வீசும் உருண்டையாக இருந்தது. அந்தக் கட்டத்தில் பூமியின் மீது இருந்த எண்ணற்ற எரிமலைகளிலிருந்து பல்வேறு விதமான வாயுக்களும் நீராவியும் ஓயாது வெளிப்பட்டன. இது நீண்ட காலம் நீடித்தது.

 

எரிமலைகளிலிருந்து வெளிப்பட்ட நீராவியானது பின்னர் மேகங்களாகத் திரண்டன. பூமியின் வெப்பம் தணிந்து குளிர ஆரம்பித்தபோது, இந்த மேகங்களிலிருந்து மழை பொழியத் தொடங்கியது. ஆண்டுக்கணக்கில் மழை பொழிந்தது.

 

அப்படிப் பெய்த ஓயாத மழையின் தண்ணீர் அனைத்தும் பூமியின் பள்ளமான பகுதிகளை நோக்கி ஓடியது. பூமியில் இருந்த ஏராளமான பிரம்மாண்ட பள்ளங்கள் நிரம்பியபோது கடலாக மாறின.

 

பூமியில் இப்போது ஐந்து பெரும் கடல்கள் உள்ளன. ஆர்ட்டிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் கடல், பசிபிக் பெருங்கடல், தெற்குப் பெருங்கடல் ஆகியவை உள்ளன. ஏழு கண்டங்கள் உள்ளன. அவை ஆப்பிரிக்கா, அண்டார்டிகா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகியவை.

 

கடந்த பல கோடி ஆண்டுகளில் பெருங்கடல்கள் சிறுத்துள்ளன அல்லது பெருத்துள்ளன. ஒரு கால கட்டத்தில் எல்லாப் பெருங்கடல்களும் சேர்ந்து ஒரே கடலாக இருந்ததும் உண்டு. இதற்குக் கண்டங்கள் இடம் பெயர்ந்துள்ளதே காரணம்.

 

உலகின் கண்டங்கள் அனைத்தும் ஒரே கண்டமாக விளங்கிய காலம் உண்டு. கண்டங்கள் ஒன்று சேர்ந்து ஒரே கண்டமாக இருக்கும். இதை சூப்பர் கண்டம் எனலாம். பின்னர் இவை தனித்தனியே பிரியும். பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி ஒன்றுசேரும். மறுபடி இவை விலகும். இப்படிப் பல தடவை நிகழ்ந்துள்ளது.

 

ஒரு முறை ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா ஆகியவை ஒன்று சேர்ந்து இருந்தன. அப்போது இந்தியத் துணைக்கண்டமானது இவற்றுடன் சேர்ந்து இருந்தது. கோண்டுவானா என்று அழைக்கப்பட்ட இந்தக் கண்டம் சுமார் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்தபோது கண்டங்கள் தனிதனியே நகர்ந்து சென்றன. இந்தியத் துணைக் கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்து, அப்போது ஆசியாவையும் ஐரோப்பாவையும் உள்ளடக்கியதாக இருந்த லாராசியா கண்டத்துடன் மோதியது. இதன் விளைவாகவே இமயமலை தோன்றியது. அப்போது லாராசியாவின் தென்புறத்தில் அமைந்திருந்த டெத்திஸ் கடல் மறைந்தது. டெத்திஸ் கடலில் இருந்த தண்ணீர் எங்கும் போய் விடவில்லை. அந்தக் கடலின் தண்ணீர் வழிந்து இப்போதைய இந்தியப் பெருங்கடலுடன் வந்து சேர்ந்துகொண்டது.

 

கண்டங்கள் இன்றும் இடம்பெயர்ந்து வருகின்றன. உதாரணமாக இந்தியத் துணைக்கண்டம் ஆண்டுக்குச் சில செண்டி மீட்டர் வீதம் வடகிழக்கு நோக்கி நகர்ந்துவருகிறது. அதன் விளைவாகவே உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலும் நேபாளத்திலும் பூகம்பங்கள் நிகழ்கின்றன. கண்டங்கள் இடம்பெயருவதால் இப்போது பசிபிக் கடல் சுருங்கி வருகிறது. அதே சமயத்தில் அட்லாண்டிக் கடல் மேலும் விரிவடைந்து வருகிறது.

 

எதிர்காலத்தில் ஐரோப்பாவையும் ஆப்பிரிக்காவையும் பிரித்து வைக்கிற மத்திய தரைக் கடல் மறைந்து போகலாம்.

 

கண்டங்கள் இடம் பெயருகின்றன என்று 1912-ம் ஆண்டு ஆல்பிரெட் வெஜனர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி கூறியபோது பிற விஞ்ஞானிகள் அவரைக் கேலி செய்தனர். பின்னர் நடந்த ஆராய்ச்சிகளில் வெஜனரின் கொள்கைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

கண்டங்கள் இடம்பெயருவதால்தான் எரிமலைகள் நெருப்பைக் கக்குகின்றன. அதனால்தான் பூகம்பங்கள் நிகழ்கின்றன. அதனால்தான் சுனாமிகளும் தோன்றுகின்றன. சரி, கண்டங்கள் எப்படி இடம்பெயருகின்றன?

 

கால்பந்தானது பல துண்டுகளால் ஆனது போலவே பூமியின் மேற்புறமானது பல சில்லுகளால் ஆனது. இந்தச் சில்லுகளை பிளேட் என்றும் சொல்லலாம். இந்தச் சில்லுகள் மீதுதான் கண்டங்களும் கடல்களும் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகள் பாகு போன்ற பொருளின் மீது அமைந்துள்ளன. பூமியின் உட்புறத்தில் சுழல்கள் போன்ற இயக்கம் நிகழ்கிறது. எனவே, சில்லுகள் நகருகின்றன. சில்லுகள் நகருவதால் அவற்றின் மீது அமைந்த கண்டங்களும் நகருகின்றன.

 

சில்லுகள் சந்திக்கும் இடங்களில், ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்கின்றன. அல்லது ஒரு சில்லுக்கு அடியில் இன்னொரு சில்லு புதைகிறது. அப்படிச் சில்லுகள் புதையும்போது பிரம்மாண்டமான பாறைகள் அரைபட்டு நெருப்புக் குழம்பாக மாறுகின்றன. இந்த நெருப்புக் குழம்புதான் எரிமலைகள் வழியே வெளிப்படுகிறது. சில இடங்களில் சில்லுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று விலகுகிறது.

 

அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இப்படி நிகழ்வதால் அட்லாண்டிக் கடல் விரிவடைந்து வருகிறது.

 

எதிர்காலத்தில் அமாசியா என்ற பெயரில் அனைத்துக் கண்டங்களும் ஒன்றுசேரலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

கட்டுரையாளர், எழுத்தாளர் ,தொடர்புக்கு: nramadurai@gmail.com

0 comments:

Post a Comment