ஓடிவரும் சனங்கள்

படுக்கையில்……..பறுவதம்பாட்டி

படுக்கையில் பறுவதம் பாட்டி என்றதும் எல்லோரும்போல் நீங்களும் ஓடி வந்து விடாதீர்கள்.வீட்டினில்   நடக்கும் போது ஈராமான நிலத்தில் தெரியாமல் காலை வைத்ததன் விளைவு விழும்போது வலது கையை ஊண்டியதால் அக் கைஎலும்பு முறிந்துவிட்டது.காலிலும் நோவு.வைத்தியசாலை சென்று போடவேண்டிய கட்டுக்களுடன் வீடு வந்து சேர்ந்துவிட்டார் பறுவதம் பாட்டி.பாட்டி படுக்கையில் இருந்து எழ ஒரு வாரமாக அம்மாவும் அப்பாவும் அனுமதிக்கா விட்டாலும் அவர் அசையாது இருப்பது எங்களுக்கெல்லாம் கை முறிந்தது போன்று இருந்தது.இது போதாதென்று பாட்டியை வருத்தம் பார்க்கவென்று தொகை தொகையாக  நண்பர்கள் உறவினர் என்றுஓடிஓடி வந்தவர்களால் அம்மாவும் அப்பாவும் வருத்தக்காரப் பாட்டியைய் கவனிப்பதா இல்லை வந்தோரைக் கவனிப்பதா என்று ஓடி ஓடிக் களைத்தே போனார்கள்.
பாட்டி விழுந்தது அறிந்து மாமா வீட்டிலிருந்து வந்து சேர்ந்த அண்ணாமலைத் தாத்தாவுக்கும்  ஒரு வாரமாக பொழுதும் கல கலப் பாகக் கழிந்தது.எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த பாட்டியும் ஒரு செருமலோடு தாத்தாவை அருகில் வரும்படி கையசைத்தாள்.
"என்ன குடிக்க ஏதன் வேணுமே?"என்றவாறே பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தார் தாத்தா.
"அது கிடக்கட்டுக்கு!"என்ற பாட்டி தாத்தாவிடம் "பாத்தியளே என்ன சனங்கள் இந்தச் சனங்கள்."
"என் ஆரும் வருத்தம்பார்க்க வராம விட்டினமே?" தாத்தாவும் புரியாமல் கேட்டுவிட்டார்.
பாட்டி கொஞ்சம் சூடாகவே பேச ஆரம்பித்துவிட்டார்.
"என்ன கதை கதைக்கிறியள்.நாங்கள் கனடாவிலைதானே இருக்கிறம்.இந்தப் பிள்ளையள் வெளியிலை வேலையும் வீட்டிலை சமையலும்,பிள்ளையளின்  அலுவலும் எண்டு நாயலைச்சல் அலையினம்.போதாக்குறைக்கு நான் வேற படுக்கையில கிடந்திட்டன்.அதுகளுக்கு அது வேற சுமை.இவைகள் போதாது என்று வருத்தம் பார்க்கவென்று வந்து இந்தச் சனங்கள் அதுகளுக்குப் பெருந் தொந்தரவேல்லோ குடுத்திட்டினம்."
"ஐயோ!பறுவதம்,சொந்தக்காரர் அறிஞ்சா கோவிச்சுப்போடுவினம்"என்று கூறியபடி சுற்றும் முற்றும் பார்த்தார் தாத்தா.
"நான் இரத்த உறவுகளைக் குறைசொல்லேல்லை.மற்றவர்களையும் வரவேண்டாம் எண்டும் சொல்லேல்லை.அவர்கள் கொஞ்சக் காலம் பொறுத்து,நானும் இயங்கக் கூடிய நிலை வந்த பிறகு வந்தால்   யாருக்கும் சிரமமிருக்காது இல்லையோ?நாட்டுக்கேற்ற மாதிரி எத்தனையோ மாற்றங்களைக் கொண்டுவந்து விட்டினம்.இந்தப் பழக்கத்தையும் மாற்றிக்கொண்டால் தான் என்ன?ஏன்?ஒரு மனிசர் ஆஸ்பத்திரியிலை படுத்துக் கிடந்தா,அங்கையும் அப்பிடித்தானே கூட்டம் கூட்டமாய் வந்து ஆஸ்பத்திரியையே ஒரு கலக்கு கலக்கிப் போடுவினம். இதன் பலனா அங்கை வேலை செய்யிற டாக்டர்,நேஸ் மாருக்கு சினம் பிடிக்க,அவையள் நோயாளிகளை கவனியாகப்போக எவ்வளவு பாதிப்புகள் சொல்லுங்கோ பார்ப்பம்!வீட்டுக்கு ஒருத்தராய் வந்தால் போதாதே?" 
  பாட்டியின் வாதங்கள் நியாயமானது என தாத்தாவின் மௌனம் பிரதிபலிக்க பாட்டியின் புதிய சிந்தனைகளோடு நானும்எனது அன்றைய homework னுள் நுழைந்தேன்.

--------  ஆக்கம்:பேரன்,செல்லத்துரை மனுவேந்தன்   

1 comments:

  1. பாட்டியின் கதை தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete