கடவுள்களில் சக்தி மிக்கவர்?



எந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர்?

எல்லா மதக் கடவுள்மார்களும், அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்கப்படுகிறார்கள்.

உலகத்திலே வழிபடப் படும் கடவுள்மார்களில் எவர்,

*அறிவுத் திறன் உள்ள,
* மகா சக்தி படைத்த,
* புத்திக்கு கூர்மை உடைய,
* பெரு மூளை கொண்ட,
 * புகழ்ச்சிகளை விரும்பாத
* கண் பார்வை கூர்மையான,
* செவிப்புலன் தூய்மையான,

கடவுளாகக் காணப்படுகிறார் எப்படி என்று பார்ப்போமா?

கடவுள்களால் சொல்லப்பட்டவை என்று அறிவிக்கப்பட்டு, மனிதனால் எழுதப்பட்டு இருக்கும் சமய நூல்கள் எல்லாம், கிணற்றுத் தவளைகள் போல, வெளியில் என்ன நடக்கின்றது என்பது ஒன்றும் அறியாது, சிறு குறுகிய ஒரு வட்டத்துக்குள் நின்று, 'உண்மைகள்' என்று [எழுதியோரின் உணர்வில் பிறந்த கற்பனைகளையும் கலந்து] பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றன.

இதில் நகைப்பிற்கிடம் என்னவெனில், ஒரு சமய நூல் மறுப்பதனை, அடுத்த சமய நூல் தீவிரமாக ஏற்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஒரு சமய நூல் குறிக்கிறது. இன்னொன்று அதற்கு எதிரான வழியினைக் கூறுகிறது. ஒரு நூல் மதுவை வெறுக்க , மறு நூல் கதையே மதுவில் ஆரம்பிக்கிறது. ஒரு நூல் மாமிசத்தை வெறுக்க இன்னொன்று மாமிசம் மனிதருக்குரியது என்கிறது.

தத்தம் நூல்களில் சொல்லப்பட்டவைகளை ஏற்போர், இறந்தபின்னர் சொர்க்கம் செல்வோர் என்றும், ஏனையோர் எல்லாம் நரகம் நிச்சயம் செல்வார்கள் என்றும் மூளைச் சலவை செய்து நம்ப வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஆதலால், எதிர்த்துப் பேசி வீணாக  இடருக்குள் மாட்டுப் படாமல், ஓயாது வணங்கிக் கொண்டு  திரிவோர்தான் அதிகமாக இருக்கின்றார்கள்.

இல்லாத ஒரு சொர்க்கத்திற்கு, என்னவோ ஒன்று போகவேண்டும் என்று வணங்கிக் கொண்டு திரிவதில் என்ன திருப்தி காண்கிறார்களோ தெரியவில்லை!

ஆபிரகாமிய சமயங்களாகிய யூத, கிறீஸ்தவ, இஸ்லாமிய சம்யக் கடவுள்மார்களின் நூல்கள், ரோறா, பைபிள், குரான் என்பவற்றினுள், இந்த உலகிலே ஒரு சில ஊர்கள் பற்றித்தான் தெரிந்திருந்தது. பாலஸ்தீனம், இராக், இஸ்ரேல், ஜோர்டான், எகிப்து, சௌதி அரேபியா, ஈரான், சிரியா, லெபனான் என்ற நாடுகளை அடங்கிய, பூகோளத்தின் சுமார் நூறில் ஒரு தேசப் பரப்பு பற்றித்தான் எங்கும் கூறப் பட்டிருக்கின்றது. இந்தக் கடவுள்மாருக்கு, ஒரு சிறிய தூரத்தில் இருக்கும் ஐரோப்பா, ஆசியா, அமேரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா என்ற இடங்கள் இருப்பதாக தெரிந்தே இருக்கவில்லை!

ஆகவே, இவர்கள் அறிவுத் திறன் அற்றவர்களே!

இந்தக் கடவுள்மார்கள் எல்லாம் ஏனைய கடவுள்மாரிடம் சண்டை பிடித்துத் தோற்றமையாலோ என்னாவோ தங்கள் 'தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்', 'சொர்க்கம் நிச்சயிக்கப்பட்ட மக்கள்' என்று வர்ணிக்கப்பட்ட  எல்லோருக்கும் கடவுளால் 'வாக்குறுதி அளிக்கப்படட தேசங்கள்' என்று கொடுத்த நாடுகள் எல்லாம் வெறும் வரண்ட, செழிப்பற்ற, நீரற்ற பாலைவனப் பிரதேசங்களாகவே கிடைத்தது. ஏன், அந்தச் சக்தி வாய்ந்த கடவுள்களால்,  நல்ல செழிப்பான ஒரு நிலத்தைக் எடுத்துக் கொடுக்க முடியவில்லை?

அந்த உண்மையான, சக்திவாய்ந்த கடவுளால், ஏன்தான் மற்றைய எல்லா போலிக் கடவுள்மார்களைக் கொன்று ஒழிக்க முடியவில்லை? அவர் மக்களை அல்லவா  தூண்டி விடுகின்றார் ஏனைய மதத்தினரைக் கொன்று விடும்படி!

இவர்கள் வெறும் சக்தி அற்றவர்களே!

அது மட்டும் அல்ல; தன்னை வணங்காதவர்களின் மனைவி, மகள்மாரை எல்லாம் வேடிக்கையாக கற்பழித்து அனுபவிக்கலாம் என்றும், குழந்தைகளை காலில் பிடித்து மண்டை சிதற பாறையில் அடிக்கும்படியும், அடிமைகளை வெறும் கேவலமாக நடாத்தும்படியும் இந்தக் கடவுள்மார் கட்டளை இட்டு இருக்கின்றார்களாம்!

இவர்கள் மிகவும் புத்தி சுவாதீனம் உள்ளவர்களே!

கிறீஸ்தவ சமயத்தை பிற்காலத்தில் ஐரோப்பியர்தான் உலகெங்கும் கொண்டு சென்று பரப்பினர். இஸ்லாம் அவர்களை அவ்வளவுக்கு கவர்ந்து இருக்கவில்லை.

சமயம் பரப்பித் திரிந்த வெள்ளையர்கள் தற்போது உண்மையை உணர்ந்து வழிபடும் வேலைக்கு முக்கியம் கொடுப்பதை கை விட்டு விட்டார்கள். ஆனால் மதம் மாறிய நம்மவர் மட்டும்தான் மத்திய கிழக்கில் உருவாக்கிய அந்நியக் கடவுள்களை நம்பி இரவும் பகலும் வணங்குகிறார்கள். மதம் பரப்பவும்  அலைகின்றார்கள்.

எல்லோரும் சொர்க்கம் செல்லவேண்டும் என்ற பேரவா!

இந்தப் பெரிய அண்டத்தைப் படைத்த அந்தக் கடவுள்மாருக்கு பூமி உருண்டை என்ற விபரம் தெரியாது; அது வெறும் தட்டை வடிவம் என்று கூறுகின்றார்கள். பூமி சூரியனைச் சுற்றுவதும் தெரியாது; சூரியன் பூமியைச் சுற்றுகின்றதாம்.

உலகில் அன்றாடம் நடக்கும் உயிர்களின் பரிணாம வளர்ச்சியையும் கண்டு கொள்ளவில்லை. ஓர் ஆண் இனம், ஒரு பெண் இனம் என்று எல்லா உயிர்களையும் சோடி, சோடியாகப் படைத்து, அத்தோடு பாவம் செய்து கொள்ள இலகுவாக, தேவை இல்லாமல் சாத்தான் குணத்தையும் படைத்தார்களாம்.

இவர்கள் மூளை அற்றவர்களே!

ஒரு குழந்தைக்கு உள்ள அறிவு கூடி இவர்களுக்கு இல்லையே!

ஆணையும் படைத்துப் பெண்ணையும் படைத்த இக்கடவுள்மார்தான் இன்னொரு ஈரினமும் அற்ற மூன்றாவது இனத்தினரையும் படைத்துவிட்டு, தமது நூல்களிலேயே அவர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளை இட்டு இருக்கின்றார்களாம்!

தண்டிக்கப் பட வேண்டியவர்கள் இவர்கள் அல்ல; இவர்களை பிழையாக (சில வேளை அதுதான் சாரியானதோ?) படைத்த அந்த அறிவு இல்லாத கடவுள்மார்களேயாகும்!

இந்து சமயக் கடவுள்மாரைக் கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு இந்தியாவைத் தவிர வேறு ஒரு இடமும் தெரியாது. கடவுள்மார் மற்றும் , சுவாமிமார் எல்லோரும் இந்தியாவில் மட்டும்தான் பிறப்பார்கள். ஒரு நாயனார் என்றாலும் கானோவிலோ,  பேருவிலோ அல்லது சந்தியாகோவிலோ அவதரித்தது கிடையாது.

இந்துக்கள் தங்களுடன் எண்ணற்ற கடவுள்மார்களை வைத்திருந்தாலும், புதிது புதிதாகக் கண்டு பிடித்துக் கொண்டிருந்தாலும் , அவர்கள் எல்லோரும் வெறும் சக்தி அற்றவர்கள் என்ற நம்பிக்கையற்ற நிலையில்  சந்தேகப் படுவதால்தான், இந்துக்கள்  அதி பேராசையின் நிமித்தம், புறச்சமயக் கடவுள்மாரையும் - முக்கியமாக வெள்ளைக்காரனால் கொண்டுவரப்பட்ட கடவுள் உசத்தியானது என்று நம்பி - இழுத்து வணங்கி வைத்துக் கொள்வார்கள். இலாபம் எந்த மார்க்கத்தில் இருந்து வந்தாலும் ஏன் வீணாக இழக்க வேண்டும் என்ற பேராசையினால்தான்! கேட்டால் எமக்கு எம்மதமும் சம்மதம் என்ற நடிப்பு வேறு!

எல்லாக்கடவுள்மாரும், மக்களுக்கு என்ன தேவைகள் இருக்கின்றன என்று அறிந்து கொள்ளும் திறமை அற்றவர்கள் என்பதால், தினமும் ஐந்தோ, பத்தோ முறை அவர்களின் புகழ் பாடி, போற்றி, வாழ்த்தி, அழுது, வணங்கி, பணத்தினை இறைத்து, அவர்களின்  உச்சிகளை குளிரப்பண்ணி, இரங்கப்பண்ணி,  நமக்கு என்ன, என்ன வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. விடாமல் கூறிக்கொன்டே இருந்தால்தான் அவர்கள் மூளையில் ஏறும் என்று நம்புகிறார்கள். அதாவது  பக்தி என்ற பெயரில், கடவுளைக் கேவலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கடவுள்கள் மிகவும் புகழ் விரும்பிகளாய் இருக்கிறார்கள்!

உலகத்தில் நடக்கும் பசி, பட்டினி, நோய், துன்பம், வரட்சி, கொலை, கொள்ளை, பலாத்காரம், விபத்து, மனித அழிப்பு, இயற்கை சீற்றம், குண்டு தாக்குதல்  என்பது பற்றி ஒன்றுமே அவர்களுக்குத் தெரியாதாம்! கூட்டம் போட்டுப் பெரிய அளவில், பூசை வைத்து, பஜனை சொல்லி அடிக்கடி அவர்களுக்குத் தெரியப் படுத்த வேண்டி இருக்கிறது.

இந்தக் கஷடங்களை எல்லாம் கொடுப்பதும் கடவுள்கள்தானே!

எல்லோரும் குருடர்களாக இருக்கிறார்கள்!

இவ்வளவு தூரம் பலதடவை வேண்டியும், எல்லா நல்ல, கெட்ட விடயங்களும், எள்ளளவும் குறையாது உலகில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

 உதாரணமாக, ஒரு 400 பயணிகளுடனும் பறந்து கொண்டிருக்கும் விமானம் ஒன்று பழுதாகி நடுக்கடலினுள் விழுந்து கொண்டிருக்குபோது, அல்லாவையும், யேசுவையும், சிவனையும் வேறு பல கடவுள்மாரையும், எல்லோரும் எத்தனை முறை கூவிக் கூவி அழைத்திருப்பார்கள்? கத்தியிருப்பார்கள்; அலறியிருப்பார்கள்!வந்தாரா எந்தக் கடவுள் என்றாலும்?

ஆண்டவரே என்று கூவிக் கொண்டிருந்தவர்களையே ஏப்ரல் தாக்குதல் இலங்கையில்  பாதுகாத்துக் கொண்டதில்லையே!

இவர்கள் வெறும் செவிப்புலன் அற்றவர்கள்!

மனிதன் கடவுள்களை படைத்து, மதங்களை படைத்து, கடவுள் பயத்தை மனிதனுக்கு உருவாக்கியதால் மனிதன் நல்வழியில் நடப்பதற்கு - பயத்தினால் - உதவியது என்பது மறுக்க முடியாத உண்மைதான்.

இந்த வழி ஆதிகால மனிதனுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். அக்காலத்தில், பகுத்து அறியும் தன்மை மனிதனுக்கு குறைத்து இருந்ததால், யாராவது ஒருவன் வந்து கொஞ்சம் வித்தியாசமாகக் கதைத்தால் அவனை கடவுள் ஆக்கி, வழிபட்டுப் அவன் பின் சென்று விடுவான்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸ் நிலையங்கள் அப்போது இருக்கவில்லை; கடவுள் பயத்தினால் மக்களை நல்வழிப் படுத்தலாம் என்பதால் வழிபாட்டுத் தலங்கள்தான் எங்கெங்கும் கட்டபபட்டன.

இப்பொழுது அறிவு வளர்ந்து, தொழில் நுட்பம் பெருகி, கடவுள்மார்தான் செய்கின்றார்கள் என்று முன்னர் நம்பிக்கொண்டிருக்கும் பல விடயங்களை நாமே செய்கிறோம்.

ஆதிகாலத்தில், சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களுக்காக, பொது அறிவோ பகுத்தறிவோ இல்லாதவர்களால், அரையும் குறையுமாகப் பிழையான பல தகவல்களுடன் -ஒரு சில நல்ல அறிவுரைகளும் சேர்த்து - உருவாக்கப் பட்ட  அந்தக் கடவுள்மார்களும் அவர்களின் நூல்களும், நிச்சயமாக இன்றைய புத்திக் கூர்மையுடன் சிந்திக்கத் தெரிந்த மனிதனுக்கு நகைப்பை ஊட்டும் விடயங்களாகவே தென்படும்.

உக்கிப்போன பழைய கடவுள்மாரையும், நூல்களையும் தூக்கி எறிந்தாலும் உலகில் ஒருவிதமான பாதிப்புகளும் வரப்போவது இல்லை.

உலகம் முழுவதும் தங்களைக்  கடவுள்மார் என்று கூறிக்கொண்டு திரிந்த எத்தனையோ பேர் தங்களையே காப்பாற்றமுடியாமல் நோயால் வருந்திச் செத்ததும், குற்றச் செயல்களில் பிடிபட்டு சிறைச் சாலைக் கம்பிகளை எண்ணிக்கொண்டு இருப்பதும், அடிபட்டு, சிறை பட்டு செத்ததும் கண்கூடாகத் தெரிந்தும், எப்படித்தான் பலருக்கு இன்னமும் இந்த மூட பக்தி இருந்துகொண்டே இருக்கின்றது என்பது தெரியவில்லை.

மொத்தத்தில்,  எல்லாக் கடவுள்மார்களையும் படைத்த மனிதன் அவர்கள் எல்லாவறையும் மனித அறிவு கூட இல்லாத ஒரு முழு முட்டாள்கள் ஆகவே படைத்து வைத்திருக்கிறான். கடவுள்களுக்குச் செய்யும் பலவிதமான 'முசுப்பாத்தி' யான செய்கைகள் மூலம் மனிதர்களே இதனை நிரூபிப்பதனைக் காணக்  கூடியதாக இருக்கின்றது.

இது நல்லது, இது கெட்டது என்று சொல்ல ஒரு கடவுள் தேவை இல்லை; ஒரு சிறு அறிவுடைய மனிதனுக்கே எல்லாம் தெரியும்.

ஆதி மனிதன் இப்போது வந்தால் எங்கள் எல்லோரையும் கடவுள் என்றல்லவா நினைப்பான்? கடவுள்தான் செய்கிறார் என்று அவர்கள் நம்பிய பல விடயங்களை இங்கு, இப்போது ஒவ்வொரு மனிதனும் அல்லவா செய்கிறான்!

கடவுள் என்று ஒருவர் இருந்தால்,  அவர் உண்மையில்,

* ஒரு பூரண அறிவுத் திறன் உள்ள

* பல் பரிமாண மூளை  உடைய

* புகழ் விரும்பாத,

* தானாகவே எல்லாம் அறியக் கூடிய

* மனம் அறிந்து செயல் புரியும்

ஒருவராக இருக்க வேண்டும்.


அப்படியான கடவுளிடம் அவரின் பிள்ளைகள் ஆகிய நாம்,

* வழிபடவோ,

* புகழ் பாடவோ

* இரக்கவோ

* வேண்டவோ

* கேட்கவோ

* சொல்லவோ

* பயப்படவோ

* சத்தமிடவோ

* அழவோ

தேவை இல்லாமல் இருக்க வேண்டும்..


அவருக்கு, அவர் பிள்ளைகளுக்கு

* எப்போது?

* எங்கு?

* எவ்வாறு?

* எவ்வளவு?

கொடுப்பது, எடுப்பது என்பது கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும்!


அப்படித் தெரியவில்ல என்றால் அது கடவுள் இல்லை, சாதாரண மனிதன்தான்! அல்ல, மனிதனிலும் கீழானவன்!

இவ்வளவு வணக்கங்களையும், பக்கத்து வீட்டுக் காரனுக்குச் செய்தால் சிலவேளை ஏதாவது நன்மை கிடைக்கலாம்! கடவுள்மார்களால் ஏதாவது வித்தியாசமாக வருவதாக இதுவரை எந்த சான்றுகளும் இல்லை.

எத்தனையோ பேரின் கடின உழைப்பினால் உருவாக்கப்பட்ட பொருட்களை உபயோகித்து ஆக்கிய உணவின் முன்னால் இருந்து கொண்டு,  தெரியாத, காணாத யாரோ ஒரு கடவுள்தான் அவ்வுணவைத் தந்தார் என்று நன்றி கூறுவது அறிவீனமாகத் தெரியவில்லையா?

நல்லது நடந்தால் கடவுள் செய்தார் என்றும், கெட்டது நடந்தால் தங்கள்  விதி என்றோ அடுத்தவன் காரணம் என்றோ புலம்பிக் கொள்வார்கள்.

அதாவது, விபத்து நடந்தது என்னால், கொண்டு போய் அடித்தது தங்கள் என்றும், உயிர் போகாது கால் முறிந்ததோடு உயிர் தப்ப வைத்தது கடவுள்தான் என்று பிதற்றிக் கொள்வார்கள். இரண்டுமே கடவுள் செயல் என்று அல்லவா எடுக்க வேண்டும்?

உலகில் இலட்ஷம்  கடவுள்மார் இருக்கின்றார்கள். உண்மையான கடவுள் மற்றைய எல்லாப் பொய்க் கடவுள்மார்களையும் கொன்று ஒழிக்க முடியாமல் அல்லவா இருக்கின்றார்!

முடிவில், உண்மையான சக்தி வாய்த்த கடவுள் என்று ஒருவர் இருந்தாரேயானால்,

"இருந்தால் இருத்துவிட்டுப் போகட்டுமே; எல்லாம் அவன் செயல் தானே? நீங்கள் யார் அவனுக்கு அறிவுரை, வழிமுறை  கூறிவிட?"

நீங்கள் லஞ்சம் கொடுத்தோ, வசியப்படுத்தியோ, புகழாரம் சூட்டியோ அல்லது இரந்து கேட்டொ அவர் மனம் மாறுவார் என்றால், அவர் கடவுள் ஸ்தானத்தில் இருக்க அருகதை அற்றவர் அல்லவா? நாளைக்கு, இன்னொருவர் கூடுதல் லஞ்சம் கொடுத்தால் அந்தப் பக்கம் சாய்ந்து விடுவாரே!

நீங்கள் வழிபடுவதை விட்டுவிட்டால் அவர் பூமி சுற்றுவதை நிற்பாட்டப்  போவது இல்லை.

தொடர் வழிபாடு செய்தால் உங்களை தாக்கும் வருத்தங்களும் நிற்கப்போவது இல்லை.

மதங்களால் வசியப்படுத்தப்பட்டு, அறிவில்லாக் கற்பனைக் கடவுள்மார்கள் உங்களுக்கு எல்லாம் தருவார்கள் என்று நம்பி, சோம்பேறிகளாகி, அறிவை இழந்து அழியாது, உங்கள் அறிவைப் பயன்படுத்தி உங்களுக்குத் தேவையானவற்றை நீங்களே தேடிக்கொள்ளுங்கள்! முதலில் உங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் .

கடவுளை ஒதுக்கித்த தள்ளிய நாடுகள் எல்லாம் உலகின் முதல் தர வரிசையில் முன்னேறுவதும, கடவுளே கதி என்று திரியும் பிரதேசங்கள் எல்லாம்  'எல்லா' கஷ்டங்களையும் அனுபவிப்பது கண் முன்னாள் தெரிகின்றதே!

மத குருமாருக்குத் தெரியும் இதெல்லாம் பம்மாத்து என்று. ஆனால் அடியார்கள் பாவங்கள். பயமுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்!  பயத்தோடு பக்தி கொண்டு கூட்டத்தோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருந்தால் இறை தண்டனையில் இருந்து தப்பி விடலாம் என்று நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். எப்படி நடித்தாலும் நடப்பவை உங்கள் முயற்சிக்கு கேற்ப நடந்துகொண்டுதானிருக்கும்.

இப்போது நடப்பவைகளை பார்க்கும்போது இவர்கள்கூறும் கடவுள்களையும், ஆலயங்களையும், கடவு சொத்துக்களையும்  காப்பாற்ற மனிதர்கள்தான் போராடுகிறார்கள். முட்டி மோதுகிறார்கள். சிறை செல்கின்றனர். இறக்கின்றனர்.

இத்தனையும் கண்டும் இன்னுமா புரியவில்லையா மனிதன் உருவாக்கிய  உந்தக் கடுவுள்கள் எல்லாம் 'சும்மா' க்கள் என்று?

⇖⇗⇖⇗⇖⇗⇖⇗அன்பே அனைத்தும்  ⇖⇗⇖⇗⇖⇗⇖⇗

சந்திரகாசன்,செல்வதுரை

4 comments:

  1. Nageswary UruthirasingamWednesday, January 22, 2020

    அருமையான பதிவு. கடவுள் என்பவர் ஒருவரே.நான் ஒருவர் தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் நான் வேறு வேறு உறவாக உணர்வாக நம்பிக்கை கொடுக்கிறேன். என்னை நானே அமைதிப்படுத்தி எனக்குரிய பாதையை செம்மைப்படுத்தி சமூக நலனில் அக்கறையுடன் தீமைகள் செய்யாது எனது கடமையை சரியாக செய்வதற்கு வழி சளைக்கும் பாதை தான் சமயம்.அடுத்த மதங்களின் கொள்கைகளை பற்றி பேச தற்போது முடியவில்லை. சைவசமயம் விலக்கிய ஐந்து கொள்கைகள் அவற்றை மீறும்போது ஏற்படும் விபரீதங்கள் சமூக அனர்த்தங்கள் மற்றைய உயிர்கள் படும் கஷ்ரங்கள் யாவும் நாம் அறிந்ததே.இது இப்படி இருக்க நாம் எமக்கு என்று ஒரு வட்டம் போட்டு அதற்குள் நிற்பதும் மனித நேயத்தின் ஒரு பண்பு தான். தன்னைத் தான் பாதுகாக்க மனிதனுக்கு ஆடை அவசியம் என்பது போல் தற்பாதுகாப்பிற்கும் சூழ உள்ளவர்களன் பாதுகாப்பிற்கும் மதம் என்ற வட்டம் அவசியமாகிறது.உன்னை நீ திருத்து சமூகம் தானாகவே திருந்தும்.உலகத்தை சீர்ப்படுத்த வேண்டும் என்றால் முதலில் ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும்.........குடும்பம், இனம் ,சமூகம்......இப்படி நீண்டு கொண்டே செல்லும் மனித வாழ்வியலை சீர்ப்படுத்த உள்ளதே சமயம்.இதை கூட இன்று சின்னா பின்னப் படுத்தி ஆதாரங்கள் அழிக்கப்பட்டு கருத்துக்கள் முட்டி மோதி போகும் இடம் தெரியாமல்..............

    ReplyDelete
    Replies
    1. ப.கயல்விழிWednesday, January 22, 2020

      மனித வாழ்வியலை சீர்ப்படுத்த உள்ளதே சமயம் எனப் பல நல்ல விடையங்களை குறிப்பிடட சகோதரி,நீங்கள் குறிப்பிட்டவை எல்லாம் நியாயமானது.அது இந்து ஆலயங்களும் ,குருமாரும் நன்னெறியையும் ,பண்பாட்டினையும் மக்களிடம் வளர்த்ததெனில் நீங்கள் கூறுவது சரி.அப்படி எங்கு நடக்கிறது,ஆலயங்களெல்லாம் பணம் மட்டும் வசூலிப்பதனையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டுள்ளதுடன் மக்கள் பற்றிய கவலை அறவே எல்லை.இன்றுஇலங்கையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு மிகவும் கொடிய வறுமையில் வாடும் கடைசி ஒரு குழந்தைகளுக்காவது எதாவது இந்து ஆலயங்கள் செய்திருக்கின்றதா -இல்லை.சரி ஒரு மனிதனாவது ஆலயம் செல்வதால் நன்மார்க்கத்தினை அறிந்திருக்கிறானா -இல்லை.கோவில் செல்வோரிடம் சமய சம்பந்தமாக கேட்கப்படும் ஒரு கேள்விக்கு பதில் சொல்லத் த்தெரியுமா -இல்லை, எல்லாரையும் புதுப் புது மூட நம்பிக்கைகளால் பயப்படுத்தி முடடாளாக்கிக்கொண்டு ,அதில் பெரும் வருமானத்தையே எல்லா ஆலயங்களும் தேடிக்கொண்டு இருக்கின்றன.இன்று தூளும்,கஞ்சாவும் இந்துக்கள் அதிகள் வாழும் பகுதிகளிலேயே நடமாடுகின்றன .ஏனெனில் மக்கள் சமய வழியில் நல்வழிப்படுத்தப்படவில்லை.

      Delete
  2. மெய்யப்பன்Monday, February 03, 2020

    கடவுளையே இவ்வளவுக்குத் தாக்கிப் பேசும் அளவுக்குத் துணிவு வருவது மிகவும் அபூர்வமான தைரியம்தான்!

    திராவிடக் கட்சிகளை விட்டு எப்படி வெளியில் வர முடியாமல் இருக்கிறோமோ அதே அளவுக்கு கடவுள் பயத்தையும் நம்மால் விட முடியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. திராவிடர் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள்.பயப்பிடுகீறீர்கள்.நியாயம்.இதுவரையில் காணாத, ஒண்ணுமே,ஒருவருக்கும் பண்ணாத யாரோ சொல்லிய கற்பனைக் கடவுளுக்கெல்லாம் பயப்பிடுவதில் என்ன நியாயம்

      Delete