பச்சை குத்துதல் புற்று நோய் உண்மையா?- பாதிப்புகள்?
பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன.

பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் நிறக் கலவைகளில் பலவிதமான இரசாயனங்கள் கலந்துள்ளன. நிக்கல், குறோமியம், மங்கனீஸ், கோபாலட், டைடேனியம் ஒட்சைட் போன்றவை முக்கியமானவை. (nickel, chromium, manganese, cobalt, or titanium dioxide).  இவற்றில் பல நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அந்த இரசாயனங்கள் பச்சை குத்தப்பட்ட இடத்தில் மட்டுப்பட்டு நிற்காமல் அருகில் உள்ள சருமத்திற்கும் நிணநீர்த் தொகுதி ஊடாக நிணநீர்க் கட்டிகளுக்கும் பரந்து சென்று அவற்றை சற்று வீக்கமடையச் செய்வதாக அண்மைய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவை நச்சுத்தன்மை வாய்ந்தமை என்பதற்கு அப்பால் நிக்கலும் குரோமியமும் புற்றுநோய்த் தூண்டியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. எனவே பச்சை குத்துபவர்களுக்கு எதிர்காலத்தில் பாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஆனாலும் புற்றுநோய் ஏற்படுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை.

பச்சை குத்தப்பட்டவர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி சாதாரணமாக இருப்பதால் அவை பாதுகாப்பானவை என்ற எண்ணம் சாதாரண மக்களிடம் இருக்கிறது. ஆனால் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட நீண்ட பல வருடங்கள் எடுக்கும் என்பதால் அவை பற்றி பெரும்பாலும் தெரியவருவதில்லை.

பச்சை குத்துவது என்பது சருமத்தில் சில அடையாளங்களை அல்லது கோலங்களை அல்லது எழுத்துக்களை வர்ண கலவைகளால் பதிப்பதாகும். சிறிய ஊசிகள்களால் நுண்ணிய அளவு வண்ணக் கலவைகளை மீண்டும் மீண்டும் சருமத்தின் மேற்பகுதியில் குத்துவதால் அவை உள்ளே செல்கின்றன.

இவை நிரந்தரமான அடையாளங்கள் என்பது குறிபிடப்பட வேண்டியதாகும். காலத்தால் அழியாதவை. எனவே அந்நியப் பொருளான அது உடலில் நிரந்தரமாகக் குடிகொள்ளப் போகிறது என்பது கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம். எந்த அந்நியப் பொருளானாலும் அதற்கு எதிராக உடல் எதிர்வினையாற்றக் கூடும்.

புற்றுநோய் வருமா இல்லையா என்ற பிரச்சனைக்கு அப்பால் வேறு பல பாதிப்புகள் ஏற்படுவதை மருத்துவர்களாகிய நாம் காண முடிகிறது.

ஒவ்வாமை சரும நோய்கள் மிக முக்கியமானவை. அந்த இடத்தில் சருமத்தில் அரிப்பு எடுப்பது, அழற்சி மற்றும் எக்ஸிமா போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு உடனடியாகவே அத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் வேறு சிலருக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவை தோன்றக் கூடும்.

பச்சை குத்திய உடங்களில் கிருமித் தொற்று ஏற்பட்டு புண்கள் தோன்றுவதை காண முடிகிறது. இதற்குக் காரணம் பச்சை குத்தும் பணியாளர்கள்; தமது கைகளை கழுவுதல், குத்துவதற்கு உபயோகிக்கும் ஊசிகளை கிருமி நீக்கம் செய்யாமை போன்ற சுகாதார நடைமுறைகளை சரியான முறையில் கடைப்பிடிக்காமையே ஆகும். சருமத்தில் கிருமித் தொற்று மட்டுமின்றி பெரிய சீழ் கட்டிகள் வரை ஏற்படுவதுண்டு.

பச்சை குத்திய இடங்களில் தழும்புகள் தோன்றுவது மற்றுமொரு பிரச்சனை. அழகைத் தேடப் போய் அசிங்கத்தில் முடிவதாக இது அமையும். இது எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. உடலியல் ரீதியாக சிலருக்கு இவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இருந்தபோதும் ஆழமான பெரிய புண்கள் ஏற்பட்டால் எவருக்கும் தழும்புகள் தோன்றலாம். தழும்புகள் சுலபமாகக் குணப்படுத்த முடியாதவை என்பதால் அவை வராமல் தடுப்பதே உசிதமானது.

சிறிய காய்கள் முளைகள், சரும அழற்சி போன்றை உள்ள இடங்களில் பச்சை குத்துவது அறவே கூடாது. ஏனெனில் சிலருக்கு அவை பின்பு புற்றுநோயாக மாறக் கூடிய சாத்தியம் உள்ளது. புச்சை குத்துவதில் உபயோகிக்கும் நிறக் கலமிகள் அதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.

இவ்வாறாக பல வித பாதிப்புகள் ஏற்படுவதால் பச்சை குத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.
சும்மா இருந்த சங்கை ஊதி க் கெடுப்பானேன்!!

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0 comments:

Post a Comment