கடன் [கி மு 3000 ஆண்டில் இருந்து] - பகுதி 01
/ DEBT [From 3000 BC]

   

பொதுவாக கடன் என்பது திரும்பக் கொடுக்க வேண்டிய சொத்திருப்புகளைக் குறிக்கும். ஆனால் அந்தக் குறிப்புச் சொல் நன்னெறி சார்ந்த கடமைப் பொறுப்புகளையும் குறிக்கும். அமெரிக்கா பழமொழி [American Proverb] ஒன்று "நிதி நிறுவனம் அல்லது வைப்பகம் ஒன்றில் இருந்து, நீ நூறு ஆயிரம் டாலர் கடன்பட்டிருந்தால், அது உன்னை சொந்தமாக்கிறது, நீ அதனிடம் நூறு மில்லியன் டாலர் கடன்பட்டிருந்தால், நீ அதை சொந்தமாக்குகிறாய் " [ If you owe the bank a hundred thousand dollars, the bank owns you. If you owe the bank a hundred million dollars, you own the bank.] என்று கடனாளிக்கும் கடன் கொடுத்த நிறுவனத்திற்கும் ஒரு தொடர்பை வேறு ஒரு கோணத்தில் வியாக்கியானம் செய்கிறது. ஹம் முராபி (Hammurabi) ஆட்சி காலமான  கி மு 1792  - கி மு1750 இல், வட்டி, கடன் போன்றவை சார்ந்த பிரச்சனைகளுக்கு, ஹம் முராபி சட்டம் "ஒரு மனிதன் கடன்பட்டு அதற்க்கு ஈடாக தனது மனைவி, மகன் அல்லது மகளை விற்றோ அல்லது பணிவிடை ஒன்றிற்கு பிணைத்தோ இருந்தால், அவர்கள் முதல் மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்யவேண்டும், நாலாவது ஆண்டு அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்" [If a man is in debt and sells his wife, son, or daughter, or binds them over to service, for three years they shall work in the house of their purchaser of master; in the fourth year they shall be given their freedom - Code of Hammurabi 117] என்று கடன் நிவாரணம் பரிந்துரைக்கிறது. கி மு 1500 - 1000 , ஆண்டு ரிக் வேதம் " கெட்ட கனவின் தீய விளைவுகளை, நாம் கடன்களை அடைப்பது போல விரட்டுவோம் " [ Let us drive away the evil effects of bad dreams, just as we pay off debts - Rig Veda 8-47·17] என்று கடனின் கொடூரத்தை எடுத்துரைக்கிறது, அதிகமாக கி மு 539 ஆண்டை சேர்ந்த சங்கீதம் 37:21 "துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்" [The wicked borrow and do not repay, but the righteous give generously - Psalm 37:21] என கடன் கொடுக்காமல் ஏமாற்றுபவர்களையும், விஜயநகரப் பேரரசு (கி பி 1336 - 1646) காலத்தில் எழுதப்பட்ட  ஸ்மிருதி [ஸ்ருதி] சந்திரிகா "கடனாக பெற்ற தொகையை திருப்பி செலுத்தா கடனாளி, அதிகமாக கட்டாயம் தனது அடுத்த பிறவியில், கடன் கொடுத்தவருக்கு அடிமையாக, அல்லது வேலைக்காரனாக அல்லது மனைவியாக அல்லது சுமை மிருகமாக பிறப்பார் " [He who shall not pay to his creditor what he has received from him in loan (uddhara) or other way, shall most certainly be born again, either as his slave, servant, wife, or beast of burden - Smriti Chandrika] என்று கடன் திருப்பி கொடுக்காதவருக்கான இறைவனின்[?] தண்டனையை விவரிக்கிறது, சோழ நாட்டில் வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் அவரை நிறுத்தும் ஒரு வித அபூர்வ தண்டனையை நாம் காண்பதுடன், இலங்கை வேந்தன் இராவணனின் மன நிலையை "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்" என்று கம்பர் சுருக்கமான ஆனால் சக்தி மிகுந்த வார்த்தைகளில் வர்ணிப்பதையும் காண்கிறோம். இவைகள் அனைத்தும் கடன் மற்றும் அதனுடன் சம்பந்தப் பட்ட சில விடயங்களை மேலோட்டமாக ஆனால் நீண்ட நாலாயிரம் ஆண்டு காலப் பகுதிகளில் அறிய ஏதுவாக அமைகிறது.

எப்பொருளையும் எவரிடம் இருந்தாவது நீங்கள் வாங்கினால், அது கடன் பட்டதாகும் என்றாலும், கடன் என்ற சொல் பொது வழக்கில் பணத்திற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. கடன் என்ற இந்த சொல் உண்மையில் இனிப்பு நிறைந்த, ஆனால் சாப்பிட்ட பின் கசக்கும் ஒரு மோசமான மருந்து எனலாம். இதை வருத்தம் [பிரச்சனை] உணர்ந்து, எம் உடல் வலிமைக்கு [நிலைக்கு] ஏற்ற அளவில் எடுக்க வேண்டும். உதாரணமாக, சாக்ரடீஸ் மரணப் படுக்கையிலிருக்கும் பொழுது கூட அருகிலிருந்த நண்பரிடம், தம் சார்பில் அண்டை வீட்டாருக்கு ஒரு கோழியை திருப்பித் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று அறிகிறோம். அவருக்கு அந்த நிலையிலும் திருப்பி கொடுக்கும் வல்லமை இருந்ததையும், தன்னால் இயன்றதையே கடனாக பெற்றார் என்பதையும் இது காட்டுகிறது. ஆனால் உண்மையில் அப்படி எல்லா நேரமும் நடப்பதில்லை. சிலவேளை, தனிப்பட்ட நபர் சில பல காரணங்களால் கடனை அல்லது ரசீது ஒன்றை கட்டாமல் விடலாம். அதன் விளைவாக அந்த நிறுவனத்தில் இருந்து எச்சரிக்கை கடிதங்கள், தொலை பேசி அழைப்புகள் அல்லது கடன் அல்லது ரசீது வசூலிப்பவர் வரலாம். இறுதியில், அந்த தனிப்பட்ட  நபரின் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை பறிக்கலாம் அல்லது  திவாலா நிலை [Bankruptcy] ஒன்றை அவருக்கு எதிராக அறிவிக்கலாம். திவாலா நிலை என்பதானது ஒரு தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனம், பற்றாளர் எனப்படும் கடன் கொடுத்தவர்களுக்கு அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க இயலாதிருத்தல் அல்லது அதற்கான ஆற்றல் குறைவைச் சட்ட பூர்வமாக அறிவிக்கும் ஒரு முறைமையாகும். ஒருவர் தனது கடனை செலுத்த வேண்டும் என்பது ஒரு நிலையான பொருளாதார கோட்பாட்டின் படியோ அல்லது ஒரு தார்மீக கோட்பாட்டின் படியோ ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றே எனினும் அது உண்மை அல்ல, ஏனென்றால் கடன் கொடுப்பவர் ஒரு குறிப்பிட்ட அளவு பணயம் வைக்கத்தான் [risk] வேண்டும். எனவே திவால் சட்டங்கள் இல்லை என்றால், கட்டாயம் முடிவுகள் பேரழிவு ஒன்றிற்கு வித்திட்டு இருக்கும். கடன் கொடுப்பவர்கள் ஒரு முட்டாள்தனமான கடன் கொடுக்காமல் இருந்து இருப்பார்கள் என்பதற்கு என்ன உறுதிப்பாடு ? உதாரணமாக, நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றிற்கு போய், நான் குதிரைகள் மீது ஒரு பெரிய வெகுமதி கட்டி உள்ளேன், எனவே எனக்கு சில மில்லியன் காசு கடன் தரமுடியுமா என்று கேட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் அவர்கள் சிரித்து அதை நிராகரிப்பார்கள். ஏன் என்றால் நீங்கள் கட்டிய குதிரை வெல்லவில்லை என்றால், கடனை திருப்பி அறவிடமுடியாது  என்பதாலாகும். ஆனால், ஒரு சட்டம் இருந்து அது கடனை திருப்பி பெற உத்தரவாதம் கொடுக்கும் என்றால், அவர்கள் எந்த ஆட்சேபனையும் இல்லாமல், கடனாளிக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று உங்களுக்கு கடன் தருவார்கள். இப்படி கடன் கொடுப்பது தனிப்பட்டவர்களுக்கும் மட்டும் அல்ல, உதாரணமாக ஒரு தொழில் அமைப்புகளும் அல்லது வியாபாரிகளும் கடன் பெறலாம்.

'கடனும் வாங்காதே கடனும் கொடுக்காதே' என்று ஒரு பழமொழி உண்டு. ஆனாலும் இன்றைய காலத்தில் இது சாத்தியம் இல்லை. ஆளுக்கு ஆள் கடன் வாங்குவதை விட, ஒரு நாட்டிடம் இன்னும் ஒரு நாடு கடன் வாங்கும் காலம் இது. கடனும் அதற்கான வட்டியும் அல்லது வட்டிக்கு வட்டியும் ஒப்புக்கொள்ளப்பட்ட உலகம் இது. உதாரணமாக ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரியாவே முதல் வணிக மற்றும் நுகர்வோர் கடன் கொடுத்த நாகரிகம் ஆகும். இங்கு வட்டி வீதமும் நிர்ணயிக்கப் பட்டு இருந்தன. சுமேரியாவில் உள்ள லகாஷ் நகரில் [Sumerian city of Lagash] கண்டு பிடிக்கப் பட்ட  2400 BC வில்லை ஒன்று, தனது அயல் கிராமமான  உம்மா [ Umma] விற்கு கடன் கொடுத்ததையும், அதை உம்மா திருப்பி கொடுக்காததையும் அதற்க்கு கூட்டு வட்டி மூலம் வட்டி கணக்கிடப் பட்டதையும் காட்டுகிறது. வட்டிக்கு ஆங்கிலத்தில் Interest என்று அழைப்பார்கள், அதற்க்கு இன்னும் ஒரு கருத்து அக்கறையாகும். வட்டி என்று ஒன்று கிடைப்பதாலேயே கொடுப்பவன் அக்கறையோடு கொடுக்கிறான். கடன் பெற்றவனும் அக்கறையோடு பயந்து கொண்டு திருப்பி கொடுக்கிறான். அதே போல தமிழில் பணத்தை நாணயம் என்பார்கள், அதற்க்கு இன்னும் ஒரு கருத்து நேர்மை ஆகும். அது கடன் பட்டவனும் கடன் கொடுத்தவனும் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் குறிக்கிறது எனலாம். மேலும் கடன் என்ற தமிழ் சொல்லுக்கு கடமை என்றும் ஒரு பொருள் உண்டு. ஆகவே நாம் கடமையை ஒழுங்காக செய்து, வரவுக்குள் வாழ்வோம் என்றால், கடன் பாரம் இருக்காது.

"வரவு எட்டணா செலவு பத்தணா
அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது"
[பாமா விஜயம்]

அரிச்சந்திரன் தான் பட்ட கடனை அடைப்பதற்காக தன் மனைவி சந்திரமதியையே பொன்னிற்காக விற்றான் என்று ஒரு கதை படித்து இருப்பீர்கள். அந்த நிலையை நீங்களோ நாடோ அடையக்கூடாது. எனவே, துயரங்களில் எல்லாம் மிகப் பெரிய துயரம் கடன் படுவது. அதில் நீ பணத்தை மட்டுமா இழக்கிறாய் ?, மானமும் உயிரும் கூட போகிறது. அதனால் தான் மரண வேதனையால் துடித்த இராவணனின் நெஞ்சத்தை " கடன் கொண்டார் நெஞ்சம்" என்றான் கம்பர்  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
 பகுதி 02 தொடரும்

0 comments:

Post a Comment