தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 14


இவ்வுலகம் தோன்றி படிப்படியாக மனித இனம் தோன்றியது போல, மனித இனம் தோன்றி ,அது மெல்ல மெல்ல வளர, அவர்களுக்கு இடையில் பல பல பழக்க வழக்கங்களும் அன்றைய சூழ்நிலைக்கும் அவர்களின் அறிவு ஆற்றலுக்கும் ஏற்றவாறு தோன்றின. அவ்வற்றில் சில அவர்களின் சந்ததியினுடாக பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்தன. அந்த முன்னையோர்களின் மரபே இன்று பாரம்பரியமாக நிற்கிறது எனலாம். அவ்வாறு தோன்றிய பழக்க வழக்கங்களில் சில இன்றும் அப்படியே அல்லது தேவைக்கும் அறிவிற்கும் ஏற்ப சற்று மாறுபட்டு மக்களின் அன்றாட நடைமுறை வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கங்கள் பல
இலக்கியங்களில், காலத்தின் கண்ணாடியாக, அங்கங்கே பிரதிபலிப்பதையும் காண்கிறோம். அவ்வாறு பிரதிபலிக்கும் பழக்கங்களில் கண்ணேறு கழித்தல் ஒரு முக்கிய இடத்தை வகுக்கிறது. அது மட்டும் அல்ல அவர்களுக்கு இடையில் இன்று நிலவும் பழமொழியிலும் காணக் கூடியதாக உள்ளது. உதாரணமாககல்லடிபட்டாலும் கண்ணடிப் படக்கூடாது ,‘விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாதுஎன்பதை கூறலாம். கண்ணேறு கழிக்கும் முறையை திருஷ்டி கழித்தல் என்றும் கூறுவர். இந்த மரபை குறைந்தது கி மு 3000
இல் இருந்து அறியக் கூடியதாக உள்ளது. உதாரணமாக சுமேரியா, பாபிலோனிய மற்றும் அசீரியன் கியூனிஃபார்ம் பதிவுகளில் [Sumerian, Babylonian and Assyrian cuneiform texts] இவை காணப்படுகின்றன. தீய கண்ணால் வரும் சாபத்தை அணைக்க பிரார்த்தனைகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு களிமண் பலகை [tablet contains a incantation to counter the “evil eye,”] அங்கு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது, அதே போல ஜிப்சத்தால் செய்யப்பட்ட  தீய கண் உருவச் சிலைகளும் அல்லது கண் தாயத்துகளும் [Eye idols carved out of gypsum or eye amulets] தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களின் 'igi hul' என அழைக்கப்படும் கண்ணேறுக்கான சாபத்தினை எதிர்க்கும் நடவடிக்கையை அல்லது அவர்களின் ஒரு
கண்ணேறு கழிக்கும் பழக்கத்தை காட்டுகிறது. அது மட்டும் அல்ல, சுமேரிய இலக்கியத்தில், இந்த தீய கண்ணின் செயல் பாட்டையும் காண்கிறோம். உதாரணமாக ,தீய கண் பார்வையால் இரு வெவேறு நிகழ்வுகளில் மரணத்தை ஏற்படுத்து வதையும்  [“the eye of death” / "i-bi2 uš2-a"] காண்கிறோம். முதலாவதில் அணுன்னா தெய்வங்களின் தீய கண்களால், ஈனன்னா பாதிப்பு அடைகிறார் [Inanna is the victim of the evil eye of the Anunna-gods, the seven judges]. இங்கே ஈனன்னா பாதாளத்தின் [under world of the dead / netherworld] ஏழாவது வாசலை அடைந்தபின் இந்த காட்சி  நடைபெற்றது. அணுன்னா தெய்வங்கள் என அழைக்கப்படும் ஏழு நீதிபதிகளும் அவளுக்கு எதிராக தீர்ப்பை வழங்கி, அவளை பார்த்தனர் -அது மரணத்தின் கண், அவளுடன் கதைத்தனர்-  அது நோய் தரும் பேச்சு, அவளுக்கு அவர்கள்
கூச்சலிட்டனர், அது நரகத்தின் காலவரம்பிலா தண்டனை சத்தம், பாதிக்கப்பட்ட பெண் [ஈனன்னா] ஒரு பிணமாக மாறியது. சடலம் ஒரு கொக்கி மீது தொங்கியது என்று விபரிக்கப் பட்டுள்ளது. [They looked at her – it was the eye of death,They spoke to her – it was the speech of illness, They shouted at her – it was the shout of damnation, The afflicted woman became a corpse, The corpse was hung on a hook / igi mu-ši-in-bar i-bi2 uš2-a-kam, inim i-ne-ne inim lipiš gig-ga-am3, gu3 i-ne-de2 gu3 nam-tag-tag-ga-am3, munus tur5-ra uzu niĝ2 sag3-ga-še3 ba-an-kur9, uzu niĝ2 sag3-ga ĝiš, gag-ta lu2 ba-da-an-la2]. இரண்டாவதில், ஈனன்னாவே தனது தீய கண்ணால் தனது கணவர் துமுழியை கொலை செய்யும்  குற்றம் புரிகிறார். [Inanna is the visual perpetrator, killing her husband, Dumuzi, with her eye of death]. சுமேரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை இன்றைய ஆய்வுகள் எடுத்து காட்டுகின்றன. மேலும் இன்றைய சிரியாவில் உள்ள டெல் பிராக் என்னும் இடத்தில் அல்லது பண்டைய வடக்கு
மெசொப்பொத்தேமியாவில் [Tall Birāk, also spelled Tell Brak, ancient site located in present Syria -ancient northern Mesopotamia] ஆயிரக்கணக்கான கண் உருவங்கள் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், அந்த இடத்தை கண் ஆலயம் என அழைக்கிறார்கள் [One of the most interesting discoveries at Birāk was the Eye Temple (c. 3000), so named because of the thousands of small stone “eye idols” found there]. இந்த கண் சிலைகள் ஒரு பரிகாரமாக, அங்கு காணிக்கை வழங்கப் பட்டதாக அதிகமாக இருக்கலாம். அது மட்டும் அல்ல, ஸ்பெயின் குகைகளில் 10,000 ஆண்டு பழமைவாய்ந்த தீய கண்ணைத் துடைக்கும் அல்லது கண்ணேறு கழித்தலை சித்தரிக்கும் சுவர் ஓவிய சின்னங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது, இந்த மனித பழக்கத்தின் பழமையை மேலும் பறைசாற்றுகிறது [10,000 years old Drawings have been found on cave walls in Spain depicting symbols to ward off the evil eye].

இந்தியாவில் கிடைக்கப் பெற்ற மிகவும் பழைய நூல் ரிக் வேதம் ஆகும், அதில் பத்தாவது மண்டலத்தில், அதிகாரம் (சூக்தம்) 85 இல். பாடல் (சுலோகம்) 44 இல், கண்ணேறு பற்றி "மணமகளே உன் கணவனை ஒரு தீய கண்கொண்டு பார்க்க வேண்டாம், அவனுக்கு என்றுமே விரோதமாக இருக்காதே" ["O Bride ! May you NEVER look your husband with an EVIL EYE; never be hostile to him;"] என்ற ஒரு குறிப்பு உண்டு. இது கி மு 1500 க்கும் கி மு 1200 க்கும் இடையில் இயற்றப்பட்டு இருக்கலாம். எனினும் "யாதும் ஊரே ; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன" என தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை, துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான் என்ற சங்க பாடல்களில், எனது தேடலில், கண்ணேறுவை காண முடியவில்லை. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா'  என்ற வரி அதற்கு விடையோ என்று எண்ணத் தோன்றுகிறது, எனினும் தாயத்து கட்டுதலை அங்கு காண்கிறோம். மகளை முன்னிலையாகக் கொண்ட பட்டினத்தார் பாடலில், அருள் அருள் புலம்பலில், "தொண்ணூற்று அறுவரையும் சுட்டான் துரிசு அறவே; கண்ணேறு பட்டதடி கருவேர் அறுத்தாண்டி!" என்ற வரியும்,  "பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்விதிருக் காப்பு,...." என்று இறைவன் மேல் கண்ணேறு பட்டு விடுமோ எனக் கருதி பெரியாழ்வார் பாடிய வரியும் அதன் பின் வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளாரின் (அக்டோபர் 5, 1823 - சனவரி 30, 1873) திருவருட்பாவில்  பண்ணேறு மொழியடியார் பரவி வாழ்த்தும் பாதமலர் அழகினையிப் பாவி பார்க்கின் கண்ணேறு படுமென்றோ கனவிலேனும் காட்டென்றாற் காட்டுகிலாய் கருணையீதோ.' என்ற வரியும் கண்ணேறு செய்தியை கூறுகின்றன. எனவே இவை பிராமண இந்து மதம் சைவத்துக்குள் அல்லது தமிழர் மதத்துக்குள் ஊடுருவியதால் வந்த பழக்க வழக்கமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த கண்ணேறு கழித்தல் இன்றும் தமிழர் மத்தியில் காணப்படுகிறது, அவர்கள் ஒரு வித ஆராத்தி மூலம் [சுத்தி போடல்] அல்லது பூசணிக்காய்களை, பொம்மைகளை தொங்க விடுவது அல்லது காய்ந்த மிளகாய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, ஒன்றாக சேர்த்து கட்டித் தொங்க விடுவது, அல்லது கறுத்த பொட்டு பெரிதாய் போடுவது அல்லது சிலர் சுத்தி போடலுடன் பாட்டுப் பாடியும் அல்லது வேறு சில வழிகளிலும் இதை கையாளுகிறார்கள். இது அவர்களின் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமாக இன்று காணப்படுகிறது. உதாரணமாக தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு, புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்களுக்கு, மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு இப்படி பல சந்தர்ப்பங்களில் ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இதற்கு அவர்கள் சொல்லும் முக்கிய காரணம் எமது பிள்ளைகள் மேல் ,எங்கள் வீட்டின் மேல், எங்கள் நிலைமையின் மேல் அல்லது செல்வாக்கின் மேல்......... பொறாமை, எரிச்சல்  கொண்டு பார்ப்பவர்களின் எதிமறை அலைகளின் விளைவை தவிர்ப்பதற்கு ஆகும். ஆனால் இப்படி எண்ணுவதற்கு உண்மையில் முக்கிய காரணம், நாம் எம் பிள்ளை, எமது வீடு, எமது சாதனைகள், எமது சொத்துக்கள் ....... இப்படி போன்றவற்றின் மேல் பெருமை கொள்வதே ஆகும்!  உதாரணமாக காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல, எமது பிள்ளைகள், எங்கள் கண்ணுக்கு மிக அழகாக தோன்றுகிறது. எமது வீடு, எங்களுக்கு மிகவும் நேர்த்தியாக தோன்றுகிறது. ஆகவே கண் திருஷ்டி, எங்களிடமிருந்து தான் முதலில் வெளி வருகிறது! உதாரணமாக, கண்களுக்கு, பார்வைக்கு அதிக அதிர்கிற சக்தி உண்டு என்றால், அது சமமாக நல்ல பலனையும், கெட்ட பலனையும் நல்க வேண்டும் என்றாகிறது. அபூர்வமாக பரமாச்சாரியார் போன்ற கோடிக்கணக்கில் ஒருவருக்குத் தான் பார்வை அருள் உண்டு. மீதி அனைவரின் கண்களின் பார்வையும் தீய  திருஷ்டி உடையவை என்று ஆகிவிடுகிறது. அது ஏன்? யாராவது சிந்தித்தது உண்டா? மேலும் எமது கண் ஒரு கதிர்வீச்சலையும் வெளிப்படுத்துவது இல்லை, அது ஒளியை  உள்வாங்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புகைப்படம் எடுக்கும் கேமராவை போன்றது ஆகும்.

மங்களகரமான அல்லது புனித நாட்களில், தீய சக்திகள் வீட்டிற்குள் நுழைவதை தடுக்கும் முகமாக மாவிலை, வேப்பிலை போன்றவை கதவில் கட்டும் நம்பிக்கையும் பழக்கமும் இன்னும், குறிப்பாக கிராமப் புறங்களில் இருப்பதையும் காண்கிறோம். 


 [ஆரம்பத்திலிருந்து வாசிக்க கீழேயுள்ள தலைப்பினில் அழுத்தவும் ]
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
ஈமெயில்:kandiahthillai@yahoo.co.uk ]

பகுதி: 15 வாசிக்க கீழேயுள்ள தலைப்பினை அழுத்தவும் 

0 comments:

Post a Comment