தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :35


  [தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

ஊர் நகரத்தின் அரச கல்லறைகளில் பெண்கள் அணியும் மெல்லிய பொன் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப் பாகைகளை காண்கிறோம். தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துப் படி,இது அலங்காரத்திற்கும் மட்டும் அல்ல,இது ஒரு சிறிய பணப்பெட்டியாகவும் இருந்தது என்கிறார்கள்.பெண்கள் கடைகளுக்கு போகும் போது,தம்மை கவர்ந்த பொருட்களை வாங்க,அந்த தலைப் பாகையில் உள்ள பொன் தகடுகளை  கழற்றி எடுத்து பணமாக பாவித்தார்கள் என்கிறார்கள்.அது மட்டும் அல்ல,ஊர் நகரத்தின் அரச கல்லறை,பெண்கள் உருளை முத்திரைகள் வைத்திருப்பதை காட்டுகிறது.இவை அரச கையொப்பம் இட்ட முத்திரையாகவும் பண்டைய கால  கடன் அட்டையாகவும் இருந்தன என்கிறார்கள்.
  
பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு  வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது.கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல்[Sumerian Hymn to Ninkasi ] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi:“வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது.பொதுவாக  மது வடிப்போர்/காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள்,அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள்.மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது.எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள்  தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை/பீர் மது பானத்தை [beer]விற்கவும் முடியும்.அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும்.மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது.உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல்,ஊற வைத்தல்,நொதித்தல்,வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.

"நின்காசி,நியே மாவை[dough] ஒரு பெரிய வாரி[shovel] மூலம்
குழியில் கலாவுகிறாய்-பார்லி ரொட்டியையும்[bappir] தேனையும்[இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]....நின்காசி,நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக்கிறாய்-உமி தானியங்ககளை[hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து[வடித்தலின் போது "பப்பிர்" ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை  நிறைவேற்றுகிறது . ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது],,... நியே பார்லி முளைதானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்-பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது.... நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன,அலைகள் இறங்கு கின்றன[இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக் கலாம் ?அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப்படுகிறது?அத்துடன்  இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]... நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை[cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்-சூடு தணிகிறது,குளிர்ச்சி வெற்றி கொள்கிறது[இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம்.ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்?அது மட்டும் அல்ல,சாராயத் துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால்,நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast/புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]....நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை[great sweet wort] வைத்து இருக்கிறாய் -அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்[இது உண்மையில் தேனா? அல்லது  பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்வி குறியே.அது மட்டும் அல்ல,திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்"['yeast'] காணப்படுகிறது.ஆனால் ஒயினில்[wine] அப்படி அல்ல.அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது.ஆகவே இது திராட்சை ரசமாக இருக்கமுடியாது.அது அதிகமாக  திராட்சை பழம் அல்லது         உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]...நின்காசி,வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது-நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில்[ large collector vat] சரியாக வைக்கிறாய்[இந்த இன்பமான ஒலி அதிகமாக,சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]...  "

அது மட்டும் அல்ல,இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மது பான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது.மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது.உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.

"நின்காசியே,நியே,வடித்த பீர் மது பானத்தை  மரத் தொட்டியில் இருந்து  ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது[Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat,It is [like] the onrush of Tigris and Euphrates]" மற்றது  "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோநிலையை ஏற்படுத்தக் கூடியதாக[a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது,சாடி ஒன்றில் இருந்து .பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.


துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது,உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர்,அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார்.என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது,அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில்,ஆண் பெண் இரு பாலாரிடமும்,ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது . துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை,புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார்,தனது புறநானுறு 235 இல்,"சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;" என்று எடுத்து உரைக்கிறார்.அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி
அதை எமக்குத் தருவான்;பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார்.மேலும் அகநானுறு 336:"தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்" என கூறுவதையும் காண்க,அதாவது,தெளிந்த கள்ளினைக் குடித்து,பெண்கள், நுண்ணிய தொழில்நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்துவிட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை[கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது.அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை[275-281] இல்,மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன்,பட்டிணப்பாலை[106 -110] இல்,கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி  மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.

"அவையா அரிசி அம்களித் துழவை
மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி
பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும்
பூம்புற நல் அடை அளைஇ தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி
வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி"-பெரும்பாணாற்றுப்படை(275-281)

அதாவது,குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை,வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்]உலர வைப்பார்.நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர்.அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.

"துணைப்புணர்ந்த மடமங்கையர்
பட்டுநீக்கித் துகிலுடுத்தும்
மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும்
மைந்தர்கண்ணி மகளிர் சூடவும்
மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]

அதாவது,தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் ,தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக்[மட்டினைக்] கைவிட்டு  மதுவினை  குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர்.மகளிர் அணியும் கோதையினை(மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது. [[முதலிலிருந்து வாசிக்க  தலைப்பினில் அழுத்தவும்.→Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01: ]]
பகுதி 36 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :36...

 வாசிக்க: 
(தமிழரின் பழம் பெருமைகளை தங்கள் பக்கங்களில் மீள் பிரசுரம்
செய்துகொள்ள விரும்புவோர் இவ்வாக்கத்தினை சிரமத்தின் மத்தியில்  தொகுத்து வழங்கும் தொகுப்பாளருக்கு அல்லது இச் சஞ்சிகைக்கு நன்றி கூறுதலானது உங்களுக்கும்  பெருமை சேர்க்கும். நிகழ்காலத்தில் நாம் பெருமைக்குரிய செயலைச் செய்யாது பழம்பெருமைகள் பேசுவதால் பயனேதும் இல்லை என்பதனை நாம் உணர்ந்துள்ளோம்).-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்/தீபம்




0 comments:

Post a Comment