எந்த நாடு போனாலும்….….. தமிழன் ஊர் [சில்லாலை]போலாகுமா


           எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா        

சில்லாலை இலங்கையின் வடபுலத்தில் யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கே இந்தியப் பெருங்க்கடலின் கரையில் சம்பில் கடலுடன் ஆரம்பமாகும் ஊர். சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இவ்வூரின் எல்லைகளாக மாதகல், பண்டத்தரிப்புசெட்டிகுறுச்சி,சாந்தை  என்ற ஊர்கள் அமைந்துள்ளன.
இறைபணி
சில்லையூர் மக்கள் கிறிஸ்தவ மதம் (கத்தோலிக்கம்), இந்து மதம் என்பவற்றை தமது ஆன்மீக மதங்களாகவும், வேளாண்மை, மீன்பிடி, கைத்தொழில், வர்த்தகம் போன்றவற்றை தமது தொழிலாகவும் கொண்டு வாழ்கிறார்கள். பனை, தென்னை, சோலைகள், நெல்வயல்கள், கொழுந்து, வாழை, கமுகு, மா, பலா, கனிதருமரங்கள், வெங்காயம், மிளகாய், மரக்கறி நிறைந்த இடமாக இக்கிராமம் அமைந்துள்ளது.
யோசப் வாசு அடிகளார்
யோசப் வாசு (ஏப்ரல் 21, 1651 - ஜனவரி 16, 1711) இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார்.
கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். இக்கிராமம் 34க்கு மேற்பட்ட குருமார்களையும் 40க்கு மேற்பட்ட கன்னியாஸ்திரிமார்களையும் 10க்கு மேற்பட்ட இல்லறத்தொண்டர்களையும் இறைபணிக்கு அளித்துள்ளது. பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார்.
1692 இல் கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தாலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார். 1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பரி. வியாகுலமாதா கோயில் வளவில் சிறு ஓலைக் கோயில் கட்டிப் பலி ஒப்புக் கொடுக்கும் போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார்.
கதிரைச்செல்வி ஆலயம்
சில்லையூரின் மத்தியில் வானுயர்ந்த கோபுரங்களுடன் காட்சியளிப்பது சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைச்செல்வியின் ஆலயம். இவ்வாலய விழாவை சில்லையூர் மக்கள் மரியன்னையின் விண்ணேர்ப்பு விழாவாக ஆவணி 15ந் திகதி மிக சிறப்பாகக் கொண்டாடுவார்கள். மணியோசையுடன் கூடிய கொடியேற்றம், திரைப்பாடல், விருத்தங்களுடன் நவநாள் வழிபாடுகள், நற்கருணைப்பவனிப் பெருவிழா, கூட்டுத்திருப்பலி, கரோலைப்பாடல்களுடன் திருச்சுருப ஊர்வலம் என்பன நடைபெற்ற பின், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள், கலை கலாச்சார போட்டிகளின் இறுதியில் நாட்டியம், நாடகம், சில்லையூரின் பழமையும் பெருமையும் வாய்ந்து இன்றும் புதுமையுடனும், புகழுடனும் விளங்கும் நாட்டுக்கூத்து சில்லையூர் கலைஞர்களால் அரங்கேற்றப்படும்.
சில்லாலை வைத்தியம்
எல்லோரும் கைவிட்டால் சில்லாலை வைத்தியம் என்று ஒரு பழமொழி உண்டு. சில்லையூரின் பாதுகாவலியாம் கதிரைத்தாயை மருந்து மாதா என்றும் அழைப்பார்கள். அதற்கமைய அநேக பரம்பரை வைத்தியர்கள் இங்கு உள்ளனர். நாடி பார்த்து வருத்தத்தைக் கண்டறிந்து வாகடம் ஏடு பார்த்து மருந்தறிந்து மூலிகைகள், தாவரஇலை, பட்டை, வேர் போன்றவற்றைக் கொண்டு வருத்தத்தை மாற்றும் சித்த ஆயுள்வேத வைத்தியர் பலர் உள்ளனர்.
குழந்தைப்பிள்ளை வைத்தியத்துக்கு தலைசிறந்த வைத்தியர்கள் இங்கு உள்ளனர். பத்துத் தலைமுறை தாண்டிய எஸ்.பி. இன்னாசித்தம்பி பரம்பரை, எஸ்.பி. அத்தனாசியார் வழித்தோன்றல்கள், இலங்கையின் புகழ்மிக்க வைத்தியர்களாக இருந்தவர்கள் இன்றும் உலகளாவிய ரீதியில் வைத்திய துறையில் பெருமையுடன் விளங்குகின்றனர்.
தொகுப்பு: v.சிந்தாத்துரை
குறிப்பு:வாசகர்களே உங்கள் ஊரின் பெருமைகளையும்,ஊரை வளர்த்த பெரியோர்கள் அடங்கலாக எழுதி அனுப்புங்கள்.அவற்றினை அனைவரும் அறிவோம்.பெருமை கொள்வோம்.

2 comments:

 1. சில்லாலையின் எல்லைகள் பண்டத்தரிப்பு மாதகல் சாந்தை ,செட்டியகுறிச்சி போன்றனவே இருக்கிறது . சில்லாலை ,சுழிபுரம்,வடளியடப்புக்கு நடுவில் வேறுபல ஊர்கள் இருக்கிறது.

  ReplyDelete
 2. ‎Manoharan KandiahSaturday, June 07, 2014

  வீ .சிந்தாத்துரை அவர்களின் சில்லாலை பற்றிய பதிவு அற்புதம் .நானும் அயலில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவன் .வாஸ் அடிகளார் பற்றி அறிந்துள்ள போதும் மேலதிக தகவல்கள் பல அங்கு .எந்த ஊர் போனாலும் ...நம்ம ஊர் சில்லாலை போலாகுமா ? என்று உள்ளது அது போன்று **எல்லோரும் கைவிட்டால் சில்லாலை வைத்தியம்** .என்றும் சொல்வார்கள் இன்னாசித்தம்பி /அத்தனாசியார் பரம்பரை 10 இல்லை 11 பரம்பரையாக வைத்தியம் .இன்னாசித்தம்பி அவர்களின் வீட்டு விறாந்தையில் 60 களில் கொளுவபட்டு இருந்த படங்களில் கண்டேன் .
  அவர்களின் வீட்டில் ஒரு சிங்கள திரை படம் படமாக்க பட்டது .அழகிய அந்த கிராமத்தில் வீட்டு தோட்டங்கள் செழிப்புற வைத்தது முற்றிலும் உண்மையே .சிறிய வீடேன்றாலும் அழகாக /சுத்தமாக /நேர்த்தியாக வைத்திருப்பார்கள் .அதற்கு ஒரு உதாரணம் .70 களில் நான் கடல் படையில் காரை நகரில் .எனது சிங்கள நண்பர் ஒருவரை சில்லாலை தாண்ட வரும் சாந்தைக்கு சில்லாலை ஊடே நடையில் பயணம் .அவர் சில்லாலையை கண்டு மிரண்டு போய் **மச்சான் யாழ்ப்பாணத்தில் இத்தனை அருமையான கிராமமும் உண்டோ ?** என்றார் .ஆனால் யுத்தத்திற்கு பின் சில்லாலை பொலிவிழந்து காட்சி அழிப்பது உண்மை .
  சின்ன ROME என்றும் சில்லாலை அழைக்கப்பட்டது .நாட்டு கூத்து நாட்டார் பாடல் செழிப்புற்ற கிராமம் .அன்று நான் சிறுவனாக ஈஸ்ட்டர் இன்போது அவர்கள் நடித்த ஜேசுநாதர் வாழ்க்கை பற்றிய நாடகம் கதிரை மாதா ---கதரை செல்வி --பேராலய முன்றலில் பார்த்தவன் .அந்த அவர்களின் இயல்பினால் தான் என்னவோ அந்த கிராமத்தை சேர்ந்த செல்வராசன் .கால போக்கில் பல்கலை வேந்தன் சில்லை ஊர் செல்வராசன் ஆகினார் போலும்

  ReplyDelete