இராமன், மது, மாமிசம்- மேலும் ஆதாரங்கள்

தி. பரமசிவ அய்யர் நூலில் வால்மீகி இராமாயணத் தகவல் 1940-ம் ஆண்டு பெங்களூரிலிருந்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சி நூலை பிரபல இராமாயண ஆராய்ச்சியாளர் டி. பரமசிவ அய்யர் (இவர் முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இந்து அறநிலையத் துறை கமிஷனருமான டி. சதாசிவ அய்யரின் தம்பி ஆவார்). எழுதியுள்ளார்.

பழுத்த ஆத்திகரான டி. பரமசிவ அய்யர் எழுதிய ஆங்கில நூலில் `வால்மீகியின் இராமன், தெய்வம் போல கருதப்பட்டாலும் மனிதனாகவே காணப்படுகிறான் என்ற தலைப்பில் பக்கங்கள் 129-132 வரை எழுதியுள்ள வால்மீகி தரும் தகவல் இதோ:

``இராமனின் தெய்வீகத் தன்மை வால்மீகியின் கண்களை மறைக்காமல் அவனுடைய மனிதத் தன்மையை வெளிப்படுத்திற்று. இராமனின் மூளை, தசை நார்கள் மற்றும் மன வலிமை ஆகியவை சிறப்பான அளவுக்கு வளர்ந்தன. இளவரசன் எனும் வகையில் அவனது ஆர்வம் வில்வித்தையில்தான். அமானுஷ்யமான ஆற்றலை வில் வித்தையில் அவன் வளர்த்துக் கொண்டான். தொடர்ந்து வில் வித்தையில் பயிற்சிகளை மேற்கொண்டதால் இது சாத்தியமாயிற்று. சிவதனுசை ஒடித்ததன் வாயிலாக மிகப் பெரும் புகழை அவன் பெற்றபின்; சீதை எனும் பேரழகுப் பரிசை அவன் பெற்றான். இரண்டு வகையில் சீதை இராமனுக்குச் சிறப்பானவள்.

அவன் மனம், தசை, மகத்தான உடற்கட்டு எல்லாமே விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றதால் உருவானவை; அதன் வெற்றியால் கிடைத்தவை. வில் வித்தையில் நாட்டம், வேட்டையாடுவதில் விருப்பம், மாமிசம் கிடைக்கும் வேட்டைகளில் ஆர்வம்; சீதையின் மேல் ஏற்பட்ட ஆசை ஆகிய அனைத்துமே அவனுடைய எலும்புகளில் ஊறிப் போய் இருந்தன.
இந்த வகையான ஆசைகளில் அவன் ஈடுபட விரும்பும் போது அவனின் மன உறுதியும் நேர்மைக் குணங்களும் அவனை விட்டு விலகிப் போகின்றன.

கோசல நாட்டு எல்லையைத் தாண்டிய போது அவனது ஆசைகள் வெளிப்படுகின்றன. வடக்குத் திசை நோக்கி அயோத்தி நகரைப் பார்த்தவாறு அவன் வாய்விட்டுக் கூறினான், ``என்றைக்கு நான் உன்னை மீண்டும் சந்தித்து சரயுக்காட்டின் பூப்பூத்தக் காடுகளில் என்றைக்கு வேட்டையாட வருவேன்?

ராஜ ரிஷிகளின் சம்மதத்தோடு நடைபெற்ற வேட்டையாடும் பழக்கம் உலகின் வேறு எவற்றாலும் வெல்ல முடியாததாக இருந்துள்ளது வேட்டையில் அவனுக்கிருந்த ஆர்வம், மாமிசம் உண்பதில் அவனுக்கு இருந்த அதீதமான விருப்பத்தையே காட்டுகிறது.

தண்டகாரண்யத்துக் குத் தான் போகவிருக்கும் செய்தியைத் தன் தாய் கவுசல்யாவிடம் கூறப் போனபோது, விவரம் அறியாத அவள், அவனை உட்காரச் சொல்லி காலை உணவு அருந்தச் சொன்னாள். ``உன்னையும் சீதாவையும் லட்சுமணனையும் ஆட்கொண்டுள்ள அபாயத்தை நீ அறிய மாட்டாய்; நான் காட்டுக்குப் போகிறேன், 14 ஆண்டுகளுக்குப் போகிறேன்,
ஒரு முனிவனைப் போல் நான் வாழப் போகிறேன், மானுடர்களே இல்லாத காட்டில் தேன், பழங்கள், கிழங்குகள், முதலியவற்றை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு மாமிசத்தை விலக்கி விட்டு (ஹித்வ முனிவதமிஷாம், அயோத்யா காண்டம், தர்க்கம் 20, சுலோகம் 27 முதல் 29) வாழப் போகிறேன்! என்று கூறினான்.

அரச உபசாரங்களோடு ராமனை நடத்திட குகன் கூறியபோதுகூட ராமன் கூறினான். ``நான் விருந்துகளை ஏற்க மாட்டேன்; நான் தற்போது ஒரு தபஸ்வி, தெரியுமா? காட்டில் வசிப்பவன், மரவுரியும் தோலாடையும் உடுத்தியவன், பழங்களையும், கிழங்குகளையும் உண்டு வாழ்பவன். எனக்கு ஒரு உதவியை நீ செய்ய வேண்டும், என் தந்தையின் இந்தக் குதிரைகளை நன்றாக உணவும் நீரும் கொடுத்துக் குளிப்பாட்டிப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் (அயோத்யா காண்டம் சர்க்கம் 50 சுலோகம் 44 முதல் 47) இப்படித் தன் தாயுடனும், குகனுடனும் அவன் பேசிய போது அவனுடைய நேர்மை சொல்லாமலே விளங்கும்.

சிங்கரூரில் அவன் கங்கை நீரை மட்டும் பருகி விட்டு இரவு பட்டினியாக இருந்தான். மறுநாள் காலை, வைகானசத்தில் பிரவேசித்து ஆலம் பாலைக் குடித்துப் புறப்பட்டான். லட்சுமணனையும் வானப் பிரஸ்த வாழ்க்கை வாழச் சொல்லிக் கங்கையைக் கடந்தான். நடு ஆற்றில் வரும்போது, நதியை வணங்கி சீதை தன் சங்கல்பத்தைக் கூறினாள்:

காட்டிலிருந்து பத்திரமாகத் திரும்பி வந்தால் நதிக்கு 1000 குடம் மதுவையும் (ஒயின்) மாமிச உணவும் படைப்பதாக உறுதியளித்தாள். (அயோத்யா காண்டம் சர்க்கம் 52 சுலோகம் 89)

நதியின் தெற்குக் கரையை அடைந்தபோது, அவள் இதை உறுதிப்படுத்தினாள். சகோதரர்கள் இரவுப் பட்டினி, பசியால் வாடினர். வளர் பருவத்தில் இருந்த அவர்களின் (ராமனுக்கு அப்போது வயது 17தான்) வலுவான உடல் வழக்கமான உணவுக்காக ஏங்கியது; காட்டில் இருக்கும்நிலை தூண்டவே, நான்கு விலங்குகளை வேட்டையாடிக் கொன்றனர்; ஒரு காட்டுப் பன்றி, புள்ளிமான், சாம்பார் மான், ருரு (எனும் ஒருவகை விலங்கு) ஆகியவற்றைக் கொன்று அவற்றின் மாமிசத்தை எடுத்துச் சமைத்து ஒரு மரத்தடியைத் தம் வீடாக்கித் தின்றனர் (அயோத்யா காண்டம். சர்க்கம் 52, சுலோகம் 102)

பாலகாண்டத்தில் சரயு நதியின் தென் கரையில் பாலா மற்றும் அதிபாலா ஆகியோர் பற்றிய ரகசியங்களை ராமனுக்கு விசுவாமித்திரன் எடுத்துக்கூறுகையில், ``இந்த இரண்டு வித்தைகளையும் நீ கற்றுக் கொள்; உன்னை பலசாலியாக, மிகுந்த சக்தி உள்ளவனாக, ஆரோக்கியமான வனாக, புத்திசாலியாக ஆக்கும் தன்மையுள்ள வித்தைகள் இவை என்றார். பாலாவையும் அதிபாலாவையும் கற்றுவிட்டாயானால், உனக்கு சோர்வே வராது, பசி எடுக்காது, தாகம் எடுக்காது என்கிறார். அவை பிதாமகனின் (பிரம்மா) பெண்கள், எல்லா ஞானமும் அவற்றுள் அடங்கியிருக்கின்றன என்கிறார் (பாலகாண்டம், சர்க்கம் 22 சுலோகம் 12 முதல் 17) இதை வால்மீகி எழுதவில்லை என்பது தெளிவாகத் தெரியும்; ஆனால், மந்திரம் அறிந்தவனின் இடைச் செருகல் இது! மாமிசத்தை சீதையும் ராமனுடன் பகிர்ந்து சாப்பிட்டதாகத் தெரிகிறது.

சித்திர கூடத்தில் ராமனுடன் காட்டாற்றுக் கரைகளில் உலவி வந்த சீதையைத் திருப்திப்படுத்த மாமிச உணவைக் கொடுத்து ராமன் கூறி னான், ``இது ஊட்டம்மிக்க உணவு, ருசியான, திருப்பத்தைத் தரக்கூடியது (அயோத்யா காண்டம், சர்க்கம் 96 சுலோகம் 1)

ராமனிடம் கபந்தன் சொன்னவற்றின்படி `கி போன்ற மாமிசம் மிக்க நீர்ப் பறவைகளும் மீன்களும் ராமனுக்கு மிகவும் பிடித்தமானவை. பம்பா ஏரியில் தெளிந்த நீரில் நீந்தி விளையாடும் மீன்களைக் கூரிய அம்புகளை எய்து லட்சுமணன் பிடித்து வரவேண்டும் என்று கபந்தன் விரும்பினான்....

அதோடு போகவில்லை அவர்களின் மாமிச மோகம்! நீர்க்கோழி (கி.)களில் இறைச்சி அதிகமாக இருக்குமாம். ஆகவே அவையும் மீன்களும் மிகவும் பிடிக்குமாம். கபந்தன் என்பான் லட்சுமணனிடம் கூறுகிறான் - தெள்ளிய ஆற்று நீரில் பம்பா ஏரியில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அவற்றை உன் கூரிய அம்பை எய்துக் கொன்று ருசி பாருங்கள், ராமனுக்கு ரொம்ப ஆசையாசன உணவு இது என்கிறான் (நூலின் பக்கங்கள் 131, 132).

இத்துடன் முடியவில்லை. ``இறைச்சிப் படலம்! விருந்தினர்களுக்கு, அவர்கள் வேண்டாத விருந்தாளியாக இருந்தாலும், இறைச்சிச் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். தனியே இருந்த சீதையின் குடிலுக்கு மாறு வேடத்தில் ராவணன் வருகிறான். அவனை வரவேற்றுப் பேசி சீதை கூறுகிறாள் - சவுகரியமாக இருங்கள், என் கணவர் விரைவில் வந்து விடுவார். காட்டுப் பொருள்கள் (புஷ்கலம், வன்யா) கொண்டு வருவார். மான்கறி கொண்டு வருவார்; இஷ்னுமான் (முதலை முட்டை சாப்பிடும் விலங்கு) காட்டுப் பன்றிகளைக் கொன்று அவற்றின் இறைச்சியைக் கொண்டு வருவார் (ஆரண்ய காண்டம், சர்க்கம் 47, பாடல்கள் 22,23).

யமுனை நதியின் தெற்குக் கரையில் உள்ள ஆலமரத்தைத் தாண்டி காட்டினுள் சென்று வேட்டையாடி ஏராளமான (எண்ணெய்) மான்களை வேட்டையாடி வந்தனர் (அயோத்யா காண்டம், சர்க்கம் 55, பாடல் 32) (நூலின் பக்கங்கள் 139, 141). இராமன் கறி தின்றதை, ஏதோ ஓரிடத்தில் எழுதினார் என்றில்லாமல் பலப்பல இடங்களில் குறித்துள்ளார் வால்மீகி எனும்போது (வால்மீகியும் வேடர்தான், இறைச்சிப் பிரியர்தான்) ராமன் இறைச்சியையே விரும்பி உண்ணும் இளைஞன் என்பது வலியுறுத்தப் படுகிறது. இந்த லட்சணத்தில் `ராமனை எதோ சுத்தப் சுயம்பிரகாசம் என்பது போலச் சிலர் இங்கே பேசுகிறார்கள், இன்றைக்கும் பேசுகிறார்கள் என்றால், இவர்களை என்ன பெயரிட்டழைப்பது
நன்றி:-சார்வாகன் 
-----------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment