தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] பகுதி :36


 {தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்}
வியாபாரி குடும்பத்தில் பிறந்த பெண்கள் புடவை வியபாரத்தில் ஈடுபட முடியும். அது போல் அரச குடும்பத்தில் பிறந்த பெண்களும் வியபாரத்தில் ஈடுபட முடியும்,ஆனால் பொதுவாக தனிப்பட்ட தங்களுக்கு  இல்லாமல், நகரம் சார்ந்தவை ஆக இருக்கும்,அரண்மனையில் பெண்கள் துணிகளை நூல் நூற்று அல்லது நெசவு மூலம் செய்கிறார்கள்.அத்துடன் சாப்பாடு செய்வதிலும் பங்கு பற்றுகிறார்கள்.

சங்க காலத்திலும் பெண்கள் வியபாரத்தில் ஈடுபட்டத்தை
அகநானூறு 390 கூறுகிறது.அங்கு பாழ் நிலத்தில் புல்லரிசி திரட்டும் பெண்ணையும் ,வேறு இடங்களுக்கு சென்று  மோர் விற்கும்  இடைச்சியையும்,வண்டியோட்டிச் செல்லும் உப்பு வாணிகன் மகளையும் காண்கிறோம்

"நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோ எனச் சேரி தொறும் நுவலும்
அம் வாங்கு உந்தி அமைத் தோளாய் நின்
மெய் வாழ் உப்பின் விலை எய் யாம் எனச்
சிறிய விலங்கின மாகப் பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி" [அகநானூறு 390]

[அவள் உப்பு விற்றாள். ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் என்று விலை வைத்தாள். அவன் கேட்டான். கடலில் விளையும் உப்புக்கு அந்த விலை சரி. உன் உடம்பில் விளையும் உப்புக்கு விலை என்ன? என்று .]

என்றாலும்  மெசொப்பொத்தேமியா பெண்கள் பிற்காலத்தில் ,உதாரணமாக அசீரிய கால[ Assyrian era] பகுதியில் அவர்களது பலமும் சுதந்திரமும் வலுவிழந்தன.பெண்களின் பங்கு மகள்,மனைவி என  கண்டிப்பாக வரையறுக் கப்பட்டது .அது மட்டும் அல்ல குடுப்பத்திற்குள் இல்லாமல் வெளியே அருமையாகவே தனிப்பட்டவர்களாக பங்கு பற்றினார்கள்.

பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாயமான பங்கான மனைவி,தாய்,வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு  பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.பெண் தெய்வம் குலாவிற்கான[goddes Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு  நிலைகளை " நான் ஒரு மகள்,நான் ஒரு மணமகள்,நான் ஒரு  மனைவி,நான் ஒரு இல்லத் தரசி"["I am a daughter,I am a bride,I am a spouse,I am a house keeper"].என கூறுகிறது.மேலும் முன்பு கூறிய சம்பிரதாய வேலைகளான தானியம் அரைத்தல்,சாப்பாடு தயாரித்தல், குடிவகை வடித்தல்,துணி உற்பத்தி போன்றவற்றை இளம் வயதில் பெண்கள் அங்கு பொதுவாக கற்றுள்ளார்கள்
 
தமிழினத்தாய் ஒருத்தியின் கூற்றாகப் பொன்முடியார் பாடிய  ஒரு புறப்பாடல் ஒன்றில்,மகனைச் சான்றோன் ஆக்குவதும் அவனுக்கு வேல்வடித்துக் கொடுப்பதும் நன்னடை நல்குவதும் ஆண்களது கடமை எனச் சொன்ன தாய், மகனை வயிற்றில் சுமந்து பெற்று வளர்ப்பது மட்டுமே பெண்ணாகிய தனக்கு விதிக்கப்பட்ட கடமை என உணர்த்து கிறாள்.

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;[புறநானுறு 312]

அதாவது சுமேரியானை போன்றே பெற்றுப் பாதுகாத்தல் பெண்ணுடைய கடமையாகும் என்கிறது.

பொதுவாக பெண்கள் நீண்ட தளர் மெய்யங்கியை[ long tunics] அணிவார்கள்.இது உடம்பை சுற்றி மார்பில் பொருத்தப்பட்டு இருக்கும்.அது மட்டும் அல்ல ஒப்பனையும் அணிந்திருந்ததார்கள்.உதாரணமாக,சிவப்பு மருதாணி உதட்டுக்கும் முகச் சிவப்புக்கும் பூசி இருந்தார்கள்

பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள் ஒரு திருமணக்கோரிக்கை/முன்மொழிதல்  உடன் ஆரம்பமாகி,அதை தொடர்ந்து திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு ,இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது.இப்படிதான் பண்டைய சுமேரிய குடும்ப வாழ்க்கை இருந்தது.ஒரு இளம் பெண் பூப்படையும் [puberty]போது,அவள் கல்யாணத்திற்கு  தயார் என கருதப்படுகிறது.பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்து விட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர்.குறிப்பாக தென் இந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. ‘பூப்பு நன்னீராட்டல்என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம்பெற்றுள்ளது.பொதுவாக கல்யாணம் அவர்களின் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப் படுகிறது.இங்கு மணமகன் மணமகளுக்கான பணக் கொடுப்பனவு செய்கிறார்.மணமகளின் பெற்றோர் சீதனம்/பரிசு கொடுக்கிறார்கள்.இந்த சீதனம் மணமகன் அவளை விட்டு விலகினாலோ அல்லது அவள் விதவை ஆகினலோ திரும்பவும் அவளுக்கு உரித்தான அனைத்தும் அவளை சேருவதை உறுதிப்படுத்துகிறது.யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் இப்படியான ஒரு நிலையையே எடுக்கிறது.இங்கும் மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப் பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருகிறது.மேலும் தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்ப்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும்.மேலும் தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம்(Populism)  காரணமாக ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது இந்த பண்டைய வழக்கம்

சங்க காலத்தில் ஒரு பெண்ணுக்கு திருமணமே சரியான வாழ்க்கை என கருதப் பட்டது.மேலும் அவர்களுக்கு,தனது கணவனை தெரிந்து எடுப்பதற்கு ஒருவாறு ஏற்றுக்கொள்ளத்தக்க சுதந்திரம் கொடுக்கப்பட்டும் இருந்தது.ஆகவே திருமணம் எல்லாம் பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவை அல்ல.ஒரு திருமணத்திற்கு காதலினால் ஏற்படும் இயற்கையான ஒன்று கூடல் முக்கிய சிறப்பியல்பு ஆகவும் இருந்தன.,பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறியும்  கற்பாகிய திருமணத்தில் பொதுவாக முடிந்தது.அதாவது, இறுதியாக மணமகளை தந்தை அல்லது பெண்ணின் பாதுகாவலர் , மிகவும் பொருத்தமான மாப்பிள்ளை ஒருவருக்கு பரிசாக[தானம்] கொடுப்பது மூலம் பொதுவாக இது நிறைவேறியது.

ஆடவனை பொறுத்த வரையில்,அவர்கள் பெண்ணை பற்றி,அதாவது  அவளது பெயர்,இருப்பிடம்,போன்றவற்றை விசாரிப்பார்கள்.பின் பெற்றோர்கள் மூலம் திருமண கோரிக்கை வைப்பார்கள்.ஆகவே மணமகன் வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் கேட்பர். திருமணத்திற்குப் பெண் கேட்டு வந்த பொழுது அதனைப் பெண்வீட்டார் ஏற்றுக் கொண்டனர் என்ற செய்தி குறுந்தொகையில் (374) "எந்தையும் யாயும் உணரக் காட்டி ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்த பின் மலை கெழு வெற்பன் தலை வந்து இரப்ப நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே" என்று குறிப்பிடப் படுகிறது.மேலும் அவர்கள் பெண்களுக்குப் பரிசம் கொடுத்தார்கள்.புறநானூற்றில் (343) முசுறி, நகர் போன்ற செல்வத் தைக் கொடுத்தாலும் தந்தை தன் மகளைத் திருமணத்திற்குக் கொடுக்கமாட்டார் என்பதை,"முசுறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து வந்து கொடுப்பினும் புரையரல்லலோர் வரையலளிவளெனத் தந்தையுங்கொடாஅ னயின்" என்று கூறுவது அறியத் தக்கது.பரிசம் என்பது பெண்கொள்வோன் பெண்ணின் தந்தைக்குக் கொடுக்கும் சீதனம் ஆகும்.பெண்ணின் தந்தை ஏற்றுக்கொண்டால்,முறைப்படி திருமணம் செய்ய மற்ற தேவையான நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.

திருமண விழாவில் மணமகன் மணமகளின் தலையில் வாசனைத் திரவியத்தை ஊற்றுகிறான்.மேலும் மணமகன் மணமகளின் குடும்பத்திற்கு பணமும் பரிசும் கொடுக்கிறான்.திருமணத்தின் பின் கணவனும் மனைவியும் தமது நாளாந்த வழக்கமான வாழ்வை தொடங்குகிறார்கள்.பொதுவாக  இது ஒன்றே கணவனின் திருமணமாக அமை கிறது.ஒரு கணவன்,தனது மனைவி எட்டு மகனை ஈன்ற பின்பும்,இன்னும் காதல் செய்ய  தயாராக உள்ளாள் என தற்பெருமை கொள்கிறான் என ஒரு சுமேரியன் பழ மொழி கூறுகிறது.[A sumerian proverb referred husband bragging that his wife had borne eight sons & was still ready to make love.] அதாவது மனைவி இருந்து குழந்தைகள் உள்ள வரை. ஆகவே மனைவி இறந்தாலோ அல்லது பிள்ளைகளை பெறாவிட்டாலோ,அவனுக்கு வேறு திருமணம் செய்யவோ அல்லது காமக்கிழத்தி [வைப்பாட்டி] ஒருவரை வைத்திருக்கவோ உரிமை உண்டு.ஆரியர்களினால் மாற்றம் அடைய முன்பு பண்டைய தமிழரின் திருமண முறை அகநானுறு 86,136 ஆகிய இரண்டு சங்க பாடல்களால் தரப்படுகிறது. உதாரணமாக ,அகநாநூறு பாடல் 86, வரிகள் 1-22 இப்படி வர்ணிக்கின்றன.

"உச்சிக் குடத்தர், புத்து அகல் மண்டையர்,
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர
புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி
'கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோன் பெட்கும் பிணையை அக!/ என
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நல் மணம் கழிந்த பின்றை"

தலை உச்சியிலே குடத்தை வச்சுக்கிட்டுச் சில பெண்கள், புதிய மண்பாண்டத்தை வச்சுக்கிட்டிருக்குற இன்னும் சில பெண்கள், ஆரவாரம் பண்ணிக்கிட்டு, சடங்கு செய்ய மங்கலமான பெரிய அம்மாக்கள், ஒன்று ஒன்றாய்  பொருள்களை எடுத்துத்தர,பிள்ளைகளை  பெற்று எடுத்த நாலு மகராசிகள்," அம்மாடி, பொண்ணே, சொல்லுத் திறம்பாம (சொன்ன சொல்லு மாறாமல்), எல்லாருக்கும் உதவி செய்து , கொண்டவன் விருப்பத்துக்கு தக்க நடக்கிறவலாய்  இரும்மா" என்று வாழ்த்தி கூந்தலுக்கு மேலெ, நீரைச் சொரிஞ்சு, ஈரப் பூவிதழ்களையும், நெல்லையும் சேர்த்துத் தூவி கல்யாணம் முடிகிறது.மொத்தத்துலே மஞ்ச நீர் ஆடுறதும், பூ, நெல் சொரியுறதும், வாழ்த்துறதும் தான்  மண்ணுதல்-என்கிற மணம் ஆகும்.

இங்கு மணமகளின் தலையில் வாசனைத் திரவியத்தை ஊற்றுவதற்கு பதிலாக   நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்துகின்றனர்.ஒரு பெண்ணானவள் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டதும் அந்த பெண்ணை மணமகன் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருதப் படுகிறது.மணமகன் திருமணத்திற்கு முன் இறந்தால், அவனின் ஒரு சகோதரனையோ அல்லது அவர்களின் ஒரு ஆண் உறவினரையோ அவள் திருமணம் செய்வாள். அவளின் கணவன் செத்தால்,தனது பிள்ளைகளுடன் உடமைகளை பங்கு போடுவதுடன்,அவளை மீண்டும் திருமணம் செய்ய அனுமதிக்கிறார்கள்.பொது மக்களுக்கு பண்டைய மெசொப்பொத்தேமியாவில்  வாழ்க்கை கடினமாக இருந்தது.அங்கு ப்ளேக் என்னும் தொற்று நோய்[plagues],போர், வெள்ளம்,வறட்சி,பஞ்சம் போன்றவை காணப்பட்டன.பிள்ளைகள் பெற்றோரின் உடமையாக கருதப் பட்டது.பிள்ளைகள் பெற்றோருக்கு கீழ்ப்படியாவிட்டால்,அவர்களை அடிமையாக விற்க முடியும்.எனினும் இது பொதுவாக அடிக்கடி  நடப்பவை அல்ல.பெரும்பாலான சிறுவர்கள் [பையன்] தம் தந்தையாருடன் வேலை செய்ய போனார்கள்.இளம் பெண்கள் வீட்டில் தாயுடன் தங்கி வீட்டு வேலைகளை கற்றார்கள்.அத்துடன் தங்களை விட வயதில் குறைந்த பிள்ளைகளை பராமரித்தார்கள்.பணக்கார குடும்பத்தை சேர்ந்த பையன்கள் மட்டும் பள்ளிக்கூடம் போனார்கள்.

[ஆரம்பத்திலிருந்து வாசிக்க தலைப்பினில் அழுத்தவும்→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01: ]


0 comments:

Post a Comment