தற்கொலையில் முடியும் மனநலப் பிரச்னைகள்

- அடையாளம் கண்டு தடுப்பது எப்படி?மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம்.

 

கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட உலக புகழ்பெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், தன் மன நலனை கருத்தில் கொண்டு, தான் கலந்து கொள்ளவிருந்த பல போட்டிகளிலிருந்து வெளியேறினார். அது சர்வதேச அளவில் பெரிதாக பேசப்பட்டடு, தற்போது மனநலம் சார் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதற்கான சாட்சியாகப் பார்க்கலாம்.

 

மறு பக்கத்தில், இந்தியாவில் கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகள் கூறுகின்றன.

 

இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் 1.39 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிறது என்.சி.ஆர்.பி தரவு. மகாராஷ்டிரா (18,916 பேர்) 13.6 சதவீதத்தோடு முதலிடத்திலும், தமிழ்நாடு (13,493 பேர்) 9.7 சதவீதத்தோடு இரண்டாமிடத்திலும் இருக்கிறது.

 

குடும்ப பிரச்னைகள், உடல்நலக் குறைவு, போதைப் பழக்கம், காதல் மற்றும் திருமணப் பிரச்னை போன்ற காரணங்களால் தான் 2019ஆம் ஆண்டில் நடந்த மொத்த தற்கொலையில் 65 சதவீத தற்கொலைகள் நடந்திருக்கின்றன என்கிறது என்.சி.ஆர்.பி என்கிற தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

 

தற்கொலைக்கும், மனநல குறைபாடுகளுக்கும் தொடர்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பே தன் வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது.

 

இந்தியாவில் தற்கொலை ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்து வருகிறது என மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது உலக சுகாதார அமைப்பு.

 

மனநலம் என்றால் என்ன?

"ஒருவர் தன்னைக் குறித்து முழுமையாக புரிந்து வைத்திருப்பது,தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் ஒரு சுமூகமான உறவில் இருப்பது, ஒருவர் செய்யும் காரியங்கள் தனக்கும் மற்றவர்களுக்கும் பயன் தரும் விதத்தில் இருப்பது," என மூன்று விஷயங்களில் சரியாக இருப்பவர்கள் நல்ல மனநலத்துடன் இருக்கிறார்கள் எனலாம். "

 

"ஆனால் எதார்த்தத்தில் இந்த மூன்றில் ஏதோ ஒரு விஷயத்தில் நாம் அனைவரும் கொஞ்சம் முன்பின் தான் இருக்கிறோம். ஆக நாம் அனைவருமே மன நல குறைபாடு உள்ளவர்கள் என பொருள் கொள்ள வேண்டாம். "

 

"காரணம் மனநலம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரியான அளவு கோளில் பொருத்திப் பார்க்கக் கூடிய விஷயமல்ல. மன நலம் சார்ந்த பிரச்னைகள் ஒரு நிலை தானே ஒழிய அது ஒரு நோயல்ல. மனநல பிரச்னைகள் அனைத்துமே மனநோய் கிடையாது. மனம் ஆரோக்கியமின்றி இருப்பது ஒரு தற்காலிக நிலை மட்டுமே" என்கிறார் சென்னையிலுள்ள மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன்.

 

மன நலமின்மை!

"மனநல குறைபாட்டுக்கும், மன நலமின்மைக்கும் ஒரு மெல்லிய வித்தியாசமிருக்கிறது.

 

கொரோனா காலத்தில் பலரும் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டு வருகிறார்கள். ஊரடங்கு, பொருளாதார சூழல் தரும் பயம், வீட்டிலேயே அடைந்திருப்பது போன்ற பல காரணங்களால் பலரும் சில மனநல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். இதை மன நலமின்மை எனலாம்.

 

யாரோடும் பேச முடியாமல் இருப்பது, நல்ல தூக்கம் இல்லாமல் தவிப்பது, அதிகம் கோபப்படுவது, அதிகம் பயப்படுவது போன்றவைகளை மனநல ஆரோக்கியமின்மை பட்டியலில் சேர்க்கலாம்.

 

இதே காலகட்டத்தில் சிலர் மன அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை கடந்து வர முடியாமல், அதிலேயே சிக்கி தவிக்கிறார்கள். இதை மன நல குறைபாடு எனலாம்.

 

ஒரு பற்றற்ற நிலையில் இருப்பது, இதற்கு முன் செய்த வேலைகளைச் செய்வதற்குக் கூட தடுமாறுவது, ஏன் வாழ வேண்டும் என்று தோன்றுவது, யார் மீதும் எதன் மீதும் நம்பிக்கையின்றி இருப்பது, எதையும் ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே பார்ப்பது போன்றவைகளை மனநல குறைபாடு எனலாம்.

 

இரண்டுமே தற்காலிகமானவை தான் என்றாலும், மனநலமின்மையை சரி செய்வதை விட, மன நல குறைபாட்டை சரி செய்ய கொஞ்சம் அதிக காலம் ஆகலாம்." என்கிறார் சிவபாலன்.

 

அறிகுறிகள் என்ன?

"பொதுவாக ஒரு நபரின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள், அவர் நல்ல மன நலத்தோடு இருக்கிறாரா இல்லையா என்பதை வெளிப்படுத்தும்.

 

நன்றாக பேசக் கூடியவர் திடீரென பேசுவது குறைகிறது என்றாலோ, பெரிதாக ஆடை அணிகலன்களில் கவனம் கொடுக்காத ஒருவர் திடீரென அதீதமாக அதில் கவனம் செலுத்தினாலோ, அதிகம் ஆன்மிகம் அல்லது தத்துவார்த்தமாகப் பேசத் தொடங்குவது, எதிர்மறையாகவே பேசுவது, எப்போதும் சோகம் தொய்ந்த ரீதியிலேயே பேசுவது, சுய அழகு பராமரிப்புகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது போன்றவைகள் அவருக்கு ஏதோ மன நலத்தில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாகக் கருதலாம்.

 

இப்படியாகத் தொடங்கும் சிறிய மன மாற்றங்கள் தான் எதிர்காலத்தில் தற்கொலையில் கொண்டு போய் சேர்க்கின்றன" என்கிறார் மருத்துவர் சிவபாலன்.

 

தடுப்பது எப்படி?

"மிக எளிமையான விஷயம் தான், அவர்களிடம் மாற்றம் ஏற்படும் ஆரம்ப கட்டத்திலேயே சுற்றி உள்ள நண்பர்கள், கணவன், மனைவி, குடும்பத்தினர், சக ஊழியர்கள் பேச வேண்டும். யாராவது மனது சரியில்லை என்று கூறினால் உதாசீனப்படுத்தாமல், அறிவுரை கூறி புறந்தள்ளாமல், அவர்களை புரிந்து கொள்ள வேண்டும்.

 

அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுவே அவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை கொடுக்கும். அது அவரின் மன நிலையை மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது.

 

அதையும் மீறி அவர்கள் தொடர்ந்து மன உளைச்சலில் இருப்பதாக தெரிந்தால் மனநல மருத்துவரிடம் அழைத்து ஆலோசனை பெற வேண்டும்.

 

மனநலம் பாதிக்கப்படும் போது, பொதுவாக தன்னலன் மீது அக்கறையற்ற இருப்பர். ஆகையால் அவர்களின் நலனுக்காக அவர்களுக்காக நாம் முடிவெடுத்து அதற்கான தீர்வை பெற்றுத்தருவது அவசியம்.

 

பொதுவாக தற்கொலை செய்து கொண்டவர்களின் சுற்றத்தார், குடும்பத்தினரை அழைத்து, தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்ததா? எனக் கேட்டால், ஆம், அப்போதே தெரிந்தது, பேசலாம் என்று இருந்தோம்... போன்ற பதில்களை கேட்க முடியும். ஆனால் பேசி இருக்கமாட்டார்கள்.

 

பெரும்பாலும் மனித உள்ளுணர்வு இது போன்ற விஷயங்களில் தவறுவதில்லை. ஆனால் உள்ளுணர்வு வருபவர்கள் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார்கள் அல்லது மன நலப் பிரச்னைகளை எதிர்கொள்பவர் தவறாக நினைத்துவிடுவாரோ என ஒதுங்கிவிடுகிறார்கள்.

 

இப்படி மனநல பிரச்னைகளால் ஏற்படும் தற்கொலைகளில் சுமார் 95 சதவீத தற்கொலைகளை, சரியான நேரத்தில் இடைமறித்துப் பேசினாலோ, மனநல மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தாலோ தடுத்துவிடலாம் என்பது தான் மிகவும் வருத்தமான விஷயம்." என்கிறார் மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன். மனநலம் காப்போம், தற்கொலைகளைத் தவிர்ப்போம்.

கெளதமன் முராரி -:பிபிசி தமிழுக்காக

0 comments:

Post a Comment