பறுவதம் பாட்டி(உண்மைகளின் அலசல்)


ஈழத்து திரைப்படம் 
[நடந்தது என்ன?]
மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத்தாத்தாவுடன் ஈழத்துக் கலைஞர்களின்  பங்களிப்பில் கனடாவில் தயாரிக்கப்பட்டு  தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்  திரைப்படம் ஒன்றினை பார்க்கவென்று சென்று திரும்பிய பறுவதம் பாட்டி படம் முடிந்ததும் தாத்தாவினையும் அழைத்துக்கொண்டு எங்கவீடு வந்தவர், தாத்தாவுடன் புறுபுறுத்துக்கொண்டமை முதலில் எங்களுக்கு ப்புரியவில்லை.
"என்ன பிரச்சனை" என்று அம்மா கேட்டபோது தான் பாட்டி  பேசத் தொடங்கினார்.
"என்ன செய்யிறது. படம் பார்க்க தியேட்டர் போகாதனாங்கள் எங்கட கலைஞர்களும் சினிமாத்துறையில முன்னேறவேணும் எண்டுதானே ஆதரவு குடுக்கவேணும் எண்டு போறம்.அங்க போனா பழைய நிலை தான்."
"ஏனம்மா படம் சரியில்லையே?" என்றவாறே அம்மாவும் பாட்டியின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டார்.
"அதயேன் பிள்ளை கேட்கிறாய்! படம் எடுத்தவர் அவற்றை கலியாணவீட்டுக்கு சொந்தக்கரருக்கும்,நண்பர்களுக்கும் அழைப்பு விட்டமாதிரியெல்லொ படத்திலை ஆட்களை நடிக்க எண்டு சேர்த்திருக்கிறார். வந்தவையும் பொம்மை மாதிரி வந்து,வந்து போகினம். கதைக்கிறவரின் குரல் கேட்கும்போது மற்றவருடைய முகம் தான் திரையில தெரியுது. அப்பிடித் தெரிஞ்சாலும் 'ம்' எண்டு தான் முகத்தை வச்சிருப்பார். அவர் சொல்லி முடியும் வரை மற்றவர் முகத்திலை ஈயும் ஆடாது. கதைச்சுக்கொண்டு நிக்கிற இருவரும் யார்,இவர்களுக்கிடையில் என்ன உறவு,எதற்காக சந்திக்கினம்,எங்கை சந்திக்கினம் ஒரு விளக்கமும் இல்லை. நடிகர்மாரிலும் பார்க்க காருகள் தான் நிறைய நடிக்குது. ஒழுங்கான கதையில்லைசம்பந்தமில்லாத காட்சிகள்.கடவுளே! எனக்கு ரிக்கற் சிலவை யோசிக்கேலைஒரு வளர்ந்த நாட்டில வாழ்ந்தும் எவ்வளவு நேரத்தையும்,பணத்தையும் இப்பிடி செலவழிச்சு ஒரு நல்ல திரைப்படத்தை தரமுடியாமல் எங்கட ஆட்கள் இருக்கினமே எண்டதுதான் கவலையா போச்சுது."
"நடிகர்மாரை தேடிப்போகாம கண்டநிண்டவையளை திரைக்கு கொண்டுவந்தா அப்பிடித்தானே இருக்கும்.” என்று அண்ணாமலைத் தாத்தாவும் தன்னுடைய கவலையினை வெளிப்படுத்திக்கொண்டார். “ஏனம்மா ஒரு சில நல்ல இலங்கைத் தமிழ் சினிமாப் படங்கள் முந்தி வந்து போய் பார்த்தநீங்கள் தானே." என்று அம்மா நினைவூட்டினார்.

"அதென்ன இரண்டு,மூண்டு படங்கள் தான்.பிறகு வளரேல்லையே! நல்லாயெல்லெ விழுந்திட்டினம்."

“எங்கட சினிமாத்துறையும் இனிமேற் காலத்திலை சாதனைகள் படைக்கத்தான் போகுது.இருந்து பாருங்கோ அம்மா.”

"பார்ப்பம்"என்று அக்கதையினை சலிப்புடன் முடித்துக்கொண்டார் பாட்டி.
எங்கடை கலைஞர்களை ஊக்குவிப்பதில் பாட்டிக்கு இருக்கும் மலையளவு ஆர்வத்தினை எண்ணியவாறு  நானும் கொம்பியூற்றரில் மூழ்கினேன்.
--பேரன்:செல்லத்துரை மனுவேந்தன்

1 comments:

  1. கலியாணவீட்டுக்கு சொந்தக்கரருக்கும்,நண்பர்களுக்கும் அழைப்பு விட்டமாதிரியெல்லொ.........

    ReplyDelete