அகல பாதாளத்தை நோக்கி தமிழ் அரசியல்

[தொலைபேசியில்  சண்டியன் சரவணை] 

ஊரில் அரசியல் நடுநிலையில் வைத்து பேசவல்லவர் என்றால் சண்டியன் சரவணையை விட வேறு ஒருவர் இருக்க முடியாது. நீண்ட நாட்களின்பின் அவருடன் நான்   தொலைபேசியில் பேசும் வாய்ப்பு சில நாட்களுக்கு முன் கிடைத்தது.

 ''வணக்கம் ,அண்ணே! எப்பிடி சுகமாய் இருக்கிறீயளே?'' என்று வழக்கம்போல் ஆரம்பித்துக் கொண்டேன் நான்.

 ''என்ன தம்பியே? நீண்ட காலத்துக்குப்பிறகு உன்ரை குரல் கேட்குது! இலங்கையில எலெக்சன் வருக்குதோ?  என்ற வழமையான கிண்டலுடன் சொல்லால் செல் அடித்தார் சரவணை.

வேறென்ன பாருங்கோ. உங்கை எலெக்சனுக்கு 40 கட்சியள் களத்தில் நிக்கிறதெண்டு  அறியேக்கை , இவையெல்லாம் என்ன எண்டு விளங்கேல்லை அண்ணை!

 ''இதில என்ன தம்பி புதுசாய் இருக்குது.  தமிழரிட்டை இருந்த ஆயுதபலத்தை உலகநாடுகளின்ர உதவியால அழிச்சாச்சு.அது பழையகதை. அடுத்தது இந்த உலகநாடுகள் பிரதிநிதிகள்  வந்தா தமிழர் தரப்பென்று ,இப்ப தமிழர் பிரதிநிதியாக இருக்கிற கூட்டமைப்பினரையுமெல்லே சந்திச்சு கதைக்கினம்.'' என்றுஆரம்பித்தார் சரவணை.

 ''அதில என்ன அண்ணை பிரச்சனை?''என்றே கிளறிக்கொண்டேன் நான்.


''அடே தம்பி , உந்த இலங்கை-உலகநாடுகளின்ர சந்திப்பில   தமிழர் கட்சி ,தமிழரின்ர தீர்க்கப்படாத பிரச்சனைகளை எல்லே  நினைப்பூட்டி கொள்ளுறதும் அரசாங்கத்துக்கு பெரிய தலையிடியாய் இருக்கு! என்றார் சரவணை.


''பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டியவன் தீர்க்காட்டி சந்திக்கிற வாய்ப்புகளில  பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் அடுத்தவனிட்டை  எடுத்துச் சொல்லுவினம்தானே அண்ணை'' என்றேன் நான்.


''அதுதான்!அதுதான்,சிறுபான்மை கட்சியள் இருந்ததால் தானே இந்தத் தொல்லை. அதுதான்  உந்த சிறுபான்மை கட்சியளைப்  பாராளுமன்ற பக்கம் வராமல் பண்ண திட்டம் போட்டுட்டாங்கள்.'' என்றார் சரவணை.

''என்னண்ணை சொல்லுறியள், விளக்கமா சொல்லுங்கோவன்'' என்றேன் நான்.


''எட அசடு! , கிழக்கில முசுலீம் மத்தியில பலமாய் இருந்த முஸ்லீம் காங்கிரசை முந்தின அரசுகள் மூண்டாய் உடைச்சு அவையளின்ர பலத்தையும் அழிச்சுப்போட்டினம்.இப்ப தமிழரின்ர யுத்தம் முடிஞ்சாலும் அரசுக்கு தலையிடியாய் இருப்பது தமிழர் கூட்டமைப்புதான் .. அதுதான் இந்த தேர்தலிலை இல்லாம பண்ணிறதோட , இன்னும்  தமிழ் மக்கள் மத்தியில, எந்த அரசியல் தலைமை ஒன்றைக்கூட  இல்லாமல் செய்யும் சதி முயற்சியிலதான் எங்கும் இல்லாத அளவு அரசியல் கட்சிகளும்,ஓவ்வொரு மாவட்டங்களிலும் 10க்கு மேற்பட்ட  சுயேச்சைக் குழுக்களையும்  தேர்தலுக்காக இறக்கி,  வாக்குகளை  பிரிக்கப்பட திட்டமிட்டு இருக்கினம்...''என்ற சரவணையை குறுக்கிட்ட நான்

''என்னண்ணை 10,10 சுயேட்சையளோ? ஆரண்ணை இந்த சுயேட்சையள்?'' என்றேன் ஏங்கியவாறு.

''வேறை யாரடா தம்பி.எங்கடை தமிழ்க்  குஞ்சுகள் தான் வழமைபோல விலைபோயிருக்கினம், இதோட அரசுக்கு ஆதரவான தமிழ் கட்சிகளும் கேட்கினம் எண்டால் பாரன் இந்தமுறை எலெக்ஷன் முடிவுகள் எப்பிடி இருக்கப்போகிறதெண்டு'' என்றவாறு ஒரு பெருமூச்சினை விட்டார்  சரவணை.

''அப்போ இனிப்  பாராளுமன்றத்துக்குள்ளேயும் தமிழனுக்கு இடமில்லை என்று சொல்லுறியள்.'' என்றே என் சந்தேகத்தினை தொடுத்தேன் நான்.

''வேறென்ன தம்பி! தமிழரே, தமிழரின் அரசியல் எதிர்காலத்தை சுத்த சூனியமாக்க துணையான  பிறகு,  நாங்கள் சிலர் இருந்து  என்ன செய்யமுடியும் தம்பி'' என்று தம் இயலாமையை கவலையுடன் வெளிப்படுத்திக்கொண்டார் சரவணை.

''இப்பிடியே காலம் காலமாய் ஒவ்வொண்டையும் இழந்து கொண்டு இருக்கிறம் எண்டது தமிழ் அரசியலில தலைகாட்டிற அரசியல் வாதிகளுக்கு விளங்குது இல்லையே''என்றேன் நான்.


''இழக்கிறதை வச்சு இன்னும் அரசியலை வளர்க்கலாம் எண்டு தப்புக்கணக்கெல்லே போடினம்'' என்ற சரவணையார் ''இருக்கிற ஒரு அரசியல் பலத்தையே தொலைச்சிட்டு எல்லாரும் தலையில துண்டைப் போட்டுக்கொண்டு அழியவேண்டியது தான்.'' என்றவாறு  அன்றய உரையாடலை வேதனையுடன் முடித்துக்கொண்டார் சண்டியன் சரவணை.
-அரசி  

0 comments:

Post a Comment