நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?/ பகுதி: 07A

[சீரழியும் சமுதாயம்] 
3] இணைய கலாச்சாரம் [internet culture]


 இணையம் 21 ஆம் நூற்றாண்டின் மிகவும் சக்திவாய்ந்த, புதுமையான மற்றும் பிரபலமான கண்டு பிடிப்பு என்று நாம் எடுத்து கொள்ளலாம். 60-களில், இராணுவம் மற்றும் கல்வித் திட்டத்திற்காக ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து, இணையமானது விரைவாக முன்னேறி இன்றைய நிலைக்கு வளர்ந்துள்ளது. உதாரணமாக, கடந்த நூற்றாண்டின் கடைசி தசாப்தத்தின் ஆரம்ப ஆண்டுகளில் அல்லது அதற்கு முன்பு, இணையத்தின் ஒளி அற்ற, அந்த பழைய பாடசாலை நாட்களில், நாம் மற்றவரினது குறிப்பேடுகளில் அல்லது காகித துண்டு ஒன்றில் எழுதுவதன் மூலம் ஒருவருக் கொருவர் இணைத்தோம். அது தான் எமது இணையத் தளம். இன்னும் எனக்கு பசுமையாக நினைவு இருக்கிறது, எப்படி நான் ஒரு சில பேனா நண்பர்களுடன் அன்று தொடர்பு கொண்டேன் என்பது. எனினும், அதன் பின் கால ஒட்டத்தில், அதையும் அந்த ஒன்று இரண்டு நண்பர்களையும் நான் முற்றாக மறந்தும் விட்டேன். ஆனால், இன்று இண்டர்நெட் எங்கள் இருப்பை தலைகீழாக மாற்றிவிட்டது. உதாரணமாக அன்று என்னுடன் முதல் முதல் இணைந்த பேனா நண்பர் எப்படியோ என்னை இணைய தளத்தில் கண்டு பிடித்து இன்று அண்மையில் மீண்டும் நண்பராக வந்துள்ளார் என்பது ஆச்சிரியத்திற்கு உரியதே ! ஆமாம், இன்று தகவல்தொடர்புகளை இணையம் புரட்சிகரமாக மாற்றி உள்ளது. அது எமது அன்றாட வாழ்வுடன் ஒன்றி விட்டது. இன்று கிட்டத் தட்ட எல்லாவற்றிற்கும் நாம் இணையம் பயன்படுத்துகிறோம். இப்ப நான் உங்களுடன் என் கருத்தை பரிமாறுவது கூட இந்த இணையத்தின் உதவியாலேயே!. மேலும் சில உதாரணமாக, ஒரு பீஸ்ஸாவிற்கு [pizza] அனுப்பாணை [Ordering] செய்வது, ஒரு தொலைக்காட்சி வாங்குவது, ஒரு நண்பருடன் ஒரு கணம் பகிர்ந்து கொள்வது, உடனடி செய்தியுடன் ஒரு படத்தையம் இணைத்து அனுப்புவது, இப்படி பல வேலைகளுக்கு இணையத்தை பயன் படுத்துகிறோம். இணையத்திற்கு முன்னைய காலத்தில், ஏதாவது உலக மற்றும் உள் நாட்டு செய்திகள் அறிய வேண்டும் என்றால், நீங்கள் பத்திரிகைக் கடைக்கு போய், பத்திரிகை கடை திறந்த பின் வாங்கி படிக்க வேண்டும். அல்லது நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ ஒரு கடிதம் போட்டால், அதற்கு மறுமொழி வரும் வரையும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இன்று ஒரு அழுத்துதலில் [click] உங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்கு உடன் அறிய முடியும். 

மிகப்பெரிய இதிகாசங்களுள் ஒன்று தான் மகாபாரதம். மகாபாரதமானது பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் மகன்களிடையே நடைபெற்ற பெரும் போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இதில், கண் பார்வையற்ற திருதிராஷ்டிரன் போர்க்களத்தின் அருகே இல்லாமல், அரண்மனையில் இருந்தபடியே தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொண்டார் என இந்த இதிகாசம் கூறுகிறது. இது இன்றைய இணைய தளத்தை எமக்கு நினைவூட்டுகிறது. மேலும் இன்று பல்வேறு சமூக வலைதளங்கள் இருப்பினும் சில குறிப்பிட்ட வலை தளங்களில் மட்டுமே பயனாளிகளின் எண்ணிக்கையும், ஆர்வமும் அதிகமாக உள்ளன. உதாரணமாக முகநூல், ட்விட்டர், லிங்க்ட் இன், மை ஸ்பேஸ், கூகிள் +, யூடியூப் [Facebook, Twitter,  Linked in, My space,Google+,  Youtube], போன்றவை கணினிகளில் மட்டுமன்றி இப்போது ‘ஸ்மாட் போன்’ (Smart Phone) என்ற நவீன வசதிகளுடன் கூடிய அலைபேசிகளிலும் இணையத்தின் பயன்பாடுகள் மிகவும் அதிகரித்துள்ளன. தற்சமயம் ‘வாட்ஸ் அப்’  (Whats App) என்ற வலைதளம ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந் துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

இண்டர்நெட் நிச்சயமாக எல்லோருடைய வாழ்க்கையிலும் இன்று மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இணையத்தள மக்களின் பெரும்பான்மை இளைஞர்களாகவே காணப் படுகின்றனர். எல்லா நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் இது உண்மையாக இருப்பதுடன் தமிழ் மக்களும் இதற்க்கு விதிவிலக்கல்ல. பொதுவாக நன்மை, தீமை இரண்டும் கலந்தது தான் ஒருவரின் வாழ்க்கை. அது போலவே, எல்லா பொருள்களின் பயன்பாட்டிலும் கட்டாயம்  நன்மையும் தீமையும் இருக்கும். எனவே தான் வள்ளுவர், குறள் :504  இல், ” குணம் நாடி குற்றமும் நாடி மிகை நாடி மிக்க கொளல் ” என்று அறிவுறுத்தி சென்றுள்ளார், அதாவது ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் தேடி அறிந்து அவற்றுள் மிகை ஆராய்ந்து தெளிய வேண்டும் என்பது பாடலின் பொருள், அப்படித்தான் பொருள்களையும் தேடவேண்டும். கணியன் பூங்குன்றனார் கூறியது போல, தீதும் நன்றும் பிறர்தர வாரா, நாம் பாவிக்கும் விதத்தில் தான் இருக்கிறது. ஆகவே இணையமும் அவ்வாறே எனலாம். அங்கும் நன்மையையும் உண்டு தீமையும் உண்டு. சமுதாயத்திற்காக அது செய்தவை கணக்கிலடங்கா எனினும், அதுவும் நாம் பாவிக்கும் விதத்தைப் பொறுத்தது. எனவே தீமைகளை எமக்கு சொல்லிக் கொள்ளாமல், மௌனமாக செய்து கொண்டும் தான் இதுவும் இருக்கிறது. கற்றலும் மற்றும் அறிவைப் பகிர்தலும் இணையத்தின் காரணமாக இன்று எளிதாக இருந்தாலும், அதன் மறு பக்கத்தையும் நாம் இன்று கட்டாயம் அலசவேண்டித்தான் உள்ளது. உதாரணமாக, கணினியில் ‘வைரஸ்‘ என்ற அபாயமும் உண்டு. மேலும் மின்னணுக் கருவிகளின் கழிவுகள் மறுசுழற்சி செய்ய இயலா குப்பைகளாக சேர்ந்துகொண்டு சுற்றுப் புறத்தை கேடு மிக்கதாக ஆக்கிக்கொண்டும் தான் இது தொழிற்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக மனிதனை சோம்பேறியாக்குகிறது. அத்துடன் இன்று பல்வேறு விதமான தீமைகளுக்கும் இதை பயன்படுத்துகின்றனர்.

இந்த இணையம், உண்மையில் ஒரு மனிதனை அவனுக்கு தெரிந்தோ தெரியாமலோ, மிகப்பெரிய கெடுதலான தாக்கமாக, தனக்கு அடிமை ஆக்குகிறது [addictive]. ஒருவர் தொடர்ச்சியாக மற்றும் வழக்கமாக இணையத்தை பலவிதமான பாவனைகளுக்கு உபயோகிக்கும் பொழுது, அதன் பழக்கத்திற்கு அடிமையாய் இல்லாமல் இருப்பது மிக மிக கடினம். இதை எல்லோரும் அறிவர், எனினும் கட்டுப்படுத்துவது தான் சிரமம். இதனால், ஒருவர் இணைய பழக்க அடிமைத்தன கோளாறு [Internet addiction disorder (IAD)] என்ற நோய் ஒன்றுக்கு உள்ளாகலாம். உடலளவிலும், உள்ளத்தளவிலும் சில பழக்கங்களில் தங்கியிருத்தலை பழக்க அடிமைத்தனம் என்று குறிப்பர். சில பழக்கங்கள் தீங்கு தரும் பின் விளைவுகளைத் தரக்கூடியவையாக இருப்பினும், அவற்றினால் கிடைக்கும் திருப்தி காரணமாக, தொடர்ந்து குறிப்பிட்ட பழக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு மூளைச் சமநிலையற்ற தன்மை பழக்க அடிமைத்தனமாகும். இந்த பழக்க அடிமைத்தனம் ஒருவருடைய உடல் நலம், உள நலம், சமூக வாழ்க்கை போன்றவற்றைப் பாதிப்பதுடன், ஒரு நோய் நிலையாகக் கருதப்படக் கூடியதும் ஆகும்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 07B  தொடரும்
பகுதி 01A வாசிக்க அழுத்துங்கள் →
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
  பகுதி: 07B வாசிக்க அழுத்துங்கள்                 Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[7B]


1 comments:

  1. Nageswary UruthirasingamFriday, January 17, 2020


    அருமை. நன்மை தீமை இருபக்கமும் கதாசிரியர் அழகாக கூறியுள்ளார்.வாழ்த்துக்கள்திருஷ்ராட்டினன் விதுரன் மூலம் அரண்மணையில் இருந்தவாறே மகாபாரத யுத்த நிகழ்வுகளை அவதானித்தார்.சோழமன்னர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிட கலைகளில் சிறந்து விளங்கினர்.........அந்தக்காலத்தில் மனிதர்கள் மனிதர்களாக ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் ........இக் கரை மாட்டுக்கு அக் கரை பச்சை போல் உள்ளது போல் கருத்துக்களும் அமையும் .அப்படி என் கருத்து உள்ளதோ தெரியவில்லை......தொடர்ந்து இது போன்ற கட்டுரை தொடர்களை வாசிப்பதில் மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete