"என்று தணியும் இந்த யுத்தம்" & "எது தான் சரி...?" & "பனிப்பொழிவு"



 

"என்று தணியும் இந்த யுத்தம்"

 

அரசியலின் அரண்மனைத் தீர்மானம்,

அரங்கெலாம் அழுகுரல் ஆனதே;

வரைபடக் கோடு நகர்ந்த கணமே

வாழ்வெலாம் வாடி வாடி விழுந்ததே.

 

பசியினால் பாலகர்கள் துடிக்கின்றார்,

பாலூட்டும் தாய்கள் புலம்புகின்றார்;

நிறமோ கொடியோ கேட்காத வலி,

நெஞ்சினில் நெருப்பாய் எரிகின்றதே.

 

யாருக்காக யுத்தம் யாருக்காக இரத்தம்?

யார்தான் கேட்பார் உயிரின் விலையை?

எண்ணிக்கையாய் பேசும் ஆட்சியோர்,

எத்தனை கனவுகள் சிதைந்தன அறியார்.

 

வளர்ந்தோம் என வீரம் பேசுகின்றீர்,

மனிதம் மட்டும் வளர மறுத்ததுவோ ;

ஆயுதங்கள் உயர்ந்த வள நாடுகளே,

அருள் மனம் மட்டும் எங்கு மறைந்தது?

 

பள்ளியும் மருத்துவமும் இடிந்திட

புண்ணியம் கூட புலம்புகின்றதே;

போர் முடியும் நாள் வரும்வரை

பூமி சுமந்தே தவிக்கும் எத்தனைநாள்?

 

ஒருநாள் வரும் மனிதம் வெல்ல,

ஒருநாள் வீழும் யுத்தப் பிசாசு;

அன்றுதான் உலகம் சொல்லும்

அன்பே உண்மை, அரக்கன் தோல்வி.

 

செ .மனுவேந்தன்

 

"எது தான் சரி...?"

[அந்தாதிக் கவிதை]

 

"எது தான் சரி புரிகிறதா

புரிந்து தான் என்ன பயன்?

பயன் அற்ற உலக வாழ்வில்

வாழ்வது ஒரு கேடு இல்லையா?

இல்லாத ஒன்றுக்கு தேடி அலையும்

அலை மோதும் நெஞ்சு உனக்கா?

உனக்காக முதலில் வாழப் பழகி

பழகிய உறவை அலசிப் பார்ப்பாயா?

பார்க்கும் பார்வையில் எதைக் கண்டாய்  

கண்டத்தில் எது தான் சரி?"

 👁👁👁👁👁👁👁👁👁👁👁👁

 

"பனிப்பொழிவு"

 

"பனிப்பொழிவு பெய்கிறது பாலாய்ப் படர்கிறது

பகலோன் வெப்பம் குளிரால் மூடுகிறது

பச்சை மரமோ வெண்ணிற ஆடையில்

பசும்புல் தரையோ வழுக்கி வீழ்த்துகிறது!"

 

"பருவப் பெண் கனவு காண்கிறாள்

படுக்கையை விட்டு எழும்ப மறுக்கிறாள்

பஞ்சு பஞ்சாய் குளிர்த்துளி விழுகிறது

பரந்த வெளிகளோ பளிங்காய்த் தெரிகிறது!"    

 ❆❆❆❆❆❆❆❆❆

 

"பணம் படுத்தும் பாடு"     

 

"பகட்டு வாழ்வில் பற்றுக் கொண்டு 

படித்த அறிவை மூடி வைத்து

பண்பு மறந்த செயல்கள் மூலம்

பணம் படுத்தும் பாடு தெரியுமா?"

 

"நாணயம் கொடுத்தாலே ஆண்டவனுக்கும் பூசை

நாணும் கோதையும் பாய் விரிப்பாள்!

நாக்கு கூட பொய் உரைக்கும்

நாடகம் ஆடும் பதவிகள் சேர்க்கவே!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

0 comments:

Post a Comment